Wednesday, December 22, 2010

முடியவே முடியாமல்

என்னைத் துரத்தும்
நீ !
முன்னிருக்கும் முடிவுறா வட்டங்கள்
உன்னிடம்
அருகவும், விலகவும் வைத்து
விளையாடுகின்றன !
என்னிலிருந்து நான் வெளிப்பட்டு
உன்னிலிருந்து தப்ப முயல்கிறேன் ..
சுழல் வட்டங்கள்
தூக்கி எறிந்த அதை
ஏந்திய மாயக்கண்ணாடியின்
மறுபக்கத்திலும் நீ !
உன்னை விடவே முடியா
உணர்வுப் பள்ளத்தில்
இது!
தொடத்துடிக்கும் விரல்கள்
தொடவே முடியாதபடி
ஆடியின்
உள்ளேயும் வெளியேயும்
நீயும் நானும் !

Tuesday, December 7, 2010

மாற்றம்


நல்ல யுகலிப்டஸ்,துளசி,விபூதி பச்சிலை சேர்ந்து நறுமணமாக எங்கும் பரவி இருந்தது மூச்சை இழுத்து உள்வாங்கிக்கொண்டே விரைவாக நடந்தாள் சௌமியா.
நிச்சயம் இந்த காற்றே எதோ மாற்றம் செய்யும் என எண்ணியது மனது .

பணக்கார  வர்க்க பெண்மணிகளுக்கான rejuvenation center அது .உடலையும் மனதையும் வளப்படுத்தி அனுப்பும் நிலையம் ...
சௌமியா அப்படியெல்லாம் பணத்தில் புரண்டவள் இல்லை .மாத கடைசியில் கடன் வாங்கி நாளை ஓட்டும் குடும்பம் தான் .ஆனால் அவளின்  அழகும் ,திறமையும் ,இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது .
"கனவு போல" என்று நினைத்துக் கொண்டாள் .
இப்போது கொதிக்கும் டீயின் மணம்....இந்த மணங்கள் தான்   எப்படி நினைவுகளை கிளரச் செய்கின்றன ??
ஸ்ரீதர் அவளை பெண் கேட்டு வந்த நாளில் இதே டீ மணம் தான் .அப்பா நம்பவே இல்லை .ஏன் இவளுக்கே இன்னும் புரிபடாமல் தான் இருக்கிறது !
படிப்பு படிப்பு என்ற கனவெல்லாம் எங்கோ போனது .
"நீ என்ன வேணும்னாலும் படிமா "என வாஞ்சையுடன் கூறும் மாமனார் ..
இங்கே அனுப்பி வைத்தது கூட அவர் தான்
S V ரங்கராவ் போல கனிவும் அன்பும்...நிஜம் என உறைக்கவே நாளாகும் ..

ஆனால் கனவெல்லாம் காணாமலே போய்விட்டது .இப்போது மனதெல்லாம் ஸ்ரீ மட்டுமே ...
எதற்கும் பணியாமல் முரண்டு பிடிக்கும் மனம் .....மனமா இல்லை உடல் !
"நீ மட்டும் வெளிநாடு செல்ல என்னை ஏன் மணமுடித்தாய் ? "ஆயிரம் முறையாக மனது  கேட்கும் கேள்வி

ஸ்ரீ ஸ்ரீ என்று உருகியது ..அவன் நினைவு வர பரபரக்கும் சிந்தனை!அதனால் வரும் மாற்றம் !
"ச்சே !எப்போதிலிருந்து நான் நானில்லாமல் போனேன் ?"
வெட்கமாய் தான் இருக்கிறது

quite natural ! என்றார் அன்று பேசிக்கொண்டிருந்த மருத்துவ பெண்மணி ..சிந்தனையை வேறேதாவற்றில் மாற்று !
ஹ்ம்ம் மாற்று மாற்று மாற்று !

இதையெல்லாம் உணர்ந்திருக்க கூடும் வீட்டில் பெரியவர்கள் .....மீண்டும் பாட்டு ஓவியம் ஏன் போக அதுவும் சரிப்படாமல் போனது.

இரவு 11 மணிக்கு வரும் அழைப்புக்கும்,காலை  4  மணிக்கு கணிணியில் காணும் உருவத்திற்கும் காத்து நடைமுறையே மாறி போனது.கணிணியே கணவன் என்று எண்ணுகிற வரை வந்தாயிற்று .
"இன்னும் ஆறே மாசம் டா ஓடி வந்திடுவேன் " என மூன்று ஆறு மாசங்கள் ஓடி போயாச்சு .
சென்ற ஒரு வாரமாய் ஒழுங்காய் பேசாததாலும்,கணிணி  இல்லாததாலும் ,அவள் இருந்த நிலைமை பார்த்து இங்கே வர ஏற்பாடு செய்திருக்கிறார்கள் .

"ஹ்ம்ம் நன்றாய் தான் இருக்கிறது ...ஸ்ரீயும் இங்கிருந்தால்?...."மனம் சிலந்தி வலை பின்னக் கூடாதென்று விரைந்து நடந்தாள் சௌமியா.

"ஹாய்  நான் தான் ரேணுகா !உங்க ரூம் மேட் " என்று கைகுலுக்கியவளை அதிசயத்துடன் பார்த்தாள் சௌமியா

நல்ல உயரம் ,மினுமினுக்கும் பழுப்பு நிறம் ,ஆளையடிக்கும் புன்சிரிப்புடன் ரேணுகா ..அப்பா! என்ன ஒரு ஆளுமை .

அவள் வருடா வருடம் வருவாளாம்  .அவள் வேலை பார்க்கும் கம்பனிலேயே
இதுபோல லீவ் கொடுத்து அனுப்புவார்களாம் .அவள் செய்யும் வேலை அப்படி !
இன்னும் திருமணமாகவில்லை.

"LOOKING!"என்று கண்ணடித்தாள் .

"இங்கு ரிசப்ஷனில் நீங்கள் தான் என் கூட தங்கியிருக்க போவதாக சொன்னார்கள்.வா சாப்பிட போகலாம் ..வா போன்னு கூப்பிடலாம் தானே ?"
என்றவளை பார்த்து தலையாட்டுவதை தவிர வேறதும் தோணவில்லை !

சௌமியா !ஏன் புடவையிலே இருக்கே !இங்கு பயிற்சி செய்ய பாண்ட் சுடிதான் சரி .okயா?
 "நாளைலேந்து"என புன்னகைத்தாள்,சௌமியா

'ஏய் சௌமி,அழகான புன்னகைப்பா"    என 
"அது சரி"  என நினைத்துக் கொண்டாள்  

ரேணுவிற்கு அங்கு பல தெரிந்த முகங்கள். எல்லார் அறிமுகமும் ,கலந்துரையாடலும் 
சிரிப்பும் ,பேச்சும் ,கல்லூரி நாட்களை நினைவூட்டி ,மனது சிறிது லேசானது போல ..

"தேங்க்ஸ் மாமா "என மனதில் சொல்லிகொண்டாள் .

இருவரும் ரூமிற்கு திரும்பும்  போது 9.30 ஆகிவிட்டது .குளிர்ந்த காற்றும் ,நட்சத்திர ஒளியும் ,ஒரு சொல்ல முடியாத அமைதியை மனதிற்கு தந்தது.

ஒளிந்திருந்த  எண்ணம் மீண்டும் வெளிப்பட்டு "ஸ்ரீ மட்டும் .......சூ...... சூ....... என அதை ஓட
விரட்டினாள்.

"நான் முதலில் ஒரு குளியலை போட்டு வந்து விடுகிறேன் "என ஓடிவிட்டாள் ரேணு .பழக்கமில்லாமல் கூடுதலாக நடந்து காலெல்லாம் ஒரே வலி .

திரும்ப வந்த ரேணு "ஓ கால் வலிக்குதா ?என சொல்ல சொல்ல கேளாமல் தைலம் தேய்த்து பாதங்களை பிடித்து விட்டாள்.

அந்த இதத்திலேயே தூங்கிப்போன சௌமியா ,திடீரென்று உடல் சிலிர்த்து விழித்த போது
'உனக்கு எத்தனை அழகான ,வெண்மையான இடை !"என
சௌமியாவின்  புடவை விலகி பளீரிட்ட  இடையை ரேணு வருடிக்கொண்டிருந்தாள்
அதை தடுக்கத்  தோன்றாமல் அப்படியே படுத்திருந்த அவளின் கண்ணின் ஓரம் மட்டும் இரண்டு நீர்த்துளிகள் ..

Friday, November 19, 2010

ஜிங்கிள் ஆல் த வே !


நவம்பர் துவங்கியவுடனேயே
எழுப்பி விடுகிறார்கள் .

வரிசையான கோரிக்கைகள்
மடியில் அமர்ந்தும் ,கனவில் கிசுகிசுத்தும் ,கடிதம் போட்டும்
ஆசைகள் ஆயிரம்.

வீடு வீடாக அலங்கரிக்கப்பட்டமரங்களில்
தொங்கும் காலுறைகளையெல்லாம் நிரப்பி நிரப்பி
வாதமேறிய விரல்கள் மேலும் விறைக்கின்றன.

ஆண்டுகள் ஈராயிரம் ஓடிக்களைத்த ரெயின்டீர்கள்
இனி ஓடுமோ என வருடந்தோறும் தோணுகிறது !

ஆசைகள் விகசித்து
ரொம்பிவழியும் ஸ்லெட்ஜின் அச்சாணி
இற்றுபோகாததொரு அதிசயம் தான் ..

ஜிங்கிள் மணியின் ஓசைகூட
மந்தமான காதில் மெதுவாய்த்தான் கேட்கிறது .

புகைபோக்கி வழி வெளிவந்து ருமாடிச காலைத் தேய்த்து நடக்கையில்...
இரண்டாயிரத்து பத்தாவது முறைகூட
தன் ஆசை என்னவென்று யாருமே கேட்கா ஏமாற்றத்தில்..
அடுத்த வருடமாவது !என்ற ஏக்கத்தோடு நீளுறக்கம் கொள்வார்..
மீட்பன் பிறந்த தினம், கொடுத்துச் சிவந்த ஆதித் தாத்தா

Tuesday, November 9, 2010

உடைந்த நகங்களும் ,கூர் பற்களும்

நகங்கள்
மிருகங்களிடம் மட்டுமே
நீண்டு வளரும் என நான் நம்பியது
உனக்குத் தெரிந்திருந்தது.  
அதனால் உன் கூரிய நகங்களை
என்றும்
மடக்கி,மறைத்தே வைத்திருந்தாய் .

உன் பின்விரல்களால்
என் முகம் தடவும் போதும்
உன் விரல்கள்
மழுங்கியேதான் தோன்றின .

ஆயின்
துரோகத்தின் சுவையறிந்து
ரத்தவிளாரான என் முகம் பொத்தி
விக்கித்து அமர்ந்த போது,
உன் உடைந்த நகங்களும்
இனி வளராது போகும்
என்றறிந்து வந்தமரும் புன்னகையை
மறைக்கவே முடியவில்லை....

நீ உன் விஷப்பற்களை
சாணை பிடிக்கப் போயிருக்கலாம்
எனத் தெரிந்திருந்தும் கூட .

Sunday, November 7, 2010

என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே

நிலவு தராத மயக்கம் உண்டா?
அதுவும் முழு நிலவில் தன் காதலியின் முகத்தைக் கண்டு பாடும் காதலன் எத்தனை உன்மத்தனாக மாறி இருக்க வேண்டும்..?
வெண்ணிலாவிடம் போய் "நான் கெஞ்சினால் அவள் தர மாட்டாள் ,நீயாகவே வாங்கிகொள் ,இதும் அவள் சொல்லிக்கொடுத்தது தான் என பிதற்றும் காதலனை நாம் ரசிக்காமல் இருக்க முடியுமா ?
T M S இன் குரலில் இந்த அழகிய பாடல் ..
கேட்க கேட்க சலிக்காமல் .....

Monday, November 1, 2010

வளரும் முத்தம்


தராமல் போன முத்தமொன்று 
நம்மிடையே வளர்ந்து கொண்டே 
போகிறது 

எந்த ஒரு கட்டுக்கும் 
அடங்காமல் 
உடன் என்னிடம் சேர 
துடிக்கிறது 

அதில் நேற்று முளைத்த 
சிறகுகள் 
என் வயிற்றினுள் 
படபடத்துக் கொள்கின்றன 

என் ஒரு சிறுமுத்தம் 
போதும்
அதை மரணிக்க 
இல்லை ஒரு சொல் 
மாத்திரம் !

இருந்தும் 
பேருரு எடுக்கும் அதனை 
புன்னகையோடே வளரவிடுகிறேன் .
வியாபித்து 
என்னையது 
கொல்லும் நாளுக்காக ! 

Friday, October 29, 2010

காலும், காதலும், காமமும்,


மிக மிக 
மெலிதான தொடுதலுக்கு 
உன் விரல்கள் 
ஆயத்தம் கொள்வதை 
ஏனோ உன் கண்கள் 
முன்னதாகவே 
வெளிப்படுத்தி விடுகின்றன.

அவை ஏற்படுத்தப் போகும் 
சலனங்களுக்கு 
அஞ்சி 
நான் சிறிது சிறிதாய் 
விலகி அமரும் போது 
என் கால் விரல்கள் 
உன் தொடுதலுக்கு 
இலக்காகின்றன .

கால்கள் 
மரியாதையை மட்டுமல்ல 
காதலையும் சமர்ப்பிக்கும் 
இடம்தான் 
என அந்த வருடல் 
கற்றுத் தந்த க்ஷணத்தில் 
நம் காதலும் காமமும் 
ஒன்றாயின .

Friday, October 22, 2010

Kanmani Anbodu Kadhalan - Guna - Kamal Haasan & Roshini

Monday, October 18, 2010

பாழாய்ப் போன மனசு


எத்தனை முறை 
கடக்க நேரிட்டாலும் 
திண்ணை வைத்த 
அந்த பழைய வீட்டை 
யாரும் இடிக்காமல் 
இருக்கவேண்டுமென 
ப்ரார்த்தித்துக்கொண்டே இருக்கிறது 
மனசு!

8888888888888888888888888888888888888888888888888888888888888

ஓடும் வண்டியினை 
கைகாட்டி நிறுத்தி,
மல்லிப்பூ விற்கும்
சிறுமிகளின் தலையில்,
ஒரு நாளேனும் 
கிள்ளுப் பூவாவது 
காண ஏங்குது மனசு!

8888888888888888888888888888888888888888888888888888888888


எங்கோ வெளியூரில் 
எதேர்ச்சையாய் 
காணும் நேரும் 
இறுதி ஊர்வலங்களில் கூட,
எடுத்துச் செல்லப்படுபவர் 
வயதானவர் 
என்றுணர்ந்த பின்பே,
ஆசுவாசமாகிறது மனசு !

8888888888888888888888888888888888888888888888888888888888888888888888

Wednesday, October 13, 2010

மலைப்பாதைகள் அன்று வெளிச்சமாய் இருந்தன



இருட்டு, மலைகளில் விரைவில் படரும் என்பது கூட அறியாமல்
மலைவீதிகளில் சுற்றித்திரிந்தோம் அன்று.
பனியும் கருமையும், படர் வீதிகளில்
ஓர் ஒற்றைப்  போர்வை போர்த்தி,
மூடிய ஒரு விடுதியில், நாம் இரக்கச் சோறு
உண்ணச் செல்கையில்
மெல்ல
உன் மணம்,என் நினைவுப் படிமங்களில் ஆழ்ந்தது .

 பின், சட்டைப்பையில்
ஒளித்து வைத்த காதல் கடிதம் படித்து 
நீ என் இதழ் பறித்த போது 
சேர்ந்து வீழ்ந்தது, என் வெட்கத் திரையும் தான்  .

உன் பழைய பனியனின், மணம் கிளர்த்திய 
இவ்வேட்கைகள் தீர 
மற்றொரு முறை மலைப்பாதையில் கால் பாவாமல்
உன் தோள் தொற்றி நடக்க விழையும் நேரத்தில் தான்
எனக்கான மலைப்பாதைகள், இப்பொழுதெல்லாம் 
இருட்டாகவே எப்பொழுதும் இருப்பதை 
மிக தாமதமாக
என் மனம் புரிந்து கொள்கிறது . 

Thursday, October 7, 2010

வால் வெட்டப்பட்ட குரங்கு


ஒரு பெருவெளியின் 
துகள்கள் 
பிறப்பும் இறப்புமாய் 
பெருக்கெடுத்து ஓடிய 
பொழுதில் 
காலத்தின் சக்கரம் சுழல
நுரையாய் பொங்கிய வெளி 
காற்றாய் மாறும் தருணம் 
சிலிர்த்து கிளம்பிய நான் 
ஓடத்தொடங்கியது .
இரவும் பகலுமிலா நேரம் 
திசை தெரியா ஓட்டம் 
முடியும் வேளை 
சிறுபுள்ளியாய் கரையும் 
நானின் முன்னே தான் 
முதல் முதலில் 
ஒரு நாயை 
பெண்டாளத் தொடங்கியது 
வால் வெட்டப் பட்ட 
குரங்கு ஒன்று .

Sunday, October 3, 2010

கலர் கலரில் தோற்றவள்

 
L
O
N
D
O
N

விளையாட்டாகட்டும்
காக்கை முட்டை
விளையாட்டாகட்டும்
எல்லாவற்றிலும் ஏமாந்து
தோற்று போவாள் 
மீனு ..
கலர் கலர் வாட் கலரில்
கூட
தன் சட்டையில்  உள்ள
பூ கலர்
எல்லாரும் வந்து
தொட்ட பின்பு தான்
கடைசியாக அவளுக்குத்
தெரியவரும் ...... 

தன்னை விரும்பியவனை 
மறுத்து ,
அந்த மாடி வீட்டுக்காரனை  
மணந்து
காரில் போகும் போது 
மட்டும்  
 வாழ்க்கையில் ஜெயித்தவள் 
என
      இப்பொழுது  சொல்கிறார்கள்  ... 

அதுமட்டுமெப்படி?



Saturday, September 25, 2010

நாய்க்குடைகள் மலர்ந்த கொல்லை


மேலாக்கில்லாமல் 
வெளியே 
வரவே கூடாதென 
ராஜியை 
அம்மா திட்டியும் 
கேளாமல் ,
கண்ணாமூச்சி
விளையாடும் நேரம் ...
கருவம் வைத்து 
அந்த தனசேகர் 
அவள் கைப்பிடிக்கமுயன்றது
பிடிக்காமல்
அவளழுத அந்த 
மழை நின்ற மாலையில் தான்
கொல்லை முழுக்க 
நாய்க் குடைகள் 
மலர்ந்து நின்றன ..
                                                              
அவளைப் போலவே !

Sunday, September 19, 2010

நினைவலைகள்


மறக்கவியலா 
பள்ளி நாட்கள் 
என தலைப்பிட்டு 
அடித்த லூட்டியும் 
வாங்கிய அடியும் 
மகிழ்ந்த நட்பும் 
என பலதும் 
எழுத முயல்கையில் 
"என் பையன் " என் பையன் "
என 
பிணவூர்தியின் பின் 
கதறிக் கொண்டு 
ஒரு தந்தை போன 
முதன்முதலில் 
கண்ட ஒரு சிறுவனின் 
இறுதியூர்வலம்
நினைவின் முன் வந்து 
நிற்கிறது !

Monday, September 13, 2010

பாட்டியும், பிண்டக் காக்கையும்


மாமன் அகாலமாய் 
இறந்தஅன்று கூட 
முற்றத்தில் உருண்டு புரண்டு 
ஓலமிட்ட பாட்டியின் 
கண் வற்றி 
ஈரமில்லாமல் தான் இருந்தது 

 
உணர்வுகள் செத்த உடலாய்
நாளை போக்கிய அவள் 
தாத்தாவின் திவசமன்று 
காக்கைகளுக்கு 
பிண்டம் வைப்பதற்கு மாத்திரம்
வேறெவரையும் விடமாட்டாள் 


சோற்றை கொத்தும் காக்கையை  
வெறிக்கும் சமயம் மட்டும் 
அங்கோர்  உணர்வுக்குவியலாய் 
வேறொரு மனுஷுயாய் 
மாறிபோகும் அதிசயம் தான் 
என் பாட்டி 

Sunday, September 5, 2010

தேடும் தேடல்


யாராவது யாரையோ போல் தான்
இருந்துவிடுகிறார்கள் .
கண்ணோ ,மூக்கோ,நடையோ,
சாயலோ,பெயரோ,யாரையாவது ஒத்ததாக ..


யாரிலோ யாரையோ காணும் மனம்
யாரைத் தேடுகிறது யாரிலோ?


யாராவது என்னிலும் யாரையோ
காணக் கூடும் ....


யாருக்காவது யாரோவாக இருக்கும் சாத்தியம்
இருக்க வேண்டும்
என ஆசை கொண்டு
யாரிலாவது யாரையோ தேடுகிறேன் ..

Sunday, August 29, 2010

என் கனவு வரி கவிதையாய் ..........

என் முந்திய பதிவின் ஒரு வரியான 

"கொய்த தலையில் காணும் புன்னகை" 

என்ற வரியை தலைப்பாய் வைத்து திரு க சீ சிவக்குமார் அவர்கள் அருமையான கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார்  ..
இதை விட நான் பெருமை கொள்ள வேறு காரணம் வேண்டுமோ?
நன்றி நன்றி என நூறுமுறை கூறி மகிழ்கிறேன் ..

கவிதையை படிக்க

http://sivakannivadi.blogspot.com/2010/08/blog-post_27.html ...


.

Tuesday, August 24, 2010

கனவுகள் தடை செய்யப்பட்ட உலகு

கனவுகள் தடை செய்யப்பட்ட உலகில்
என் கனவில் நீ
என் இருப்பை அர்த்தமுள்ளதாக்கும்
நீ வரும் கனவினை காண்பதில்
என் இருப்பு இல்லாமல் போனாலும்
எனக்கு கவலை இல்லை
ஏனெனில்
கனவு காணும் மனிதர்களை கொல்லும் போது
அவர்களால் கனவினை கொல்ல முடியாமல் போய் விடுகிறது
கொய்த தலையில்  காணும் புன்னகையில்
என் கனவுகளின் தடம் கண்டு
அவர்கள் வெறி கொள்ளும் போது
நாம் மீண்டும் நம் கனவுகளில் சந்தித்துக்  கொள்கிறோம்

Sunday, August 22, 2010

க சீ சிவக்குமாரின் "கானல் தெரு" ஒரு வாசிப்பனுபவம்

ஒரு நாளைக்கு குறைந்தது 50  பக்கங்களாவது படிக்க வேண்டுமென்பது நிமிடத்திற்கு இத்தனை முறை நாடி துடிக்க வேண்டும் என்பது போல எழுதா விதி எனக்கு .

எத்தனை புத்தகங்கள் படித்தாலும் விமர்சன பார்வையில் படித்தால் வாசித்தலின் சுவை குறையும் என்பதால் அதில் இஷ்டமில்லை.

ஆனால் திரு க  சீ  சிவகுமாரின் "கானல் தெருவை" வாசித்த பிறகு அதனழகை பகிர வேண்டுமென்ற பேரவா ..

உலகமே ஒப்புக்கொண்ட ஒரு சிறந்த ஆசிரியரை அறிமுகப்படுத்துதல் அதுவும் ஒரு சாதாரண வாசகியான நான் செய்தல்  புருவங்களை உயர்த்தச்  செய்யும் .அத்தவறை புரியாமல் ,நான் ரசித்த ,என் மனதிற்கு பிடித்த வரிகளை பகிர்ந்து கொள்ள மட்டும் முயற்சி செய்திருக்கிறேன் .

என் கன்னி முயற்சியை பொறுத்தருள்க .

தனக்கு தொடர் எழுதும் திராணியை இதை எழுதி ஆசிரியர் உணர்ந்ததாய் ஆரம்பிக்கிறது கானல் தெரு .

திரு சிவக்குமாரின் மிகச்சிறந்த படைப்பாய் "கன்னிவாடி " சிலாகிக்கப்படுகிறது எனினும்
இக்கானல்தெரு  படித்த பின் ஏற்படும் நினைவோட்டங்களும் ,பலமுறை படித்து மகிழ நிரம்பியிருக்கும் படிமங்களும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் என்பதில் மிகை இல்லை

இவ்வளவுதான்  உலகம் என கற்பிக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவியும் ,இவ்வளவுதான் உலகம் என் இறுதியில் உணரும் இளைஞன் பார்த்தியும் முக்கியமாக உலா வருகின்றனர் .

கதையின் முதல் வரியிலேயே அந்த 'வளரிளம் அலைகள்'    என்ற சொற்றொடரில் மயங்கி நிற்கிறோம் .அவ்வலைகளை கற்பனையில் கண்ணுற்று களிக்கிறது மனம் .

பள்ளியில் மாணவிகள் ரோஜா மலரை டிபன் பாக்ஸில் நீரில் போட்டு சூடிக் கொள்வதும் ,
''ஏதோ ஓர் உணர்வை தேரையை போல் சுவரில் கற்களூடே பள்ளி வைத்திருக்கக்கூடும்" என்ற ஊகமும்,  ஒரு nostalgic  உணர்வை ஏற்படுத்துகிறது .

திரு சிவக்குமாரின் தனித்தன்மையான  satire  கதை  முழுவதும் அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கிறது .

ஸ்ட்ரைக் ஆதரவு திரட்டும் மாணவர்களை குறிக்கும் போது
"பெயிலாகிறவர்களை நம்பி தேசம் இயங்க வேண்டிய காலம் கனிந்து விட்டது "எனும் போதும்

"ஆண்டிறுதி உடற்றிறப்போட்டி" இதன் தொடர்ந்த வல்லின உச்சரிப்பு பற்களின் உறுதிக்குப் பயிற்சி " என கூறும் போதும் ,

"எல்லா வைபவங்களும் களைப்பில் தன முடிகின்றன " என்ற உண்மையை உணர்த்தும் போதும் ,

"இலக்கியத்தில் வந்த முப்பத்தெட்டு நிலவுகள் பற்றி அற்றை பகலில் பேசினார்" என கிண்டலடிக்கும் போதும்

"எவ்வளவு குறைவாக வாங்கினாலும் அதற்கு மதிப்பெண் என்ற பெயரிருப்பது ஆச்சரியம் "

"இந்த பெரு வெய்யிற் கோடையில் அரும் காதல் எப்படித்தான் வேர் பிடித்து விருட்சங்கள் ஆகின்றனவோ?"
என வியக்கும் போதும் ,

நாலணா காசை தியேட்டர் கவுண்டரில் துளைபோட ,மரங்கிறுக்க என்றே அரசு தயாரித்து வருகிறது எனும் போதும்

அந்த satire இல் உள்ள சுவையை ருசிக்காமல் இருக்க முடியுமா?

கதையினூடே கவிதை மழையும் உண்டு .

ஓரிரு வரிகள் எனினும் அவ்வரிகளின் கவிதாவனப்பு சிற்சில சொற்களை வைத்தே கிறுக்கும் என் போன்றோரை வெட்கமடையச் செய்கிறது .

ஒரு புன்னகையை "புத்தருக்கும் ,மோனாலிசாவிற்கும்   இடைப்பட்டதாய் "என வர்ணிப்பதிலாகட்டும்,

"நேசம் சில சமயம் பின்ன எண்களைப் போல் இருக்கிறது" என வியப்பதிலாகட்டும் ,

"சிலையை தவிர்த்து சிற்பியை வணங்கினான் ஒரு  பொற்கணம்"  என சிலாகிப்பதிலாகட்டும்,

"மூச்சு விடும்போதே மூச்சு விடாத  ரகசிய மௌனம் " எனும் போதும்

திணறித்தான் போகிறோம்

இறுதியில் சில வரிகள்

"வயதுகளற்ற காலம் வயதுகளை சுமத்துகிறது எதன்  மீதிலும் ,
காலத்தின் புத்திளமையோ கோள்களின் எடையோடு சிந்தனை மேல் கவிகிறது "

இச் சிந்தனை நம் மீது கவிந்து பேச்சற்றவர்களாய் போகிறோம் .

இவ்வாசிப்பனுபவத்தில் மூழ்கி இவ்வளவு தான் வாழ்க்கை என்று நாயகனுடன் நாமும் உணருங்கால் ,"காதல் என்றால் என்ன?" என்ற ஒரு பெருங்  கேள்வியோடு  மற்றொரு பக்கத்தை திறந்து வைக்கிறார்.


நான் இங்கு கானல் தெருவில் ரசித்து படித்ததையும் மகிழ்ந்து சிந்தித்ததையும்  பற்றி மட்டுமே எழுத முயன்றிருக்கிறேன் .

ஒரு நெடுங்கதையில் பலவித வாசிப்பனுபவம் கிடைத்து திளைத்ததை எனக்கு தெரிந்த அளவு பகிர்ந்துள்ளேன் .

வாய்ப்பு கிடைத்தால் வாசித்தது மகிழுங்கள் .

Sunday, July 25, 2010

வடிவு என்ற C K சரஸ்வதி

நேற்று மற்றொரு முறை தில்லானாமோகனாம்பாள்   பார்க்க நேர்ந்தது .அதிசயமாக தொலைக்காட்சி  பெட்டியில்  ப்ரௌஸ் செய்யும் போது இந்த படம் ஒளிபரப்பப்  பட்டுக்கொண்டிருந்தது ..எத்தனை முறை  பார்த்தாலும் அலுக்காத படம் என்பதால் சிறிது நேரம் அமர்ந்து பார்த்தேன் .
 
இந்த படத்தின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடே கிடையாது ..அது வேறு  விஷயம். பொசுக்கென்றால் சந்தேகப்படுவதும் ..பின் உணர்வதும் ......ஒரு மனம் ஒப்பிய காதல், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது அல்லவா?...
 
பிடிக்காதது  இருந்தும் சிலது பிடிக்கும் அதற்கு காரணங்கள் தெரியாது   .அது போல இந்த படமும்.
அதுபோகட்டும் வடிவைப்பற்றி பேசுவோம் ..
 
இந்த படத்தில் மிக அழகான உடைகள் அணிந்து கதாநாயகியையும்  தூக்கி சாப்பிடுபவர் வடிவாக வாழ்ந்த C K  சரஸ்வதி அவர்கள் .
 
பெண்கள், திரையில் தோன்றும் உடைகளைப் பார்க்காமல் போனால் ஜன்ம சாபல்யம் ஆகுமா? அதிலும்  சரஸ்வதி அம்மாள் அணிந்து வரும் நல்ல அழகிய combination இல் பட்டு புடவைகளும், நகைகளும் ஆஹா வென்று சொல்ல வைக்கும் .
 
அதனால் தானோ என்னவோ எனக்கும் மனதில், அவர்கள் பட்டிலும் தங்கத்திலும் புரள்வார்கள் என்ற எண்ணம் இருந்தது ,அவர்களை நேரில் காணும் வரை....
 
நான் சென்னை  சைதாபேட்டை அலுவலகத்தில் வேலை செய்யும் போது பல திரையுலக பிரபலங்கள் எங்கள் அலுவலகத்திற்கு  வருவதுண்டு .போன புதிதில் ஆ வென்று  வாய் பிளந்து பார்த்திருக்கிறேன் .பின்பு அவர்களில் சிலர் நண்பர்களாகவே மாறினர்.
 
ஒரு நாள் என் சக ஊழியை" பத்மா ..அங்க பாருங்க யாருன்னு" !என்று  சுட்டிக் காண்பித்தார்  .
ஒரு வயதான மூதாட்டி ஒரு கசங்கிய சேலை அணிந்து மிகவும் பாவப்பட்ட நிலையில் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்தார் .
 
'இவர் தான் தில்லானா மோகனம்பாவில் நடித்த சி  கே சரஸ்வதி அம்மாள்' எனவும் ,மிகவும் அதிர்ச்சியாய் போய்விட்டது .அப்படியா அப்படியா வென்று பலமுறை கேட்டு விட்டு அருகில் சென்று பேசினேன் .
 
அருகே சி ஐ டி நகரில் வசிப்பதாகவும் ,மிகவும் சிரமமான பிழைப்பாய் இருப்பதாகவும் அரசு நலிந்த கலைஞர்களுக்கு  தரும் ஊய்வூதியமான 2000 ரூபாய்  வாங்க  அருகில் ஒரு வங்கிக்கு வந்ததாகவும் கூறினார்.

மிகவும் வருத்தமாய் இருந்தது ..பின் ஒரு நாள் தி .நகருக்கு நடந்து செல்வோம் என்று போகையில் ,ஒரு வீட்டு வாசலில் தண்ணீர் பிடிக்க ஒரு கிழிந்த  nighty  அணிந்து போராடிக்கொண்டிருந்தார் .

இதுபோல வெள்ளித் திரையில் மின்னி விட்டு நிஜ வாழ்வில் கஷ்டப்படுபவர்கள்  எத்தனை பேரோ?
தியாக ராஜா பாகவதரில் ஆரம்பித்து ,பல பேர் இருக்க வேண்டும் .

இருப்பினும் திரையில் காணும் பொய் பிம்பங்களை வைத்து நம் மனதில் ஒரு கற்பனை வைத்துக்கொள்வது எவ்வளவு தவறு ?
இப்படி நிழலை நிஜம் என்று நம்புவதாலேயே தான் திரையுலகு நம்மை ஆளவும் வழி வகுத்திருக்கிறோம். நிழலின் போலித்தனத்தையும் நிஜத்தின் கொடூரத்தையும் சந்திக்கும் போது அதிர்ச்சியாய் உள்ளது  .

நிறைய பேருக்கு இது தெரிந்தும்  இருக்கலாம் .எனக்கு கொஞ்சம் லேட்டாகத்தான் உணர முடிந்தது
அது சரி, இந்த  திரை உலகத்தைப் போல் எத்தனை ஊடகங்களோ?

Thursday, July 22, 2010

சோதனைக் கப்பல்

சோதனைகென்றொரு  
கப்பலை
செலுத்திப்   பார்க்க
துணிந்து விட்டேன் 

போகுமிடம் தெரியாததால் 
அடையும் முகவரி
அறியாததால்
காற்றினை மட்டும் நிரப்பி,
விரைந்து போ
என ஆணையிட்டேன் .

காத்து காத்து
மறந்த ஒரு நாளில்
சோதனைக் கப்பலும்  
இக்கரை அடைந்தது .

காற்றடைத்த இடமெல்லாம் 
காணாவிடங்களிலிருந்து  ,
அன்பின் முகவரி ரொப்பி,
ஆயிரம் மலர்களும்  தாங்கி
என் சோதனைக் கப்பல்
ஒரு சாதனைக் கப்பலாய்!

Tuesday, July 20, 2010

கலாப்ரியா கவிதை

ஒரு மொழியில் ,ஒரு இனத்தில் ,
ஒரு முறை தான் நிகழும் அற்புதம் கலாப்ரியா 
                                                                                                           ---விக்கிரமாத்தியன் 



இந்த வருடம் சிற்பி இலக்கிய விருது  வாங்கும் திரு கலாப்ரியா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .அவருடைய கவிதை ஒன்றினை மொழி மாற்றம் செய்ய முயற்சித்துள்ளேன் .
என் முயற்சி வெற்றி என்றால் மகிழ்ச்சி
கவிதையினை பங்கம் செய்திருந்தால் மன்னிக்கவும்
தமிழின் இனிமையையும் அழகையும் எந்த மொழிலும் புகுத்தல் கடினம் ..எனினும் என் சிறு பிரயர்த்தனை .

----------------------------------------------------------------------------------------------------------------------------------

                                         DID WE MEET?

WE FAILED TO MEET
THOUGH
WE DID MEET

BY CONSENSUS
WE CHOSE
NOT TO SIT BY THE TREE
WITH TREPIDATION
FOR THE BIRDS DROPPINGS
ON US

THE MOMENT
WE SAT ON GRASS
WE GLIMPSED AT AN ANTHILL
FRANTICALLY TRYING TO CAVE IN ,
AND OUT CAME SOME INSECTS
UNBALANCED AND SCURRYING ....
YOUR FORE FINGER TOO REMAINED
A BOOK MARK,
TO OPEN THE PAGE YOU LIKED
HOWEVER IDLE FOR LONG

AS WE FAIL TO NOTE ,
THE FINEST ATTRIBUTES OF A MOVIE ,
JUST BY READING AND FAILING ,
AND TRAILING BEHIND THE SUBTITLES ..

WE COULD NEVER
MEET EACH OTHER
ALTHOUGH...
WE MET ONE FINE DAY

-----------------------------------------------------------------------------------------------------------------

                                           துணைத்தலைப்பு
நம் சந்திப்பு
நிகழாமல் போனது

 பறவைகள்
தலையில் தோளில்
எச்சமிடலாமெனவோ
என்னவோ
மரத்தடியை ஏற்கனவே
தவிர்த்திருந்தோம்
சற்றே மனம் பகிர்ந்து .

புல்தரை
மீதமர்ந்த உடனேயே
கலையத்தவிக்கும்
இரும்புப் புற்றை கண்ணுற்றோம்
வேறு சில பூச்சிகளும்
சமன் குலைந்து
இடம் பெயர்ந்தன
படித்துக் கொண்டிருந்த பக்கத்தை
உடன் எடுக்கத் தோதுவாய்
உன் சுட்டு  விரலை
நெடுநேரமாய் ஒரு
புத்தகத்துக் குள்ளேயே
வேறு வைத்திருந்தாய்

துணைத் தலைப்புகளையே
பார்த்துகொண்டிருந்ததில்
வாசிக்க முயன்று தோற்றத்தில்
படவிழா சினிமாவின்
மற்ற நல்ல பரிமாணங்களை
தவற விட்டது போல்

நம் சந்திப்பு
நிகழாமல் போனது
நாம் சந்தித்த அன்று

 

Monday, July 19, 2010

நெய்வேலி புத்தகக் கண்காட்சி

 இம்முறை கண்காட்சி சென்று ,நான் மிகவும் சந்தோஷப்பட்டது நம் வலைப்பூ  நண்பர்களின் புத்தகங்களைப் பார்த்து தான் ..ஏதோ நமக்கு மிகவும் வேண்டியவர்களை பார்த்தது  போல இருந்தது ....

அகநாழிகை ஏதும் stall போடவில்லை ...உயிர்மையில் மனுஷ்ய புத்திரன் வந்திருந்தார் ..அங்கு எஸ் ரா வாங்கி விட்டு,பின்  அவரின் "கடவுளுடன் பிரார்த்தித்தலில்" அவர் கையெழுத்தும் வாங்கிகொண்டேன் ..

அப்போதுதான் பா ராஜாராமின்  கருவேல நிழல் கண்ணில் பட்டது ..மனுஷ்ய புத்திரன் சொன்னார் ..'வாசு என் நண்பர் தான்.அவர்  தனியே  கடை போடவில்லை ..நான் தான் வைத்திருக்கிறேன்' என்று..

உடன்  அங்கிருந்த இரண்டு கருவேல நிழல் ,நீர் கோல வாழ்வை நச்சி,கூர்தலறம் ,கோவில் மிருகம் ,என எல்லாவற்றையும் வாங்கி விட்டேன்..என்னவோ சொல்ல இயலா சந்தோஷம் ..

அதேபோல் மற்றொரு இனிய surprise அடர்கருப்பு காமராஜரின் ஒரு தேவதையும் பொன்வண்டும் புத்தகம் கிடைத்தது (அதை படித்து முடித்து விட்டேன் சார் ).கூட வந்தவர்களிடம் இவங்கலாம் எனக்கு தெரியும்ன்னு பெருமை அடித்துக்கொண்டதில் அவர்கள் நொந்து போனது நிஜம் ..

வந்து ஒரே மூச்சில் இந்த புத்தகங்களை படித்தும் ஆயிற்று .(நம் வலைப்பூ  நண்பர்களின் புத்தகங்களை சொல்கிறேன்)

மதியம் 12  மணிக்கு போனதால் கூட்டம் கம்மி . கடைசி நாளானபடியால் நல்ல discount உம் கிடைத்தது (15 முதல் 50 வரை )

சாம்ராஜ்யப்ரியன்   கண்காட்சிக்கு வந்திருந்தார் ..சென்னை அளவில் இது மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை என்று சொன்னார்..இருப்பினும் நாங்கள் திரும்பும் சமயம் ஏறக்குறைய ஆறுமணி அளவில் அரங்கம் நிரம்பி வழிந்தது ...
நல்ல வேளை நாம் இப்போது வரவில்லை என நினைத்துக்கொண்டேன் .

அரங்க ஏற்பாடுகள் எல்லாம் அருமையான முறையில் இருந்தன ..ஆனால் விற்பவர்கள் கொஞ்சம் சுமூகமாக இருந்திருக்கலாம்

இந்தமுறை தமிழ் புத்தகங்கள் மட்டுமே வாங்குவது என்ற முடிவில் வந்ததால் ஆங்கில புத்தகங்கள் பக்கம் ஏறெடுத்தும் கூட பார்க்கவில்லை.

திஜா அனைத்தும் தமிழ் பல்கலைகழக நூலகத்தில் படித்தது தான்.
சொந்தமாக வேண்டும் என்று பல நாள் கனவு ..அது இன்று நிறைவேறியது ..

அரங்கம் விட்டு வெளியேறுகையில் "முகம் தேன் குடித்த நரி போல இருக்கு " ன்னு   என சகோதரி மிகவும் கிண்டல் ..என்ன செய்வது நான் நரியாக இல்லாவிட்டாலும் புத்தகங்கள் தேன் தானே ?

நான் வாங்கினது

கடவுளுடன் பிரார்த்தித்தல் ----..மனுஷ்யபுத்திரன்
பிரமிள் கவிதைகள்
பின் நவீனத்துவம் என்றால் என்ன----   எம் ஜி சுரேஷ்
அஞ்சுவண்ணம்  தெரு----  தோப்பில் முகமது மீரான்
ஏழாம் உலகம்------  ஜெயமோகன்
வனம் புகுதல்------  கலாப்ரியா
நா பிச்சமூர்த்தி----  முத்திரை கதைகள்
இருவர்------  அசோகமித்திரன்
இன்று---- அசோகமித்திரன்
விழா மாலைப் பொழுதில்------  அசோகமித்திரன்
ஆர் வி சிறுகதைகள்------ 2 தொகுப்புகள்
ஒரு தேவதையும் இரு பொன்வண்டுகளும் ----காமராஜ் 
கருவேலநிழல் -------பா ராஜாராமன் 
கோவில் மிருகம் ------விநாயகமுருகன்
நீர் கோல வாழ்வை நச்சி ------லாவண்யா (உயிரோடை)
கூர்தலறம் -------TKB காந்தி  
இரவில் கனவில் வானவில் -----ஷங்கர நாராயணன்
கடலோடி ------நரசய்யா
தீர்க்க ரேகைகள் --------நரசய்யா
சாகித்ய அகாடமி தமிழ் சிறுகதைகள் தொகுப்பு
இரண்டு படி------- தகழி சிவசங்கரன் பிள்ளை
செம்மீன் ------தகழி
வானம் வசப்படும் -------பிரபஞ்சன்
மானுடம் வெல்லும் -------பிரபஞ்சன்
தமிழ் சொற்றொடர்  அகராதி (thesaurus)
பிரபஞ்ச பூதங்கள் ------ஷங்கர நாராயணன்
குறுநாவல்கள் தொகுப்பு -------ஷங்கர நாராயணன்
எஸ் ராமகிருஷ்ணனின்
யாமம்
மலைகள் சப்தமிடுவதில்லை
வாசக பர்வம்
நகுலன் வீட்டில் யாருமில்லை
பேசத்தெரிந்த நிழல்கள்
சித்திரங்களின் விசித்திரங்கள்
உறுபசி
பூனைகள் இல்லாத வீடு --------சந்திரா
மற்றும் திஜாவின்
நளபாகம்
மரப்பசு
மனிதாபிமானம்
அடி
உயிர்த்தேன்
அன்பே ஆரமுதே
செம்பருத்தி
அம்மா வந்தாள்
தி ஜா சிறுகதைகள்  இரண்டு தொகுதிகள்

வாங்க நினைத்து வாங்காமல் விட்டது கோணங்கியின் சிறுகதை தொகுப்பு ,பிரபஞ்சனின் சிறுகதை தொகுப்பு (too costly) .

எல்லாம்  வாங்கியாயிற்று .படித்தும் விடுவேன் ..வீட்டில்  வைப்பதற்கு தான் இனி இடமில்லை ..



   

Friday, July 16, 2010

எதோ ஒன்றிற்கு அல்லது எல்லாவற்றிற்கும்

பறக்க ஏலா
பறவைச் சிறகாய்
பதுங்கிச்  சிணுங்கும் மனம்...
எழுதாவொரு  வரி
பாடாதொரு  இசை
பேசாதொரு  சொல்
அணுகாதொரு நட்பு
தழுவாதொரு கை
வாராதொரு செய்தி
வீழாதொரு  மழை
நினைக்காதொரு மனம்
வீசாதொரு காற்று
எழும்பாதொரு மணம்
படிக்காதொரு  பக்கம்
பூக்காதொரு மலர்
என
எதோ ஒன்றிற்கு
காத்திருந்தபடியே .............


 

Monday, July 12, 2010

நான் இப்போ சப் ஜெயில்ல !



மாலா அக்கா எங்க ரொம்ப ப்ரிய தோழி .

முதுகலை படிக்கும் சமயம் விடுதி வாசம் .கொதிக்கும் தேநீரின் வாசம் பிடித்தே மாலைப் பொழுது  ஓடிவிடும்  ..கையில் போதுமான அளவு பணம் இருந்தாலும் செலவு செய்ய பயம் .அக்கா store keeper .நாங்கள் வர,போக திங்கும் மிட்டாய்களுக்கு கணக்கு பார்க்க மாட்டார் .அதனாலேயே ரொம்ப பிடிக்கும் .

என்னவோ அக்காவிற்கும் எங்கள் மேல் ப்ரியம் தான் .பல சமயங்களில் சிறு குன்றில் அமைந்திருந்த எங்கள் கல்லூரியில் இருந்து அவர்களோடு பேசிக்கொண்டே கீழே வந்துவிடுவோம்.
படித்து முடித்த உடனே எங்களுக்கு வேலை .கொஞ்சம் கூட ஓய்வு இல்லாமல் ,கல்லூரி முடிந்து ஊர் வந்து சேர்ந்த மறுநாளிலிருந்து வேலை.

கொடுமை என்னவென்றால் அதுவும் எங்கள் ஊரிலேயே!என்னவோ வாழ்கையை அனுபவிக்காமல் பாரம் சுமக்கிறோம் என்ற மனநிலையில் இருந்த நாங்கள் பட்டமளிப்பு என்ற ஒரு விழா வந்ததும் மகா குஷியோடு கல்லூரிக்கு புறப்பட்டு சென்றோம்.

ஒரு நான்கு பேர் பேருந்தில் ஒன்றாக பயணப்பட்டோம் .நாங்கள் செய்த அலப்பறையை கேட்கவும்  வேண்டுமா ?பேருந்தில் அனைவரும் முறைத்துக்கொண்டே வந்தனர் ...but who cares?

பேருந்து நகரை சமீபிக்கும் முன் ட்ராபிக் ஜாமில் கொஞ்சம்  நிற்க  நேர்ந்தது .அப்போது பார்த்தால் எதிர் திசையில் ஒரு பேருந்தில் மாலா  அக்கா .அவர்களை பார்த்து இங்கிருந்தே நாங்கள் பேச துவங்கினோம் .

ஒரே சிரிப்பும் உற்சாகமும் தான் .பேருந்து கிளம்ப எத்தனித்துக் கொண்டிருந்தது அப்போதுதானா நாங்கள் உரக்க 'அக்கா !இப்போ எங்க இருக்கீங்க' என கேட்க வேண்டும் ?

இருவருடைய பேருந்து புறப்படவும் ,அக்கா "நா இப்போ சப் ஜெயில இருக்கேன்...நீங்களாம்? என கேட்கவும்" சரியாய் இருந்தது ..
(அவர் சப் ஜெயிலில் அலுவலக உதவியாளராய் மாற்றம் பெற்று சென்றிருந்தார் )

அதன் பிறகு பேருந்தில் மக்கள் எங்களை பார்த்த பார்வை இருக்கிறதே !
நாங்கள்  கப் சிப் .
மாலா அக்காவிற்கோ அதற்கு மேல் தர்ம சங்கடம் ஆகி விட்டதாம்

மறு நாள் மாலை நன்றாய் வாங்கி கட்டிக் கொண்டோம் .இருந்தும் இப்போது அக்காவை பார்த்தால் கூட என்னக்கா இப்போ எந்த ஜெயில்ன்னு கேட்கத்  தவறுவதே இல்லை !

Wednesday, July 7, 2010

கரை ஒதுங்கிய ஒரு கப்பல்

 கப்பல் ஒன்று கரை ஒதுங்கியதாய்
ஊரெல்லாம் ஒரே புரளி !
அதனுள் செல்ல கடவுச் சொல்
அதன் பெறுநருக்கு மட்டும் தெரியுமாம் ...
ஊரையே கூட்டி முயல்கிறது அரசு !
என் முறை வருமுன்னே எப்படியாவது அதை மாற்றிவிடு
இல்லையெனில்
எனக்கு மட்டும் தெரிந்த கடவுச் சொல்லான
உன் பெயரை
உலகின் முன் எப்படி உரக்கச் சொல்வேன் நான்?
ப்ளீஸ் டா!

Sunday, July 4, 2010

கல்லாட்டம்

ஜெயந்திக்காவை முதன் முதலில்
பார்க்கும் போது
ஏழாங்கல் ஆடிக்கொண்டிருந்தாள் .
கல்லாடாம எடுக்கிறேனா பார்
என அவள் கல் வீசி ஆடும் போது                         
சேர்ந்தாடும்  ஜிமிக்கி
மேலேழுந்தாடும் இமைகள்
துடித்தாடும் உதடு
காற்றிலாடும் முடி
அதனோடாடும் தாவணி
இதையே பார்த்துகொண்டிருந்ததால்
கல் ஆடியதா இல்லையாவென
பார்க்காமலே விட்டுவிட்டேன் !
ஜெயந்திக்கா பின்
ஜெயந்தியண்ணி ஆகிவிட்டாள்.

Friday, July 2, 2010

வெளிச்சுவர் லவ்

யாரோ ஒருவன்
எதோ நினைவில்
புதிதாய் வெள்ளை அடித்த
வெளிச்சுவரில்
பெரிதாய் "ஐ லவ் யு "
என கிறுக்கி வைத்து விட்டு
போய்விட்டான்
திருப்பி
அதையழித்து வெள்ளை அடிக்கலாமா
என கேட்டுவந்தவனிடம்
'வேண்டாம் அங்கேயாவது
அது  இருந்து விட்டு போகட்டும்'
என ஒரு நடுங்கிய குரல் கேட்டது
வீட்டின் ஓர்  இருட்டறையிலிருந்து ....

Sunday, June 27, 2010

முத்தக் கப்பல்

உனக்கான என் காகிதக் கப்பலை  
நிரப்பத் துவங்கி விட்டேன்

என்ன முயன்றும் என அனைத்து பிரியமும்
அதில் கொள்ளவே இல்லை

மீதி உள்ளது 
இங்கு என்னை மூச்சு முட்டச் செய்கிறது

என்னை கேட்காமலேயே  என் ஆசை
அதை செலுத்தும் விசையாகி விட்டது

என் நிஜ முத்தங்களின்
பளு தாங்காது கப்பல்  மூழ்கிவிடும் என்பதால்

என் உதடுகளை மட்டும்
சிறிது ஒற்றி அனுப்புகிறேன்

உன்னை வந்தடையும் போது
அவை நீரிலே கரைந்து போயிருக்கலாம்

அப்போது கப்பலறியாது
அதன் மடி புதைத்திருக்கும்
என் உதடுகளை ஒரு முறை அழுந்த முத்தமிட்டு
வேகம் திருப்பி அனுப்பி விடு

உதடில்லா(து)  முத்தங்கள் இங்கு
இறந்துவிடும் முன்னே !

Saturday, June 26, 2010

காகிதக் கப்பல்

மழையின் ஈவாய்
என் வாசலில் பெருகும் சிறு நதியில்
எப்போதும் என் காகித கப்பலை
உன்னை நோக்கியே செலுத்துகின்றேன்
கவிழாமல் அது உன்னை சேரும் போது
என் பிரியச் சுமை உன்னை அடையக்கூடும்
அச்சுமை தாங்காது
உடன் என்னிடம் சேர்க்க
நீயும் ஒரு கப்பலை என்னை நோக்கி செலுத்தலாம்
பின் ஒரு நாள் பெய்யக்கூடிய மழையில்
பெருக்கெடுக்க இருக்கும் நீரின் நடுவே
எப்போதோ வரப்போகும் உன் கப்பலுக்காக
காத்து காத்து
வாசலிலேயே உறைகிறேன் நான்
வான் பொய்க்காது
காதலும் கூட !

Friday, June 25, 2010

காகிதக் கப்பலாய் மாறிய நான்

காகிதக்  கப்பல்கள் நிறைந்து பிதுங்கும்
அறையில் நசுங்கியபடி நான் .

ஒரு துளி மழை போதும்
அவை உதறிஓடத் துவங்கிவிடும் 

ஓடும் அவைகளை இறுக்கப் பிடித்து
கட்டிக் காப்பதிலே என் இரவு கழிகிறது

கனன்று  சிவந்த விழிகளுடன் கண்விழிக்கையில்
அவை மேலுமெனை வஞ்சத்துடன் அழுத்துகின்றன

அடை மழைக்கு காத்திருக்க கதறுமென்னை 
வெறுப்புடன் நோக்கி மிதக்கத் துடிக்கின்றன

ஒரு மழைக்காய் காத்திருக்கும் நாளில்,பெரும் புழுதியை காற்று சுழல
கப்பல்கள் யாவும் இறக்கைகள் வளர்த்தன

வீதி வழி பின் நிரம்பப் போகும் நீரில் மிதக்க விட யாதொன்றும் இல்லாமற்போக
சிறிது சிறிதாய் கப்பலாய் மாறத் துவங்கினேன்  நான் 

Tuesday, June 8, 2010

அவனும் அவளும்

அவள்  
சட்டென தோன்றும் கவர்ச்சியை விட மெல்ல ஊர்ந்து படரும் ப்ரியம் ஆபத்தானது அறிவாயா நீ ?பின் ஏன் அறிந்தும் அறியாதது போலொரு தோற்றம்?
உன் கடிதங்களை வாசிப்பதைவிட நீ என் பெயர்  எழுதிய உறையை வருடுதல் எத்தனை கிறக்கம் என்றறிவாயா நீ? பிச்சி தான் நான்!நீ பேசிய வார்த்தைகளை கணக்கெடுத்து மனதில் ஓட்டி அதனுள்ளே அர்த்தம் கண்டுபிடிக்கும் பிச்சிதான் நான் !
உனக்கென்ன எதோ பேசி உன் வழி போகிறாய் ..அவ்வார்த்தைகள் என்னுள் நுழைகையில் சுக்கு நூறாய் சிதறி அணுவெங்கும்  இம்சிப்பதை அறிவாயா நீ?
என் உறங்கா இரவுகளில் உன் நினைவன்றி ஏதும் புகாமல் ஒரு firewall உருவாகுவதை எங்கணம் தடுக்கப் போகிறாய் ?அதனை உடைத்தா இல்லை வலுப்படுத்தியா?
உன்னைக்காணாத ஒரு நாள் உன் அலுவலகத்தை  50 முறை கூப்பிட்டு கேட்டதை என்னிடமே "யாரோ" என வியந்த படி சொன்னாயே !அது நானாக இருக்ககூடும் என கிஞ்சித்தும் நினைக்காத கல்நெஞ்சுக்காரனடா நீ !
உன்  பிறந்த நாளில் உனக்கு பிடித்த வண்ணத்தில் அணிந்து வந்த போது ஒரு சொல் கூட கூறாமல் கடந்து விட்டாயே அது ஏன்?
இத்தனை கல்லுளி மங்கனாய் இருந்தும் என்னைக்கண்டதும் உன் கண்ணில் ஒரு ஒளி மின்னுதே  அது மட்டும் என்னவென்று சொல்லிவிடு!அதை தெரிந்து கொள்ளாதவரை நான் இன்னும் பிச்சியாவேன் !
உனக்கு தெரியாமல் நான் எழுதும் வலைப்பூவை ஒருநாள் கண்டுபிடித்து விடை கொடுப்பாய்  என்று நம்பும்
உன் ப்ரிய பிச்சி .
===================================================================
===================================================================
===================================================================
===================================================================
அவன் 
என் ப்ரிய முட்டாள்  பிச்சி 
நான் எதையடி அறியவில்லை ?உன் பிரியத்தையா ? அது தான் உன் கண்வழி பாம்பாய் நகர்ந்து என் கழுத்து நெரித்து இம்சாவஸ்த்தை 
தருகிறதே! அதிலிருந்து தப்பிக்க விரும்பாமல் சரணாகதியை அடைந்தது தெரியாதா பெண்ணே ?
உன் பெயரை நான் எழுதியதை வருடுதல் கிறக்கம் என்கிறாயே ,அதை என் உயிர்த்துடிப்பு கொண்டு எழுதியதை அறிவாயா நீ?உன்னை அடையும் முன் அது பெற்ற முத்தங்கள் எத்தனை என அதனிடமே கேள் ..இனி உன் முத்தங்கள் மூலம் .
நான் பேசிய வார்த்தைகள் உன்னை அடைந்து  ,உன்னுள் கலந்து விட்டதடி,ஆனால் அவற்றை பறி கொடுத்த நான் இங்கு பித்தனென அலைவதை இன்று வரை உன்னிடம் சொன்னதில்லை 
உறங்கா இரவுகள் உனக்கு மட்டுமா சொந்தம்? 
அந்த firewall ஐ அப்படியே வைத்திரு .நாமிருவரும் அதில் புகுந்து வேறெவரும் அதில் வராதபடி செய்வோம் .
அடி பைத்தியக்காரி நீ தான் அலுவலகத்தை அழைத்தது எனக்கு தெரியாதா? உன் வாயிலிருந்து வருமென காத்து ஏமாந்தது தான் 
மிச்சம் .நான் கல்நெஞ்சுக்காரனா? இல்லை நீயா ?
இத்தனை பிரியத்தை ஏனடி  மறைக்கிறாய் ?
லூசுப்பெண்ணே !என் பிறந்த நாளுக்கு உன் சகோதரி மூலம் அந்த உடையை வாங்கி தந்தவனே நான் தான்! .அதை நீ அணிந்திருந்தது என்னையே  அணிந்தது போலிருந்ததால் அருகில் வர விபரீதம் என் நான் விலகிப்போனேன் .
எல்லாம் மறைத்த நான் என் கண் பொங்கும் ஒளியை மட்டும் மறைக்க இயலவில்லையே! கள்ளி அதை வைத்து என்னை மடக்கி விட்டாய்  ? அது கண்ணின் ஒளிமட்டுமல்ல ,உன்கண் பெருகும் காதலின் ஒளி .
போதுமா என் பதில்? 
பி.கு. எனக்கு தெரியாமல் இருக்கும் வலைப்பூ என்ற நினைப்பெல்லாம் வேண்டாம் .இங்கு பல பெயர்களில் வந்து  பின்னூட்டம் இடுவதெல்லாம் யாரென நினைக்கிறாய்? உன் புலம்பல்களை என்னை தவிர யாரடி வாசிக்க முடியும் என் ப்ரிய பிச்சி?:) .....நீ  நிஜமாகவே பிச்சிதானடி ....

Saturday, May 29, 2010

எரிநிழல்

 உன் தண்முகம்
கண்டேனில்லை 

உன்புன்சிரி 
கண்டேனில்லை 

உன் குறுவிழி 
கண்டேனில்லை

உன் திமிர்நடை  
கண்டேனில்லை

உன் உயிர்ப்பார்வை  
கண்டேனில்லை 

உன் பருந்தோள்
கண்டேனில்லை

உன் நெடுமார்பு 
கண்டேனில்லை

உன் கடி மெய்யும் 
 கண்டேனில்லை 

கண்டதெல்லாம் 
அது யாதெனின் 

உன் மனம் 
என் அகம் பற்றியதும்

பற்றியெரியும்  
என் நிழலதைத்தான் 

Wednesday, May 26, 2010

கணவனின் காதலி

என் முதல் கதை (please bear)
சுமதியை முதல் முதலில் அந்த ரிசப்ஷனில் தான் பார்த்தேன் .என் தங்கை என்று அண்ணி அறிமுகப்படுத்தினார்  .

அவளும் என்னை முதலில் பார்க்கிறாள் .பார்வையால் என்னை போலவே அளவெடுத்தாள்

சுமதி நல்ல சந்தன நிறம்.மாசுமருவற்ற கன்னங்கள்;என்னையறியாமல் என் கன்னங்களை வருடிகொண்டேன் .

என்னை முதலில் கவர்ந்தது அவளின் கால் விரல்கள் தான் .செல்வாவிற்கு கால் விரல்கள் மேல் தனிப் பிரேமை !அவராலேயே நான் அடிக்கடி pedicure  செய்து கொள்வேன் . 

என் காலும் வெடிப்புகளின்றி ஈரப்பசையுடன் பளபளப்பவை  தான்  ;ஆனால் சுமதியின் கால் தாமரை இதழ்களை ஒத்து இருந்தது ,

நல்ல வடிவான உடலமைப்பு ,வரிசையான பற்கள்,அடர்த்தியாய் ,குட்டையாய் வெட்டப்பட்ட முடி,நீள விரல்கள்,ரோஜா நிற நகங்கள்,பளபளக்கும் கண்கள். அவள் இடுப்பின் வளைவே ஆயிரம் கதைகள் பேசியது.

கண்கள் விலக்கிக் கொள்ள  இயலாமல் பார்த்துக் கொண்டே நின்றேன் .
நல்ல dress sense  கூட .ஆழ்ந்த மயில் பச்சையில் நிறத்தை எடுத்துக் காட்டக்கூடிய சேலையும் ரவிக்கையும் .

அந்த ரவிக்கை பின்புறத்தில் அழகாய் இறங்கி பார்ப்பவர்களை   எல்லாம் கிறங்கடித்தது.

அவளும் என்னை அப்படித்தான் அளவெடுத்திருக்க வேண்டும் .எங்களிடையே எதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒரு spark  பறந்தது.

சுமதி என்ற பெயர் செல்வாவிற்கு மிகவும் பிடிக்கும் .என்னிடம் அடிக்கடி சொல்லிருக்கிறார்.

சுமதியின் அருகே சிறிது நரைத்த தலையுடன் ஒரு மத்திய வயது ஆண் .
"மீட் மை ஹஸ்பன்ட் விஸ்வம் " என அறிமுகப்படுத்தினாள்.அவர் மிகப்பெரிய பதவியில் இருப்பதை கேள்விப்பட்டிருக்கேன் .

ஆனால் சுமதியின் பக்கத்தில் கொஞ்சம் intimidate ஆனது போல் நின்றிருந்தார் .

அவர்களுக்கு தெரிந்தவர்கள் "சுமதி ஊருக்கு வாயேன் 'என்று   அழைத்த போது 'அய்யே இவரோடு நான் எங்கும் போவதில்லை " என முகத்தில்
அடித்தாற்போல் பதில் கூறினாள்.அவர் தர்ம சங்கடத்துடன் நின்றிருந்தார் .

அவளும் அண்ணியும் நான் இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல் அவரைப்பற்றி குறையை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

அப்போது வந்த அவர்களின் cousin  ரமணி நேராக சுமதியிடம்  போய் சிரித்து பேச ஆரம்பித்தான் .சிறிது நேரம் கழித்து" விசு ,நான் கொஞ்சம் shopping  போக வேண்டும் ,ரமணி drop செய்கிறான்" என்று கூறியபடி அவள் கையாட்டிய படியே சென்றுவிட்டாள்

ஒரு கணம் விஸ்வத்தின் கண்களில் கலக்கமும் நீர் திரையும் கண்டது நிஜம் .

நாங்கள் எங்கு சென்றாலும் செல்வாவிற்கு கொஞ்சம் கூட பிரியக்கூடாது .கூடவே இருந்து ,சிரித்து, அறிமுகங்கள் பெற்று ,நல்லதொரு ஜோடியென்று எங்களுக்குப் பெயர்

செல்வா எப்போதும்   open type .திருமணத்திற்கு பிறகு ஒரு நாள் அவர் அண்ணியை பற்றி பேசும் போது சுமதியின் பேச்சு வந்தது .

அப்போது அவர் மனதில் அவளை ஆசைப்பட்டதும் ஆனால் பெண் கேட்கக் கூடிய நிலையில் இல்லாததால் , நிச்சயம் தனக்கு மணமுடித்து தரமாட்டார்கள் என ஆசையை புதைத்துக்கொண்டதும்  கூறினார்

ஆனால் ஒரு கணம் தான்; மறுகணம் 'அது போகட்டும் ,இந்த வைரம் நீ கிடைக்க வேண்டும் என்பதால் தான் அது நடக்கவில்லையோ " என அணைத்துக்கொண்டார் .

இருந்தாலும் எனக்கு மிகவும் ஆவல் .அவர் மனம் கவர்ந்தவள் எப்படி இருப்பாளென்று !
இன்று தான் அது நிறைவேறியது.

மனதில் சொல்லிக்கொண்டேன் "நல்ல வேளை செல்வா ,அவளை நீங்கள் மணக்கவில்லை !உங்களையும் உங்கள் அன்பையும் புரிந்துகொள்ளாமல் இப்படித்தான் அலட்சியமாய் நடந்திருப்பாள்

உதட்டில் ஒரு சிறு புன்னகை ,,இது பொறாமை பட்ட மனதின் சமாதானமா ? இல்லை நிஜமாகவே வந்த நிம்மதிப்  பெருமூச்சோ? என்னவென்று தெரியவில்லை

ஆனால் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும்  , கேட்டுக்கொண்டும் , அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தார்,  படத்தில் என் செல்வா .

Tuesday, May 25, 2010

புறமும் அகமும்

புறங்காணின்
  அகம் மறைந்து போமோ?
அகங் கண்டு
மகிழ்ந்ததெல்லாம் பொய்யோ?

புறங்காணா
 நட்பெல்லாம் மாயோ?
அகம் காணும் !
எனும் விழைவு வீணோ?

புறங் கண்டு
புறத்தோடல் மெய்யோ?
அகம் அது கண்டு
அழிந்தே தான் போமோ?

புறமது தான்
புவியதனில் மேலோ ?
அகங் காண்பார்
என்பவரும் யாரோ?

புறங் கண்டு
புரியாமல் ஓடுமோ?
அகம் அது கண்டு
விசும்பத்தான்  வாழ்வோ

அகம் புறம்
காணாது ஏகுமோ?
புறம் அகம்
புரிந்தே தான் மீளுமோ ?

என்றாவது ஒரு நட்பு!   

Friday, May 21, 2010

வார்த்தை விளையாட்டு

உனக்குமெனக்கும்
நடுவேயலைகின்றன
நமக்கான வார்த்தைகள்

ஒரே வார்த்தையை
இருவரும் எடுக்கும் நேரம்
அது இரட்டிப்பாகாமல்
நம் இருவரிடையகப்பட்டு
கண்சிமிட்டிச்  சிரிக்கிறது

நான் பேசநினைப்பதும்
உன்  மனதில் வருவதுமான
வார்த்தைகள்
பிரசவிக்கும் சமயமறியாது
வாதயோடலைகின்றன

நீ நினைத்தது
என்னிடமிருந்து வந்ததும்
நான் விரும்புவது
உன்னிடமிருந்து பிறக்கும் போதும்
இரசாயன மாற்றதிற்குட்பட்டு
நம்மையும் மாற்றுகின்றன .

இவ் வார்த்தை விளையாட்டில்
நாமறியாமல் ஈடுபட்டு
வார்த்தைகள் தேடிக்கொண்டே
கண்களால்
கதைக்கிறோம் நாம்  
  

Monday, May 17, 2010

M FOR மிராண்டா

 
போன வாரம் என் தோழி தன் மூன்று  வயது மகன் யத்தினுடன் எங்கள் வீட்டில் தங்க வந்திருந்தார் .தோழி சௌராஷ்டிரா மொழி பேசுபவர் .மகனுடன் தமிழிலும் பேசுவார் .அதனால் யத்தின் சௌராஷ்ட்ரமும் தமிழும் கலந்து அவன் அம்மாக்கு மட்டும்  புரியக்கூடிய மழலையில் பேசுவான் .

மூன்று வயதுக்குரிய  குறும்பும் மழலையும் வீட்டைக் கலகலப்பாக்கியது.இடம் மாறுதலும் உணவு மாற்றமும் சேர்ந்ததால் அவன் ஒழுங்காய் சாப்பிடவும் இல்லை .ஆனால் சீக்கிரம் தூங்கியும் போனான் .

இரவு  பதினொரு மணிக்கு  பசித்திருக்க வேண்டும் .தூக்கத்தில் சிணுங்கி எழுந்து கொண்டான் .பசி என்று  நாங்களும் அவனுக்கு சாப்பிட எதாவது தர முயற்சித்தோம் .இட்லி, பின்பு சப்பாத்தி ,ரொட்டியும் பாலும் ,பிஸ்கட் , தயிர்சாதம் என ஒன்றொன்றாய் முயற்சித்தோம் .எதையும் சாப்பிட மறுத்து அழுது கொண்டே இருந்தான் .

அவன் மழலையில் எதோ கேட்பது புரிந்தது. ஆனால் தோழி என்னவென்று சொல்ல மறுத்தார் .மிகவும் கம்பெல் செய்ததில் 
"அவன்  குடிக்க குளிர்பானம் கேட்கிறான் ,இப்போது எங்கே  போய் வாங்குவது"என்று அவனை சமாதானப்படுத்தினார் .

அவன் கேட்பானில்லை. வீட்டில் நல்ல வேளையாக எலுமிச்சம் பழம் இருந்தது .
உடனே அதனை சாறு பிழிந்து கொடுத்தேன் .அவன் அதை குடிக்க மறுத்து அழுதான் .தோழி அவனுக்கு பாட்டிலில் வேணுமாம் என்று கூற ,அதை ஒரு பாட்டிலில் ஊற்றி கொடுத்தேன் .

திரும்பவும் அழுகை நிற்கவில்லை. என்னவென்று கேட்டதில்  அவனுக்கு மிரண்டா தான் வேண்டுமாம்  எனக் கூற ,செய்வதறியாமல் நின்றிருந்தோம் .அழுகையின் சுருதி கூடிக்கொண்டே போனது .

நான் அந்த பழச்சாறில் சிறிது கேசரி கலர் கலந்து ஆரஞ்சு வண்ணமாக்கினேன் .திரும்ப அதை ஒரு பாட்டிலில் ஊற்றி கொடுத்தேன். இப்பவும் அழுகை நின்ற பாடில்லை .எம் எம் என்று சொல்வது மட்டும் புரிந்தது .

தோழிக்கோ கோபம் வந்துகொண்டே இருந்தது .இப்பொழுது என்னவென்று கேட்டதில்
"அவன் இது மிரண்டா இல்லை ,இதில் 'M' இல்லை என்று அழுவதாக கூறினார் .நான் கொடுத்து வேறு ஒரு பாட்டிலில் .

உடனே நான் வீட்டில் தேடி ஒரு மிரண்டா பாட்டிலை கண்டுபிடித்து அதில் மீண்டும் இதை ஊற்றி கொடுத்ததில் அவன் அழுகை சட்டென்று  நின்றது .இது  M  தானென்று அதில் இருந்ததை குடித்து விட்டு தூங்கினான் .

எப்படி பேச்சு கூட சரியாய் வராத ஒரு குழந்தைக்கு  M  என்றால் மிரண்டா என்று தெரிந்தது என்று அதிசயப்பட்டதில் தோழி, விளம்பரங்களைப்  பார்த்தே இதை அவன் கற்றுக்கொண்டதாக கூறினார் .

இத்தனை சிறிய குழந்தையின் மனதில் விளம்பரம் இப்படி புக முடியுமானால் ,நல்லவிதமான மாற்றங்கள் இதன் மூலம் எத்தனைக்  கொண்டு வரலாம்?  

Saturday, May 15, 2010

அருகில் நிலா

ஆதிரன் சுட்ட படத்தை சுட்டு(டி)எழுதியது !
அவர் தளத்தில் போடும் அளவு வராது என்பதால் என் தளத்திலேயே இந்த இடுகை


தொலைதூரக்கனவுகள்
 வானெட்டுமாசைகள்
தரை பாவ மறந்தே
பறக்குமெப்போதும்
கைவாரா  நிலவினோடு
கற்பனை வாழ் நாளில்
ஓர் flash இல் நிதர்சனம் ......        
அருகிலேயே சிரிக்கும்
ஒளிரும்  இலை.....
மனம் (கண்) விழித்தது !

Wednesday, May 12, 2010

என் பாட்டு "எங்கள் ப்ளாக்கில்"

எதோ  ஒரு தைரியத்தில், பாட்டு பாடி அனுப்புங்கன்னு engalblog ல கேட்டோன்ன, அனுப்பி வச்சுட்டேன் .அவங்களும் அதை போஸ்ட் பண்ணிருக்காங்க .
http://engalblog.blogspot.com/2010/05/blog-post_12.html.

நேரம் கிடைத்தால் கேட்டு பாருங்களேன் .
திட்ட மட்டும் திட்டாதீங்க ப்ளீஸ்





Tuesday, May 11, 2010

ஓடிக்கொண்டே இருப்பவை

"உனக்கு என்ன வேணும்ன்னு நீ தான் தீர்மானிக்கணும்" ! அனேகமாக என்னுடன் பேசுபவர்களின் தொனி இந்த அளவில் தான் இருக்கிறது .முத்தாய்ப்பாக நேற்று என்னை லிஸ்ட் போடச்சொல்லி ஒரு தொலைபேசி அழைப்பு .

என்ன வேண்டும் என யோசித்தே காலம் கழிந்து விடுமோ என்ற பயமும் வரத்துவங்கியாயிற்று.கண்ணாடியில்  உற்று நோக்கும் நேரம், அகமும் புறமும் எத்தனை வேறுபட்டு நிற்கின்றன என்ற எண்ணம் வராமல் போவதில்லை

மனதில் இருக்கும் நான்  என்ற பிம்பத்துடன் கண்ணாடியின் முன் நிற்பது பொருந்தவே இல்லை .நிஜத்தை பார்க்கும் அனைவரும் நிஜமான நிஜத்தை மிஸ் பண்ணிவிடுகிறார்கள் .(அப்படி நினைத்துக் கொள்கிறேனோ?)
இதற்கு உடனே யாராவது  சொல்லலாம்    bring out your self  .இதெல்லாம்  புரியவே  இல்லை  

இந்த நிஜ என்னை யார் கண்டு பிடிப்பார்கள் ? எதற்கு கண்டுபிடிக்க வேண்டும்? வேண்டும் தானே அப்போது தானே இந்த  misfit will fit !

இப்படி  காலை முதல் மாலை வரை  நினைத்துகொண்டே  ஒரு  நாள் ஓடிவிடுகிறது.

நிஜமாகவே நான் யார்?
இந்த கேள்வியை கேட்கும் போது வரும் பதிலானது மிகவும் பயம்  தரக்கூடியதாகவும் ,சில சமயம் பிறரால் அருவருக்கக் கூடியதாகவும் இருக்கிறது .

மனது பீத்த பெருமையை பற்றிக்கொள்கிறது .அருவருப்பும் அதற்கு உகந்ததாகவே இருக்கிறது. 

எதற்கு அங்கீகாரம் அங்கீகாரம் என்று அலைய வேண்டும்? தெரியவில்லை
எதற்கு எங்கோ போய் fit ஆக வேண்டும்? யோசிக்கணும்
ஏன் நிச்சலனமாய் இருக்க இயலவில்லை ? முயலணும்
இதெல்லாம் சாதித்தால் என்ன ஆகும் ?புரியவில்லை
ஆனால்  இவை சுற்றி வதைப்பதை நிறுத்த இயலவில்லையே !
ஒரு வேளை  இவை நின்று போனால் அன்று தான்  நான் என்ற நான் இறந்து போயிருப்பேனோ?

Sunday, May 9, 2010

அம்மா எனும் அடுத்த வீட்டுக் குழந்தை

காணுமிடமெல்லாம் தேடிக்  களைக்கிறேன் நான் ........
ஜன்னல் வழி நோக்கும் செம்பருத்தியா    ? 
சுற்றி சுற்றி   வரும் பட்டுப்பூச்சியா  ?
கொல்லையில் கரையும் கருங்காக்கையா ?
நல்லது பலிக்க சத்தமிடும் உச்சிப்பல்லியா  ?
என் வலிக்குப்  பதறும் முகமறியா மூதாட்டியா    ?
என
அன்பிலெல்லாம் உனைக்கண்டு  பனிக்கிறேன் அம்மா !
என் வயிற்றில் வந்துதிக்க
இப்பிறவியில் இயலாதெனினும்
அடுத்த வீட்டுக் குழந்தையாகவாவது வா
என் மடி இருந்து கொஞ்ச!

Thursday, May 6, 2010

பொறியில் சிக்குதல்

எல்லாப் பொறிகளிலும் இலகுவாய்
போய் சிக்கிக்கொள்கிறது சுயம் .
எந்த பொறிக்கும் வேண்டப்படாத வஸ்துவாய்  பொறியிலிருந்து இடதுகையால்
தூக்கி எறியப்படும் நானானது
மற்றொரு பொறியில் தான்
தவறாமல் விழுகிறது ,
மீண்டும் மறுமுறை தூக்கி எறியப்பட
எங்கோ உள்ளது தனக்கான இடம்
அது சிக்கும் பொறியாய் இருப்பினும் கூட...
தூக்கி எறியப்படாத வரை
சிக்குதலும் சுகம் ,
என்ற மாயையில் சுயம் !

Tuesday, May 4, 2010

நான் பிறந்த நேரம்

எனக்குள் நான்
என்னை தேடிக்களைத்தபின்
பாலை கள்ளியாய்
முட்கள் வளர்த்துக்கொண்டேன்
என்னையே  கிழிக்குமுள் ரணத்தில்
ரத்தம் பெருக சோர்ந்து சிரித்தேன்
வானின்று கீழ் இறங்கிய தேவதை ஒன்று
ஒற்றை எழுத்தாய்
எழுதிச்சென்றது
உன் பெயரை
என் வாழ்வில்
உடன்
என்னில் நான் பிறந்தேன்  

Monday, May 3, 2010

தனிமைப் பயணங்கள்

தனிமைப் பயணங்கள்
விடையனுப்பும் கையசைவுகளும்
ஜன்னல் விரல் பற்றுதல்களும்
கடைசி நேர கலங்கலும்
என்றுமே வாய்த்ததில்லை
என் பயணபொழுதுகளில் .

கேட்டு வாங்கிய ஜன்னலோரத்தில்
முகத்தில் அடிக்கும் காற்றில்
கடந்து போகும் பழைய பாடல்களில்
ஸ்ட்ரா இன்றி அருந்தும் இளநீரில்
அபூர்வமாய் கிடைக்கும் நட்பில்
சிறிதுநேரம் நம் மடி உறங்கும் மழலையின் மென்மையில்
மறந்து போகும்
இறங்கியவுடன் வரவேற்க யாருமில்லா வெறுமை... 
அடுத்த பயணம் வரை

Sunday, April 25, 2010

A யும் B யும்



A யும் Bயும் இருந்தன


ஒரு நாள் இருவருக்கும் ஒரே நோய் .


A ஐ அனைவரும் பரிதாபத்துடன் அணுகினர் .


B ஐ பார்க்கக் கூட எவருக்கும் விருப்பமில்லை.


A யின் நோய்க்கு பல திசைகளிலிருந்தும் மருந்து வந்தது .


B கொஞ்சம் கொஞ்சமாய் அழுகிக் கொண்டிருந்தது .மனமும் கூட .


A எது செய்தாலும் எல்லாரும் easy ஆக மன்னித்துவிட்டனர்

B அழுகிப்போவதை தவிர்க்க வெளிச்சத்திற்கு வந்தது

B இப்போது அனைவரின் பார்வையிலும்

B க்கு ரகசியமாய் மருந்து கூறப்பட்டது .கூறியது கூட வெளியில் தெரியக்கூடாதென்ற கட்டளையுடன்

மருந்து உட்கொள்வது குற்றம் .ஆனால் அழுகியும் போகக்கூடாது .தெரியாமல் உண். take it easy .

B உடல் முழுதும் perfume அடித்துக்கொண்டு கடையில் விற்ற பிளாஸ்டிக் சிரிப்பை முகத்தில் ஒட்டிக்கொண்டது .

A இன் நோய் குணமாகிவிட்டது .மீண்டும் நோய் வந்தாலும் எதிர்கொள்ளும் திமிரோடிருந்தது.மக்கள் அதன் பக்கம் .

B இன் பிளாஸ்டிக் புன்னகை யாருக்கும் பிடிக்கவில்லை .அது ஒரு முகமூடியை மாட்டிக்கொண்டு ,செத்து போன மனதை ஒரு பையில் வைத்துக்கொண்டு அலைகிறது .


எங்கேயாவது Bஐ பார்த்தால் ஒரு நிமிடமாவது  மௌனமாய் இருங்கள் .PLEASE .

Friday, April 23, 2010

தெரியாமல் போன பிரார்த்தனை

இரண்டு கைகள் விரித்து
அந்தோணியார் சிலை எதிரே
தினமும் இறைஞ்சி நிற்பார் அந்த முதியவர்
கண்ணில் தோன்றும் இரங்கல்
கல்லையும் கனிய வைக்கும்
அவர் பிரார்த்தனையை நிறைவேற்று ..
என்பதே என் வேண்டுதலாயும்  ஆகிவிட்டது
பலநாள் காணாமல் போய் ஒருநாள்
ஊரெல்லாம் சிரித்தார்  போஸ்டரில் ....
ஒரு வேளை அதுவே அவர் வேண்டியதாய் இருந்திருக்குமோ?
இப்போதெல்லாம் அந்தோணியார் கோவில் தவிர்த்தே அலுவலகம் போகிறேன்
ஏதாவது பிரார்த்தனை என் கண்ணில் பட்டுவிடப் போகிறதென்று!

Thursday, April 22, 2010

எனக்கு பிடித்த பத்து படங்கள்

தொடர் பதிவுக்கு பல அழைப்புகள் வந்துவிட்டன .என்னால் எழுத இயலுமா என்ற சந்தேகத்திலேயே எழுதாமல் விட்டேன் .


சைவ கொத்து பரோட்டா பிடித்த பத்து படங்கள் எழுத அழைப்பு விட்டதும் எழுதியே தீர்வது என்று முனைந்து விட்டேன் .


பிடித்த பத்து பெண்கள் போல ,என்ன பத்துகுள்ளேயே அடக்கி விடுகிறார்கள்? என் நினைவுக்கு முதலில் தோன்றிய பத்து படங்களை பட்டியல் இட்டுள்ளேன் ..



எனக்கு படம் பார்த்தல் சிறுவயதிலிருந்தே ஒரு சுவையான அனுபவம்.அழுவாச்சி படங்கள் பிடிக்காது,என்னுடைய all time favourite எப்பவுமே M G R படங்கள் தான் .அதில் தான் நல்லவன் ஜெயிப்பான் ,காதல் வெல்லும், முடிவு சுபம். M G R உம் பார்க்க அழகு .பாடல்கள் சுகம் .



இருப்பினும் மற்றபடங்களும் உள்ளன



NOT IN THE ORDER .



அழகன் .



இது  நானும் கணவரும் சேர்ந்து பார்த்த முதல் படம் .அதில் உள்ள ஜாதி மல்லி பூச்சரமே எங்கள் குடும்ப பாட்டாக ஆகிவிட்டது .





அனுபவி ராஜா அனுபவி



மூன்றாம் முறையாக திரையிடப்பட்ட போது பார்த்த படம். இதில் சிரித்த அளவுக்கு வேறு எதிலும் சிரித்ததாக நினைவில்லை .



ஜாதிமல்லி



சங்கீதமும் காதலும் நிறைந்த படம். ரொம்ப ஸ்பெஷல் ஏன்னா ஒரு மெச்சூர் காதல்.குஷ்பு

என் பிரிய நடிகையும் கூட



ஹேராம்



இதை விமர்சிக்க எனக்கு திறனில்லை .ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன் .என் ஆதர்சநடிகனின் masterpiece



வெள்ளிவிழா



எந்த காலத்திலோ வந்த புரட்சிப்படம் இது.பார்க்கும் போதெல்லாம் கதாசிரியரின் துணிவை பாராட்டாமல் இருக்க முடியாது .சக்திகொடு என்று இந்த படத்தை பார்த்து வேண்டிக்கொள்ளலாம் .'காதோடுதான் நான் பேசுவேன்' பாட்டும் இதில் தானே !



கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்



அழகு அழகு என்று கதறும் படம் .மனதுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சியான ,பாசிடிவ் முடிவு உள்ள படம் .நடித்த அனைவருக்காகவும் மிகப் பிடித்தது



மன்மதலீலை




என்னவோ தெரில இந்த படம் பிடிக்கும் .



தில்லானா மோகனாம்பாள்

நாதஸ்வர இசையில் பித்து பிடித்தவள் நான் .பத்மினியின் பரதம் அல்லாத நடனத்தை மன்னித்து விட்டால் ,இந்த படம் ஒரு காவியம் .



சட்டம்

இந்த படம் வந்தது பல பேருக்கு நினைவிருக்குமோ தெரியாது .அழகிய இரு கனவான்கள் .ஊடே ஒரு கன்னி .எல்லா படத்திலும் வருவது போல் தான் .ஆனால் இந்த இருவரும் நிஜமாகவே அழகிய கமல்ஹாசனும் ,சரத் பாபுவும் .அந்த பெண் மாதவி .இந்த மூவரின் கூட்டணிக்காகவே பிடித்த படம்



கடைசியாக நம் தலைவர் படம்

நம்நாடு

இது மிகப்பிடித்த காரணம் ,இதில் ஜெயலலிதா ஆடும் நடனம்  "ஆடை முழுதும் நனைய நனைய' வென்று .ஒரு பெண்ணுக்கு பிடித்தவனே மணாளனாக வரப்போகிறான் என்று உறுதியானதும்

அவள் மனம் போடும் குதியாட்டம் அப்பா என்ன அழகு .அதை மறைந்து நின்று ரசிக்கும் தலைவரும் என்ன அழகு !



எப்படியோ ஒருவழியாக எழுதி முடிச்சாச்சு.ஒரு சாதாரண layman போல வகைபடுத்தயுள்ளேன் .உலக சினிமால்லாம் எங்க ஊர் திரையரங்குக்கு வராது .வந்தாலும் புரியாது .மனதை சந்தோஷப்படுத்திய படங்கள் இவை .கலையின் நோக்கமே அது தானே



இந்த பதிவை தொடர

ஆதிரன்

ராகவன்


முகுந்த் அம்மா

அப்பாவி தங்கமணி

ஆகியோரை அழைக்கிறேன்

Sunday, April 18, 2010

நானாய் மாறிய இலை

நீண்ட இரு கைகளுக்குள் புக ஓடும் ஓட்டமாய் தான் என் கனவு
ஓடும்  போது கூட வரும் ஓர்  இலையின் அணுவாய் மாறிப்போனேன்
இங்கே அங்கே என்று மாறும்  நேரம் அணுக்களெல்லாம் ட்யூன் ஆகி போயிருந்தன  
இலையே நான்
நானே இலை
முகம் மட்டும் வேறாய் !
இலை உதிர்க்கும் பச்சை என் முகத்தில் தீற்றி
ஒரு பச்சை ஜந்துவாய் ஆகிப்போனேன்
மாறிய நேரம் நீண்ட  கைகள் காணாமல்  போயிருந்தன !
எனினும் அந்த காணாமல் போன கைகளின் அணைப்பில்
நானாய் போன இலையும்
இலையாய் போன நானும் 

Saturday, April 17, 2010

கன்ஃபர்ம்ட்

உறுதியாகிவிட்டது
கொஞ்சம் சீக்கிரம்தான்
மாமியார் வாயெல்லாம் பல்
மாமனார் கை பிடித்து புன்னகைத்தார்
ஊருக்கு போன் போட்டு சொல்லியாயிற்று
ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை செல்லில்
தங்கையின் உற்சாகக்  கிரீச்சிடல்
நிமிர்ந்து அவர் முகம் பார்க்க முடியாது
சந்தோஷம் அப்பி கிடந்தது ,
அடுத்த வீட்டு மாமி வந்து
" கல்யாணம் ஆகி வந்த பிறகு குளிச்சா இல்ல  ?"
என்று கேட்கும் வரை .

Tuesday, April 13, 2010

ஒரு கடிதம் --என்னவனுக்கு

அன்பே!

நானும் நீயும் மட்டுமே உள்ள ,அதிசயமாய் நமக்கு வாய்த்த ,விடுமுறை நாளை கழிக்கப் போகிறோம் வா !

வானில் பகலவன் தோன்றும் முன் தளராது எழுந்து கடற்கரை நோக்கி விரைநடை போட்டு உதிக்கும் சூரியனை  அலைகள் கால்கள் தழுவ வரவேற்று மகிழ்வோம்

இளமையான பின் காலைப் பொழுதில் நமக்கு மிகப்பிடித்த வயலின் இசை பின்னணியில் முழங்க நமக்கு நாம் தேர்ந்தெடுத்த சிறு உணவு உண்போம் .

பொடிநடை நடந்து நம் வயல் ஒட்டிய ஆற்றினூடே பாடிக்கொண்டே நீரில் திளைப்போம் .

பின் நீ காய் நறுக்க நான் சோறு வைக்க அன்பை கலந்து அங்கே சமைக்கும் நேரம் கொஞ்சம்   கவிதையும்  வாசித்து பார்ப்போம்

உனக்கு பிடித்த வரிகளை நீ சிலாகித்து எனக்கு புரியாத வரிகளை புரியவைத்து கவிதை நம்முள் அசைய அதை உற்று நோக்கி பரவசம் கொள்வோம்

எனக்கு மிகப்பிடித்த பின் மதியப் பொழுதில் நம் வீட்டு வாசலில் காற்று நம்மை தழுவி அணைக்க ஏதும் பேசாமல் கைப்பற்றி மௌனம் சுவைப்போம்  

அப்படியே என்ன் மடி சாய்ந்து உறங்கி விடுவாய் நீ.குழந்தைபோல் உறங்கும் உன் தலை கோதி உன் முகம் ரசித்து புன்னகைப்பேன் நான் .

கண் திறக்கும் நீ என்னவென்று கேட்க ,ஏதுமில்லை என  நான்  தலையாட்ட பொன்னால் ஆக்கப்பட்ட கணங்கள் அல்லவா அவை ?

ஞாயிறு மறையத் தொடங்கியதும் நாம் திரும்ப நடக்கத் தொடங்குவோம் .

உலகமே வியக்கும் நம் கோயில் சிற்பங்களின் நுணுக்கம் வியந்து சேர்ந்து ரசிப்போம்

சோழரும் பாண்டியரும் சேரனுமான  தமிழக வரலாற்றை சொல்லிக்கொண்டே வருவாய் நீ .அதில் திளைத்து, ஆண்டுகள் ஆயிரம் கடந்த வாயிலில் சிலிர்த்து நிற்ப்போம் நாம் .

எப்பொழுதும் எனக்கு தர எத்தனை விஷயங்கள் உன்னிடம் உள்ளன!

அந்த இளஞ்சூடான கருங்கல்லில் அமர்ந்து இலக்கியம் ,சித்தாந்தம்,காதல்,மனவியல் என சகலமும் கதைப்போம் நாம்

நிலவு வானில் நடக்கும் நேரம் ;இரண்டு வெள்ளரிக்காய்களை வாங்கி சுவைத்துக்கொண்டே நிலவொளியில் கடலைக் காணச்செல்வோம் .

எத்தனை பருகினாலும் தீராத தாகத்தோடு நிலவையும் கடலையும் உண்டு தீர்த்து மனதில்லாமல் வீடு ஏகுவோம்.

மொட்டை மாடியில் தண்ணீர் தெளித்து அந்த குளுகுளுக்கும் காற்றில் நிலவொளியில் நம் மனம் கவர்ந்த கீதம் இசைக்க புன்னைகையோடு உறங்கச்செல்வோம் .

எப்போதோ வாய்க்கும் இந்த நாளில் உன்னை விட்டு சிறிதும் விலகக்கூடாதென கைப்பற்றியே உறங்கி விடுவேன் நான்

உறங்காமல் நிலவொளியில் என்னையே பார்த்திருந்ததாக மறுநாள் சொல்வாய் நீ !

Sunday, April 11, 2010

கலவரம்

முத்தங்களுக்கான கணக்கினை தணிக்கை செய்து கொண்டிருந்தோம்....
என் தந்தவையும்,உன் தரநினைத்தவையும்  ஏட்டுக்களைக் கொண்டு
எப்போதும் உன் ஏட்டிலுள்ள கணக்கு கூடுதலாகவே இருந்து பாலன்ஸ் ஆகாமல் உயிரெடுக்கும்
கணக்கை நேர் செய்ய வேண்டி ஒற்றைக்காலில் நிற்பாய் நீ
ஆக ,என்றும் அடிதடியில் முடியும் நம் தணிக்கை நாள்
இன்று கலவரத்தில் வந்து முடிந்தது!
'தரவேண்டியது' என தலைப்பிட்டு நான் ஒளித்து வைத்திருந்த ஏட்டை நீ கண்டுபிடித்ததும் ..
திருடா!

Wednesday, April 7, 2010

எரியும் மௌனம்

ஒரு பஞ்சுப்பொதியின் மென்மை போல்
நம்மிடையே ஆன மௌனம்  

நம் கண்களிலிருந்து வார்த்தைகள் ஒரு
சிறகுபந்தைப் போல்மாறி மாறி பறக்கின்றன

நீ சிலசமயம் உன் இமைகளால் அவற்றைச்
சிறைபடுத்தி என்னை தோல்வியுறச் செய்கிறாய் 

என் முகம் நோக்கி வரும் சிலவற்றை
நானும் கண்ணில் ஏந்த விழைகிறேன்

ஆனால் அவை என் உதடு கிள்ளி
உன்னிடமே திரும்பச் சேர்கின்றன

அவற்றை கவனமாய் உள்ளங்கையில் சேகரித்து
நீ உன் கண்ணில் ஒற்றிக்கொள்கிறாய்

நம் மௌனம் பற்றி எரிகிறது    

Monday, April 5, 2010

வசந்தம்

தூரத்து நின்று இருத்தலைக்குறித்து அளவளாவும் வார்த்தைகளில் இன்று விசைகாணா ஈர்ப்பு

மாலை சூரியனில் கருகும் கருங்கலிடை மலர்ந்து விரிந்தது ஒரு நீலப்பூ

பதிலும் வினாவுமாய் ஒரேநிலையில் உதிர்ந்த பவளமல்லியில் ஒளிந்து கொண்டது கள்ள நேசம்

மருதாணி பூக்களின் மகரந்த வெடிப்பு சுமக்க முடியாது சுருண்டு விழுந்தது ஊழிக்காற்று

வாசல் கோலத்தை நெற்றியில் இட்டு குயிலோடு சேர்ந்து இசைத்தது மன இசைத்தட்டு

உயிர்க்கும் செடியினை வெடித்து கிளப்பியது நீள் மழை புணரும் பொறை பூமி 

வந்தது வசந்தம்