Sunday, April 4, 2010

பேய்க்கதை

கோடை விடுமுறை .வாடகைக்கு எடுத்த சைக்கிளை அது அழும் வரை சரவணன் ,மோகனா ,ஷாந்தி ,தம்பி ,நான் என மாற்றி மாற்றி ஓட்டி முடித்தாயிற்று .

எனக்கு சைக்கிளில் ஏற தெரியாது .ஆக தெரு முனையில் அங்கங்கே நாலைந்து கல் அடுக்கி வைத்திருப்போம் .அதில் கால் வைத்து இறங்கி சைக்கிளை  திருப்பி அந்த கற்களில் கால் வைத்து திரும்ப ஏறுவேன் .
எப்படியும் அதை நெருங்கும் சமயம் ஒரு உற்சாக கூச்சல் இருக்கும் .மணி எட்டரை !.உற்சாக கூச்சல் பொறுக்காமல் எதிர் வீட்டு மாமா ""நீங்களாம் போய் தூங்கவே மாட்டீங்களா"" என்று திட்டி அனுப்பினார் .
(அவர் தான் நாங்கள் ஊருக்கு போயிருந்த சமயம் நீங்களாம்  இல்லாமல் இந்த தெரு ஒரே சைலன்ட் என்று வருத்தபட்டவரும் கூட )

சைக்கிளை கடையில் விட்டு விட்டு அவசர அவசரமாக ரெண்டு பருக்கை விழுங்கிவிட்டு எங்கள் அடுத்த ஜமா பந்திக்கு கூடினோம் .
இப்போது சரவணன் வீட்டில் கிராமத்திலிருந்து வந்து டேரா போட்டிருந்த லச்சுமி பாட்டியும் எங்களோடு  சேர்ந்து  கொண்டார் .
சரவணன் தான் ஆரம்பித்தான் .
"நேத்து நம்ப புளியமரத்தில தூக்குபோட்டு செத்துப்போன டைலர்  ஆவியாய் வந்தாராம்னு " .
இப்பிடியே ஒருத்தர் ஒருத்தர் ஒன்று கூற அன்று பேய்கதை ராத்திரியாய் போனது.
அப்போது தான் கவனித்தோம் லச்சுமி பாட்டி பாவம் கொஞ்சம் பயந்து போய் இருப்பதை .உடனே நாங்கள் பல ஆவி கதைகளை எடுத்துவிட, பாவம் பாட்டி! .
 இப்படி அவரை போட்டு வாருவதை கண்டு அம்மா திட்டி எல்லாரையும் தூங்க போக சொல்லிவிட்டார் .சபை கலைந்தது .

அப்பா வர இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்பதால்  நாங்கள் தூங்காமல் பேசிக்கொண்டிருந்தோம் .அப்பா வந்தவுடன்
" இதோ கோவில் பிரசாதம் இருக்கு .எதிர் வீட்டில் போய் குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு வா"
என என்னிடம் கொடுத்தார் .நான் புளிசாதம் சுண்டல் அடங்கிய தூக்கு வாளியை எடுத்து கொண்டு எதிர்வீட்டுக்கு ஓடினேன்  .அவர்கள் வாசல விளக்கை அணைத்து விட்டிருந்தனர் .நான் நேராக போய் கதவை தட்டாமல் ஜன்னல் வழி எட்டி பார்ப்பதற்குள்
"ழெழெழெழ் " என்று இனம் புரியா கூச்சல் நானும்  "வீல்" என்று கத்தி ஒரே ஓட்டமாய் ஓடி வந்து விட்டேன் .
கடைசியில் பார்த்தால் நான் ஜன்னலில் எட்டி பார்த்த போது என் பாவாடை கீழே படுத்திருந்த லச்சுமி பாட்டி முகத்தில் உரசி இருக்கிறது .
பேய் கதை பயத்தில் இருந்த பாட்டி எதோ ஆவி தான் என்று "ழேழேழே"  என்று இருக்கிறார்
இந்த சப்தம் கேட்ட நான் அங்கு ஏதோ இருக்கிறதென்று பயந்து கத்தி ஓடிவந்துவிட்டேன் ,எங்கள் தெருவே கூடிவிட்டது   .
மொத்தத்தில் இருவருக்கும் ஆவி பயம் .

பின்னர் கொழுமோர் குடித்ததெல்லாம் தனிக்கதை
இதில் என்ன ப்யூட்டி  என்றால்  நாலு மாசம் சரவணன் வீட்டில் டேரா போட்டிருந்த லச்சுமி பாட்டி மறுநாளே ஊருக்கு போய் விட்டார்கள் .எதிர்த்த வீட்டு மாமி எங்களுக்கு ஸ்பெஷல் பிடிகொழுக்கட்டை  செய்து  தந்தார்கள் .ஆனால் கடைசிவரை லச்சுமி பாட்டி பயந்தது தான் தெரியுமே தவிர நான் நெஜம்மா பயந்தது யாருக்கும் தெரியவே தெரியாது

37 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

பாவம் லட்சுமி பாட்டி,
இப்படியா பயம் காட்டுவீங்க :))

ரிஷபன் said...

பேய் இருக்கோ இல்லியோ ஆனா அந்தக் கதைகள் தரும் த்ரில் எப்போதும் உற்சாகம்.. எனக்குக் கூட சில அனுபவங்கள் இருக்கு..

padma said...

இத்தனை துரிதமாய் வந்து படித்தது மகிழ்ச்சி .கொஞ்சம் பத்தியாவது எழுத வருதான்னு பார்த்தேன் . நன்றி ரிஷபன் ,சைவகொத்துபரோட்டா

தமிழ் உதயம் said...

ஆனால் கடைசிவரை லச்சுமி பாட்டி பயந்தது தான் தெரியுமே தவிர நான் நெஜம்மா பயந்தது யாருக்கும் தெரியவே தெரியாது


பத்மா ரெம்ப விபரமான பொண்ணு. அதான் பயந்தை காட்டிக்கல.

துபாய் ராஜா said...

:))

பிரசன்னா said...

நல்லா ஓட்றீங்க.. பாட்டிய :)

வானம்பாடிகள் said...

:). பேய்க்கதை மாதிரியே பரபரனனு போச்சு.

ஆடுமாடு said...

லட்சுமி பாட்டிதான் இப்படி.

எங்க பாட்டி இருக்கே (இருந்ததே), பேய்க்கே பேய்பயம் காட்டும்.
டூரிங் டாக்கிஸ் (ஊர்ல இருந்து ஒன்றரை கி.மீ தூரம்) போய்ட்டு நள்ளிரவு சுடுகாடு நடந்து வரும்போது, நான் பேய் பயத்துல வர, பாட்டி தைரியம் சொல்லி அழைச்சுட்டு வரும்.

ஓகே.

கொட்டேஷன் வார்த்தைகளே பேச்சு வழக்கிலேயே எழுதினால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

வாழ்த்துகள்.

க.பாலாசி said...

//நான் நெஜம்மா பயந்தது யாருக்கும் தெரியவே தெரியாது//

அதான் எங்களுக்கு தெரிஞ்சிடுச்சில்ல... நீங்க பயந்தாங்கொளியா....!!!!

இருங்க இருங்க என்னைக்காவது ஒருநாள் அந்த பாட்டியும் பேயாவந்து உங்கள பயமுருத்தபோறாங்க....

ராமலக்ஷ்மி said...

//நான் நெஜம்மா பயந்தது யாருக்கும் தெரியவே தெரியாது//

இப்போது தெரிந்து விட்டதே:)!

முகுந்த் அம்மா said...

பயங்கரமா கதை சொல்லுரிங்க :)).

//நான் நெஜம்மா பயந்தது யாருக்கும் தெரியவே தெரியாது//

எனக்கும் பேய் பயம் சின்னவயசில அதிகம் உண்டு (இன்னும் கூட கொஞ்சம்) ஆனா வெளியில காட்டிக்க மாட்டேன்.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ஏன் உங்க கதையை படிச்சோம்னு இருக்கு. வீட்டில் அடுப்பை பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள். அந்த இட்லி வைத்த pressure cooker லிருந்து, ஆவி வர, எனக்கு அந்த லட்சுமி பாட்டி ஞாபகம் வர..சட்டையின் காலர் பக்கம் வேர்த்துக் கொட்ட..சாயங்காலமே pressure check up பண்ணி..ஒரே திகிலாகப் போய் விட்டது!!!போங்க!!!

அண்ணாமலையான் said...

பயங்கரமா இருக்கு...

padma said...

எல்லாரும் நெறைய எழுதறாங்களே நாமும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாக்கலாம்ன்னு தான் இதை எழுதினேன் .எழுதி முடிசோன்ன என் பொண்ணு அம்மா வேண்டாம் இந்த விபரீதம்ன்னு சொன்னா.ஆனா நா கேக்கணுமே ! பாருங்க எல்லாரும் செமயா என்ஜாயிங் தான் .
ரிஷபன் சாரும் ,சைவகொத்துபரோட்டவும் முதல் பலி .
மரியாதைக்கு அவங்க எவ்ளோ என்கரேஜ் பண்ணிருக்காங்க !
கரெக்டா அவங்க படிக்கும் போது ராகுகாலமா இருந்திருக்கும்
தமிழ் உதயம் ,பிரசன்னா ,துபாய் ராஜா என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சது எனக்கு தெரிஞ்சுட்டு :))
இங்க பாருங்க நகைச்சுவை மன்னன் வானம்பாடி சொல்றத ! பரபர ன்னு போவுதாம்.அவரு கிடு கிடுன்னு தல தெறிக்க ஓடினார்ன்னு நம்பகமான தகவல் கிடச்சுது :))
ஆடு மாடு சார் தவிக்கறாரு.இந்த அம்மா வேற நம்ம ப்ளாக்ல வந்து புருஞ்சும் புரியாம ரெண்டு வார்த்தை எழுதுதுன்னு .என் கிரகம்! தெரியாம இங்க மாட்டிகிட்டேனேன்னு
பாவம்:))
ராமலக்ஷ்மி யும் பாலாசியும் அதன் இப்போ தெரியுதேன்னு ஜோடியா சொல்லிட்டு போயிருக்காங்க ! என்ன சிரிப்பு வரவே வராதுன்னு இப்போ தெரிஞ்சுட்டு போல :)
இந்த டாக்டர் அம்மா இருக்காங்களே எம்புட்டு அழகா சொல்லிடாங்க பாருங்க பயங்கரமாம்!!அவங்க ஞாயிறே பயங்கரமா போயிருக்கும் :))
இந்த ஆரண்ய நிவாஸ் சொல்றத பாருங்களேன்
பிரஷர் செக் பண்ணினாராம் .எதுக்கு ? இட்லி குக்கருக்கா ?வேத்து ஊத்திட்டாம் ..
என் பொண்ணு விபரீதம்ன்னு சொன்னது சரியா போச்சுங்க .
இப்படியாக தவிர்க்க முடியாமல் என் பக்கம் வந்து வருந்தி வோட்டும் போட்டு கமெண்ட்ஸ் போட்ட அன்புள்ளங்களுக்கு நன்றி சாமியோவ் .
எம்புட்டு நல்லவங்களா இருக்கீங்க ?
இன்னும் வராதவங்கலாம் சீக்கிரம் வந்து சிரிச்சுட்டு போங்கங்கோ !:))

padma said...

:)) அண்ணாமலையான் சார்.உங்களுக்கும் தெரிஞ்சுட்டா?

ராமலக்ஷ்மி said...

பதிவையும் ரசித்தேன் என அழுத்தம் திருத்தமா சொல்லிக்கிட்டு இதை சொல்றேன்:)! பதிவை விட உங்க பதில்..இன்னும் சிரித்துக் கொண்டு இருக்கிறேன்:))! ப்ளீஸ் இதையும் சும்மான்னு சொல்லிடாதீங்க:)!

LK said...

எதோ உள்நோக்கத்தோட பேய் கதை சொன்ன மாதிரி இருக்கே ?

நல்ல எழுதறீங்க.

padma said...

இத பார்ரா .நன்றி LK

காமராஜ் said...

பத்மா ரொம்ப க்ரேட் பத்மா.
இந்த இடுகை இன்னைக்கு ராத்திரி முழுக்க
சிரிக்கக் கிடைத்த அருமருந்து.
எழுத்தும் சிரிக்கவைக்கும் வித்தை கையிலிருக்கிறது.
தயக்கமில்லாமல் தொடரலாம்.பாட்டியின் ழெழெழெ
என்னை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறது.
இனம் புரியாத பயத்தில் ரெண்டு பேரும் கலவரப்பட்டது சுவாரஸ்யம்.
அது என்ன மோர் கேவிப்பட்டதில்லை பத்மா.
தாங்ஸ் பத்மா.

padma said...

அது யாராவது பயந்து போனா மோரை சுடவச்சு குடிக்க தருவாங்க .அதுக்கு பேர் கொழு மோர் . காமராஜ் சார் நீங்க ஒன்னும் காமடிலாம் பண்ணலியே ?நிஜமாவே சிரிக்கிறீங்களா

துபாய் ராஜா said...

ஒரு கொலுக்கட்டைக்காக பாட்டியை கொலைவெறி கொண்டு துரத்தியதை நினைத்துதான் சிரித்தேன்... :))

உங்க அனுபவங்களான மாட்டு வைத்தியம், மாட்டிகிட்டோம் பதிவுகள் மிகவும் ரசிப்புக்குரியவை.பத்மா மேம், நல்லாதான் எழுதறீங்க. உங்க வேலை பிசியில நீங்க எழுதறதே பெரிய விஷயம்.சித்திரமும் கைப்பழக்கம், சிறந்த பதிவுக்கு எழுத்து பழக்கம்.ஏக்நாத்(ஆடுமாடு)அண்ணாச்சி
சொன்னா மாதிரி கொஞ்சம் பத்தி பத்தியா பிரிச்சும், உரையாடல்களை பேச்சு வழக்கில் அடைப்புக்குறிக்குள்ளும் போட்டு எழுதினீங்கன்னாளே போதும். இன்னும் கலக்கலா இருக்கும்.

தொடருங்கள்.தொடர்கிறோம்.

க.பாலாசி said...

அட... கமெண்டே வித்யாசமா போட்டிருக்கீங்க... எங்க தாத்தா தாராபுரத்தானும் (tharapurathaan.blogspot.com) இப்டித்தான் போடுவாரு...

ஜெய்லானி said...

நீங்க பயந்ததை சொல்றீங்க!! நான் நேரிலேயே பாத்து அது பின்னாடியே ஓடி இருக்கேன். போன வாரம்.

முகுந்த் அம்மா said...

ஏய், நான் உண்மைக்குமே பயங்கரமா இருக்குன்னு சொன்னேன்ப்பா. இப்போ பகல் தூக்கம் தூங்கும் போது கூட லட்சுமி பாட்டி கனவில வந்து பயமுறுத்துனாங்க தெரியுமா! ரொம்ப பயந்து போய் கிடக்கேன்.

வானம்பாடிகள் said...

வானம்பாடி சொல்றத ! பரபர ன்னு போவுதாம்.அவரு கிடு கிடுன்னு தல தெறிக்க ஓடினார்ன்னு நம்பகமான தகவல் கிடச்சுது :))//
இப்புடி வேறயா:)). நடக்கட்டு:))

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களுக்கு விருது
கொடுத்து உள்ளேன், வந்து
பெற்று கொள்ளவும், நன்றி.

http://saivakothuparotta.blogspot.com/2010/04/blog-post.html

padma said...

நன்றி பரோட்டா .ennai கிங் ஆக்கிடீங்க

பிரியமுடன் பிரபு said...

aaa

enakkellaam pai na payam illaa aamaa

சாம்ராஜ்ய ப்ரியன் said...

இனிமே பகலில் தான் சித்தி உங்க இடுகையை எல்லாம் படிக்கனும் போல!! :P

இல்லையென்றால் எனக்கு தான் பேய் பிடித்து விட்டதென வீட்டிலுள்ளவர்கள் பயப்படுவார்களோ என எனக்கு பயமாக உள்ளது. ;-)

ஆடுமாடு said...

//எல்லாரும் நெறைய எழுதறாங்களே நாமும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாக்கலாம்ன்னு தான் இதை எழுதினேன்//

மேடம். நிறைய எழுதுங்க. எதை வேணாலும் எழுதுங்க. முக்கியமா அனுபவங்கள்ல இருந்து எழுதுனா நல்லாருக்கும். எழுத எழுத..
சித்திரமும் கை பழக்கம் மேட்டர்தான்.

//ஆடு மாடு சார் தவிக்கறாரு.இந்த அம்மா வேற நம்ம ப்ளாக்ல வந்து புருஞ்சும் புரியாம ரெண்டு வார்த்தை எழுதுதுன்னு .என் கிரகம்! தெரியாம இங்க மாட்டிகிட்டேனேன்னு//

நீங்களாவே ஏதாவது நினைச்சுக்கிட்டிருந்தா எப்படி? நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.

நீங்க நல்லாதான் எழுதறீங்க. வாழ்த்துகள்.

'சார்' கொஞ்சம் டூ,த்ரி மச்தான்.

adhiran said...

லக்ஷ்மி பாட்டி கொழுமோர் குடிச்சாங்களா?

ஸ்ரீராம். said...

பா...வம் லச்சுமிப் பாட்டி..
என்னா வில்லத் தனம்...

சுந்தரா said...

:) சுவாரசியமா எழுதியிருக்கீங்க.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

குக்கருக்கு எதுக்குப் ப்ரஷர் பார்க்கணும்? நான் எனக்குத் தான் பார்த்துக் கிட்டேன்!!

ப்ரியமுடன்...வசந்த் said...

சின்ன பையன் சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க ஃபார்மேட்டிங் கொஞ்சம் கவனிங்க மேடம் வாசிக்க கஷ்டமா இருக்கு...

டாட்டா பை பை...

D.R.Ashok said...

Nativity & Narration - good

பால்யத்தின் வயதை வார்த்தைகளில் வடித்தது அழகு.

ணா... அப்படியே அடிச்சு ஆடுங்கணா... :)

DREAMER said...

பொதுவா பாடிங்கதான் குழந்தைகளை கதை சொல்லி பயமுறுத்துவாங்க.. இங்க அப்படியே உல்ட்டாவா, நீங்களும் மத்த சிறுசுகளும் சேர்ந்து பாட்டியை பயமுறுத்தியிருக்கீங்க...! சுவாரஸ்யம்..! பகிர்வுக்கு நன்றி!

-
DREAMER