Tuesday, March 30, 2010

நீயாகும் நான்

நான் விரைவில் நானற்று போவேன்
போகும் முன்னேயாவது நம் சந்திப்பை எனக்கு பரிசளிப்பாயா ?

உன் கண்ணிலிருந்து புறப்படும் ஒளிக்கீற்று என் கழுத்தை சுவாசித்து   அக்கணத்தை நிறுத்த செய்யட்டும் ,

நான் நானற்று போகும் நேரம் உன் ஒற்றை விரல் தீண்டலின் ஸ்பரிசம்  மட்டும் என் கண்ணுக்குள் அடைந்து சிறை படட்டும்

நீ எனக்கு தர நினைக்கும் சின்ன  முத்தம் ஒரு சிவப்பு அரளியாய் என் மீது வாசம் வீசட்டும்

சிறு நகக்கீறலில்  எழும் குருதி காலை நனைத்து வழித்தடமாய் ஆகட்டும்

என் கருவம் ஆளுமை சிந்தனை செயல் எல்லாம் நீ புகுந்து நான் நீயாக மாறட்டும் 

உன்னை என்னிலே கொண்டு நானாகத் திரிவேன் நான்

Sunday, March 28, 2010

நட்சத்திரதினுடனான பேச்சு மற்றும் விருது பகிர்தல்

அந்த ஒற்றை நட்சத்திரம் ரொம்ப நாளாக ஏதோ ஒன்றை  சொல்ல வேண்டும் என மினுக்கிக்கொண்டே இருந்தது
நானும் அதை பார்த்து பார்த்து பேச எத்தனித்துக்கொண்டே  இருந்தேன்
இன்று உறுதியாய் சொல்லிவிடும் என்று மரத்துடன் உரச  வந்த காற்று காதில் சொல்லிவிட்டு போனது
சொல்லிவிடு  சொல்லிவிடு என நான் கதறியது மேகம்வழி அது கேட்டிருக்கக்கூடும்
விர்ரென புறப்பட்டு என்னை நோக்கி வரும்வழி எங்கோ வீழ்ந்துவிட்டது
இப்போது அது கடலலையில் சிதறும் நிலவொளியாக மீண்டும் எதோ சொல்ல நினைக்கிறது
அந்த ஒற்றை நட்சத்திரம் மட்டும் எங்கு தேடியும் காணவில்லை
       
.......பத்மா
***********************************************************************************


  எனக்கு ஜெய்லானி அளித்த விருதை பின் வரும்    வலைப்பக்கங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன்

 • அடர்கருப்பு
 • அன்புடன் அருணா
 • ஆதிரன்
 • உழவனின் உளறல்கள்
 • என்மனதில் இருந்து பிரியா
 • கிறுக்கல்கள்
 • முகுந்தம்மா
 • ராகவன்
 • ரிஷபன்
 • அன்புடன் நான்
 • அப்பாவி தங்கமணி
 • தமிழ் உதயம்
 • தனிமையின் சுகம்
 • ஒருமை
 • கடுகு தாளிப்பு
 • மதுரை சரவணன்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Thursday, March 25, 2010

மொழிபெயர்ப்பும், ஜமுனாராணியும்

இது என் ஐம்பதாவது இடுகை 


        இன்று மட்டும் பார்த்து மகிழ ஜமுனா  
26.03.2010 
நான் மிகவும் வியந்து படிக்கும் வலைப்பூவின் சொந்தக்காரர் ஆதிரன் அவர்கட்க்கு இன்று பிறந்த நாள் .
சிறிய பிறந்த நாள் பரிசாக அவருடைய வரிக்கவிதையை மொழிமாற்றம் செய்திருக்கிறேன் .
ஆங்கிலத்தில் கட்டுப்படாத வீச்சு அவர் சொற்களுக்கு .எதோ சிறிது முயன்றிருக்கிறேன் .
மொழிபெயர்ப்பு முதல் முயற்சி .கருத்தூட்டவும் .

அன்பு நண்ப இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  

இதோ அந்த மொழிபெயர்ப்பு

Oh you gifted me a pregnant night
On the advent of an interrupted day.
Its  weight  pulls  my legs
Deep down to the earth.
Take back those moments ,or lend me your shoulders to carry for ever 
Let me seek a  respite .
Look yonder ,the girl is begging for a sheet of paper
For  the running rivulets yearn for a paper boat .. 
offer me a minute
to shift the night, laden with dense memories, for a while
as  i feel around for a piece of paper .
And if I can load this night and propel it to time
On that boat of hers
I shall come running to you the next instant
To gift a dark, charming, silky, and breezy night to u.


இதோஅவருடைய அந்த வரிக்கவிதை

இடைமறித்த பகலொன்றின் துவக்கத்தில் ஒரு கொழுத்த இரவை எனக்கு பரிசளித்தாய்
அதன் பாரம் தாங்கமாட்டாமல் என் கால்கள் பூமியுள் புதைகின்றன
ஒவ்வொரு கணத்திலும் திரும்ப பெற்றுவிடு அந்த இரவை அல்லது தொடர்ந்து சுமக்க உன் தோள் கொடு அல்லது ஒரு சிறிய இளைப்பாறல் போதும்
பார் அந்த சிறுமி என்னிடம் ஒரு காகிதம்
கேட்கிறாள்.
தெருவெங்கும் மழையோடையாம் கப்பலுக்கு ஏங்குகிறதாம் நீர்
அடர்நினைவினாலான அவ்விரவினை சற்று இறக்கி வைத்துவிட்டு ஒரு காகிதத்தை துலாவி எடுத்துக்கொடுக்கும் நேரத்தை மட்டும் எனக்கு அளி.
ஒரு வேளை அவள் செய்யும் கப்பலில் அந்த இரவை சரக்காக்கி காலத்துக்கு ஏற்றுமதி செய்துவிட ஏலுமானால் மறுகணமே உன்னிடம் வருவேன்
ஒரு இனிய மிருதுவான குளிர் வீசும் மிளிர்கரும் இரவொன்றை உனக்கு
பரிசளிக்க.
*************

Tuesday, March 23, 2010

மாட்டிகிட்டோம்

இது நெஜம்மா நடந்தது. ஒங்கள்ள யாருக்கும் இது நடந்து இருக்கலாம் ஏற்கனவே படிச்சா மாதிரி இருந்துதுன்னா திட்டாம போங்க .
கல்லூரில நாங்க மூணு பேர் ரொம்ப குறும்பு ன்னு பேர் வாங்கினவங்க ,படிப்பதிலும் கொஞ்சம் புலியாய் இருப்போம் ,:)).அதனால எங்கள பாத்தா கொஞ்சம் ஆசிரியர்களுக்கு கிலி தான் ,
இதுங்க கிட்ட மாட்டிகிட்டு லொள்ளுபடரதான்னு எங்க வழிக்கே வர மாட்டாங்க .
இப்படி  தான் ஒரு நாள் செம மழை .சாதாரண நாள்லேயே  கிளாஸ்ல
பதினைந்து நிமிஷத்துக்கு மேல இருக்க முடியாது .மழைபெய்யும் போது முடியுமா? எதோ காரணம் சொல்லி வெளிய வந்துட்டோம் .மாடியிலிருந்து மழையில் நனைந்து   கொண்டே ஒருத்தர் ஒருத்தராய் கீழே வெட்டியாய் போனோம் .மாடிப்படி வளைவில் என் தோழி கால் தடுக்கி விழ போனாள்.என் இடி மாதிரி   குரல்ல" ஏய் பாத்துடி வழுக்க போவுதுன்னு" நா கத்தினது ராகு காலம் போல .அந்த சமயம் பாத்தா எங்கத்துறை தலைவர் அங்க கிராஸ் பண்ணனும்? பாவம் அவர் தலைல முடியே கிடையாது .
இப்பிடி கத்தினது அவர தான்னு எங்கள கூப்பிட்டு வச்சு அவர் பண்ணின அளப்பர    இருக்கே !!
ஒங்கள நாங்க வழுக்கைன்னு  சொல்லல சார்ன்னு சொன்னா கேட்டாதானே ?அவர் கொடுத்த டோஸ்ல ஒரு ரெண்டு மணி நேரம் நாங்க கப்சிப்.
இப்பவும் யாராவது பாத்து வழுக்க போவுதுன்னு சொன்னா கொஞ்சம் அங்க இங்க பாத்துப்பேன் .
குறும்பு இருந்தாலும் நிச்சயமா தோற்றம் பத்தி நாங்க கமெண்ட் அடிக்க மாட்டோம்ங்க
செஞ்ச தப்புலலாம் தப்பிச்சுட்டு செய்யாததுல மாட்டி "ஞே" ன்னு முழிச்சோம் பாருங்க அதான் விதி

Sunday, March 21, 2010

மாறும் !

என்னைச்  சுற்றிய  கூட்டில்
நானே அடைந்த சிறையில் இனி ........

இடைவிடாது தின்ற இரையை
இப்போது தான் உடல் செரிக்கலாம்

தூங்காது நெளிந்த பொழுதெலாம் சேர்த்து
விழிக்காமலே கண் உறங்கலாம்

தூரத்து நிறுத்திய சுற்றெலாம்
வரும் கனவிலே கண்டு சபிக்கலாம்

வேண்டாது வளர்ந்த தோலினை
வண்ணம் மாறவே உதிர்க்கலாம்

சிந்தாத கண்ணீரெலாம் சிந்தி
சிறிது மனதினை வெளுக்கலாம்

பிறர் வெறுப்பிலே விளை வேதனை மறந்து
களிப்பிலே கொஞ்சம் ஆழலாம்

பிறப்பிலே ஒரு காரணம் வைத்த
கடவுளைக்காண  செல்லலாம்

அவன் கனவிலே எனை கண்டு கொஞ்சி
கைவிரல் கொண்டு வருடலாம்

உடன் பூவினை தேடிச்சுவைக்க
முதுகிலே சிறகு முளைக்கலாம்

பின் விலங்குகள் உடையலாம்
உடலுமே நீளலாம், பல வண்ணமும் சேரலாம்

நாளை சூரியன் வான் நடக்கும் நேரம்
சிறிது காற்றையும் சுவைக்கலாம்

என் பெயரும் மாறி போகலாம்

Thursday, March 18, 2010

மாட்டு வைத்தியம்

மார்ச் மாசம் இயர் எண்டிங் .வழக்கம் போல செம வேலை .பதினைந்தாம்  தேதி அட்வான்ஸ் டாக்ஸ் கும்பலை பாதி ஏறக்கட்டிவிட்டு வழக்கம் போல இரண்டரை மணிக்கு சாப்பிட உட்காரும் போது வலது கையை தூக்க கூட இயலாத அளவுக்கு வலி .
லஞ்ச் ரூமில், கடைசி நிமிடம் வரை காத்து நம் உயிர் வாங்கும் ஆசாமிகளை திட்டிக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தோம்.
அப்போது அருந்த தண்ணி கொண்டுவந்து கொடுத்த  லக்ஷ்மியிடம்
"லக்ஷ்மி இந்த கைவலிக்கு எதாவது மாத்திரை வாங்கிட்டு வாங்களேன்"னுசொன்னேன் .
அவங்க  "ஏன் மேடம் என்கிட்டே ஒரு மருந்து இருக்கு என்  மருமகன் வாங்கிதந்தாரு சாப்பிட்டு வாங்க கொஞ்சம் போட்டு விடறேன் .எனக்கு நல்லா வலி கேக்குதுன்னு" சொன்னங்க .
ரொம்ப நல்லதா போச்சுன்னு வேகவேகமா சாப்பிட்டு (முப்பது நிமிடம் தான் லஞ்ச் ப்ரேக்)வந்தபோது லக்ஷ்மி மருந்துடன் ரெடியாக  இருந்தார்.
"என்ன லக்ஷ்மி வாசம் ஊர தூக்குது?"
"ஆமாம் மேடம் இது ஸ்பெஷல் மருந்துன்னு மருமகன் சொன்னார்ன்னு "
கொஞ்சம் தேய்த்து விட்டார் .
அதற்குள் வாசம் பிடித்து வந்த மற்ற சக ஊழியர்கள் என்ன மருந்து இதுன்னு ஆராய்ச்சி பண்ண ஆரம்பித்தனர்
லக்ஷ்மிக்கு பெருமை தாங்கவில்லை .
அதற்குள் சங்கீதா "அய்யய்யோ மேடம் இதுல நாட் பார் ஹுமன் யுஸ் ன்னு போட்ருக்கே" என எனக்கு பயம் பிடித்துக்கொண்டது .
"லக்ஷ்மி அந்த பாட்டில கொடுங்க பாக்கலாம்" ன்னு படிச்சா மூட்டு வலிக்கானது என்று ஆங்கிலத்தில் இருந்தது .
ஹேய்  மூட்டு வலி தானே போட்டுருக்கு என ஆராய்ச்சியில் இறங்கினோம் .
அதற்குள் ஒரு தோழி "ஏன் லக்ஷ்மி உங்க மருமகன் எங்கேந்து இது வாங்கிட்டு வந்தாராம் ?ன்னு கேக்க
அவங்க
"அது கரெக்டா தெரில மேடம் ஆனா அவர் மாட்டு ஆஸ்பத்ரில வேலை பாக்குறாரு .இந்த மருந்து வலிக்கு நல்லா கேக்குதுன்னு சொன்னோன்ன நாலு பாட்டில் கொண்டு வந்து குடுத்தார் மேடம்" ன்னு சொல்ல .....
எனக்கு தலையும் சேர்த்து சுத்தியது.அது மாட்டின் மூட்டு வலி மருந்து !
சக தோழிகள் செய்த கிண்டலில் எனக்கு கைவலி போயே போச்சு ..நிச்சயமா அந்த மருந்தால இல்ல....... சொன்னா நம்புங்கப்பா !

Wednesday, March 10, 2010

என்னவானோம்?

இரண்டு சோம்பிய முதலைகளாய்
வெளி வெறித்து கிடந்தோம்
வந்து வீழ்ந்தது ஒரு துளி மழை
வாலசைக்க  மறுக்கும் பல்லியாய் உள்வாங்கி உறிஞ்சினோம்
பூமியிலிருந்து மேல் நோக்கி காற்று வெஞ்சினமாய் வீசியது
பறந்து வந்த மணல் உடல் மூடி
நிலத்தோடு சேர்த்து அழுத்தியது
அசையும் அம்மணல் மேடு
நம் பெருமூச்சை உணர்த்திக்கொண்டே இருந்தது .
ஒரு பரவச சிறுவேலையில் உன் கண்ணிலிருந்து
புறப்பட்ட அக்னி என் கண் வந்து சேர
ஹுங்காரத்துடன்  மணல் உதறி பஞ்சபூதமும்
நடுங்கி சிதற
பஞ்சபூதமானோம் நாம்

இருளின் நிறம்

இருளின் நிறத்தைக் கண்டுபிடிக்க முயன்றோம் நாம் அன்று
ஜன்னலின் சிறுதுளையில் நுழைந்த நிலாக்கீற்றைக் கூட அடைத்து
சுற்றிசுற்றி  பார்த்தாய் நீ
நம் நான்கு கண்கள் மட்டும் பளிங்காய் ஒளிர்ந்தன
மூக்குத்தி! என்றாய்
சிறு ஒளியாம் அதனை  கழற்றி  ஒளித்து வைத்தேன்
இருட்டின் நிறம் அருகிவிட்டது
கண்ணுக்குத்தெரியா  கருநீலத்தில் மூழ்கி கிடக்கும் அவ்வமயம்
அறியாது  உன் நகம் என் மீது பட்டதில் கிளர்ந்த பேர் சுடரில்
இருள் சட்டென போயே போய் விட்டது  .
எப்போதாவது  இருளின் நிறம் கண்டுபிடிப்போமா நாம்?

Tuesday, March 9, 2010

நாளை வந்துவிடு நிலா!

பாதி தேய்ந்த நிலவொளி கண்ணில் மிச்சமாய் இருந்தது....
தனியே நம் வீட்டு துணி காயும் கம்பியில் ஊஞ்சலாடும் மரங்கொத்தியின்
வண்ணத்தை இரவு உடை ஆக்கி அணிந்திருந்தேன் .
நம்மை மீண்டும் மீண்டும் காண வந்த கடலலை
வண்ணத்தை எல்லாம் கரைக்க பார்த்தது ,
நீயும்  அதை நண்பனாகிக் கொண்டாய் !
கண்ணில் இருந்த வெளிச்சம் கைகொடுத்து
வண்ணத்திற்கு மாற்றானது
கசிந்து வரும் நிலவொளியை பருகி பருகி
பேய்த் தாகம் கொண்டு  குடித்த நீரினால்                     
கடலும் வற்றி மண்ணில் புதைந்து போனோம் நாம் .
நாளை நிலவு வரும் வரை போதும் இது!

Monday, March 8, 2010

நன்றி !


கருவிலே உருவாக காரணமாயிருந்து
பெண்ணாய் வந்ததால் பேருவுகை கொண்டு
பிஞ்சு காலில் முகம் பதித்து வரவேற்று
பாராட்டி வரும் தந்தைக்கு முதல் நன்றி

நினைவிலே முதல் பிரியமாய்
நாளது வரை கூட  வரும் 
தூணென துணை நிற்கும்
தமையனுக்கு பின் நன்றி

வாழ்விலே காதலை கன்னியெனை
உணரசெய்து
ஆணெனும் அற்புதத்தை அடையச்செய்த
நண்பனாம் கணவருக்கு ஆயிரம் நன்றி

தாயென பெருமை கொள்ள
தரணியிலே வந்துதித்த என்
கண்ணின் மணியான கற்பக மகனுக்கு
காலமெலாம் என் நன்றி

வாழ்க்கை விளையாட்டில் மகிழ்ந்து, துவண்டு ,
வென்று, நின்று ,தோற்று ,மலர்ந்த நேரமெல்லாம்
தந்தையாய் தமையனாய் ஆசானாய் மகனாய் நண்பனாய்
உள்ளம் உவக்க வைத்து
மங்கையென பிறந்ததின் பெருமை அறியச் செய்த
பெண்களல்லா நட்புகெல்லாம்
நன்றி சொல்லி நன்றி சொல்லி என்று ஓய்வேன் நான் ?

Saturday, March 6, 2010

ஒரு முன் மாலைப்பொழுதில்

எது சரியில்லையோ அதுவே சரியாய் போகிறது
அது ஆளரவமற்ற முன் மாலையில்
வராத சிறு தூக்கத்திலிருந்தும்
பெருமூச்சாய் புறப்பட்டு
வேப்பமரத்து உச்சி வெயில் காக்கையின் குரலாய்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது  .
நீளும் நிழலின் உள்சூட்டின் வெப்பம்
வாசல் தெளித்த நீரில் மண்வாசனையாய் எழுகிறது .
சரியில்லாதது சரியாய் தான் போகும் ..
என் கிணற்று நீர் படிந்த ,
உனக்காகவே ரோஜாநிறத்தில்  வண்ணம் பூசிய ,
என் கால் விரல்களை நீ வருடி
உள்ளங்காலில் முத்தமிடும் போது.

Friday, March 5, 2010

அம்மா


இன்னும் சில மாதங்கள் தான்
என தீர்ப்பு வந்த நேரம் ..
ஆயிரம் முறை நீ ஓதிய கடவுள் கூட
தீர்ப்பை மாற்ற விழையவில்லை .
மருத்துவ மனை வராண்டாவில் 
வீழ்ந்து உருண்டு புரண்டு அழவேண்டிய
மனநிலையில் மதிய காட்சிக்கு போனோம்
எல்லாம் சரிதான் என்ற பாவனையில் ..
ஆயிற்று
ஒவ்வொருவராக காண வருகின்றனர்
கடைசியில் உன்னுடன் பேசுவதற்கு
உன் எதிரில் கண்ணீர் விட அஞ்சி
கல்லாய் போனோம் அனைவரும் .
நீ மயக்கத்தில் கண் அசந்த நேரமெல்லாம்
முகம் வெறித்து மார்பு அசைகிறதா என்று விழித்திருந்தோம்
நீயும் நானும் தனித்திருந்த சமயம்
எனக்கு சாகும் வயசா ?ஏன் இப்படி? என்று கேட்ட கேள்விக்கு
என்ன பதில் நான் கூறியிருக்க இயலும் ?
வீடு திரும்பி கார்த்திகைக்கு நீ போட்ட கோலம்
அழியாமல் இருப்பதைக்கண்டு
அதை முத்தமிட்டு உன்னை கூவி அழைப்பதை தவிர ?
அம்மா.