என் முதல் கதை (please bear)
சுமதியை முதல் முதலில் அந்த ரிசப்ஷனில் தான் பார்த்தேன் .என் தங்கை என்று அண்ணி அறிமுகப்படுத்தினார் .
அவளும் என்னை முதலில் பார்க்கிறாள் .பார்வையால் என்னை போலவே அளவெடுத்தாள்
சுமதி நல்ல சந்தன நிறம்.மாசுமருவற்ற கன்னங்கள்;என்னையறியாமல் என் கன்னங்களை வருடிகொண்டேன் .
என்னை முதலில் கவர்ந்தது அவளின் கால் விரல்கள் தான் .செல்வாவிற்கு கால் விரல்கள் மேல் தனிப் பிரேமை !அவராலேயே நான் அடிக்கடி pedicure செய்து கொள்வேன் .
என் காலும் வெடிப்புகளின்றி ஈரப்பசையுடன் பளபளப்பவை தான் ;ஆனால் சுமதியின் கால் தாமரை இதழ்களை ஒத்து இருந்தது ,
நல்ல வடிவான உடலமைப்பு ,வரிசையான பற்கள்,அடர்த்தியாய் ,குட்டையாய் வெட்டப்பட்ட முடி,நீள விரல்கள்,ரோஜா நிற நகங்கள்,பளபளக்கும் கண்கள். அவள் இடுப்பின் வளைவே ஆயிரம் கதைகள் பேசியது.
கண்கள் விலக்கிக் கொள்ள இயலாமல் பார்த்துக் கொண்டே நின்றேன் .
நல்ல dress sense கூட .ஆழ்ந்த மயில் பச்சையில் நிறத்தை எடுத்துக் காட்டக்கூடிய சேலையும் ரவிக்கையும் .
அந்த ரவிக்கை பின்புறத்தில் அழகாய் இறங்கி பார்ப்பவர்களை எல்லாம் கிறங்கடித்தது.
அவளும் என்னை அப்படித்தான் அளவெடுத்திருக்க வேண்டும் .எங்களிடையே எதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒரு spark பறந்தது.
சுமதி என்ற பெயர் செல்வாவிற்கு மிகவும் பிடிக்கும் .என்னிடம் அடிக்கடி சொல்லிருக்கிறார்.
சுமதியின் அருகே சிறிது நரைத்த தலையுடன் ஒரு மத்திய வயது ஆண் .
"மீட் மை ஹஸ்பன்ட் விஸ்வம் " என அறிமுகப்படுத்தினாள்.அவர் மிகப்பெரிய பதவியில் இருப்பதை கேள்விப்பட்டிருக்கேன் .
ஆனால் சுமதியின் பக்கத்தில் கொஞ்சம் intimidate ஆனது போல் நின்றிருந்தார் .
அவர்களுக்கு தெரிந்தவர்கள் "சுமதி ஊருக்கு வாயேன் 'என்று அழைத்த போது 'அய்யே இவரோடு நான் எங்கும் போவதில்லை " என முகத்தில்
அடித்தாற்போல் பதில் கூறினாள்.அவர் தர்ம சங்கடத்துடன் நின்றிருந்தார் .
அவளும் அண்ணியும் நான் இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல் அவரைப்பற்றி குறையை பகிர்ந்து கொண்டிருந்தனர்.
அப்போது வந்த அவர்களின் cousin ரமணி நேராக சுமதியிடம் போய் சிரித்து பேச ஆரம்பித்தான் .சிறிது நேரம் கழித்து" விசு ,நான் கொஞ்சம் shopping போக வேண்டும் ,ரமணி drop செய்கிறான்" என்று கூறியபடி அவள் கையாட்டிய படியே சென்றுவிட்டாள்
ஒரு கணம் விஸ்வத்தின் கண்களில் கலக்கமும் நீர் திரையும் கண்டது நிஜம் .
நாங்கள் எங்கு சென்றாலும் செல்வாவிற்கு கொஞ்சம் கூட பிரியக்கூடாது .கூடவே இருந்து ,சிரித்து, அறிமுகங்கள் பெற்று ,நல்லதொரு ஜோடியென்று எங்களுக்குப் பெயர்
செல்வா எப்போதும் open type .திருமணத்திற்கு பிறகு ஒரு நாள் அவர் அண்ணியை பற்றி பேசும் போது சுமதியின் பேச்சு வந்தது .
அப்போது அவர் மனதில் அவளை ஆசைப்பட்டதும் ஆனால் பெண் கேட்கக் கூடிய நிலையில் இல்லாததால் , நிச்சயம் தனக்கு மணமுடித்து தரமாட்டார்கள் என ஆசையை புதைத்துக்கொண்டதும் கூறினார்
ஆனால் ஒரு கணம் தான்; மறுகணம் 'அது போகட்டும் ,இந்த வைரம் நீ கிடைக்க வேண்டும் என்பதால் தான் அது நடக்கவில்லையோ " என அணைத்துக்கொண்டார் .
இருந்தாலும் எனக்கு மிகவும் ஆவல் .அவர் மனம் கவர்ந்தவள் எப்படி இருப்பாளென்று !
இன்று தான் அது நிறைவேறியது.
மனதில் சொல்லிக்கொண்டேன் "நல்ல வேளை செல்வா ,அவளை நீங்கள் மணக்கவில்லை !உங்களையும் உங்கள் அன்பையும் புரிந்துகொள்ளாமல் இப்படித்தான் அலட்சியமாய் நடந்திருப்பாள்
உதட்டில் ஒரு சிறு புன்னகை ,,இது பொறாமை பட்ட மனதின் சமாதானமா ? இல்லை நிஜமாகவே வந்த நிம்மதிப் பெருமூச்சோ? என்னவென்று தெரியவில்லை
ஆனால் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும் , கேட்டுக்கொண்டும் , அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தார், படத்தில் என் செல்வா .