நேற்று மற்றொரு முறை தில்லானாமோகனாம்பாள் பார்க்க நேர்ந்தது .அதிசயமாக தொலைக்காட்சி பெட்டியில் ப்ரௌஸ் செய்யும் போது இந்த படம் ஒளிபரப்பப் பட்டுக்கொண்டிருந்தது ..எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம் என்பதால் சிறிது நேரம் அமர்ந்து பார்த்தேன் .
இந்த படத்தின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடே கிடையாது ..அது வேறு விஷயம். பொசுக்கென்றால் சந்தேகப்படுவதும் ..பின் உணர்வதும் ......ஒரு மனம் ஒப்பிய காதல், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது அல்லவா?...
பிடிக்காதது இருந்தும் சிலது பிடிக்கும் அதற்கு காரணங்கள் தெரியாது .அது போல இந்த படமும்.
அதுபோகட்டும் வடிவைப்பற்றி பேசுவோம் ..
இந்த படத்தில் மிக அழகான உடைகள் அணிந்து கதாநாயகியையும் தூக்கி சாப்பிடுபவர் வடிவாக வாழ்ந்த C K சரஸ்வதி அவர்கள் .
பெண்கள், திரையில் தோன்றும் உடைகளைப் பார்க்காமல் போனால் ஜன்ம சாபல்யம் ஆகுமா? அதிலும் சரஸ்வதி அம்மாள் அணிந்து வரும் நல்ல அழகிய combination இல் பட்டு புடவைகளும், நகைகளும் ஆஹா வென்று சொல்ல வைக்கும் .
அதனால் தானோ என்னவோ எனக்கும் மனதில், அவர்கள் பட்டிலும் தங்கத்திலும் புரள்வார்கள் என்ற எண்ணம் இருந்தது ,அவர்களை நேரில் காணும் வரை....
நான் சென்னை சைதாபேட்டை அலுவலகத்தில் வேலை செய்யும் போது பல திரையுலக பிரபலங்கள் எங்கள் அலுவலகத்திற்கு வருவதுண்டு .போன புதிதில் ஆ வென்று வாய் பிளந்து பார்த்திருக்கிறேன் .பின்பு அவர்களில் சிலர் நண்பர்களாகவே மாறினர்.
ஒரு நாள் என் சக ஊழியை" பத்மா ..அங்க பாருங்க யாருன்னு" !என்று சுட்டிக் காண்பித்தார் .
ஒரு வயதான மூதாட்டி ஒரு கசங்கிய சேலை அணிந்து மிகவும் பாவப்பட்ட நிலையில் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்தார் .'இவர் தான் தில்லானா மோகனம்பாவில் நடித்த சி கே சரஸ்வதி அம்மாள்' எனவும் ,மிகவும் அதிர்ச்சியாய் போய்விட்டது .அப்படியா அப்படியா வென்று பலமுறை கேட்டு விட்டு அருகில் சென்று பேசினேன் .
அருகே சி ஐ டி நகரில் வசிப்பதாகவும் ,மிகவும் சிரமமான பிழைப்பாய் இருப்பதாகவும் அரசு நலிந்த கலைஞர்களுக்கு தரும் ஊய்வூதியமான 2000 ரூபாய் வாங்க அருகில் ஒரு வங்கிக்கு வந்ததாகவும் கூறினார்.
மிகவும் வருத்தமாய் இருந்தது ..பின் ஒரு நாள் தி .நகருக்கு நடந்து செல்வோம் என்று போகையில் ,ஒரு வீட்டு வாசலில் தண்ணீர் பிடிக்க ஒரு கிழிந்த nighty அணிந்து போராடிக்கொண்டிருந்தார் .
இதுபோல வெள்ளித் திரையில் மின்னி விட்டு நிஜ வாழ்வில் கஷ்டப்படுபவர்கள் எத்தனை பேரோ?
தியாக ராஜா பாகவதரில் ஆரம்பித்து ,பல பேர் இருக்க வேண்டும் .
இருப்பினும் திரையில் காணும் பொய் பிம்பங்களை வைத்து நம் மனதில் ஒரு கற்பனை வைத்துக்கொள்வது எவ்வளவு தவறு ?
இப்படி நிழலை நிஜம் என்று நம்புவதாலேயே தான் திரையுலகு நம்மை ஆளவும் வழி வகுத்திருக்கிறோம். நிழலின் போலித்தனத்தையும் நிஜத்தின் கொடூரத்தையும் சந்திக்கும் போது அதிர்ச்சியாய் உள்ளது .
நிறைய பேருக்கு இது தெரிந்தும் இருக்கலாம் .எனக்கு கொஞ்சம் லேட்டாகத்தான் உணர முடிந்தது
அது சரி, இந்த திரை உலகத்தைப் போல் எத்தனை ஊடகங்களோ?