Monday, November 16, 2009

காதல் மட்டும்

காதல் ஒன்றே கருவாய்க் கொண்டு
கவிதை செய்தல் வேண்டாம் என
கடிந்து சொன்ன நண்ப ,

வானம் தனை வடிக்க எண்ணி ,
விண்ணதனை நோக்கின் .....
அங்கு காதல் செயும் மேகம் .

மலரை தனை பாட எண்ணி ,
சோலை தனை சேர்ந்தால் .....
அங்கு காதல் செயும் வண்டு .

இயற்கை தனை இசைக்க எண்ணி ,
சற்று வெளியதனில் விரைந்தால்.......
அங்கு காதல் செயும் அருவி .

காதலிலா இடமதனை
கண்டு நீயும் பகர்ந்தால்
களைவேன் நானும் காதல்.

அன்னையிடம் காதல்,
அழும் குழந்தையிடம் காதல்,
விண்ணிலேயும் காதல் ,எல்லா
பெண்ணிலேயும் காதல்.
வாழ்கை தரும் காதல்,
வாழ்வு முடிவும் காதல்.
கண்ணீரும் காதல்..
சிந்தும் புன்னகையும் காதல்.

பாட்டன் அவன் பாரதியும்
பாட்டுகவி தாசனும்
பகர்ந்ததுவும் காதல்,
மூழ்கி திளைத்ததுவும் காதல்.

வையகத்து பொங்குகின்ற காதல் அதனை எல்லாம்
ஏன் கரிய மையில் சேர்த்து இங்கு கவிதை ஆக்குகின்றேன்

காதல் அது போதும்
என கருதுகின்ற நாளில்
என் கண்களது மூடும்
உயிர் விண்ணதனை நாடும்,
இறையை காதலோடு சேரும் .

Monday, August 10, 2009

ஒற்றை மீன்


சுழன்று சுழன்று ,உழன்று உழன்று ,
வெளியேற வகையின்றி ,
சுவாச மூச்சு தவிக்க ,
கண்ணெதிரே தோன்றும்
விந்தைவெளி மயக்க ,
கால இடைவெளியில் வந்து விழும்
சிறு துகள்களில் உயிர் பிழைக்க......
பளபளக்கும் பளிங்கு சூழலும்........
வளமேதுமில்லா செயற்கை உயிர்களும் ,
வாழுமிடம் என்றாகி......
சேர்ந்திருந்தோர் கண்ணெதிரே
கனவாய் கலைந்தது கண்டும் .....
சுழன்று சுழன்று ,உழன்று உழன்று ,
வெளியேற வகையின்றி ,
என் வீட்டு மீன்தொட்டியில்
ஒற்றைமீன்
என் மனம் போல.