Sunday, July 25, 2010

வடிவு என்ற C K சரஸ்வதி

நேற்று மற்றொரு முறை தில்லானாமோகனாம்பாள்   பார்க்க நேர்ந்தது .அதிசயமாக தொலைக்காட்சி  பெட்டியில்  ப்ரௌஸ் செய்யும் போது இந்த படம் ஒளிபரப்பப்  பட்டுக்கொண்டிருந்தது ..எத்தனை முறை  பார்த்தாலும் அலுக்காத படம் என்பதால் சிறிது நேரம் அமர்ந்து பார்த்தேன் .
 
இந்த படத்தின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடே கிடையாது ..அது வேறு  விஷயம். பொசுக்கென்றால் சந்தேகப்படுவதும் ..பின் உணர்வதும் ......ஒரு மனம் ஒப்பிய காதல், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது அல்லவா?...
 
பிடிக்காதது  இருந்தும் சிலது பிடிக்கும் அதற்கு காரணங்கள் தெரியாது   .அது போல இந்த படமும்.
அதுபோகட்டும் வடிவைப்பற்றி பேசுவோம் ..
 
இந்த படத்தில் மிக அழகான உடைகள் அணிந்து கதாநாயகியையும்  தூக்கி சாப்பிடுபவர் வடிவாக வாழ்ந்த C K  சரஸ்வதி அவர்கள் .
 
பெண்கள், திரையில் தோன்றும் உடைகளைப் பார்க்காமல் போனால் ஜன்ம சாபல்யம் ஆகுமா? அதிலும்  சரஸ்வதி அம்மாள் அணிந்து வரும் நல்ல அழகிய combination இல் பட்டு புடவைகளும், நகைகளும் ஆஹா வென்று சொல்ல வைக்கும் .
 
அதனால் தானோ என்னவோ எனக்கும் மனதில், அவர்கள் பட்டிலும் தங்கத்திலும் புரள்வார்கள் என்ற எண்ணம் இருந்தது ,அவர்களை நேரில் காணும் வரை....
 
நான் சென்னை  சைதாபேட்டை அலுவலகத்தில் வேலை செய்யும் போது பல திரையுலக பிரபலங்கள் எங்கள் அலுவலகத்திற்கு  வருவதுண்டு .போன புதிதில் ஆ வென்று  வாய் பிளந்து பார்த்திருக்கிறேன் .பின்பு அவர்களில் சிலர் நண்பர்களாகவே மாறினர்.
 
ஒரு நாள் என் சக ஊழியை" பத்மா ..அங்க பாருங்க யாருன்னு" !என்று  சுட்டிக் காண்பித்தார்  .
ஒரு வயதான மூதாட்டி ஒரு கசங்கிய சேலை அணிந்து மிகவும் பாவப்பட்ட நிலையில் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்தார் .
 
'இவர் தான் தில்லானா மோகனம்பாவில் நடித்த சி  கே சரஸ்வதி அம்மாள்' எனவும் ,மிகவும் அதிர்ச்சியாய் போய்விட்டது .அப்படியா அப்படியா வென்று பலமுறை கேட்டு விட்டு அருகில் சென்று பேசினேன் .
 
அருகே சி ஐ டி நகரில் வசிப்பதாகவும் ,மிகவும் சிரமமான பிழைப்பாய் இருப்பதாகவும் அரசு நலிந்த கலைஞர்களுக்கு  தரும் ஊய்வூதியமான 2000 ரூபாய்  வாங்க  அருகில் ஒரு வங்கிக்கு வந்ததாகவும் கூறினார்.

மிகவும் வருத்தமாய் இருந்தது ..பின் ஒரு நாள் தி .நகருக்கு நடந்து செல்வோம் என்று போகையில் ,ஒரு வீட்டு வாசலில் தண்ணீர் பிடிக்க ஒரு கிழிந்த  nighty  அணிந்து போராடிக்கொண்டிருந்தார் .

இதுபோல வெள்ளித் திரையில் மின்னி விட்டு நிஜ வாழ்வில் கஷ்டப்படுபவர்கள்  எத்தனை பேரோ?
தியாக ராஜா பாகவதரில் ஆரம்பித்து ,பல பேர் இருக்க வேண்டும் .

இருப்பினும் திரையில் காணும் பொய் பிம்பங்களை வைத்து நம் மனதில் ஒரு கற்பனை வைத்துக்கொள்வது எவ்வளவு தவறு ?
இப்படி நிழலை நிஜம் என்று நம்புவதாலேயே தான் திரையுலகு நம்மை ஆளவும் வழி வகுத்திருக்கிறோம். நிழலின் போலித்தனத்தையும் நிஜத்தின் கொடூரத்தையும் சந்திக்கும் போது அதிர்ச்சியாய் உள்ளது  .

நிறைய பேருக்கு இது தெரிந்தும்  இருக்கலாம் .எனக்கு கொஞ்சம் லேட்டாகத்தான் உணர முடிந்தது
அது சரி, இந்த  திரை உலகத்தைப் போல் எத்தனை ஊடகங்களோ?

47 comments:

Prasanna said...

படத்தில் அத்தனை நடிகர்களின் நடிப்பும் அருமை.., இவர்களின் நடிப்பும்.. கஷ்டமாத்தான் இருக்கு..

Unknown said...

இதுபோல வெள்ளித் திரையில் மின்னி விட்டு நிஜ வாழ்வில் கஷ்டப்படுபவர்கள் எத்தனை பேரோ?

பத்மநாபன் said...

மின்னும் பொழுது சுற்றி இருக்கும் கூட்டம், மங்கும் பொழுது விலகி விடுகிறது..அவர்களும் புகழ் மயக்கத்தில் எல்லாம் மறந்து, கடைசியில் மிகவும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். பார்த்து பேசியது அவர்க்கு ஒரு ஆறுதலை தந்திருக்கும்.

ஹேமா said...

உண்மைதான் பத்மா.நானும் நிறைய நடிக நடிகையர்கள் பிற்காலங்களில் கஸ்டப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

pinkyrose said...

பத்மா நீங்கள் திரை உலக ஆளா?

ரிஷபன் said...

காஞ்சனா பற்றியும் இதே போல் செய்தி வந்தது..
//ஒரு மனம் ஒப்பிய காதல், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது அல்லவா?..//
உண்மைதான்.. ஆனால் இங்கு அந்த அளவுக்கு மீறிய காதலே சண்முகசுந்தரத்தைப் படுத்தி எடுக்கிறது.. நாவலைப் படிக்கும்போது கதை போல் தோன்றாமல் அப்படியே செலுத்திக் கொண்டு போன வித்தை கொத்தமங்கலம் சுப்பு அவர்களுக்கு வாய்த்திருந்ததை உணர முடியும். ஒரு நாவலின் சூழலை அப்படியே ஒப்புக் கொண்டு அந்தப் பின்னணியில் கதாபாத்திரங்களின் செயல்பாட்டினைப் பார்த்தால் எழுத்தின் நேர்த்தியை வெகுவாய் ரசிக்கலாம்.. படம் (முடிவில் மாற்றம் தவிர்த்து) அப்படியே நாவலைப் பிரதிபலித்தது. அதனால் தான் அது “எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம் ” நம் நிஜ வாழ்வில் எத்தனை முறை முரண்களோடு நிற்கிறோம்!

பத்மா said...

ஐயோ பிங்கி ரோஸ் இல்லங்க ..எங்கள் அலுவலகத்துக்கு வருவார்கள் என்று தான் சொன்னேன் ...

பத்மா said...

வாசித்து கருத்துக்கள் கூறிய
பிரசன்னா ,
கலாநேசன்,
பத்மநாபன்
ஹேமா ,
ரிஷபன்
ஆகியோருக்கு மிக்க நன்றி

Madumitha said...

உதிர்ந்த நட்சத்திரங்கள்
பிரகாசிப்பதில்லை.

'பரிவை' சே.குமார் said...

//...நிழலின் போலித்தனத்தையும் நிஜத்தின் கொடூரத்தையும் சந்திக்கும் போது அதிர்ச்சியாய் உள்ளது.//



உண்மைதான்.

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

சில நல்ல நடிகர், நடிகைகள் இது போன்ற நிலைக்கு ஆளாவதும் வேதனைதான்

என்ன செய்ய? வாழ்க்கை உலகத்தின் மிகப்பெரிய கேலி நாடகம்!

r.v.saravanan said...

நிழலின் போலித்தனத்தையும் நிஜத்தின் கொடூரத்தையும் சந்திக்கும் போது அதிர்ச்சியாய் உள்ளது .

கண்டிப்பாக பத்மா

இனிமேல் இந்த படம் பார்த்தாலும் சரி வேறு படங்களில் c.k.சரஸ்வதியை பார்த்தாலும் சரி நீங்கள் சொல்லியிருக்கும் அவரது உண்மை வாழ்க்கை எனக்கு நினைவுக்கு வரும்
நல்ல பதிவு

Appu said...

முத்தாய்ப்பான கடைசி வரிகள் :)அனைத்திற்கும் பொருந்தும், நிஜ வாழ்விற்கும் உட்பட!

Chitra said...

இப்படி நிழலை நிஜம் என்று நம்புவதாலேயே தான் திரையுலகு நம்மை ஆளவும் வழி வகுத்திருக்கிறோம். நிழலின் போலித்தனத்தையும் நிஜத்தின் கொடூரத்தையும் சந்திக்கும் போது அதிர்ச்சியாய் உள்ளது .


..... வாசிக்கும் போதே, மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.... இந்த மாதிரி நலிந்த கலைஞர்களுக்கு உதவ நடிகர் சங்கம் எதுவும் செய்வது இல்லையா?

ப்ரியமுடன் வசந்த் said...

திரையில் ஆஹா என்றும் நிஜத்தில் ப்ச் என்று இரண்டையும் சொல்வதென்னவோ
நம் வாய்தான் ...

வேறென்னத்த சொல்றது ஆண்டவன் காப்பாற்றுவார்...ப்ச்

butterfly Surya said...

அற்புதமான நடிப்பு.

ஏ.பி. அவர்களின் படத்தின் மிகப்பெரிய வெற்றியே ஆர்டிஸ்ட் செலக்‌ஷன் தான்.

சிறிய வேடங்களுக்கு கூட சரியான நபர்களை தேடி ஆராய்ந்து போடக்கூடியவர் ஏ.பி.என்.

அதே பாணியை இயக்குநர் ஷங்கரும் கையாள்கிறார். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வரும் கதாபாத்திரங்களுக்கு கூட சரியான ஆட்களை போடுகிறார் என்பது என் கணிப்பு..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நிஜமும் நிழலும் பத்தி நல்லா சொல்லி இருக்கீங்க பத்மா...

சத்ரியன் said...

காலத்தின் கையில் எதுவும் நிகழும் என்பது ‘இது போன்று’ ஒவ்வொரு நொடியும் உணர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது பத்மா. நாம் தான் அதை கவனிக்க நிதானமின்றி அத்தி பூத்தாற்போல் எப்போதாவது உணர்கிறோம்.

காமராஜ் said...

ஒரு சின்ன கட்டுரை.
ரொம்ப அழகான கருத்துக்கள்.விமர்சனங்கள்.அடடா.நல்லாருக்கு மேடம்.

பத்மா said...

மதுமிதா உங்கள் கருத்து உண்மைதான்
ஆனால் மனது வலிக்கறது

பத்மா said...

சே குமார்
நாளைப்போவான்
சரவணன்
zeno
சித்ரா

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

பத்மா said...

நன்றி வசந்த்

மிக்க நன்றி தங்கமணி

பத்மா said...

வாங்க பட்டாம்பூச்சி சூர்யா

மனவிழி சத்ரியன்

உங்கள் முதல் வருகைக்கும் ,கருத்திற்கும் மிக்க நன்றி

பத்மா said...

காமராஜ் சார் வாங்க ....
நன்றிங்க

ஆடுமாடு said...

உண்மைதான். ஆனால், இருக்கும் போது ஏகமாக செலவழித்துவிட்டு பின்னால் கஷ்டப்படுவர்கள்தான் அதிகம். நான் சரஸ்வதி மேடத்தை சொல்லவில்லை. பொதுவாக இப்படித்தான் இருக்கிறது.

Guruji said...

super இருக்கு..

http://ujiladevi.blogspot.com

நாடோடி said...

சினிமா துறையில் உச்ச‌த்தில் இருக்கும் போது த‌ன்னுடைய‌ பிற்கால‌ வாழ்க்கை ப‌ற்றி சிந்திப்ப‌தே இல்லை என்ற‌ உண்மையும் இதில் பொதிந்துள்ள‌து.... ப‌கிர்விற்கு ந‌ன்றி.

uma said...

real life and reel life iddhu thana yenbathu iddhu therugirathu illya?padmaja

bogan said...

ஒரு கொடுமைக்கார தாய் அல்லது மாமியாரின் கடுகடுத்த முகபாவனைகளையும் உடல்மொழியையும் மிக நன்றாக திரையில் கொண்டுவந்தவர் அவர்.இது போல் கவனிக்கப் படாமல் இறந்த காலத்தின் நிழல்களாய் அலைபவர் நிறைய உண்டு.தியாகராஜா பாகவதரின் இறுதிக் காலமே துயரமாய்தான் முடிந்தது.வழக்கமாய் இந்த மாதிரி பக்க கதாபாத்திரங்களை யாரும் கவனத்தில் வைத்திருக்க மாட்டார்கள்.நீங்கள் கவனித்திருக்கிறீர்கள்.இதே போல் நாம் நினைக்க மறந்துவிட்ட கலைஞர்களை பற்றி தொடர்ந்து எழுதலாம்

Sridhar Narayanan said...

//இந்த படத்தின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடே கிடையாது ..அது வேறு விஷயம். பொசுக்கென்றால் சந்தேகப்படுவதும் ..பின் உணர்வதும் ......ஒரு மனம் ஒப்பிய காதல், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது அல்லவா?...
//

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? ஒருவேளை நீங்கள் கதையை சரியாக உள்வாங்கவில்லையோ?

மோகனாம்பாள் ஒரு நாட்டியக்காரியாக இருந்தாலும் அக்கால நடைமுறையில் அது ஒரு ‘கண்ணிய’ பிழைப்பு அல்ல. நாட்டியக்காரிகள் என்றால் ஊர் பெரியவர்கள், முக்கியஸ்தர்கள் எல்லோரையும் ‘அட்ஜஸ்ட்’ செய்து போக வேண்டும். நாட்டியம் இரண்டாம் பட்சம்தான். அப்படிப்பட்ட ஒரு பெண் காதல் வயப்படுவதும் அதன் பொருட்டு ஏற்படும் வேதனைகளும் மிகவும் அருமையாக சொல்லப்பட்டிருக்கும்.

சண்முகசுந்தரம் போன்ற ‘வறட்டு முசுட்டு’ வித்வான்கள் பலரும் உண்டு.

இதன் எல்லா பாத்திரங்களும் மிக இயல்பாக யதார்த்தமாக வடிக்கப்பட்டு இருக்கும். முடிந்தால் மூலக்கதையை படித்துப் பாருங்கள்.

எஸ் ஜி கிட்டப்பா, சுந்தராம்பாள் காதல் கேள்விபட்டிருப்பீர்கள்.... சுந்தராம்பாள் கிட்டப்பாவிற்கு எழுதிய காதல் கடிதங்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கும்.

யதார்த்த காதல் இப்படிதாங்க இருக்கும்... :)

Anonymous said...

வருத்தமாய் இருக்கிறது...

ஸ்ரீராம். said...

.அது வேறு விஷயம். பொசுக்கென்றால் சந்தேகப்படுவதும் ..பின் உணர்வதும் ......ஒரு மனம் ஒப்பிய காதல், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது அல்லவா?..?/

நடைமுறை வாழ்க்கையில் காதல் என்பது இப்படி இருக்கும் சாத்தியக் கூறே அதிகம். மனித பலவீனம். நா பாவின் சமுதாய வீதியிலே படித்திருக்கிறீர்களோ? அச்சமே கீழ்களது ஆச்சாரம் என்று சொல்லும் முத்துக்குமாரனைப் படித்திருக்கிறீர்களா?

Nathanjagk said...

ஓய்வு பெறுவது தெரியாமலேயே நடந்து விடுகிறது - கலைஞர்களுக்கு.

Thenammai Lakshmanan said...

உண்மைதான் பத்மா.. திரை உலகில் பிரபலமாக பிஸியாக இருந்தவர்கள் தற்போது என்ன செய்வார்கள் என நான் நினைத்ததுண்டு..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அவருடைய இப்போதைய ஃபோட்டோவையும் போட்டிருக்கலாம்.
கட்டுரையின் கனம் கூடியிருக்கும்!!!

பத்மா said...

ஆமாம் ஆடு மாடு சார் .சரியாக கூறினீர்கள்

பத்மா said...

நன்றி உஜிலா தேவி .முதல் வருகைக்கும் கருத்திற்கும் ..
நன்றி நாடோடி சார்

பத்மா said...

romba thanks uma

பத்மா said...

விரிவான கருத்துக்கு நன்றி போகன் ..எழுத முயற்சிக்கிறேன்

பத்மா said...

@ஸ்ரீதர் நாராயணன்
@ஸ்ரீராம்

எந்த ஒரு கருத்தும் மாறுதலுக்கு உட்பட்டது தான் .நீங்கள் இருவரும் கூறிய பிறகு வேறொரு கோணமும் இருப்பதை உணர்கிறேன் .தில்லானா மோகனாம்பாள் புத்தகம் வாங்கி இரண்டு வருஷம் ஆகிறது .ஆனால் எதோ ஒரு பயத்தில் படிக்காமல் இருக்கிறேன் .படத்தின் சுவை குறைந்து போய்விடுமோ என்று கூட இருக்கலாம் .
இப்போது படிக்கத்தான் வேண்டும்

நன்றி .வேறொரு perception ஐ அறிமுகப்படித்தியதிற்க்கு.

ரிஷபன் கூட இதையே கூறியிருந்தார் ...

பத்மா said...

@ஜகன்
@தேனம்மை
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி



@ராமமூர்த்தி சார்,
அவர் இப்போது இல்லை என நினைக்கிறேன் .
நான் கூறியது 8 வருடங்களுக்கு முன் நடந்தது

Madumitha said...

தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
எழுதுங்கள்.

அண்ணாமலை..!! said...

"தம்பி!! மோகனாங்கியைக் காட்டிலும், அவங்க அம்மா தான் டாப்பப்பா..டாப்பு!!"

பாலைய்யா வசனம்!

இந்த இடுகை அருமை!உண்மை!

Aathira mullai said...

நீர்வழி படும் புனை போல ஆருயிர் முறை வழிப்படும் என்பது காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே..சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே..என்ற சங்கப் பாடல் தான் நினைவுக்கு வருகிறது பத்மா..

ஜெயசீலன் said...

சரியா சொன்னீங்க பத்மா... நிறைய பேர் அப்படித்தான் ஆகிட்டாங்க... தமிழ் சினிமா பார்ப்பவர்கள் எல்லோருக்கும் மறக்கவேமுடியாத ஒரு ஆல்ரவுண்டர் நம்ம சந்திரபாபு சார்... தமிழ் சினிமால மேற்கத்திய உடைகளையும், நடனத்தயும் அறிமுகப்படுத்தியதே அவர்தான்... ஆனா கடைசி காலத்துல அவரும் ரொம்ப கஷ்ட்டப்பட்டார் னு அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன்.... மண்வாசனை பாண்டியன் கூட தன்னோட கடைசி காலத்துல கஷ்ட்டப்பட்டார். என்ன பண்றது நல்லா வாழுறப்ப நிலமை இப்படியே இருக்கும்னு சினிமாகாரங்க அதிகம் செலவு செய்வாங்க.

jokkiri said...

திரை பிரபலங்களின் நிழலும், நிஜமும் கண்டிப்பாக வேறு வேறாக தான் இருக்கும்....

பணம் வரும் சமயம் அதை போற்றி பாதுகாக்க தெரியாமல், தாம் தூம் என்று செலவழிக்கும் மனப்பான்மையும் இருந்ததாலேயே பாகவதர் முதல் ராமராஜன், ராஜ்கிரண் வரை அனைவரும் துன்பம் கொள்கின்றனர்...

பணம் வரும் நேரம், அதிலிருந்து ஒரு தொகை எடுத்து சேமித்து வையுங்கள், அது உங்களின் எதிர்காலத்திற்கு பயன்படும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு விழாவில் சொல்லப்போக, அதற்கு பாரதிராஜா ரஜினி அவர்களை கடுமையாக ஏசினார்...

உண்மையை சொன்னால், இந்நாளில் என்றுமே பொல்லாப்பு தான்...

vasan said...

//இருப்பினும் திரையில் காணும் பொய் பிம்பங்களை வைத்து நம் மனதில் ஒரு கற்பனை வைத்துக்கொள்வது எவ்வளவு தவறு ?
இப்படி நிழலை நிஜம் என்று நம்புவதாலேயே தான் திரையுலகு நம்மை ஆளவும் வழி வகுத்திருக்கிறோம். நிழலின் போலித்தனத்தையும் நிஜத்தின் கொடூரத்தையும் சந்திக்கும் போது அதிர்ச்சியாய் உள்ளது.//

அரசிய‌லுக்கு, அருகில் வ‌ந்து விட்டிர்க‌ள்.
ஒப்ப‌னை, உண்மையை ம‌றைக்க‌த்தானே?