Sunday, August 25, 2019

ஆட்டிஸம்-----பேச ஆரம்பித்தல் (autism poem #1


ஆட்டிஸம்-----பேச ஆரம்பித்தல்
============================
டையானா அன்ஃபிமியாடி (Diana Anphimiadi )
ஆங்கிலத்தில் ஜீன் ஸ்பார்க்லாண்ட்
தமிழில் பத்மஜா நாராயணன்.

கம்பிகளில் தொத்திக் கொண்டிருந்த பாடல்கள்
ஒவ்வொன்றாக இறக்கத் தொடங்கின
கைகளால் காதுகளைப் பொத்திக்கொண்டு
நான் யார் என்பதற்கான
ஒரு வார்த்தையின் பிறப்பை
செவிமடுக்க ஆரம்பித்தேன்.
பளீச்சென்ற கிளியைப் பிடிக்கத்
திறந்தே இருக்கும் கூண்டுகளைப்போல
என் கண்களைவைத்துக் கொண்டு
எனக்குள் இருக்கும் உலகைப் பிடிக்க
நடை பயில்கிறேன்
மூன்றடிகள் முன்னோக்கி
மூன்றடிகள் பின்னோக்கி
திரும்பத் திரும்ப நடக்கிறேன்.
என் பாதையினால் உலகைச் சுற்ற விழைகிறேன்.
சுற்றிச்சுற்றி வருகிறேன்
எடையற்று மேலெழும்பி கீழே விழுகிறேன்.
அம்மாவின் திரைச்சீலைகளைப் போல்
மேகங்கள் ஈரமாகவும் மென்மையாகவும் உள்ளன.
என் வாயில் ஒரு புளிப்புச் சுவை உள்ளது

படுக்கைக்கு அருகிருக்கும் ஒரு விளக்கு போல நிற்கிறேன்
இதமான கைகளின் வன்முறையான தொடுதலின் போதோ
கூர்மையாக நோக்கும் அன்பான பார்வையினாலோ
ஒரு துப்பாக்கி பின்நகர்வது போல் பின்னிடுகிறேன்
அதிர்ச்சியடைந்த காகங்களைப் போல்
வார்த்தைகள் வானத்தில் கிரீச்சிடுகின்றன
அமைதி!போதும்
வார்த்தை ஒன்றை கயிற்றால் சுருக்கிட்டு
என் தலையின் மீதும்
தலைக்குள்ளும் பிடித்து இழுக்கிறேன்
மொத்த வானமும் விழுகிறது
தொலைபேசி கம்பங்களில்
காக்கைகளின் இசையை எழுதத் தொடங்குகிறேன்
சாதாரண வார்த்தைகள் என்
வாயுனுள் கிரீச்சிடுகிறன
அவற்றுடன் இயைந்து
துணைநின்று
அவற்றை சிக்கலாக்குகிறேன்!

(Diana Anphimiadi is a poet, publicist, linguist and teacher. Currently a doctoral student at the linguistic institute at the Tbilisi Javahkishvili University, Diana has published four collections of poetry, Shokoladi(Chocolate 2008), Konspecturi Mitologia(Resumé of Mythology, 2009), Alhlokhedvis Traektoria (Trajectory of the Short-Sighted, 2012 and Kulinaria (Personal Cuisine, 2013.)