Wednesday, January 18, 2012

திருத்தி எழுதப்படாத மரண சாசனம்


                             
    


ஆம்!
இவர்களுடைய மரண சாசனம்
ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது

ஒவ்வொருவருடைய
முதுகெலும்பும் பிரித்தெடுக்கப் பட்டு
எழுதுபவர்களின் ஆயுதமாய்
மாறிக்கொண்டிருக்கிறது .

இவர்கள் கண்களால்
பார்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது !

எண்ணங்களை உடைக்கும் வழியை
அவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் .
எண்ணுவதை இவர்கள் நிறுத்தி
யுகமான போதும் .

உயிர் விடும் சமயம்
ஒரு துளி நீர்
வாய்பட வேண்டி
இவர்கள்
சாசன திருத்த மனு செய்துள்ளனர் ;

ஒரு துளி, வெள்ளமாய் மாறும்
சாத்தியமிருப்பதில்
மாற்றத்தை அவர்கள் தாமதிக்கின்றனர் ..

ஆக
மரணம் அருகும் வரையிலாவது  ...

Friday, December 30, 2011

விதைக்குள் ஓர் இசை

ஒவ்வொரு விதையிலும்
ஒளிந்திருக்கிறது
பிறப்பிற்கானதோர் இசை
மழையின் தாலாட்டில்
கண்ணுறங்கும் அது
ஒரு இடியோசையில்
வெடித்து பொழியத் துவங்குகிறது .
பின் பிரபஞ்சத்தின் பாடலாய்
விண் மண் வியாபிக்கிறது
வ்யாபிகின்ற அக்கானகத்தின்
ஒவ்வொரு விதையிலும்
ஒளிந்திருக்கிறது
இறப்பிற்கான
ஓர் இசையும் கூட .


(கல்கியில் வெளியான கவிதை)

Wednesday, October 26, 2011

யாருக்கும் புரியா கவிதை

தன்னை வாசிக்கும் அவனை 
உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது 
அந்தக் கவிதை .
இருவரிகட்கிடை உறை 
பொருளறியாதவன் வெறும் 
வார்த்தைகளை மட்டுமே வாசிக்கிறான் .
பின் உரக்க சிலாகிக்கிறான்.
தன்பின் மறை பொருளுணர்த்த
கவிதை கொஞ்சம் முயல்கிறது 
பின் தோற்றுச் சரிகிறது .
புரியாததொன்றை புரிந்ததென 
அவன் புன்னகைக்கையில்
உள்ளே அழுதுகொண்டிருக்கும் 
அந்தக் கவிதை
இனி என்றோ மற்றொருவன்  
படிக்க நேரும் வரை ...
  

Thursday, October 20, 2011

அஞ்சலி....திருமதி தேவி முருகதாஸ்

அருகில் ஒரு சின்ன ஊரில் கும்பாபிஷேகம் .அதில் திரு பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் கச்சேரி. .கச்சேரி என்று சொல்வதை விட நாம சங்கீர்த்தனம் என்று சொல்லுவது சரி.பார்வையாளர்கள் அனைவரையும் ஒரு சேர பாட வைத்து ஒரு விதமான புதிய அனுபவம் ஏற்படுத்தி தருவார்.
 
அவர் பாடல்கள் என்றால் என் தந்தைக்கு உயிர். தந்தையின்  மூலமாக நாங்களும் அவரை  ரசிக்கக் கற்றுக்கொண்டோம் .அக்கம் பக்கம் எங்கு கச்சேரி என்றாலும் எங்கள் வீட்டில் தான் தங்குவார் .

நாங்கள் மிகவும் சாதாரண குடும்பம்தான் .இருப்பினும் எங்களில் ஒருவராக எங்கள் தாய் தந்தையர் அவர் மேல் வைத்துள்ள பிரியத்திற்காக மிகவும் இயல்பாக எங்களோடு இருப்பார்.ஒரு கால கட்டத்தில் ஓய்வு தேவைப்பட்டால் ஓரிரு நாள் வந்து தங்கிப் போவது என்று கூட ஆனது.

நான்  8ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி. அப்போதுதான் அவர் சரோஜா என்கிற தேவி அக்காவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தேவி அக்கா அவர்களும் அவருடன் எங்கள் வீட்டிற்கு வரத்தொடங்கினார் .

ஒரு சாதாரண சிறிய ஊரில் வாழ்ந்து வந்த எங்களுக்கு முருகா, தேவியக்காவின் வருகை ஒரு திருவிழா போல இருக்கும் .முருகாவைப் போலவே தேவி அக்காவும் எங்களுடன் நன்கு பழகினார்.வளர்ந்து வரும் சிறுமியான எனக்கு வெளியுலகைப் பற்றி பலவிதத்தில் எடுத்து கூறுவார் .மிகவும் அழகாய் வரைவார். அவர் வீட்டில் அவர் வரைந்த அம்மன் படம் தான் பூசைக்குரியதாய்  இருக்கிறது.

என்னுள் மறைந்து கிடந்த வரையும் திறமையை வெளிக் கொண்டு வந்தவர் அவர் தான் .அவரின் காரணமாகத் தான் என் ஓரிரு ஓவியங்கள் டெல்லியில் கண்காட்சியில் வைக்கப் பட்டது .அவர்கள் வரும் போதெல்லாம் புதிய பாடல்கள் சொல்லி தருவார் .அதை பாடியே யூத்பெஸ்டிவலில் பரிசு கூட வாங்கி உள்ளேன்.

வீட்டை சுத்தமாய் வைத்துக்கொள்வதையும் ,நம்மை சுத்தமாகவும் அழகாகவும் பராமரிக்கவும் பலதும் கற்று தந்தார் .இன்று கூட என் வீட்டிற்கு வருபவர்கள் வீட்டை அழகாய் வைத்துள்ளீர்கள் என்று கூறும் போது அக்காவின் நினைவு தான் . நவராத்திரியில் அனைவரும் பாடச் சொல்லும் ஒரு ஆளாக மாறியதிற்கும் அவர்கள் தான் காரணம்.

நம் வாழ்க்கை நாமே அமைத்துக் கொள்வதில்லை. அதில் பல பேருடைய தாக்கங்கள் இருக்கத் தான் செய்யும் .அந்த விதத்தில் எங்கள் வாழ்வில் அழகுணர்ச்சி மேம்பட்டது தேவி அக்காவின் வருகையால் தான்.  

எதோ ஒரு விதத்தில் எங்கள் வாழ்வோடு சம்பந்தப் பட்ட தேவி அக்கா இன்று  இல்லை.இல்லை என்பதை நம்பவும் இயலவில்லை .முருகா அவர்களை சந்திக்கும் தைரியமும் இன்னும் வரவில்லை .

அக்காவை  நினைக்கும் போதெல்லாம் காதில் ஒலிக்கும் அவர் குரல் இனி ஒலிக்காது.. எனினும் எங்கள் வாழ்வோடு இணைந்திட்ட அவர் நினைவுகளுக்கு என்றும் சாகா வரம் தான் .  
                         WE MISS U AKKA

Tuesday, September 13, 2011

இன்று (மீள் பதிவு )


அன்று!
கண்ணிலே கனவு!
மங்கலாய் மனவெளியில்;
கனவெனினும்,
ஆழ் மனப் பெட்டகத்தில்
பூட்டிய நினைவு!
காலசுழற்சியில்
கனவுகள்! கனவுகள்!
ஆசைகளின் கூப்பாடுகள்!
நிதர்சனம் உரைத்தது
கனவு கனவுதானென்று!
நடைமுறை முரண்கள்
கனவினைக் கொல்லும்!
கல்லறைக் கனவுகள்
எனக் கற்றுத்தெளியும் நேரம்
சட்டென மீண்டும் ஒரு கனவுப் பூ!
மனமெல்லாம் பூ வாசம்!
மூடிய கதவின்
மறுபக்கம்
நிலவொளியாய்
சிறு ஜன்னல்!
நனவாகும் கனவின்
வாயிற்படியில் நான்!!!