Wednesday, December 4, 2019

பிணா கவிதைநூல் விமர்சனம் ----சரவணன் மாணிக்கவாசகம் 

பிணா- பத்மஜா நாராயணன்:
ஆசிரியர் குறிப்பு:
காரைக்காலில் பிறந்தவர். சென்னையில் வங்கியில் வேலை பார்க்கிறார். மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். நான் மலாலா, வெண்ணிற இரவுகள், தடங்கள், நெருப்பிதழ்கள், ஷ் இன் ஒலி முதலியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள்.
பிணா:
1.
ஒரு கோட்டை விதை நெல் போல் எனதன்பை சேகரம் செய்து வைத்திருக்கிறேன்
ஒரு துளி மழையும்
அதை ஏற்கும் நிலமும்
மீபிறப்பிலேயே காணட்டும்
விதையன்பு
உறங்கும் வரம்
யாசிக்கிறதிப்போது
தா!
2. கண்ணாடி வழி கையேந்தியவளின் கண்கள் பட்டுத் தெறிக்கும்
ஒற்றைக் கதிரொளி
காண மறுப்பவர்கள் கைகளில்
ஃ பேஸ் புக் உரையாடல்கள்
கசியாத இதயத்தின் பின்புறம் அழும் குழந்தை கையால் காலாழாக்கு
தானமீந்த தந்தைப் படிமம்
பட்டே படாது பழுக்காது
அழுகிச் சொட்டும்
தவளை தோல் போர்த்திய
தக்காளி மனது.
3. சிறு கோப்பையில் சிவந்த வைனை ஊற்றுகிறாய்
மெழுகுவர்த்தி ஒளியில்
ரத்னசபாபதியாய் ஜொலிக்கிறது கவுன்களுக்கிடையே ஆறு கெஜம்
கூர்ந்து நோக்கப்படுகிறது.
நோக்கும் கண்ணில்
மது பேராசையாய் வழிகிறது
என் கை பற்றுகிறாய் நீ
மதுவன்றி உன் கண்ணில்
வழிகிறது பேரன்பு
காண மறுத்து சிவந்த திரவம் பருகுகிறேன் சபாபதி உன்னிடம் தாவுகிறான்
சிவப்பில் மூழ்குகிறேன் என்னைக் கொன்று அருந்துகிறாய் என் ரத்னா நீ!
4. அதென்னவோ தெரியவில்லை
இன்று நல்ல வெயிலும்
கூடவே சிலு சிலு மழையும். வேப்பிலைகளின்
ஊடே பாயும் கிரணங்கள்
என் முகத்தை தடவித் தடவிச்செல்கின்றன. மேலுதடு வளைந்திருக்கும்
ஆணின் முத்தம் அமிர்தமாமே?
உன் உதடு என்ன வடிவென்று புகைப்படத்தை எடுத்து
உற்று உற்று நோக்குகிறேன்.
உனக்குத் தெரியாதா?
முத்தச் சுவையாவும்
போன ஜென்மமே தீர்ந்துவிட்டன
போகட்டும்
இதோ தழுவும் கிரணங்களுக்கு வாகாய் முகத்தை திருப்பி அமர்கிறேன்
அவற்றின் உதடுகள்
வளைந்தெல்லாம் இருக்கத் தேவையில்லைதான்
கூடவே மேலே தெளிக்கின்றன
சூடான மழைத்துளிகளும்
என் கண்வழி உப்புநீருக்குப் போட்டியாய்
என் சிந்தனைகள் :
அகமனதின் கூவுதல்களை வார்த்தையில் வடிக்கும் யத்தனங்கள் பத்மஜா நாராயணின் கவிதைகள்.
வார்த்தைகள் வாதையை வெல்வதுமில்லை, கொல்வதுமில்லை. நாம் தான் கவிதை மூலம் எப்படியேனும் கடத்திவிட நினைக்கின்றோம். மரணம் கருப்பொருளாய் பல கவிதைகள். அம்மாவின் கை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மஞ்சள் முடிச்சு தூக்கி எறியப்படுகையில், படிப்பதை நிறுத்தி நிமிர்ந்து தெருவைப் பார்ப்பதைத் தவிர்க்க முடிவதில்லை. ஒருவருக்கு நெருக்கமாய் இருக்கும் கவிதைகள் அவர் உணர்வை புரிந்து கொள்ளாவிட்டால் அடுத்தவருக்கு நெருக்கமாக ஆகப் போவதில்லை. இறந்தவனின் பிறந்தநாள், கிரணமுத்தம், நம்பாதே மற்ற கவிதைகளை விட என்னளவில் நெருங்கியவை.
உறங்கும் வரம் நினைக்கையில் கிடைப்பதில்லையே.
காலாலாக்கு தானத்தில் கவிதையின் அழகியல் வடிகிறது
யாகத்திற்கு வந்து யுகங்கள் பலகடந்ததால் புதுயாகம் காணவந்த புது ரத்னசபாபதி.
என்ன சொல்வதென்றும் தெரியவில்லை.
பிரதிக்கு :
நவீன விருட்சம் & Amazon.in
முதல்பதிப்பு 2017
விலை ரூ 160 & 49.

தெரிவை  நூல் விமர்சனம் -----சரவணன் மாணிக்கவாசகம்

தெரிவை- பத்மஜா நாராயணன்:
ஆசிரியர் குறிப்பு:
காரைக்காலில் பிறந்தவர். சென்னையில் வங்கியில் வேலை பார்க்கிறார். மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். நான் மலாலா, வெண்ணிற இரவுகள், தடங்கள், நெருப்பிதழ்கள், ஷ் இன் ஒலி முதலியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள்.
தெரிவை:
1. சாப்பிட்டு, துடைத்து மறுநாள் சமையலுக்கு கோலமும் போட்டுவிட்டு
ஒற்றை விளக்கெறியும் சமையலறையில்
அணைக்க மறந்த டிரான்ஸிஸ்டரின்
தனிமைப்பாடல்களைப் போல்
ஏதோ முணகுது மனம்
நீர் குடிக்க வந்து
தனக்குப் பிடித்த பாடல் ஒலிக்க
மெய்மறந்து நிற்பது போல்
என் முணுமுணுப்பை ரசிக்கிறாய் நீ
நீரருந்தியவுடன் பாடல் மறந்து
சென்றுவிடுவாய் நீ என
அந்த ரேடியோவைப் போல்
எனக்கும் தெரிந்து தான் இருக்கிறது
அணைக்கும் வரை ஆற்றுவது தானே கடன்.
2. அதுவாகத்தான் அமைகிறது
அசைந்தழைப்பதில்லை எப்போதும்
இலைகள் கூட அங்கங்கு தான்
பெரிதாக சுகந்தம் கூட பரப்புவதில்லை
எப்போதோ பூக்கும் பூக்கள்
எப்போதாவது தான் காயாகி
விலகாமல் காற்றிலசைகின்றன
வெட்டப்பட்ட கிளைகள் மட்டும்
எப்படியோ உடன் வளர்ந்து விடுகின்றன
ஊழிக்காற்று எத்துணை அசைத்தும்
சிறுசலனம்கூட காண்பதில்லை வேர்கள்
பூவும் மணமும் புகழும் சுற்றுதலும்
இல்லாதிருப்பினும்
விதிகூட இதை விலக்கி வைத்திருப்பினும்
இந்த மரத்தில் மட்டுமே கிளிகள் குடியேறுகின்றன
கூவிக்கூவிக் களிக்கின்றன
என்ன!!!
உயரப் பறக்கும் பருந்திற்கு மட்டும்
இதனகம் கண்ணில் படுவதில்லை.
ஹுயு ஷீ சீனக்கவிதைகள்:(மொழிபெயர்ப்பு)
கனவும் கவிதையும்
சாதாரண அனுபவங்கள் தாம் அனைத்தும்
பிம்பங்கள் கூட சாதாரணவை தாம்
மிகவும் எதேச்சையாய் அவை
கனவுகளில் மலர்கின்றன
பின் ஒரு புதுவுரு அடைகின்றன
சாதாரண உணர்வுகள் தாம் அனைத்தும்
வார்த்தைகள் கூட சாதாரணவை தாம்
எதேச்சையாய் அவை கவிஞனை அடைந்து
முடிவுறா புதுக்கவிதையாய் மலர்கின்றன
மதுவின் வீரியம் அது தரும் போதையில்
காதலின் பலம் அதன் தோல்வியில்
என் கவிதையை நீ எழுதமுடியாதது போல
உன் கனவை நான் காண இயலாது
என் சிந்தனைகள் :
தெரிவை என்ற வயதுக்கேற்ற உணர்ச்சி பிரவாகம். காமத்தை சொல்வதிலும் இனம்புரியா சோகம் கலந்த பத்மஜாவின் கவிதைகள். கவிதை மொழி இவருக்கு வெகு இயல்பாய் வருவதால் கவிதைகள் மொழிபெயர்ப்பும் இயல்பாய் அமைந்திருக்கிறது. முத்தமலை என்ற ஒரு கவிதையில் மட்டும் மிஞ்சுதல் மற்றவை எல்லாம் தணிந்த குரலில் தாபத்தைச் சொல்கிறது. முதல் கவிதை தெளிக்கும் உணர்ச்சிகள் ஏராளம். தண்ணீர் குடிக்கவந்து முணுமுணுப்பைக் கேட்டுப் போவதல்ல. இரண்டாம் கவிதையில் விதி விலக்கி வைப்பதை கவனமாகப் பாருங்கள். சீனகவிதை சொல்வது போல் யாருடைய கனவையும் யாரும் காணமுடியாது, அது போல கவிதையில் இருந்து எடுக்கும் மனம் வேண்டும். பெரும்பாலும் எளிமையான மொழி, மீண்டும் மீண்டும் ஒரு கருப்பொருளை வேறுவேறு சூழலில் வைத்து வடிவமைக்கப்பட்ட பத்மஜாவின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. என் வரையில் மொழிபெயர்ப்பை விட சொந்தக்கவிதைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்பு அதிகமாயிருப்பதால் அவையே நெருக்கமாகின்றன.
பிரதிக்கு :
டிஸ்கவரி புக் பேலஸ்
முதல்பதிப்பு டிசம்பர் 2013
விலை ரூ 70.