Tuesday, December 11, 2007

உணர்ந்தேன் நான்!

நீ இல்லாத
உன் தெருவில்
உலவும் போதுதான்
நேரில் இல்லாமலே நீ
என் உணர்வுகளில் படர்ந்திருக்கும்
உண்மை புரிந்தது!

உன் மூச்சுக்காற்று
கலந்திருக்கும்
உன் ஊர் காற்றை
சுவாசித்த பிறகுதான்
என் உயிருக்கும்
உயிர் வந்தது!

நீ விரும்பிக் குடிக்கும்
தேனீர் கடையில்
ஒதுங்கி நின்றபோதுதான்
என் சுவையரும்பு கூட
மலரத் தொடங்கியது!

உன் ப்ரார்தனைக்குச்
செவிசாய்க்கும்
செல்லப் பிள்ளையாரை
கண்டு புன்னகைத்த போதுதான்
வாழ்க்கைக்கே ஒரு
நம்பிக்கை வந்தது!

யாரும் அறியாமல்.....
நீ நடக்கும்
உன் வாசலின் மண்ணெடுத்து
என் கைகுட்டையில்
புதைத்து
நெஞ்சோடு அணைத்த பிறகுதான்
என் காதலுக்கே
காதல் வந்தது!

Friday, December 7, 2007

சேமிப்பு

என் பொழுதெல்லாம்
வீணாக்குகிறேன்
என புலம்புபவர்களுக்கு
என்ன தெரியும்?
நாம் பேசிய கணங்களை......
நாம் பழகிய நாட்களை.......
நாம் சிரித்த நொடிகளை......
நாம் சிந்தித்த செயல்களை....
நாம் மௌனித்த வேளைகளை.......
நாம் ரசித்த நிமிடங்களை எல்லாம்.......
ஞாபகப் புகைப்படமாக்கி
மகிழ்ச்சியில் காயப்போட்டு
நினைத்து நினைத்து
வாழும் தருணங்களில் தான்....
என் மீதி கால வாழ்விற்கான
உயிர் மூச்சையே
நான் சேகரிக்கிறேன் என!!!!!

Wednesday, December 5, 2007

மாயை!

கதைப்பது பெண்ணென
தெரிந்தபின்பு
முலையளவு கேட்கும்
மூடர்கள் கூட்டம்.

நட்பு நாடிவருபவளீடம்
காமவலை வீசும்
கயவர்கள் கூடம்

தனித்திருக்கும்
பெண் மனம்பேதைமையுற
பேசி மயக்கும்
நரிகளின் வாசம்

இலக்கியமும்,இலக்கணமும்
பெண்ணிற்கப்பாற்பட்டதென
சதையால் பெண்ணளக்கும்
சவுக்கடி மாடம்

இவை அனைத்தும்
அறிந்தும்
தினம் தினம்
தேடுதல்
நிறுத்தா பயணம்!!

நடுவில் உதிக்கும்
சில நம்பிக்கை
நட்பும்
நாளாவட்டம் நலிந்து
காமம் பேசி....
காரணம் கூறாது
விட்டொழியும்.

மோட்டுவளை நோக்கி
விழியில் நீருடன்
உண்மை நட்பு நாடி
மனம்
நிழலொடு பேசும்!!

வேம்பு கசப்பென
அறிவு உணர்த்தியும்
வேப்பம்பழ இனிப்பு
நாடும்
பேதையுள்ளம்.

மனம் கூறும் வழி போகாது
அறிவு வழி செல்ல
அழியும் மாயம்
வாழ்வு
அமிர்தே ஆகும்.