Friday, May 31, 2013

கமலா தாஸின் " ஆடி"

31/05 கமலாதாஸின் நினைவு நாள்.

அவரின் கவிதை ஒன்றை மொழி மாற்றம் செய்துள்ளேன்.

                                     ஆடி

ஓர் ஆணை, உன்னை நேசிக்கசெய்வது
மிகவும் எளியதானதாய் இருக்கிறது,
அதற்கு
ஒரு பெண்ணாய் உன் தேவைகள் பற்றி
அவனிடம் நீ உண்மையாய் மட்டும் இருக்க வேண்டும்.
அவனுடன் கண்ணாடி முன்
வெற்றுடம்பில் நின்று பார்.
அதில் அவன் தன்னை பலவானாய் உணரட்டும்.
அதை அவன் நம்பட்டும்
அவனை விட நீ இளமையாகவும் மிருதுவாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறாய் என்று கூட.

அவனை நீ  வியக்கிறாய் என்று ஒத்துக்கொள்.
அவனுடைய கைகால்களின் நேர்த்தியையும்,
நீர்த்திவலைகளுக்குக் கீழ் சிவக்கும் கண்களையும்,
குளியறையின் ஊடே நடக்கும் அந்த வெட்க நடையையும்,
துண்டினைத் தளர்த்தி அவன் நீரினைக் கழிப்பதையும்  கூட.

இது போன்ற இனிமையான
அவனை உன்னுடயவன் மட்டுமாய்
ஆக்கக் கூடிய குறிப்புகள் அனைத்தையும் வியந்திரு.

அவனுக்குப் பரிசளி
உன்னைப் பெண்ணாய் ஆக்கும் அனைத்தையும் பரிசளி.
உன் நீண்ட கூந்தலின் மணத்தையும்
உன்னிரு மார்புகளுக்கிடை மலர் வேர்வையையும்,
உன் தூமையின் அதிர்வையும்,
உன் முடிவிலா பெண்மையின் பசியையும்.


ஓர் ஆணை  நேசிக்க வைப்பது சுலபம் தான்.
ஆனால் பின் அவனில்லாத வாழ்க்கையையும் நீ எதிர் கொள்ள நேரலாம் குறித்துக் கொள்.
நடை பிணமாய் வாழும்வாழ்க்கையில்
தேடலை கைவிட்ட கண்களுடன்
உன் பெயரைக் கூவி அழைத்த
அவனின் கடைசிக் குரலை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் காதுகளுடன்,
துலக்கிய பித்தளையாய்,அவன் தொடுதலில் மின்னி,
இன்று மங்கி, ஆதரவில்லாத உன்னுடலுடன்
நீ புதியவர்களை சந்திக்க நேரலாம்.
எனினும்
ஆண்களை நேசிக்க வைப்பது லகுவானது தான்.

                                                                      ******கமலாதாஸ்    

Wednesday, May 22, 2013

நன்றி நன்றி------- முதல் புத்தகம் ---முதல் விருது

கொஞ்சம் கிள்ளிக் கொள்ளுங்கள் என்று தான் ஆரம்பித்தார் அன்று தொலை பேசியவர் .
உங்கள் கவிதை புத்தகம் 'மலைப்பாதையில் நடந்த வெளிச்சத்திற்கு 'கவிதை உறவின் பரிசு கிடைத்துள்ளது என்றார்
நம்பத்தான் முடியவில்லை .
என் கவிதைகள் இலக்கியத் தரம் மிக்கதென்றோ இன்ன பிறவென்றோ கூற மாட்டேன் ஆனால் அதில் நிச்சயம் உண்மை உண்டு .அந்த உண்மைதான் இதை வாங்கித் தந்திருக்க வேண்டும்.

இருப்பினும் இந்த பரிசுக்கு நான் மட்டுமே உரியவள் அல்ல .

பின் வருபவர்கள் அனைவருக்கும் இது சமர்ப்பணம் .

முதலில் எழுதுங்கள் என்று ஆரம்பித்து வைத்த தினேஷ் என்ற சாம்ராஜ்ய பிரியன்;

அதை வாசித்து அதற்கு ஊக்கமளித்த சக வலைப்பூ நண்பர்கள்

அதை புத்தக வடிவமாக்க கருத்து கூறிய அமிர்தம் சூர்யா மற்றும் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள்

அதை வெளியிடத் துணிந்த டிஸ்கவரி பாலஸ் வேடியப்பன் அவர்கள்

அதற்குப் பெயர் சூட்டிய ராஜா சந்திர சேகர் அவர்கள்

அதை வாசித்து முன்னுரை எழுதித்தந்த ஆளுமைகள் கலாப்ரியா மற்றும் ராஜ சுந்தர்ராஜன் அவர்கள்

அதை வடிவமைத்து தந்த வெற்றி மற்றும் அவர் துணைவியார் அவர்கள்

தன் மகன் திருமணத்தில் அதை வெளியிட அரங்கம் அமைத்துத் தந்த திரு வெற்றிவேல் தம்பதியர்

காரைக்காலில் அதை அறிமுகப்படுத்திய இரா எட்வின் அவர்கள்

சென்னையில் அதை அறிமுகப்படுத்திய திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் திரு ஆத்மார்த்தி ,திரு சுந்தர்ஜி அவர்கள்

கோவையில் அதை கௌரவப்படுத்திய கோவை இலக்கிய சந்திப்பை சார்ந்த யாழி கிரிதரன் மற்றும் நண்பர்கள் .

சிவகாசியில் அதை மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்ற திருமதி.திலகபாமா அவர்கள்.

வெளிவந்த பிறகு அதற்கு மதிப்பீடு வழங்கிய ஆர் வி எஸ் தமிழரசி,தேனம்மை,கணேஷ் பாலா,கல்கி வார இதழ் ,அன்னா கண்ணன் மற்றும் ஹிந்து

இவர்கள் எல்லோருடன் பகிர்ந்து கொள்கிறேன் .

யாரையாவது விட்டிருந்தால் அது என் வயதினால் ஏற்படும் மறதியினால் அன்றி நன்றி மறந்ததால் அல்ல .

அவர்கள் என்னை நன்றாகத் திட்டலாம் 

 மீண்டும்  நன்றி நன்றி

Friday, November 16, 2012

வன்புணர்ந்த வீடுகள் வடிக்கும் கண்ணீர்



ஒரு வீடு யாரையும் எப்போதும்
வெறுப்பதே கிடையாது
அது எல்லா ரகசியங்களையும்
தன்னுளேயே பொதிந்து கொள்கிறது .

வாசற்படியில் கழற்றப் படும்
அப்பாவின் செருப்பு சுமக்கும்
கோபத்திற்கும் உற்சாகத்திற்கும்
மாறி மாறி அது தாங்குகல்லாகிறது

ஜன்னல் கம்பி தேய தேய
கனவு காணும் அக்காவின்
கன்னங்களின் பாதியை
அது ஏற்றுக் கொள்கிறது

கதவேறி காத தூரம் பறக்கும்
சின்னவனுடன்
யாருக்கும் தெரியாமல் அது
அந்தரங்க சிநேகம் கொள்கிறது

திண்ணை மூலையில்
அவ்வப்போது சாயும் பாட்டியின்
பெருமூச்சுகளின் எண்ணிக்கையை
அது மறப்பதேயில்லை.

மூக்குப் பொடியை
தேய்த்து தேய்த்து கருத்த மூலையில்
தாத்தனின் கண்ணீரையுமது
சுமந்து நிற்கிறது

சும்மாடு கழற்றி
நீர் அருந்தும் மோர்காரக் கிழவியின்
கணக்கனாய் கோடுகள் சுமந்து
அலுக்காமல் சிரிக்கிறது
 
பல பிறப்பு இறப்பின் ஆன்மாக்கள் 
பெருமூச்சுடன் உலவும் அதன் காமிரா அறை
எப்போதும் வெளிச்சம் கண்டதே இல்லை
இந்த அம்மாவைப் போலவே

படி தாண்டி உள்வரும்
அனைவரையும்
சேர்த்தணைக்கும் தாயாய்
அது அகண்டு புன்னகைக்கிறது .

காசுக்கு ஆசைப்பட்டு யாரோ ஒருவனுக்கு
விற்கப்பட்டு
வன்புணர்ச்சியாய்  அதன் கதவுகள்
உடைய நேரிடும் போது கூட
வீடு யாரையும் எப்போதும் வெறுப்பதே கிடையாது

ஆயினும் அழிந்த நம் ஆன்மாவை நினைத்து மட்டும்
காலம் கடந்த அதன் கண்களில்
வடிகின்றன  இருசொட்டுக் கண்ணீர் துளிகள்
கால வெள்ளமென .

Thursday, September 13, 2012

"சுந்தர்ஜி' இன்னும் சொல்லலாம் இவரைப் பற்றி

இதை ஒரு பின்னூட்டமாக  சுந்தர்ஜி  அவர்களின் பக்கத்தில் எழுதலாம் என்றிருந்தேன் .நிச்சயமாக அவர் இதை பிரசுரிக்க மாட்டார் ..அதனால்  ஒரு இடுகையாகவே அதை இங்கு போட்டு விடலாம் என்று ...

அவரின் விட்டுப் போன சில பக்கங்களை வாசிக்க இன்று நினைத்திருந்தேன்
வாசிக்க வாசிக்க பிரமிப்பு மேலீட பின்னூட்டமிடலாம் என்றால் சொல்ல வந்ததை சொல்லத் தெரியவில்லை.எதோ தட்டு தடுமாறி தட்டச்சுகிறேன் .

சொல்ல நினைத்தவை இதை விட பன்மடங்கு .


ஒருவன்

ரசிகனாக நினைக்கலாம்
ரசிகனாக உருவாகலாம் ..
ரசிகனாக மாறலாம்

இவர் ரசிகனாகவே  பிறந்தவர் .

இதற்கு இவர் பட்டியலிட்டிருக்கும் பாடல்களே முதல் சாட்சி .

நாளுக்கு நாள் மாறும் இவர் தளத்தின் பின் புலம் மறு சாட்சி என்றால்

இவர் கவிதைகளுக்குத் தெரிவு செய்யும் படங்கள் மற்றுமொன்று ..

இது ஒரு சின்ன உதாரணம் ..இது போக இவர் வீடு மனைவி மக்கள் நாய்குட்டி

என பட்டியலே போடலாம் ..

சரி வெறும்காண்  ரசிகர் தானா?என வினவினால் அவர் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பாடல்கள் அனைத்தும் பலாச்சுளைகள் ..

சரி அப்புறம்?

ருசி அறிந்து உண்பவர் ..அவராலே தானே கோமளவிலாஸ் போக வேண்டும்

என்று காத்துக்கொண்டு இருக்கிறோம்?

எழுத்துக்களில் எப்போதும் தெரியும் நாசுக்கு,நல்லவற்றை உடன் போற்றும்

நல்மனது ..

ஹ்ம்ம்ம் ...

இதல்லாம் விட பல விஷயங்கள் அவரிடம் ...

for eg?

நாலு எழுத்துக்களை கிறுக்கி விட்டு (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன் )

எதோ சாதனை செய்து விட்டோம் என்று நினைப்பவர் மத்தியில்

சாதனைகளை செய்து இதழ்கள் வெளியிட்டு,மொழி மாற்றம் செய்து,பல

ஆளுமைகளுடன் கூடவே இருந்து

பேசி, பழகி, எழுதி,பின்  அமைதியாய் இருக்கும் இவரிடம் நிச்சயம் பாடம்

படிக்கணும்.

சரி

சுந்தர்ஜியின் நண்பர் என்று சொல்ல ஒரு கொடுப்பினை வேண்டும்

ஏய் இதெல்லாம் டூ  மச்

இல்லை இல்லவேயில்லை

நண்பர் என்றால் தன்னால் முடிந்ததும்,அதை விடஅதிகமாகவும் செய்வார்

என்பதை தஞ்சை கவிராயரிடமும்,அப்பாதுரையிடமும் கேட்க வேண்டும்.

கவிராயரின் உடல் நலம் குறைந்த வேளைகளில் அவருடனே இருந்து,

அதைப்பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து

அப்பப்பா இருந்தால் இவர் போல ஒரு நண்பர் இருக்க வேண்டும் .


இவரிடம் பீறிடும் சமூக அக்கறை,பயணங்களில் மக்களில் சந்திக்கும் ஆர்வம்

 அவ்வப்போது  தலை காட்டும் நகைச்சுவை ..

இவை எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் எழுத்து .

ஓர் உயர்ந்த எழுத்து இதைவிட எப்படி இருக்க முடியும் ?

அவர் எழுத்துக்களைப்  படித்த பின் சிலநிமிடங்கள் ஏதும் செய்ய இயலாமல்

இருந்த தருணங்கள் உண்டு.

அவர் எழுத்துக்களை அச்சில் கண்டு பொறாமையுடன்  அவருடன்

சண்டையிட்ட நாட்கள்  உண்டு .

எல்லாம் போக அவர் எழுத்துக்கள் பிடிக்க முக்கியமான  காரணம் உண்டு ..

அவரின் எல்லா எழுத்துக்களிலும் அவரைக் காண்பது தான் அது

ஏனெனில் அவர் கூறியிருக்கிறார்
                                
                              "என் எழுத்துக்களில் நானிருக்கிறேன் "



 

Wednesday, September 12, 2012

அடகுக் கடை



எல்லா அடகுக் கடையுள்ளும்
எப்போதும் ஒரு பெண்
எதையாவது அடகு வைக்க
காத்திருக்கிறாள்.
அது அவள்
புன்னகையாக நிச்சயம் இருக்காது
விற்று விட்ட ஒன்றை
அவள் எப்படி  திருப்பி வைக்க இயலும்?
சிலநேரம்
அதிகாலையில் அடகுக்கடைக்குச்
செல்பவள்
எதோ ஒன்றை திருப்பத்தான்
சென்றிருப்பாள்
அப்போது அவள் தொலைத்த புன்னகையை
அக் கடைக்காரன்
கொசுறாக அவளிடம் கொடுத்து விடுகிறான்.
மற்றோர் இரவு
மீண்டும் அங்கு வரும் வரையில்
அவள் அதை சுமந்து கொண்டு
அலைகிறாள்
எது எப்படியிருந்தும் 
இரவு நேரங்களில்
அடகுக் கடை ஏகும்
பெண்களின் எண்ணிக்கை
குறையவே போவதில்லை
அவர்களின்
துயரைப் போலவே !

(நன்றி வெயில் நதி ..இலக்கியச்  சிற்றிதழ் )