Tuesday, December 11, 2007

உணர்ந்தேன் நான்!

நீ இல்லாத
உன் தெருவில்
உலவும் போதுதான்
நேரில் இல்லாமலே நீ
என் உணர்வுகளில் படர்ந்திருக்கும்
உண்மை புரிந்தது!

உன் மூச்சுக்காற்று
கலந்திருக்கும்
உன் ஊர் காற்றை
சுவாசித்த பிறகுதான்
என் உயிருக்கும்
உயிர் வந்தது!

நீ விரும்பிக் குடிக்கும்
தேனீர் கடையில்
ஒதுங்கி நின்றபோதுதான்
என் சுவையரும்பு கூட
மலரத் தொடங்கியது!

உன் ப்ரார்தனைக்குச்
செவிசாய்க்கும்
செல்லப் பிள்ளையாரை
கண்டு புன்னகைத்த போதுதான்
வாழ்க்கைக்கே ஒரு
நம்பிக்கை வந்தது!

யாரும் அறியாமல்.....
நீ நடக்கும்
உன் வாசலின் மண்ணெடுத்து
என் கைகுட்டையில்
புதைத்து
நெஞ்சோடு அணைத்த பிறகுதான்
என் காதலுக்கே
காதல் வந்தது!

Friday, December 7, 2007

சேமிப்பு

என் பொழுதெல்லாம்
வீணாக்குகிறேன்
என புலம்புபவர்களுக்கு
என்ன தெரியும்?
நாம் பேசிய கணங்களை......
நாம் பழகிய நாட்களை.......
நாம் சிரித்த நொடிகளை......
நாம் சிந்தித்த செயல்களை....
நாம் மௌனித்த வேளைகளை.......
நாம் ரசித்த நிமிடங்களை எல்லாம்.......
ஞாபகப் புகைப்படமாக்கி
மகிழ்ச்சியில் காயப்போட்டு
நினைத்து நினைத்து
வாழும் தருணங்களில் தான்....
என் மீதி கால வாழ்விற்கான
உயிர் மூச்சையே
நான் சேகரிக்கிறேன் என!!!!!

Wednesday, December 5, 2007

மாயை!

கதைப்பது பெண்ணென
தெரிந்தபின்பு
முலையளவு கேட்கும்
மூடர்கள் கூட்டம்.

நட்பு நாடிவருபவளீடம்
காமவலை வீசும்
கயவர்கள் கூடம்

தனித்திருக்கும்
பெண் மனம்பேதைமையுற
பேசி மயக்கும்
நரிகளின் வாசம்

இலக்கியமும்,இலக்கணமும்
பெண்ணிற்கப்பாற்பட்டதென
சதையால் பெண்ணளக்கும்
சவுக்கடி மாடம்

இவை அனைத்தும்
அறிந்தும்
தினம் தினம்
தேடுதல்
நிறுத்தா பயணம்!!

நடுவில் உதிக்கும்
சில நம்பிக்கை
நட்பும்
நாளாவட்டம் நலிந்து
காமம் பேசி....
காரணம் கூறாது
விட்டொழியும்.

மோட்டுவளை நோக்கி
விழியில் நீருடன்
உண்மை நட்பு நாடி
மனம்
நிழலொடு பேசும்!!

வேம்பு கசப்பென
அறிவு உணர்த்தியும்
வேப்பம்பழ இனிப்பு
நாடும்
பேதையுள்ளம்.

மனம் கூறும் வழி போகாது
அறிவு வழி செல்ல
அழியும் மாயம்
வாழ்வு
அமிர்தே ஆகும்.

Sunday, November 25, 2007

எதை எழுத?

கவிதை என நினைத்தால்
கண்முன்னே உன் முகம்!
கற்பனையில் உன் நினைவு!
காலமது மாற்ற இயலா
காதலும் இது தானோ!!

கவிதையென எதை எழுத?
கண்ணுடன் கண் நோக்கிய
கணப்பொழுது வேளையையா?
கணப்பொழுது நொடியில் மாறி
கருத்தில் யுகமாய் மலர்ந்ததையா?

கண்ணீரைக் கண்டு பதறி, துடைக்க
கரங்கள் வேகமாய் நீண்டதையா?
காலமெலாம் துணைஇருப்பேனென
கைபற்றிக் காதலுடன் உரைத்ததையா?

கண்பட்டு விடும் போல் நாளிரவு
காவலாய் அருகில் நின்றதையா??
கவிதையென வாழ்வதனை
காரிகைக்குத் தரும் நேரம்
கால நேரம் பாராமல்
காலன் வந்து கவர்ந்த்தையா?

கனவும் நினைவுமாய் ஆனதையா??
கண் மூடிக் உனைச் சேர
காத்துக் கலங்கி நிற்பதையா?

கவிதையே நீயாய்
கருத்தினில் ஆனபின்பு
கவிதை யென எதை எழுத?
காத்திருக்கிறேன் நான்

Monday, November 12, 2007

புரிதல்

புரிதல்,
புரிந்துகொள்ளுதல்,
இந்த இரண்டு தண்டவாளங்களின்
நடுவே
நகர்கிறது நம் நட்பு............

உன் சிரிப்பு,சிந்தனை,
வெறுப்பு,வேதனை,
ஏன்!மௌனம் கூட
புரியப்படுதலால் தான்
நம் நட்பு
நசுங்காமல் சிரிக்கிறது,
நாள்தோறும்
இனிக்கிறது.......

நகரும் நட்பில்...
நீ
என் தவிப்பையும்
புரிந்து கொண்டிருக்க வேண்டும்..
புரிந்து கொண்டிருப்பாய்
என்ற புரிதலோடு தான்
காத்திருக்கிறது
மனம்......

ஏனெனில்
புரிந்தும் புரிந்துகொள்ளுதலுமாய்
தானே
மொட்டவிழ்ந்தது
நம்
நட்பூ

Tuesday, October 30, 2007

தடுமாற்றம்

சாம்பாரில் உப்பில்லை,
சாப்பாடது வேகவில்லை,
பழங்களோ குப்பையில்..
தோல் உண்ணும் தட்டில்.....
காபிப் பொடியாக
கொதிக்குது
மிளகுத்தூள்,ஃபில்டரில்....
செய்த அநியாயம்
போதுமென,ஓடிவிட்டேன்
சமையல் அறையிலிருந்து.....

உன்னை யார்
கால நேரம் பார்க்காமல்
'உன்னை மிகவும் பிடிக்குது'
என
காதோரம் சொல்லச்சொன்னது???

போடா!

இன்று கொஞ்சம்
அதட்டித்தான்
சொல்லிவிட்டேன்!!
வேலையின் இடையே..
கணிணித்திரையினூடே....
வாசிக்கும் வரிகளின் நடுவே..
இடையறாது........
தலையெடுத்துச் சீறும்
பாம்பென வரும்
உன் ஞாபக எண்ணங்களை
கொஞ்சம் அதட்டத்தான்
செய்தேன்.......
அதற்காக
வண்ண்ங்களிலும்,
வாசனைகளிலும்,
சிரிப்போசையிலும்,
பாடல் வரிகளிலும்
மண்வாசனையிலும்.......
வந்து..
பத்துத் தலை நாகமென
எனைச் சூழ்ந்து
பாடாய் படுத்தாதே......
போடா.......

ஏனடா?

வேலைக்காரியின் முனகல்,
ஆட்டோக்காரரின் அவசரம்,
காய்கறிக்காரரின் ஏமாற்று,
அலுவலகச் சிப்பந்திகளின் சோம்பல்,
அதிகாரிகளின் மேம்போக்கு,
வாடிக்கையாளர்களின் புகார்,
உடன் பிறந்தோரின் குறைகள்,
சில நண்பர்களின் கேலிகள்,
இவை அனைத்தையும்...
புன்னகையொடு தாங்கும்
எனக்கு...
உன் பரிவுக்குரலின்
சிறு மாற்றம் கூட
உயிரில் பூகம்பத்தை
உண்டாக்குதே
ஏனடா?

வரம்

வேறொன்றும் கேட்கவில்லை
உன்னிடம் நான்..

மணக்கும் மலர்கள்
வேண்டாம்,
மயக்கும் உடைகள்
வேண்டாம்,
இனிக்கும் இனிய
பயணங்கள் வேண்டாம்,
பொன்நகை வேண்டாம்.....
போகங்கள் வேண்டாம்.
இவை எதுவும் வேண்டாம்........

அலுவலகச் சிந்தனையின்றி
இடையறாத அழைப்பின்றி
மற்ற நண்பர்களின் நினைப்பின்றி
நாளையின் கவலையின்றி
எப்போதாவது ஒரு முறை...
இடையூறே இல்லாத
நமக்கே நமக்கான
சில மணித்துளிகள் மட்டும்

இது தவிர
வேறென்ன கேட்கப் போகிறேன்
உன்னிடம் நான்!!!

Sunday, October 14, 2007

கனா!

ஒவ்வொரு காலையும்
என் கனவினைக்
காயவைக்கிறேன்

கைக் கொள்ளாக் கனவுகள்
கட்டடங்காமல்
ஆட்டம் போடும்!

கனவுகள்
கனவாய் போகாமல்
நனவாய் மாற
நாளெல்லாம்
களைக்கிறேன்!

எனினும்
உறக்கத்திலும்
விழிப்பிலும்
கனவுகளின்
கொட்டம்!

கடை உறக்கம் வரை
கனவு
கனவாய்
இருப்பினும்
கடையோரப் புன்னகையுடன்
உறங்குவேன்....
வானம் வரை
உயரும்
கனவுடன்!!

Thursday, October 11, 2007

கண்ணா!!


கண்ணனைக் கருத்தில் கொண்டு
காண
காட்டாமணக்கில் கூட
மல்லிகை வாசம்!

கண்ணனைக் கனவில் கண்டு
பாட
கொல்லை புறம் கூட
கோகுல மாடம்!

கண்ணனை மனச்சிறையில்
பூட்ட
போகும் இடமெல்லாம்
புகழ் பொன்னாரம்!

கண்ணனே வாழ்வெனக்
கொள்ள
இருக்கும் காலமெலாம்
களிக்கும் மனம்!!

Tuesday, October 9, 2007

இனியது இனியது

ஒரு நாள்
விண்ணெல்லாம்
நட்சத்திரமான
பொழுது
விரல்நுனிபட
காத்திருந்ததும்........

வயிறு கீறி
வெளியெடுத்த
வலியொடு
பிஞ்சு ஸ்பரிசத்திற்கு
காத்திருந்ததும்.........

ஆண்டுகள்
பல பிரிந்து
பின் காணும்
கணத்திற்கு
காத்திருந்ததும்.........

இனிமை இனிமை
எனினும்
அதனினும்
இனிமை...

நீ... ஒருநிமிடம்
எனக் கூறி
தொலைபேசியில்
நிறுத்த
மனக் கண்ணில்
உனைக்
கண்டு கொண்டே
காத்திருக்கும்
அத் தருணம்........

Sunday, September 16, 2007

கடவுளே!!!

கடந்தும் உள்ளிருப்பதால்
கடவுளென்றும்,
காணாப் பேரின்பமாய்
இறையென்றும்,
மூன்றுலகம் ஆட்டுவிக்கும்
ஆண்டவனென்றும்
பிறவிப் பெருங்கடல் நீக்கும்
பேரொளி என்றும்
காலமெலாம் புகழப்படும்
நித்ய ஜீவஒளியே!!!

பலமுறை அடிப்பினும்
அன்னை தேடும் குழந்தையாய்
அன்பு அரவணைப்பு எல்லாம்
மறுக்கப்பபட்ட அனாதையாய்
கண்ட கனவை கண்ணில்
தேக்கும் ஊமையாய்
உன்னிடமே வந்து நிற்கிறேன்
ஊண் மறுக்கப்பட்ட குழவியென

என்னுடானான உன் விளையாட்டை
என்றுதான் நிறுத்த எண்ணம்?
அன்றுதான் மலரும் என் மனம்
இதும் நீ அறிவாய் அது திண்ணம்!!

Friday, September 14, 2007

வலி

வலி பெற்ற மொட்டு
பூவாய் மலரும்
உளி கொடுத்த வலியில்
சிலையும் சிரிக்கும்
வலி இல்லா வாழ்க்கை
வையத்தில் இல்லை
கலி என்றில்லை இது
காலத்தின் உண்மை

மனதின் வலியில்
மனது மலருமா?
பிரிவின் வலியில்
உறவு தொடருமா?
தனிமை வலியில்
இனிமை வருமா?
மரண வலிதனில்
ஜனனம் பிறக்குமா?

வலியின் விளைவு
வல்லதே ஆனாலும்
வலியே வாழ்வானால்
வாழ்வதெங்கணம்???
வலிக்கு வல்லமை
தந்த இறைவனவன்
வலி தாங்கும் இதயம்
மட்டும் தர மறந்ததேன்??

வலிக்கு வாழ்க்கைப் பட்ட
நிழல் தேடும் நெஞ்சங்கள்
வலிந்து வரும் துயரதை
வாழ்நெறி என உணருமோ ?
இல்லை வலியுணரா மரணம்
வரக் காத்திருக்குமோ??

வலிக்கு வலி வரும் நேரம்
இறைவனும் உணர்வானா அதை?
வழிந்தோடும் கண்ணீர் மாற்ற
விரைந்தோடி வருவானா ?நினை!

Wednesday, September 5, 2007

யாதும் வீணே

தான்
வண்ணத்துப் பூச்சியென
மயங்கித்திரிந்தது
சிறகொடிந்த விட்டில் பூச்சி!
பொழுது போகா விஷ(ம)ப்பூச்சிகள்
விசிறி விட்டன
அவ்வெண்ணமதை !
காயங்களை விழுப்புண்ணெனக்
கர்வத்துடன் நோக்கி .....
கண்ணாடிகதவுக்கப்பால்
கசியும் நிலவொளியை ,
சேரத்துடித்தது
சிறகொடிந்த விட்டில் பூச்சி!!
விட்டில் பிறந்தது
வீழ்வத்ற்கென
விதியை எழுதிய
விண்ணவன் சிரித்தான்
மனதோடு!
சற்றும் மனம் தளரா
முயற்சியொடு,
முட்டாள் விட்டில் பூச்சி!!

Saturday, September 1, 2007

இன்று

அன்று!
கண்ணிலே கனவு!
மங்கலாய் மனவெளியில்;
கனவெனினும்,
ஆழ் மன பெட்டகத்தில்
பூட்டிய நினைவு!
காலசுழற்சியில்
கனவுகள்! கனவுகள்!
ஆசைகளின் கூப்பாடுகள்!
நிதர்சனம் உரைத்தது
கனவு கனவுதானென்று!
நடைமுறை முரண்கள்
கனவினை கொல்லும்!
கல்லறைக் கனவுகள்
எனக் கற்றுத்தெளியும் நேரம்
சட்டென ஒரு கனவுப் பூ!
மனமெல்லாம் பூ வாசம்!
மூடிய கதவின்
மறுபக்கம்
நிலவொளியாய்
சிறு ஜன்னல்!
நனவாகும் கனவின்
வாயிற்படியில் நான்!!!

Saturday, August 11, 2007

ரங்கோலி

Wednesday, July 25, 2007

விட்டுக்கொடுத்தல்

'தான்' என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை.
உண்மை! சிறிது நகைச்சுவையாகக் கூறினால், குழம்பிய வாழ்க்கைலிருந்து தானை எடுத்துவிட்டால் அது ரச்மாகிவிடும்.
தான் என்ற எண்ணம் தலை தூக்கும் இடங்கள் தான் எத்தனை எத்தனை?
வேலை செய்யும் இடமாகட்டும், மாமியார் மருமகள் உறவிலாகட்டும்,க்ணவன் மனைவி இடத்தே ஆகட்டும்... இங்கெல்லாம் உறவு முறை கெடுவதற்கு இந்த எண்ணமே காரணம்.
நண்பர்கள் இடையே பிரிவு ஏற்படுவதும் இந்த எண்ணதினால் தான்.
இன்றிருப்போர் நாளை இருப்பதில்லை என்றிருக்க நம்முள் ஏன் இந்த தலைக்கனம்?விட்டுக்கொடுத்தால் வேதனை இல்லை.
வேதனை இல்லா வாழ்வு சோதனை ஆகாது.
விட்டு கொடுத்தலில் நாம் இழப்பது ஒன்றுமில்லை.
அடைவது தான் நிறைய .
நம் உறவை பலப்படுத்துகிறோம்,நண்பர்களை உறவாக்கிக் கொள்கிறோம்.
பகைமையை விரட்டுகிறோம்.
ஆக விட்டு கொடுத்தலில் விவேகம் உண்டு.
வாழ்க்கையை வளமாக்கும் வழியும் உண்டு.
ஒரு மாறுதலுக்காக அடுத்த முறை 'தான்' என்ற எண்ணம் தலைதூக்கும் போது சிறிது விட்டு கொடுத்து பார்க்கலாமா?
சந்தோஷக் காற்று சூழட்டும்.
நட்புடன்
தோழி பத்மா

வணக்கம்.


வணக்கம்.
தமிழில் மட்டுமே எழுத காகித ஓடம்.
கடலில் போனாலும்
கவிழாத ஓடமாய் நம் வாழ்வு விளங்க வேண்டும்
என்பதே என் பிரார்த்தனை.
இந்த இறைஞ்சலுடன்
முதலடி வைக்கும்
என் எண்ண பிதற்றலுக்கு
வண்ணம் சேர்க்கும் விதமாய்
நண்பர்களின் வருகை இருக்கும்
என நம்புகிறேன்.
வந்து வாழ்த்துங்கள்.

.......பத்மா