Saturday, January 8, 2011

கதவிலக்கம் தொலைத்த வீடு

ஒரு  காலத்தில் அதற்கு
ஒரு விலாசமென்று ஒன்று இருந்தது
சிவப்பு வர்ணமடித்த கதவும்
அதில் கட்டத்தினுள் எழுதி வைத்த இலக்கமும்... 
சாதிப் பெயரை நீக்கிய போது
அதன் அடையாள வரி ஒன்று  குறைந்தது
ஆட்சியின் புது  இலக்கமிடல் விதியில்
அதன் எண்கள் இரண்டாகி
இரண்டுங் கெட்டது
வீதி அகலமானதில்
வெளிச்சுவரும் நசுங்கி
இன்றதன் அடையாளமும்
என்றோ வரும் கடிதத்திலும்
அதன் பெயர்
'படுதா மறைத்த வீடு' என்றாகிப் போனது..
அன்று தனக்கும் ஓர் இலக்கமிருந்ததை
யாருமே வாங்கிக் கொள்ளாத
நசுங்கிய  கதவு அவ்வப்போது நினைவூட்ட
கதவிலக்கம்  தொலைத்த வீடு
படுதா காற்றிலாட
மெல்ல புன்னகைக்கிறது..
 

Sunday, January 2, 2011

என் மிகச் சிறந்த புத்தாண்டுப் பரிசு

எங்கள் வீட்டின் மற்றொரு நபர் போன்றவர்தான் சாந்தி .என் வீட்டுக்கு வந்திருப்பவர்களுக்கும் ,என்னுடன் காலை நேரம் தொலை பேசி இருப்பவர்களுக்கும் இது நன்றாகவே தெரியும்

என் உடல் நிலை காரணமாகவும் ,போதிய பழக்கமின்மையினாலும்  என் வீட்டுவேலைக்காக என் வீட்டிற்கு தினம் வருபவர் தான்.
காலைநேர பரபரப்பில் ஆயிரம் முறை  சாந்தி என்ற பெயர் உச்சரிக்கப்படும் .

மிகவும் கடமை உணர்ச்சி உடையவர்.ஒரு வேலை சொல்லி விட்டு பின் மறந்து விடலாம் மிகவும் கச்சிதமாக அது முடிக்கப்பட்டு  இருக்கும்.

யார் யாரோ வீட்டுவேலை செய்பவர்களைப் பற்றி எத்தனையோ கதைகள் கூறும் இந்த காலத்தில் ,தன்னுடையதில்லாத எந்த பொருளிலும் கொஞ்சம் கூட ஆசை வைக்காத ஜீவன் .

பல வருடங்கள் கூடவே இருப்பதால் taken for granted ஆகவே ஆகிவிட்டார் ..

ஒவ்வொரு புத்தாண்டும் என் தங்கை மகனின் பிறந்தநாளாகவும் இருப்பதால் காலையிலேயே தங்கையின் வீட்டுக்கு சென்று விடுவோம்

அதனால் அதிகாலையில் என் அக்கம் பக்கம் வீடுகளுக்கு சென்று வழக்கமாய் அவர்களுக்காக நான் வாங்கி வைத்திருந்த பரிசை கொடுத்து விட்டு வீட்டிற்கு வரும் போது தான் சாந்தி வந்தார் ..

நிறைந்த சிரிப்போடு அவருக்கு வாங்கி தந்த சேலையில் வந்து" நல்லா இருக்கா மேடம்ன்னு" வீட்டில் நுழைந்தார் ..

கையில் ஒரு பை.அதிலிருந்து ஒரு ரோஜா மலரை எடுத்து என் மகளுக்கு தந்து விட்டு, இருங்க மேடம் இதோ வரேன்னு போனவர் கையில் ஒரு தட்டு அதில் ஒரு சேலை ..

'இது உங்களுக்காக இந்த நியூஇயருக்கு" என்று கூறி கொடுத்தவுடன் நெகிழ்தே போனேன்
என் வாழ்கையிலேயே இது போன்ற ஓர் அன்பளிப்பு பெற்றுக்கொண்டதே இல்லை  என்று தோன்றியது.

"என்னை  நினைக்க யார் இருக்கிறார்கள்?" என்று  சில சமயம் தோன்றும் கழிவிரக்கத்தை கோடாலிகொண்டு வெட்டி ஒரு positiveஆன ஆண்டை எனக்கு ஆரம்பித்து வைத்தது

அவருக்கு தெரியாமல் இருக்கலாம் ..
ஆனால் எனக்கு இது ஒரு வாழ்நாள் முழுவதும்  
மறக்கவியலா அனுபவமாக அமைந்து விட்டதுதான் உண்மையிலும் உண்மை .
 ரொம்ப தேங்க்ஸ் சாந்தி !