Wednesday, April 27, 2011

கவிதாவஸ்தை


மேகங்களில் நம் 
மனவுருவைக்  காண்பதோ 
ஒரு நாய் குட்டியை வளர்ப்பதோ 
பத்துக்கு பத்து புள்ளி வைத்து 
கோலம் போடுவது போலோ 
இல்லை 
ஒரு கவிதை வரியை எழுதுவது
முதல், ஓர் ஆணும் பெண்ணும் 
தயங்கி ,முயன்று ,வெல்லுவது 
போன்ற வாதையின் 
ஆயிரம் மடங்கு அவஸ்தையில் 
வந்து விழுகிறது 
ஒரு கவிதையின் கரு.
பின் முயங்கிக் களைத்து
புன் சிரியுடன்
கண் செருகும் 
வாலிபத்தின்  வனப்போடு 
அதன் முதல் வரி.
ஒரு பூனைக் குட்டியை 
தடவுவது போல் 
அவ்வளவு எளிதாக அமைவதில்லை 
அடுத்த வரியும் 
அதற்கடுத்த வரியும் கூட .... 
   
 

Tuesday, April 26, 2011

மீண்டு(ம்) வந்துவிட்டேன்


Thursday, February 17, 2011

இன்று,நாளை நேற்றாகும்

எனக்கு இப்போது புரிந்து விட்டது!
என் வருங்காலத்தை 
உயிர்ப்பிக்கப் போவது 
நீ எனும் 
கடந்த காலம் தான் .
கடந்தவைகளில் வாழாதே 
என கூறுபவர்களுக்குத் 
தெரியுமா என்ன 
நான் வாழும் 
இன்று தான் 
நாளையின் 
கடந்த காலம் என?

Sunday, February 13, 2011

சூரிய வருடல்

என்றோ தன்னைத் தொட்ட காற்று
மீண்டும் தொட வரும்  
என
வெளிசுற்றும் நான் .

காற்றலைகள் தேடி
காய்ந்த தேகம்
மேலும் மேலும் சுக்காகிறது

பாவப்பட்டு மேல்விழும்
ஓரிரு மழைத்துளிகளை
ஆங்காரத்துடன்
உதறி விலக்குகிறது.

பரிகாசத்துடன்
அதன் நைந்த ஆடைகளை
இன்றைய காற்று
இழுத்துக் கொண்டோடுகிறது ..

வெளிப்படும் புண்கள்
புரையோடியது  கண்டு
சூரிய விரல் வருடத் தொடங்க
காற்றில் தொலைத்த ஆடை மறந்து
அதை நோக்கி நகர்கிறது அது!

யாரோ
பாவம் பிச்சி !என்பது மட்டும்
ஏனோ காதில் வந்து விழுகிறது .

Saturday, January 8, 2011

கதவிலக்கம் தொலைத்த வீடு

ஒரு  காலத்தில் அதற்கு
ஒரு விலாசமென்று ஒன்று இருந்தது
சிவப்பு வர்ணமடித்த கதவும்
அதில் கட்டத்தினுள் எழுதி வைத்த இலக்கமும்... 
சாதிப் பெயரை நீக்கிய போது
அதன் அடையாள வரி ஒன்று  குறைந்தது
ஆட்சியின் புது  இலக்கமிடல் விதியில்
அதன் எண்கள் இரண்டாகி
இரண்டுங் கெட்டது
வீதி அகலமானதில்
வெளிச்சுவரும் நசுங்கி
இன்றதன் அடையாளமும்
என்றோ வரும் கடிதத்திலும்
அதன் பெயர்
'படுதா மறைத்த வீடு' என்றாகிப் போனது..
அன்று தனக்கும் ஓர் இலக்கமிருந்ததை
யாருமே வாங்கிக் கொள்ளாத
நசுங்கிய  கதவு அவ்வப்போது நினைவூட்ட
கதவிலக்கம்  தொலைத்த வீடு
படுதா காற்றிலாட
மெல்ல புன்னகைக்கிறது..