Thursday, November 14, 2013

திரு ராஜசுந்தரராஜன் சார் அவர்களின் என் நூலைக் குறித்த மதிப்புரை. நன்றி சார்.

                                நாய்க்குடைகள் மலர்ந்த கொல்லை


கவிதை எழுதுகிறோம், வாசிக்கிறோம்; அதனால் என்ன பயன்? தொலைக்காட்சித் தொடர்களாற் பொழுது போக்குவதை ஒப்பிட, கவிதைப் பரிபாடிகளினால் வந்து கூடும் ஆக்கப்பேறு என்ன?

புரிதல், புரிந்துகொள்ளுதல்,
இந்த இரண்டு தண்டவாளங்களின்
நடுவே
நகர்கிறது நம் நட்பு...

என்கிறார், “புரிதல்” என்னும் கவிதையில் கவிஞர் பத்மா. முதற் சொல் ‘புரியத்தருதல்’ என்று வந்திருக்க வேண்டுமோ என மண்டையைக் குழப்பிக்கொண்டேன். ஆனால், “துல்லியம் நிறுத்து எழுதாக் காலையும் உள்ளுறை உணர்த்துவ கவிஞர் வாய்ச்சொல்” என்னும் தன்னறிவினால், ‘புரிதல்’ வேறு என்னென்ன பொருள் தரும் என்று, அகரமுதலியைக் கலந்தேன்: புரிதல் = முறுக்குதல், ஆக்குதல், பொருந்துதல், மேவி ஆராய்தல், மனம் விரும்புதல் என்றெல்லாம் புரியக் கிடந்தது. ‘ஆக்குதல்’ என்னும் பொருள் தேர்ந்து வாசித்துப் புரிந்துகொண்டேன். அதாவது, என் வாசிப்பில், ‘புரிதல்’ = செயல்பாடு என்றும், புரிந்துகொள்ளுதல் = உள்ளுறை அல்லது மனக்கிடை உணர்தல் என்றும் பொருள்பெற்றன. இங்கே, கவிதை புரிதலுக்கு (யாத்தலுக்கு) அப்பாற் பட்டதாகக் கவிதை வாசித்தல் (புரிந்துகொள்ளுதல்) கட்டுமானிக்கப் படுவதைக் கவனிக்க!

உலகமயமாக்கலினால் ஊதியம் இன்னின்ன என்று, வானொலித் தொகுப்பாளினி ஒரு பட்டியல் இட்டாள். மறுத்துப் பேசிய மறுமுனை ஒருவர், மட்டைப் பந்தாட்டத்து இந்திய உட்குழுக்கள் பன்னாட்டினராலும் இயன்றவை ஆயினும், தமிழ்நாட்டினராகிய நாம், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ வென்றாக வேண்டும் என்றே விரும்புகிறோம். இதே உணர்வுதான் தேசிய எல்லைகளாலும் நம்மைப் பீடிக்கிறது. பாதுகாப்புக்காகச் செலவுசெய்கிற பணத்தை ஆக்கப் பணிகளுக்குத் திருப்பினால், இவ்வளவு நலிவு நம்மிடையே இருக்க வாய்ப்பில்லை; ஆனால் அது ஒருபோதும் நடக்காது என்பதே நடைமுறை என்றார். அதாவது, ‘நாய் பூனை எலி கூடி அணி கோர்த்தாலும் ஓயாதே வரப்பு வாய்க்காற் சண்டை’ என்கிறார்.   

பிரிவினைப் பொருத்தின் பன்மைத் தன்மையாற் பாகம்பட்டதே சமுதாயம். பல இனக்குழுக்களின் பல சமய வழிபாடுகளின் கூட்டுக் கலவை அது. ஒரே இனக்குழுவின் ஒரே சமயத்தினரிடையே கூட வேறுவேறு கொள்கைகள் தறிகெடக் கூடும் - யானைக்கு நாமம் தெற்கா வடக்கா என்பது போல.

வேண்டாம் என அறிவு மாற்றி வைக்க,
வேண்டும் என இதயம் இரங்கி நிற்க,
ஆம் இல்லை என மனம் பிரித்துப் பேச,
தேடலின் விடையாய்
...
என் சிரிப்பின் விலையாய்
...
அருகிலேயே இருப்பினும்

நெடுந்தூரப் புள்ளியாய் நீ

இவை கவிஞரின் “புரிந்ததா?” என்னும் கவிதையின் வரிகள். தொலைக்காட்சித் தொடர்களிற் போல, ‘இன்னார் ஆளுக்கு இன்னாரோடு இது’ என்று முடிச்சுப் போட்டு அவிழ்ப்பது இல்லை கவிதை. இடைநிலை விண்ணக மயன்வினை அது. உவமித்தல் வழி, உள்ளதை உணர்த்துவது.

அறியக் கிட்டுகிற உலகம் கட்டுமானிக்கப் பட்ட ஒன்று என்று புத்த பெருமான் சொல்லிச் சென்றதின் பின்னும், ஆயிரக் கணக்கில் ஆண்டுகள் அலைவுண்டு, இன்றுதான் கண்டதே போலப் ‘பின்நவீனத்துவம்’ என்று பெயரிட்டுப் பேசுகிறோம். வேறுவேறு கடவுள்கள், வேதங்கள், சைத்தான்கள் உட்பட, இவ்வுலகம் கட்டுமானிக்கப் பட்டதாகவே வந்திருக்கிறது. கவிதையும் கூடக் கட்டுமானிக்கப் பட்ட ஒன்றே. கவிதை வாசிப்பும் அப்படியே. ஆனால் அதன் இலக்கு, எங்கெப்போதும், கட்டுக்குள் சிக்காதது.

சிறிது மூடியிருந்த
கதவின் இடையில்

தெரிந்த
உன் பாதங்களுக்கேற்ற
முகத்தை
நான் மனதில்
வரைந்து விட்டேன்
.
வரைந்த அது

சிதையப் போகிறது

தயவு செய்து

என் கண்படாமல் போ நீ!

‘அறிந்த உண்மை கட்டுமானிக்கப் பட்டது’ என்னும் கருத்தினை மறுத்து, 1) ‘அது செய்முறை ஆய்வு கொண்டு நிறுவப் பட்டது’ என்றும்; 2) ‘அது தொன்றுதொட்டு மரபுவழி வகுக்கப் பட்டது’ என்றும்; 3) ‘அது உள்ளுணர்வோடும் இயற்கையோடும் ஒருங்குபட்டது’ என்றும் கருத்து வேறுபடுவார் உளர்.

இவர்களில், அறிவியற்-படிவரைக் கொள்கையரும் சமய-மரபியற் கொள்கையரும் ‘பரிணாமம்’, ‘படைப்பு’ என்பதில் அல்லால் பாரியதாக மாறுபடுபவர் அல்லர். எனவே  இவர்களுக்கு உண்மை என்பது ‘ஆகி வந்தது’ அல்லது ‘ஆக்கித் தரப்பட்டது’ அவ்வளவே. உள்ளுணர்வு-இயற்கைக் கொள்கையர் தமக்கோ உண்மை என்பது பின்நவீனத்துவக் கூற்றொப்பவே கட்டுமானிக்கப் பட்டது, ஆனால் தொன்மைக்குள் வேர் மீள நீட்டி ஈரந் துழப்பது.

இருவரிகட்கிடை உறை 
பொருளறியாதவன் வெறும் 
வார்த்தைகளை மட்டுமே வாசிக்கிறான்.  (“யாருக்கும் புரியாக் கவிதை”)

கட்டுமானிக்கப் பட்டதே கவிதை என்றாலும், கட்டுமானிக்கப் படாததை இலக்கு எனத் தேர்வதால், மேலே சொன்ன கொள்கைகளில், உள்ளுணர்வு-இயற்கைக் கொள்கையொடு ஒருங்குபடுவதே கவிஞர்தம் இயல்பு. ஆனால் அம்மட்டோடு அமையாமல், அறிவியலோடும் மரபினோடும் கூடிப் ‘புரிதல்’ கொள்வதும் அவர்தம் பண்பாடு. ஆக, ‘படைக்கப் படா’ததை ‘பரிணமிக்கப் பெறா’ததை எய்தவே கவிதைள் எழுதுகிறோம்; வாசிக்கிறோம். தொலைக்காட்சித் தொடர் போலப் பொழுதுக்கொலை புரிவதற்காக அல்ல. (ஓ! இத்துணை செறிஇயைவுச் செயல்பாடா கவிதைத் தொழில்!!!)  

  •  

பத்மஜா என்கிற கவிஞர் பத்மாவை, பா.ராஜாராம் அவர்களின் புதல்வி, மகாவின் திருமண விழாவில் சிவகங்கை வந்திருக்கக் கண்டேன். “என் கவிதைகளை வாசித்து இருக்கிறீர்களா?” என என்னை வினவினார். “இல்லையேம்மா,” என்று உண்மையால் குறுகினேன். “அப்படிச் சிறப்பாக ஒன்றும் இருக்காது. நேரம் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்!” என்று அவரும் அவையடக்கம் காண்பித்தார்.

சென்னை திரும்பியதும் அவரது வலைத்தளத்தைத் திறந்து நான் வாசித்த முதற் கவிதை (உண்மையில் அது ஒரு பாட்டு), “கண்ணா!!". என் பதின்ம வயதுகளில் நானும் சந்தக் கவிதைகள் எழுதிக் கிழித்தவன் என்கிற வாசனை காரணமாகலாம், “கண்ணா!!” எனக்குப் பிடித்துப் போயிற்று. அதை அடுத்து நான் வாசித்தவை எல்லாம் காதற் கவிதைகள். நவீனத்துவக் காலகட்டத்தில் கவிதை எழுதிப் புத்தகம் போட்ட எங்களில் யாரும் அவ்வளவாகக் காதற் கவிதைகள் எழுதியதில்லை. அப்படியே எழுதியிருந்தாலும் அதற்குள் ஓர் இறுக்கம், வறட்சி காய்ப்புக்கண்டு வாசிப்பவரை உணக்கக் கூடும். அப்படி அல்லாமல் கவிஞர் பத்மாவின் காதற் கவிதைகள் புதுவனவாக, எளியனவாக, மூளையோடு அல்லாமல் உள்ளத்தோடு மொழிவனவாக இருந்தன.

இவ் வார்த்தை விளையாட்டில்
நாமறியாமல் ஈடுபட்டு

வார்த்தைகள் தேடிக்கொண்டே

கண்களால்
கதைக்கிறோம் நாம்      (“வார்த்தை விளையாட்டு”)

என்று கவிதையின் மிடையம் (மிடைதல் > முடைதல் = ஊடு பாவிக் கட்டுதல்) ஆகிய வார்த்தைகளின் வழியேதானே வார்த்தைகளைக் கழித்துக்கட்டக் கண்டேன். மட்டுமல்ல, இந்தக் கழித்தல் வினை, ஒப்பனை வார்த்தைகளால் கவிதைக்கு முகப்படாம் சார்த்துவாரோ என்று எனக்கிருந்த அச்சத்தையும் போக்கியது. ஆனால், வாசித்து மேற்செல்லுகையில்,

டெக்டொனிக் தகடாய்
தடுமாறும் மன அணுமயக்கம்
சிறு பொறி காட்டுத்தீ

ஸ்பரிச மின்னல்
காலம் அழிந்து
விண்வெளி அணுக

நிலம் நோக்கி

வியர்வைக் கடல்.   (“தீங்குளிர்”)

என்னும் ஒரு கவிதை கண்டு, உண்மையில், வெருண்டு போனேன். ஏனென்றால் இது நவீனத்துவ காலத்துப் படிம இறுகல். பின்நவீனத்துவ காலத்துக்குப் பிந்திய ஒரு பெண்பாற் கவிஞரிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இவரிடம் நான் எதிர்பார்த்தது என்னவென்றால் காமர்விதந்தோதல் (romanticism). ஆனால், நல்ல வேளை, இப்படி ஒன்றிரண்டு இறுகல்தான் இத் தொகுப்பில் உள்ளன.

கொன்ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
எம்இல் அயலது ஏழில் உம்பர்
மயில்அடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே (குறுந். 138) 

கொல்லன் அழிசி எழுதிய இக் கவிதையின் இலக்கு, தனிமை அல்லது தாபம் அல்லது வீழ்ச்சி அல்லது வேறு ஏதோ...

(‘நொச்சி’ என்பது, சூலுறுப்புக் கோளாறுகளை நீக்கவும் பால்வளம் பெருக்கவும் பயன்தரும் ஒரு மருத்துவத் தாவரம். இதனை உட்கொண்டால், பெண்ணுக்கு இச்சைத் தூண்டலும் ஆணுக்கு மட்டுப்படுத்தலும் விளைவு வரும். அதாவது முழுக்கமுழுக்கப் பெண்தன்மைப் பெற்றியுள்ள தாவரம் இது. ‘கொன்’ என்பதற்கு, வீண், பெரிய, கொலை என்றெல்லாம் பொருள். ‘துஞ்சு’ என்பதற்கு, மடிதல் என்றும் பொருள். ‘ஏழில்’ என்பதற்கு, நன்னனது மலை, ஏழு ஸ்வரம், ஏழிலைப் பாலை (பேய் குடியிருப்பதாக நம்பப்படும் மரம்) என்றெல்லாம் பொருள். ‘மயில்அடி’ - இதை உணர்த்தவே முப்பிரிவு-இலைக் கருநொச்சியைச் சொன்னார் ஆகலாம். மயிற் புணர்ச்சியோ அலட்டலும் கூச்சலும் நிறைந்தது. ‘ஊழ்த்தல்’ என்பதற்கு, முதிர்தல், பதனழிதல், உதிர்தல், சொரிதல் என்றெல்லாம் பொருள். ‘பாடு’ என்பதற்கு, உலகவொழுக்கம், ஓசை, முறிதல், வீழ்தல், துயில் என்று பொருள்.)

பூ உதிரும் சத்தம் ஒருத்திக்குக் கேட்கிறதா? அதுவும் எட்டுக் கட்டையில் (ஏழில் உம்பர்) உரத்துக் கேட்கிறதா? என்றால், அது எப்பேர்ப்பட்ட தனிமை! இப்படித்தான் பொருள் புரிந்து வந்திருக்கிறோம். தப்பில்லை. ஆனால், விரகம், விரக்தி, நாயகி-பாவம் என்றெல்லாம் விரிந்தாழும் இதன் பரிமாணங்கள்...!!!

இருக்கட்டும், அதனால் என்ன பயன்?

கொல்லன் அழிசி படைத்த அவளுக்கு நேராததா உனக்கு நேர்ந்துவிட்டது? பொத்து! ‘யாம் துஞ்சலமே’ என்பதற்கு, “இவ்வளவுக்குப் பிறகும் நான் மடியவில்லை பார்!” என்று நேர்முறைப் பொருள்கொண்டு வாழ்க்கையை நேரிடு!


சிலந்தியின் வலை பின்னும் ஓசையும்
மரண ஒலியாய்...                  (“பொழுதோட்டல்”)

அந்த ஓட்டைக் குழாயின் நீர்சொட்டும் ஒலியில்
நாள் தவறாது உனது பெயர்.
எப்படித் தூங்குவேன் நான்?         (“எப்படி இயலும்?”)

என்று அதே தனிமை, விரக்திக்கு ஒலியைப் பெரிதுகேட்டுத் தொல்லைப்படும் ஒருவராய்க் கவிஞர் பத்மாவும். இது ‘நகல்’ எடுத்தலா என்றால், அப்படி எல்லாம் இல்லை. அவரதும் இவரதும் முதல்/கருப் பொருட்கள் (settings) வேறு வேறு. பிறகும், “சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்/ சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்” என்று பாரதியும் சொல்லியிருக்கக் காண்கிறோம். {||சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்/ சொல்லிய வண்ணம் செயல்|| - (குறள் 664)}

If there were the sound of water only
Not the cicada
And dry grass singing
But sound of water over a rock
Where the hermit-thrush sings in the pine trees
Drip drop drip drop drop drop drop 
But there is no water                 (“The Wasteland”)
  
என்று இன்மையை ஒலிக்குறிப்புகளால் கட்டமைக்கிறார் டி. எஸ். எலியட்டும். இது நம் மரபு. அவ்வளவுதான்.

கொள்கை சார்ந்து எழுதுபவர்கள் கூட, கவிஞர்கள் ஆகிற போது பிரிவினைப் பொருத்துகளுக்கு மேலாகி, வாசிக்கிற நம்மையும் கட்டுமானத்துக்கு அப்பாற்பட்டதை உணர ஆற்றுகிறார்கள். பிளாட்டோ எழுதிய “தெவ்வழக்குகள்” (“Dialogues”) வாசிக்கையில், சாக்ரெட்டீஸால் வினவப்பட்டு எவராலும் வரைவிலக்கணம் காணமுடியாத உண்மைகள் பல உள்ளதை அறிந்திருப்பீர்கள். அவ் உண்மைகள் பால் ஆற்றுப்படுத்துவதே காலதேசமாகக் கவிஞர்தம் பணி. 

உன்னை முதல் முதலாய் பார்த்த போது
எச்சில் பறக்க விசிலடித்து

இல்லாத பேருந்தை ஓட்டிய சிறுவனின் பயணியாய்

சீட்டு வாங்கிக்கொண்டு இருந்தாய்;
இறங்குமிடம் வந்ததும்
அந்த ஓட்டுனர் மல்யுத்த வீரனாக,
அவனிடம் அடி வாங்கி தோற்றுபோய்
கைகால் வான் நோக்கி
விட்டுவிட கதறியபடி இருந்தாய்;
இந்த விளையாட்டுக்கெல்லாம் வராத
எனக்குமட்டும்
எப்படி ஒரு பரிசாய்
அந்தப் புன்னகையைத் தந்தாய்?
இப்போது நானும்

இல்லாத இராட்டினத்தில்..
சுற்றும் ஒரு சிறுமியாய்!        (“சிறுமியானேன்!”)


இதுதான் கவிஞர் பத்மா. அனுபவம்; காட்சி; காண்பவர் தம்மில் வரும் மாற்றம். அம் மாற்றமும் வெள்ளந்தியான ஒன்று. ‘பிரச்சனைகளை நேர்கொள்ளாமல் தப்பித்தலா இது?’ என்று அவரை நேரிட நேர்ந்த சில சந்தர்ப்பங்களை வைத்து யோசித்தேன். கண்டதோ, ஆனால்,  
அவளழுத அந்த 
மழை நின்ற மாலையில் தான்
கொல்லை முழுக்க 
நாய்க் குடைகள் 
மலர்ந்து நின்றன..
                                                              
அவளைப் போலவே!

-     ராஜசுந்தரராஜன்
சென்னை
ஏப்ரல், 2012