Monday, January 25, 2010

தீங்குளிர்



டெக்டொனிக் தகடாய்
தடுமாறும் மன அணுமயக்கம்
சிறு பொறி காட்டுத்தீ
ஸ்பரிச மின்னல்
காலம் அழிந்து
விண்வெளி அணுக
நிலம் நோக்கி
வியர்வைக் கடல்.

Wednesday, January 13, 2010

ஐயகோ !


கோமணத்த விட கொஞ்சம் பெருசா
சாணகலம் நஞ்சை இருக்கு !
நிலத்தை நம்பி பெருசு ரெண்டு ,
கனவு காணற பொண்ணு ஒண்ணு ...
படிச்சு ஒசர போறோமுன்னு
வீரம் பேசுற கன்னும் உண்டு ...
கட்டி வந்த நாளிலேந்து
தட்டி பேசா அப்பாவி ஒண்ணு ...
கிடைக்கு அனுபிச்ச ஆடு ரெண்டு
சீம்பால் தரும் செவலை ஒண்ணு ....
இம்புட்டு பேருக்கும் வயிற ரொப்ப
கடமை இருக்கும் காளை நானு........

அக்கம் பக்கம் இளிச்சு திரிஞ்சி
இருந்த தாலியும் அடகு வச்சு
மழையிலும் வெயிலும் மனசு அடிக்க
வெதச்சு, காய்ச்ச வெள்ளாமை எல்லாம்
பத்து மைலு காலு வலிக்க
சைக்கிள் மிதிச்சு டவுனுக்கு வந்து ...
வெறும் நாலு... பத்து ருவாயின்னு
தங்க சோளகதிர வித்தா ......
ஆறு கேட்டு பேரம் பேசி...
வாங்காம போய் வயித்திலடிக்கும்....
'கப்பு' முப்பதுனாலும் சரி
சொன்ன விலைய சிரிச்சு கொடுத்து
"அமெரிக்க சுவீட்கார்ன்"வாங்கி தின்னும்
சொரண கெட்ட நம்ம சனம் .

***உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது***

Monday, November 16, 2009

காதல் மட்டும்

காதல் ஒன்றே கருவாய்க் கொண்டு
கவிதை செய்தல் வேண்டாம் என
கடிந்து சொன்ன நண்ப ,

வானம் தனை வடிக்க எண்ணி ,
விண்ணதனை நோக்கின் .....
அங்கு காதல் செயும் மேகம் .

மலரை தனை பாட எண்ணி ,
சோலை தனை சேர்ந்தால் .....
அங்கு காதல் செயும் வண்டு .

இயற்கை தனை இசைக்க எண்ணி ,
சற்று வெளியதனில் விரைந்தால்.......
அங்கு காதல் செயும் அருவி .

காதலிலா இடமதனை
கண்டு நீயும் பகர்ந்தால்
களைவேன் நானும் காதல்.

அன்னையிடம் காதல்,
அழும் குழந்தையிடம் காதல்,
விண்ணிலேயும் காதல் ,எல்லா
பெண்ணிலேயும் காதல்.
வாழ்கை தரும் காதல்,
வாழ்வு முடிவும் காதல்.
கண்ணீரும் காதல்..
சிந்தும் புன்னகையும் காதல்.

பாட்டன் அவன் பாரதியும்
பாட்டுகவி தாசனும்
பகர்ந்ததுவும் காதல்,
மூழ்கி திளைத்ததுவும் காதல்.

வையகத்து பொங்குகின்ற காதல் அதனை எல்லாம்
ஏன் கரிய மையில் சேர்த்து இங்கு கவிதை ஆக்குகின்றேன்

காதல் அது போதும்
என கருதுகின்ற நாளில்
என் கண்களது மூடும்
உயிர் விண்ணதனை நாடும்,
இறையை காதலோடு சேரும் .

Monday, August 10, 2009

ஒற்றை மீன்


சுழன்று சுழன்று ,உழன்று உழன்று ,
வெளியேற வகையின்றி ,
சுவாச மூச்சு தவிக்க ,
கண்ணெதிரே தோன்றும்
விந்தைவெளி மயக்க ,
கால இடைவெளியில் வந்து விழும்
சிறு துகள்களில் உயிர் பிழைக்க......
பளபளக்கும் பளிங்கு சூழலும்........
வளமேதுமில்லா செயற்கை உயிர்களும் ,
வாழுமிடம் என்றாகி......
சேர்ந்திருந்தோர் கண்ணெதிரே
கனவாய் கலைந்தது கண்டும் .....
சுழன்று சுழன்று ,உழன்று உழன்று ,
வெளியேற வகையின்றி ,
என் வீட்டு மீன்தொட்டியில்
ஒற்றைமீன்
என் மனம் போல.

Wednesday, May 7, 2008

புரிந்ததா?

எதிலும் லயிக்காத
இலவம் பஞ்சாய் மனம்
இலக்கிலாமல் ஓடி ஆட
இலக்கில்லா வேதனையில்
ஆழ்மனம் தேடிவாட....
எதில்தான் லயிக்கும்
என ஆறறிவு கேள்வி கேட்க......
தேடலின் சுமையொடு
தூங்கா விழிகள் ..............
வேண்டாம் என அறிவு மாற்றி வைக்க ,
வேண்டும் என இதயம் இரங்கி நிற்க,
ஆம் இல்லை என மனம் பிரித்து பேச ,
தேடலின் விடையாய் ..........
என் சிரிப்பின் விலையாய்...........
அருகிலேயெ இருப்பினும்
நெடுந்தூரப் புள்ளியாய் நீ..............
என் தேடலே
தேடல் புரிந்ததா இப்பொதாவது?