Monday, April 16, 2012

சாத்தானும் வேதமும்




அன்றொரு நாள்
என்னிடம்
ஒரு  சாத்தான்
வேதம் ஓதிக்கொண்டிருந்தது 
அருகில் இருந்த
செடியிலிருந்து
ஒரே ஒரு துளசி கொய்து
கையில் அழுத்தமாய்
மூடி வைத்துக் கொண்டிருந்ததைக்
கண்டு
ஏளனமாய் சிரிக்கவும் செய்தது
அச்சாத்தான் .
சொல்வதற்கெல்லாம்
தலையாட்டியதைப்
பார்த்து  பரிதாபப்பட்டோ  என்னவோ
பிடியிலிருந்து விடுவித்து விட்டது

அவசர அவசரமாய்
ஆஸ்வாசப் படுத்திக் கொண்டு
உறங்கி விழித்து கண்ணாடி பார்க்கையில்
தான் தெரிந்தது.
அச்சாத்தான் போலவே
மாறியிருந்த என் முகமும்...

வழி விடுங்கள்
நானும் வேதம் ஓத புறப்பட்டு விட்டேன் .

Sunday, April 15, 2012

காலோவியம்

சிறிது மூடியிருந்த 
கதவின் இடையில் 
தெரிந்த 
உன் பாதங்களுகேற்ற 
முகத்தை 
நான் மனதில் 
வரைந்து விட்டேன் .

வரைந்த அது 
சிதையப் போகிறது 
தயவு செய்து 
என் கண்படாமல் போ நீ ! 

Wednesday, April 4, 2012

சிலுவை

என் சிலுவையில்
ஆணி அறையும் சத்தத்திற்கு
பறக்க ஏதுவாய்
பறவைகள் காத்திருக்கின்றன .

என் வழியும் குருதி
சொல்லாதவொன்றை
உடன் புரிந்து கொள்கிறது
காற்று

பசிக்கும் வயிற்றை நிரப்புமுன்
என் மரணம் காண
வாதையுருகின்றன மாக்கள் .

சுமந்த வடுவின்
பொருக்கு
என்றும் உதிராகாயமாகி
கொத்துகின்றன காக்கைகள் .

தந்தையே
சுமந்து, நடந்து,,காத்து, நின்று 
என் கால்கள் இற்றுவிட்டன .

என்னை உடன்
சவுக்கடித்துக் கொல்,
இல்லை இச் சிலுவையையாவது
சுக்கு நூறாக்கி விடு 

திங்களன்று( 2/04/2012) உயிரோசையில் வெளியானது

Monday, April 2, 2012

தொலைந்த போன பிரப்பமர பொந்து(இன்று அதீதத்தில் வெளிவந்துள்ளது )


எங்கள் தெருமுனை பிரப்ப மரத்தில் 
மூன்று பேர் நிற்கக்கூடிய  
பொந்த்தொன்றிருந்தது.

பங்குனிக் காவடி
பார்த்து ரசிக்க
அதிலேறி ஒளிவோம் .

இரவு எலெக்ட்ரிக் காவடி
வரும் போது மட்டும்
மரம் பொக்கைவாயில் சிரிப்பது போலிருக்கும்

அகாலம் வீடு திரும்பும்
எனக்காக
காத்திருக்கும்
அம்மாவிற்குத்  துணையாய்
மென் குரலில் சிலுசிலுக்கும் .

மரத்தடி மலர் காதலுக்கெல்லாம்
ஆசிர்வாதமாய்
இலை சொரியும்.

என் மகள் அதன் நிழலில்
களிக்க போட்ட கனவெல்லாம்
கலைய
புயல் காற்றில் மயங்கி சரிந்தது
அம்மரத்தாத்தன்

இன்று பங்குனி காவடி
பார்க்கும் ஆசை
மகளுக்குமில்லை
ஏறி நிற்க
அந்தப்  பொந்துமில்லை