Tuesday, March 17, 2020

சகா 13

என் நினைவு வரும்போதெல்லாம்
கடல் மேல் கல்லெறியாதே
அலைகள் காதல் இசைக்கின்றன!

என்னைப் போல்
வானோக்கி கண்ணீர் வீசு
நட்சத்திரங்களாகட்டுமவை.

பின் இரவில்
ஒலியிலாது சத்தமிடு
நாமறிந்த science
கொண்டு சேர்க்கும் அதை
திரைப்படம் போல்
என்றெள்ளாதே
என் இறுதி மூச்சில்
என் இருகைகள் பற்றிச் சொல்
என் கண் முத்து.

வா!
கடை நாட்களிலாவது
பொய் தள்ளிச்
சாவோம்.

சகா 12

கொன்றும் தின்றும் விடுகிறது
ஒரே ஒரு வார்த்தை.
இந்த நாளை ஆக்கியதும்
இவ்விரவை நீட்டிப்பதும்
ஒரே வார்த்தை.
கொலை செய்யும் கருவியை எய்து
பின் கண்மூடி விட்டால்
,நானென்ன செய்ய?
வேறெங்கு போக?.
மாயாது மாய்ந்து
அச் சொல்
தின்ன விழைகிறேன்.
அச்சம் நீக்கடா நீக்கு.

சகா 11


அந்தஒற்றைக்
காகக் கரைதலின்
ஊடே உன்
காதலை உணர்த்தியிருக்க
வேண்டாம்
பிச்சிப்பூ மலரும்
அந்நான்கு மணி
வெயிலில்
ஆண்டாளாய் ஆனேன்
என்பதை அந்தத் தோளமர்ந்த
காகம் தவிர யாரறியக் கூடும்?
இனி
குயில் பாடும் நேரம் கேட்டு
காதல் பேசு
கிளிக்கெல்லாம் ஆசையில்லை
எனக்கு.

சகா 10


மழைக்குளிரில்
நடுங்கிய படி
அமர்த்தலாய் நோக்கும்
அக்காகத்தை இப்பொழுது நடந்து
கடக்க வேண்டும்.
மூன்று மணி வெயிலில்
என் வயிறதிர குரல் எழுப்பும்
அதன் அலகுகளோ
ஒட்டி மூடிகொண்டிருக்கின்றன.
இது போன்ற வேளைகளில்
மழைகூட வெறுக்கப்படுமொன்றாய் மாறிவிடுகிறது.
ஏனெனில்
ஒரு துளி பட்டுச்சிலிர்த்துக்
ஒலிக்கும் அக்காகக்குரல்
அச்சசல்
உன் உச்சக்கூவலைப்போலவே
கேட்கிறது
சொல்!எதாவது சொல்.
ஆனால் அது நீதான் என்று மட்டும்
கூறிவிடாதே!

சகா 9


பட்டாம்பூச்சிகள் சதா அலையும்
வனமொன்றை கண்டிருக்கிறாயா?
அவை நம் மனம்
அவை நம்மாசை
அவை நம் பதற்றம்
அவை நம் வயிறேரத் துடிக்கும் பரவசம்
சகா
அவ்வனத்தில் நிற்கிறோம் காண்.
வா
அவை மின்மினிப் பூச்சிகளாகுமுன்
நம் மடி ஏந்திக் கொள்வோம்
ஒரு முறையேனும் வாழட்டுமவை.