Sunday, August 31, 2014

ப்ரமாண்ட வானொலிப் பெட்டி (கல் குதிரையில் வெளியான மொழிபெயர்ப்புக் கதை)ஆங்கிலத்தில் ஜான் சீவர்



  ஒரு கல்லூரியின் பழைய மாணவர்கள் செய்தியறிக்கைளில் வரக்கூடிய சராசரி வருமானமும், முயற்சியும், மரியாதையுடையவர்களைப் போன்றவர்கள்தான் ஜிம்மும் ஐரீன் வெஸ்ட்காட்டும். திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கழிந்திருந்தன, இரண்டு குழந்தைகளுடன் ‘சுட்டன் ப்ளேஸ்’ அருகில் ஒரு அடுக்கத்தில் 12 ஆவது மாடியில் வசித்து வந்தனர். ஒரு வருடத்தில் சராசரியாக 10.3 முறை திரையரங்கத்திற்கு செல்லும் வழக்கமிருந்தது. என்றாவது ஒருநாள் வெஸ்ட்செஸ்டெரில் குடியேறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்து வந்தனர்.

ஐரீன் வெஸ்ட்காட் ஒரு இனிமையான, எளிமையான, பழுப்பு நிற முடியும், எதுவும் எழுதப்படாத அழகான நெற்றியும் கொண்ட பெண். குளிர்காலங்களில் மிங்க் என்ற கீரியின் மென்மையான மயிர்த்தோலைப் போல் சாயமேற்றப்பட்டிடுக்கும். மரநாயின் தோலுடைய மேலாடையை அணிந்து கொள்வாள்.

தன் வயதை விட இளமையாக ஜிம் தோற்றமளித்தான் என்று கூற இயலாது என்றாலும்,அவ்வாறு அவன் தன்னை எண்ணிக்கொண்டான் என்று தான் கூற வேண்டும். ஒட்ட வெட்டப்பட்டிருந்த நரை முடியுடன், ஆன்டோவரில் அவன் வகுப்பு மாணவர்கள் அணிந்த அதே விதமான உடையும், அக்கறையுள்ள, ஆவேசமான, வேண்டுமென்றே வெகுளிபோல் தோற்றமளிக்கும் குணத்துடன் காட்சியளித்தான்.

சிறந்த இசையில் அவர்களுக்கு உள்ள ஆர்வத்தில் மட்டுமே வெஸ்ட்காஸ்ட் இருவரும் தங்கள் நண்பர்கள், வகுப்பறை தோழர்கள், அக்கம்பக்கம் வசிப்பவர்களிடமிருந்து வேறுபட்டனர். இருவரும் யாரிடமும் தெரிவிக்காது அடிக்கடி பல இசைநிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்தனர், தங்கள் நேரத்தை கணிசமான அளவு, வானொலியில் இசை கேட்டுக் கழித்தனர்.

அவர்களுடைய வானொலிப்பெட்டி, ஒரு புராதனமான, பதிவீட்டு நுட்பமான, முன்னறிந்து கூறவியலாத, சரியே செய்யமுடியாத ஒரு கருவி. அதனின், மற்றும் அதைச் சார்ந்த கருவிகளின் இயந்தரவியலை இருவரும் அறிந்திருக்கவில்லை. ஆகவே அவ்வப்போது கருவி மக்கர் செய்யும் வேளைகளில் ஜிம் அதன் பக்கவாட்டில் ஒரு தட்டு தட்டுவான். அது சில சமயம் போதுமாயிருந்தது.

ஒருநாள் மதியம், ஷீபெர்ட்டின் இசையை கேட்டுக் கொண்டிருந்த போது, வானொலியில் இசை நின்றே போய்விட்டது. வழக்கம்போல் ஜிம் பக்கவாட்டில் தட்டித் தட்டிப் பார்த்தும் எதுவும் ப்ரயோஜனமில்லை. அன்று ஷீபெர்ட்டை அவர்களுக்கு கேட்க முடியாமலே போனது. ஐரீனிடம் புதிதாக ஒரு வானொலிப் பெட்டி வாங்கி விடலாம் என்று கூறியவன், அதுபோலவே திங்களன்று வேலையிலிருந்து திரும்பி வரும்போது, ஒன்றை தான் தேர்ந்தெடுத்துவிட்டதாகக் கூறினான். ஐரீனுக்கு ஒரு ஆச்சரியமாக அது இருக்கவேண்டுமென்பதற்காக அதைப் பற்றி மேலும் எதுவும் கூற மறுத்துவிட்டான்.

மறுநாள் மதியம் வானொலிப்பெட்டி இல்லம் வந்து சேர்ந்தது. வேலைக்காரர்களின் உதவியுடன் அதனைப் பிரித்து முன்னறைக்கு கொண்டு வந்த போதே அதன் அழகற்றதோற்றம் ஐரீனுக்கு ஒப்புதலாயில்லை. ஐரினிற்கு தன் முன்னறை பற்றிய பெருமிதம் எப்பொழுதுமுண்டு, தன் உடைகளைத் தேர்வு செய்வது போலவே, மிகக் கவனமாக, அறையின் வண்ணத்தையும், அதில் உள்ள பொருட்களையும் தேர்ந்தெடுத்திருந்தாள். இப்போது இந்த வானொலிப்பெட்டி, அவளுடைய அணுக்கமான தேர்வுகளுக்கிடையில் வேண்டாத ஒரு பொருளாய் நின்று கொண்டிருந்தது. அதிலுள்ள சுழல்வட்டுகளும் விசை இயக்கிகளும் அவளுக்கு குழப்பமுண்டாக்கின. அதை நன்கு பலமுறை கண்டு திருப்தியான பிறகே அதை பொருத்தி இயக்கினாள். உடன் சுழல்வட்டுகள் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தன. தூரத்தில் பியானோவின் இசை கேட்டது. அது ஒரு சில வினாடிகளுக்குத்தான்.

ஒளியை விட வேகமாய் இசை அவளைத் துளைத்துச் சென்று, மேசையிலிருந்த ஒரு பீங்கான் பாத்திரம் கீழே விழுந்து உடையும் உச்சத்தில் வீட்டை நிரப்பியது. ஓடிச் சென்று ஒலியைக் குறைத்தாள். அந்தப் பெட்டிக்குள் சிறைப்பட்டிருந்த மூர்க்கமான ஏதோவொன்று அவளை பதட்டப்பட வைத்தது. பள்ளியிலிருந்து திரும்பிய குழந்தைகளை பூங்கா அழைத்துச் சென்றாள். அதன்பின் அன்று மதியத்திற்குப்பின் தான் அவளால் வானொலிப் பெட்டியை நெருங்க இயன்றது.

குழந்தைகளுக்கு தாதி உணவளித்துவிட்டு அவர்களை குளிக்க வைத்துக் கொண்டிருந்தபோது ஐரீன் வானொலியைத் திருப்பி, தனக்கு தெரிந்த, தான் மிகவும் ரசிக்கும் மொசார்ட்டை கேட்க அமர்ந்தாள். தெளிவாக இசை பொழிந்தது. பழையதைவிட ஒலி சிறப்பாய் இருப்பதாய் அவளுக்குத் தோன்றியது. ஒலிதான் முக்கியமென்பதால் இருக்கைக்குப் பின் அதை மறைவாக வைத்தால் போயிற்று என்று நினைத்துக் கொண்டாள். இவ்வாறு மனதளவில் சமரசம் செய்துகொண்ட உடன் ஒரு இடையூறு ஆரம்பித்தது.இசையுடன் ஏதோ எரியும் ஓசை கேட்கத் தொடங்கியது. இசையை மீறி விரும்பத்தகாத அலையோசையும்கூட.

இசை செல்லச்செல்ல வேறு பல ஓசைகளும் கேட்கத் தொடங்கின. அனைத்து சுழல்வட்டுகளையும், இயக்கிகளையும் முயன்று பார்த்தும்கூட, அந்த இடையூறைக் குறைக்க இயலவில்லை. ஏமாற்றத்துடனும் அதிர்ச்சியுடனும் அமர்ந்து, இசையின் ஓட்டத்தைக் கண்டுபிடிக்க முயன்றாள். அவர்கள் வீட்டின் சுவரை ஒட்டி மின்தூக்கி அமைந்திருந்தது, அதனுடைய ஓசையை வைத்து ஓரளவு வானொலியில் வரும் அதிர்வோசையை அவளால் யூகிக்க முடிந்தது. மின்தூக்கியின் உருளையிடம் சத்தத்தையும், அதை மூடித் திறக்கும் ஓசைகளையும், வானொலி உள்வாங்கி ஒலிபரப்பியது. எல்லாவகை மின்சார அதிவுகளும் இவ்வாறு வானொலியால் ஒலிபரப்பப்படுகின்றன என்பதை அவள் புரிந்து கொண்டதும், மொஸார்ட்டினூடே தொலைபேசி ஒலிகளையும், வாக்குவம் க்ளீனரின் ஒலியையும் கேட்கத் தொடங்கினாள். கொஞ்சம் உற்றுக் கேட்டால் சுற்றியுள்ள வீடுகளில் இருந்த அழைப்பு மணியையும், மின்சார சவரக்கத்தியின் ஓசையையும், உரக்கக் கத்தும் மின் அரைப்பானின் ஒலிகளையும் அது கிரகித்து ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. மிகச் சிறிய ஓசையெல்லாவற்றையும் கவரும், மிகுந்த ஆற்றலுடைய அழகற்ற அக்கருவியுடன் போராடித் தோற்று, தன் குழந்தைகளைக் காணச் சென்றாள்.

ஜிம் இரவு வீடு திரும்பியபோது, மிகுந்த தன்னம்பிக்கையுடன் விசைகளை இயக்கினான். ஆனால் ஐரீனுக்கு நேர்ந்ததே அவனுக்கு நேர்ந்தது. ஜிம் தேர்ந்தெடுத்த நிலையத்தில், யாரோ ஒருவரின் பேச்சு திடீரென்று அறையையே கிடுகிடுக்க வைத்தது. ஜிம் சத்தத்தைக் குறைத்து வைத்தான். பின் ஓரிரு நிமிடங்களின் இடையூறு ஆரம்பித்தது. தொலைபேசிகளின் சத்தமும், அழைப்புமணி, மின்தூக்கி மற்றும் சமையலறை உபகரணங்களின் ஓசை கேட்கத் தொடங்கியது. ஐரீன் கேட்டதைவிட இது கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது உண்மை. சூரியன் மறைந்த பின் ஒரு நகரத்தில் ஓசைகளில் ஏற்படும் மாற்றத்தை அது பிரதிபலித்தது. மின்சவரக்கத்திகளும், வாக்குவம் க்ளீனர்களும் அடங்கிவிட்டன. விசைகளுடன் பலமுறை போராடியும் ஏதும் செய்யமுடியாமல் ஓய்ந்து போனான். மறுநாள் இதை விற்றவர்களைக் கூப்பிட்டு ரகளை பண்ணுகிறேன் பாரென்று கூறினான்.

மறுநாள், வெளியில் ஒரு விருந்திலிருந்து திரும்பிய ஐரீனுடன், யாரோ ஒருவன் வந்து வானொலியை சரி செய்ததாக வீட்டிலுள்ள பணிப்பெண் கூறினாள். தன் தொப்பியைக் கூட கழற்றாமல் வானொலியை இயக்கினாள். அதிலிருந்து ‘மிஸ்ஸெளரி வாஸ்ட்ஸ்’ என்ற இசை மிதந்து வந்தது. கோலைக்காலத்தில் ஒரு தேய்ந்த ரெக்காடரிலிருந்து ஓடைக்கு அந்தப்புறம் கேட்ட ஓர் இசையை ஞாபகப்படுத்தியது. இசை முடிந்து அதன் அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அது ஏதும் இல்லை. மறுபடியும் அந்தப் பாட்டே ஒலிக்கத் தொடங்கியது. விசையை மாற்றியவுடன், காக்கேசிய இனத்தவரின் இசை ஒலிக்கத் தொடங்கியது. வெறுங்கால்கள் உதைக்கும் ஓசையும், காசு மாலைகள் கிணுகிணுக்கும் ஒலியும். ஆனால் அதன் பின்னணியில் மணியோசையும் குழப்பான குரல்களும் கேட்டன. குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பியிருந்தனர். வானொலியை அணைத்துவிட்டு அவர்களின் அறைக்கு சென்றாள். அன்றிரவு ஜிம் அலுவலகத்திலிருந்து மிகவும் களைப்புடனே திரும்பினான். குளித்து உடைமாற்றி முன்னறையில் உள்ள ஐரீனுடன் அமர்ந்தான். வானொலியை இயக்க ஆரம்பித்த சில வினாடிகளில் தாதி உணவிற்கு அழைத்ததால் இருவரும் உணவுமேசைக்கு சென்றனர்.

பேசக்கூட இயலாதபடி களைப்பாயிருந்தான் ஜிம். சாப்பாட்டில் ஏதும் புதுமை இல்லாததால் மெழுகுவர்த்தி ஸ்டாண்டில் உள்ள அழுக்கிலிருந்து அடுத்த அறையில் கசிந்து கொண்ட இசைக்கு ஐரீனின் கவனம் தாவியது. வானொலியில் ஒலித்த “சாப்பின்” இசை சிறிது நேரம் ஓடினது. திடீரென்று இசை நின்று போனது.

ஒரு ஆணின் குரல், “கேத்தி! நான் வீடு திரும்பும் நேரத்தில், இந்த பியானோவை வாசிக்கத்தான் வேண்டுமா?” என்று கேட்டது. “இப்பொழுது தான் எனக்கு சமயம் கிடைக்கிறது. நாள் முழுவதும் ஆபிஸில் அல்லவா இருக்கிறேன்?” என்று ஒரு பெண் குரல் பதிலளித்தது. அந்த ஆண் குரல் ஏதோ ஆவேசமாகப் பேசி விட்டு, கதவை சாத்தும் ஓசை கேட்டது. உடன் மனதையுலுக்கும் இசை பொழியத்தொடங்கியது.

“உங்களுக்குக் கேட்டதா?” ஐரீன் கேட்டாள்.

“என்ன?” என்றான் இனிப்பருந்திக் கொண்டிருந்த ஜிம்.

“இந்த வானொலிதான். யாரோ ஒருவன் இசையின் நடுவே ஏதோ ஆபாசமாகப் பேசினான்.”

“ஏதாவது நாடகமாயிருக்கும்.”

“நாடகம் போல் தோன்றவில்லை” என்றாள் ஐரீன்.

மேஜையை விட்டகன்று முன்னறையில் காபி அருந்தச் சென்றனர். மற்றொரு நிலையத்தை முயற்சி செய்யலாமே என்று ஐரீன் கேட்டாள். விசையைத் திருப்பினான். ‘என் கயிறைக் கண்டாயா?’ என்றொரு ஆண்குரல் கேட்டது. “என் பொத்தாங்களையெல்லாம் பொருத்தி விடுங்கள். உங்கள் கயிறை கண்டுபிடிக்கிறேன் என்றது ஒரு பெண்குரல். ஜிம் அடுத்த நிலையத்திற்குத் தாவினான்.

“தட்டில் ஆப்பிளின் விதைகளையும் மீதியையும் போடாதே. அந்த மணம் எனக்கு வெறுப்பாயிருக்கிறது என்றது ஓர் ஆண் குரல்.

“விசித்திரமாய் உள்ளதே!” என்றான் ஜிம்.

“ஆமாம்” என்றால் ஐரீன்.

மீண்டும் விசையைத் திருகினான் ஜிம்.

ஒரு சரியான ஆங்கில உச்சரிப்பில் ஒரு பெண்மணி குழந்தைகளைப் பாடி தூங்க வைத்துக் கொண்டிருந்தாள். ‘கடவுளே! இது நம் ஸ்வீனியின் தாதியின் குரல். அதை நிறுத்துங்கள். அவர்களுக்கும் நாம் பேசுவது கேட்கப் போகிறது’.

ஜிம் வானொலியை அணைத்தான். ‘அது ஆர்ம்ஸ்ட்ராங்கின் குரல். அவள் ஸ்வீனியின் தாதி. குழந்தைகளுக்கு பாடிக் கொண்டிருக்கிறாள் போலும். அவருகள் 17-B இல் வசிக்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங்குடன் நான் பேசியிருக்கிறேன். அவளின் குரல் மிகவும் பரிட்சயமாயுள்ளது. நாம் மற்ற வீடுகளில் இருந்தும் குரல்களை கேட்கப்போகிறோம்’.

‘நம்பவே முடியவில்லை’ என்றான் ஜிம்.

‘நிச்சயமாக அது அவள் குரல்தான். எனக்குத் தெரியும். நாம் பேசுவது அவர்களுக்கு கேட்குமா என்றுதான் சந்தேகம்” என்றாள்.

விசையைத் திருப்பினான் ஜிம். மீண்டும் ஸ்வீனியின் தாதியின் குரல் தெளிவாகக் கேட்டது. வானொலியின் அருகில் சென்று ஹலோ என்று குரல் கொடுத்தான்.

தாதி அதே பாட்டை திரும்ப பாடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு கேட்கவில்லை என்று நினைக்கிறேன். வேறெப்படியாவது முயற்சி செய்யுங்கள்.

ஜிம் மற்றொரு நிலையத்திற்கு மாற்றினான். ஒரு பார்ட்டி அதன் உச்சத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது. யாரோ பியானோவில் வாசித்துக் கொண்டிருந்தார். அதனுடன் சேர்ந்து பாடும் குரல்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தன. அந்த சாண்ட்விச்சுகளை சாப்பிடுங்கள் என்று ஒரு பெண் கத்திக் கொண்டிருந்தாள். சிரிப்பு உச்சஸ்தானத்தில் கேட்டது. ஒரு பாத்திரம் கீழே விழுந்து நொறுங்கியது.

“அது ஃபுல்லர்ஸ். 11E யில் இருக்கிறார்கள். அவர்கள் இன்று ஏதோ விருந்தளிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். இன்று குடிக்க ஏதாவது வாங்க கடைக்கு வந்திருந்தாள். இது பிரமாதமாக இல்லை. வேறு ஏதாவது முயற்சி செய்யுங்களேன். 18-C இல் உள்ளவர்களைக் கேட்க முடிகிறதா பார்ப்போம்.”

வேஸ்கோஸ்ட் இருவரும். அன்றிரவு. சால்மென் மீன் பிடிப்பதை பற்றியான ஓர் உரையையும், ஒரு சீட்டுக்கட்டு விளையாட்டையும், விடுமுறையில் பிடிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின்.. படங்களைப் பற்றிய கருத்துக்களையும், கடனைப் பற்றிய ஒரு கடுமையான சண்டையையும் கேட்டனர். முடிவில் நள்ளிரவில், சிரித்து சிரித்து ஓய்ந்தவர்களாய் வானொலியை அணைத்துவிட்டு படுக்கச் சென்றனர்.
சிறிதுநேரம் கழித்து அவர்கள் மகன் தண்ணீர் வேண்டுமென கத்தத் தொடங்க ஐரீன் ஒரு குவளைத் தண்ணீருடன் அவன் அறைக்குச் சென்றாள், அது விடியற்காலை, அக்கம்பக்கம் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருந்தன. ஜன்னலினூடே வெறிச்சோடிய தெரு கண்ணில் பட்டது. முன்னறைக்கு சென்று, வானொலியை இயக்கினாள். யாரோ மெதுவாய் இருமினார்கள். பின் ஓர் ஆண் குரல் கேட்டது. “இப்பொழுது எப்படி இருக்கிறாய் டார்லிங்?”
“இப்பொழுது சரியாக இருக்கிறேன்” என்ற களைப்பான பெண் குரல் கேட்டது. “ஆனால் சார்லி நான் முன்பைப்போல் இப்பொழுது இல்லை என்று களைப்புடன் தொடர்ந்தது. அவர்களின் குரலிலிருந்து அவர்கள் நடுவயதினர்களாய் இருக்கலாம் எனத் தோன்றியது. அந்தக் குரல்களின் சோகமும், ஜன்னலில் வந்த குளிர்காற்றும் ஐரீனை கொஞ்சம் உடல் சிலிர்க்க
வைத்தன. அவள் படுக்கைக்குத் திரும்பினாள்.

மறுநாள் காலை மற்றவர்களுக்காக காலையுணவு தயாரித்தாள். தாதி அவளின் அறையிலிருந்து வரவில்லை. குழந்தையின் தலையை வாரி பின்னலிட்டு பின் அனைவரையும் மின் தூக்கியில் வழியனுப்பி விட்டு முன்னறைக்குத் திரும்பினாள்.

“ஸ்கூலுக்கு போகமாட்டேன். எனக்குப் பள்ளிக்கூடம் பிடிக்கவேயில்லை. நான் போகவே மாட்டேன்” என்று ஒரு குழந்தையின் அலறல் கேட்டது. “போய்த்தான் ஆகவேண்டும்” என்று ஒரு பெண்மணி அதட்டினாள். ‘உன்னை 800 டாலர்கள் செலுத்தி அதில் சேர்த்திருக்கிறேன். நீ செத்தாலும் போய்த்தான் ஆக வேண்டும்” என்று மேலும் அதட்டினார்.

அடுத்த நிலையம், “மிஸ்ஸெளரி வால்ட்ஸ்” என்ற இசையை ஒலிபரப்பியது. விசைகளை மாற்றி மாற்றி பல மேஜைகளில் காலையுணவின் போது நடைபெறும் உரையாடல்களைக் கேட்டாள். அஜீரணம் பற்றியும், காம பேச்சுகளையும், வீண் பெருமைகளையும், நம்பிக்கையான, மற்றும் வெறுப்பு தோய்ந்த வார்த்தைகளையும் அவள் கேட்டாள். அவளுடைய வாழ்க்கை, மிகவும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் இருந்தது, வானொலியில் இருந்து சில சமயம் வெளிவரும் கடுமையான வார்த்தைகள் அவளை பயமுறுத்தின, தொந்தரவு செய்தன. பணிப்பெண் வரும் வரை வானொலியைக் கேட்டுக் கொண்டிருந்தவள், அவள் வந்தவுடன் அவசர அவசரமாக அணைத்தாள். ஏனெனில் இது கபடத்தனமானது என்று அவளுக்கு தெரிந்திருந்தது. அவளின் தோழியோடு அன்று மதிய உணவு அருந்த வேண்டியிருந்ததால் 12 மணிக்கு அவள் வெளியே கிளம்பினாள். மின்தூக்கியில் பல பெண்கள் இருந்தனர். அவர்களுடைய அழகான, உணர்ச்சியற்ற முகங்களை, அவர்கள் தொப்பியிலுள்ள மலர்களை, அவர்களின் மேலங்கியை உற்று நோக்கினாள். இதில் யார் உல்லாசப் பயணம் சென்றிருக்கலாம்? யாருடைய வங்கிக் கணக்கில் அதிகம் பணமெடுக்கப் பட்டுள்ளதோ என்று யோசிக்கலானாள். மின்தூக்கி 10 ஆவது மாடியில் நின்றது. இரண்டு டெரியர் நாய்களுடன் ஒரு பெண்மணி ஏறினாள். அவளின் முடி மேலே சேர்த்து கட்டப்பட்டிருந்தது. உண்மையான மிங்க் மேலங்கி அணிந்து கொண்டிருந்தாள். அவள் “மிஸ்ஸெளரி வால்ட்ஸ்” பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

ஐரீன் உணவும் பானமும் அருந்திக் கொண்டு, தன் தோழியை உற்று நோக்கியபடி இவளின் ரகசியம் என்னவாயிருக்கும் என்று எண்ணலானாள். உணவிற்கு பிறகு இருவரும்  கடைகளுக்குப் போவதாக ஏற்பாடு, ஆனால் தன்னால் வரமுடியாதெனக் கூறி ஐரீன் வீட்டிற்கே வந்துவிட்டாள்.

பணிப்பெண்ணிடம் தன்னை தொந்தரவு செய்யவேண்டாம் எனக் கூறிவிட்டு, முன்னறைக்குச் சென்று, கதவுகள் எல்லாவற்றையும் சாத்திவிட்டு வானொலியை உயிர்ப்பித்தாள். மதியம் முழுவதும், தன் அத்தையிடம் பேசும் ஒரு பெண்ணின் குரலையும், மிகுந்த சத்தத்தில் முடிந்த ஒரு மதிய விருந்தையும, தன் விருந்தினரை பற்றிய தகவல்கள் கூறும் குரல்களையும் கேட்டாள். “யாருடைய முடியெல்லாம் வெளுக்காமலிருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் சிறந்த மதுவைத் தராதே. எனக்கு ஒரு ஐந்து டாலர் தரமுடியுமா, இந்த மின்தூக்கி உதவியாளனுக்கு தரவேண்டும்.”என்று விருந்தளிப்பவள் கூறிக்கொண்டிருந்தாள்.

நேரம் செல்லச் செல்ல, உரையாடல்கள் அதிகமாகிக் கொண்டே சென்றன. ஐரீன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து திறந்த வானம் தெரிந்தது. வானத்தில் நூற்றுக்கணக்கான மேகங்கள் அலைந்தன. தெற்கிலிருந்து வரும் காற்று, பனியை உடைத்து வடக்கு நோக்கி ஊதிவிட்டாற் போலிருந்தது. வானொலியில் பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகள் மற்றும் அலுவலகம் முடிந்து திரும்புபவர்களின் குரலுடன், காக்டெயில் விருந்துக்கு வருபவர்களின் குரல்களும் கேட்டன. “ஒரு பெரிய வைரத்தை குளியலறையில் கண்டெடுத்தேன்” என்று ஒரு பெண்குரல் கேட்டது. திருமதி டன்ஸ்டனின் வளையலில் இருந்து விழுந்திருக்க வேண்டும். “நாம் அதைவிற்று விடுவோம்” என்றது ஓர் ஆண்குரல்.

“மாடிஸன் அவென்யூவில் உள்ள நகைக்கடைக்கு அதை எடுத்துச் சென்று விற்றுவிடலாம். திருமதி டன்ஸ்டனுக்கு இது தெரியப்போவதில்லை. நமக்கு நூறு இருநூறு டாலர்கள் உபயோகமாயிருக்கும்” என்றான் அவன்.

திரும்ப ஸ்வீனியின் தாதி பாடுவது கேட்டது. யாரோ ‘அது தொப்பியில்லை, அது தொப்பியில்லை, அது ஒரு காதல் நாடகம். அப்படித்தான் வால்டர் ஃப்ளோரெல் கூறினார். அவன் சொன்னான் அது தொப்பியில்லை! காதல் என்று” என்று கத்தியது. பின் தணிந்த குரலில, “யாருடனாவது பேசித் தொலை. யாருடனாவது பேசு. நீ இப்படி ஊமையக நிற்பதை அவள் பார்த்தால், நம்மை விருந்தினர் பட்டியலில் இருந்து எடுத்துவிடுவாள். எனக்கு இவ்வகையான விருந்துகள் எவ்வளவு பிடிக்குமென்று உனக்குத் தெரியும்தானே!” என்று கூறியது.

அன்றிரவு இருவரும் வெளியே ஒரு விருந்திற்கு போக வேண்டியிருந்ததால் ஜிம் வரும்போது அவள் உடைமாற்றிக் கொண்டிருந்தாள். மிகவும் கவலையுடனும், வெற்றுநோக்கு பார்வையுடன் காணப்பட்டாள். ஜிம்மிற்கு குடிக்க கொண்டுவந்து கொடுத்தாள். அருகில் இருந்த நண்பர்களும் உணவருந்துவதாக திட்டம். ஆகையால் போக வேண்டிய இடத்தை நோக்கிச் சென்றனர். வானம் வெளுத்து ஒளி மிகுந்திருந்தது. ஆசையையும், நினைவுகளையும் கிளரக்கூடிய ஒரு மாலையாக அது இருந்தது. அவர்களின் உடலையும் முகத்தையும் தழுவிய காற்று மென்மையாய் இருந்தது. ஒரு ஓரத்தில் பாண்ட் ஒலித்துக் கொண்டிருந்தது. ஐரீன் ஜிம்மின் கையைப் பற்றி நிறுத்தி இசையைக் கேட்க நின்றாள். இவர்கள் எத்தனை நல்ல மனிதர்கள், நிஜத்தில் நமக்குத் தெரிந்தவர்களைவிட இவர்கள் மிகவும் நல்லவர்கள் எனக் கூறிக்கொண்டு, அவர்களுக்கு தன் கைப்பையிலிருந்து சிறிது தொகையைப் பரிசளித்தாள். திரும்பி வரும் போது, ஜிம் பார்த்தேயிராத ஒரு ஒளிமிகுந்த சோகச்சாயல் இருந்தது. மேலும் விருந்தில் அவள் நடந்து கொண்டவிதம் அவனுக்கு வியப்பூட்டியது. விருந்தளிப்பவரிடம் கடுமையாகப் பேசியும், தன் குழந்தைகளைத் திருத்தும் கண்டிப்புத் தோரணையுடனும் மற்றவர்களிடம் பழகினாள்.

வீடு திரும்பும் நேரம் இரவு இளமையாகவே இருந்தது. வான நட்சத்திரங்களை நோக்கி, “அந்த சிறிய மெழுகுவர்த்தி எத்தனை தூரம் ஒளியைப் பரப்புகிறது! அப்படித்தான் இந்த பொல்லாத உலகில் ஒரு நல்ல செயலும்” என்றான். ஜிம் தூங்கும்வரை காத்திருந்துவிட்டு, முன்னறைக்கு சென்று வானொலியை இயக்கினாள்.

மறுநாள் ஆறுமணி அளவில் ஜிம் அலுவலகத்திலிருந்து திரும்பினான். பணிப்பெண் எம்மா கதவைத் திரந்துவிட்டாள். தன் தொப்பியையும், மேலங்கியையும் கழற்றும் சமயம், ஐரீன் ஓடி வந்தாள். அவளின் தலையெல்லாம் கலைந்து கண்களில் நீர் பெருகியது. “16-C க்கு போ ஜிம்”, மேலங்கியைக் கழற்றாதே. ஒஸ்பேர்ன் தன் மனைவியை அடித்துக் கொண்டிருக்கிறார். நாலு மணியிலிருந்து அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்போது அவர் அவளை அடிக்கத் தொடங்கிவிட்டார். போய் அதை நிறுத்து” என கதறினாள். முன்னறையில் இருந்த வானொலியிலிருந்து ஆபாச வார்த்தைகளும், அடிக்கும் ஓசையும், அலறலும் கேட்டன. “இதையெல்லாம் நீ கேட்கத் தேவையில்லை” என்றான். அறைக்குள் நுழைந்து வானொலியை அணைத்தான். “இது இழிவான செயல். ஒருவருடைய ஜன்னலில் எட்டிப் பார்ப்பது போன்றதிது. இதெல்லாம் நீ கேட்க வேண்டிய அவசியமில்லை. வானொலிப் பெட்டியை அணைத்து விடு” என்றான்.

“ஓ மிகவும் கொடுமையாய் உள்ளது, மிகவும் கேவலமாயுள்ளது. நாள் முழுதும் கேட்டுக் கொண்டிருந்தேன். மிகவும் சோர்வுக்குள்ளாகிறது” என்று ஐரீன் அழத் தொடங்கினாள்.

“சோர்வூட்டுகிறதென்றால் ஏன் இதை கேட்டுத் தொலைக்கிறாய். இந்த வானொலியை உனக்கு சந்தோஷம் ஏற்படுத்தத்தான் வாங்கினேன். அதற்காக மிகுந்த செலவு செய்துள்ளேன். அது உன்னை சந்தோஷப்படுத்தும் என நினைத்தேன். உன்னை சந்தோஷப்படுத்தத்தான் நான் நினைக்கிறேன்” என்றான்.

“தயவு செய்து என்னிடம் சண்டையிடாதீர்கள்” என்று கூறியபடி அவன் தோளில் தலை சாய்த்துத் தேம்பினாள். அனைவரும் நாள் முழுவதும் சண்டையிடுகின்றனர். பணம் பற்றிய கவலை அவர்களைப் படுத்துகிறது. திருமதி ஹட்சின்சனின் தாயார் புற்றுநோயால் பீடித்து இருக்கிறார். அவரை


மாயோ க்ளினிக் அழைத்துச் செல்ல அவர்களிடம் போதிய பணமில்லை. இந்தக் கட்டடத்தில் ஒரு பெண்மணி வேலைக்காரனுடன் தொடர்பு வைத்திருக்கிறார். மிகவும் அருவருப்பாய் இருக்கிறது. திருமதி மெல்வில்லிர்க்கு இருதய நோயுள்ளது, திரு.ஹென்றிக்ஸின் வேலை ஏப்ரலில் பறிப் போகவுள்ளது. அதனால் திருமதி ஹென்றிக்ஸ் வருத்தத்தில் உள்ளார். அந்த ‘மிஸ்ஸெளரி வால்ட்ஸ்’ கேட்கும் பெண் ஒரு விலைமகள், மின்தூக்கி பணியாளிற்கு காச நோயுள்ளது, இப்பொழுது திரு.ஒஸ்பேர்ன் அவர் மனைவியை அடித்துக் கொண்டிருக்கிறார்” என்று துயரத்துடன் கதறி அருவியெனப் பொழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“இதை எல்லாம் நீ ஏன் கேட்கவேண்டும்?” என்றான் ஜிம் மறுபடியும். “உன்னை சோகத்தில் ஆழ்த்தும் இதை நீ ஏன் கேட்கிறாய்?” என்றான்.

இல்லை! இல்லை! என்று அவள் கதறினாள். “வாழ்க்கை மிகவும் கொடுமையானதாகவும், கீழ்த்தரமாகவும், அச்சம் தருவதாகவும் உள்ளது. ஆனால் நாம் அவ்வாறு இல்லை! இல்லையா ஜிம்? நாம் எப்பொழுதும் நல்லவர்களாகவும், கண்ணியமாகவும், அன்பாகவும் ஒருவருக்கொருவர் இருக்கிறோம் இல்லையா? நமக்கு 2 செல்வங்கள் உள்ளனர். இரண்டு அழகிய குழந்தைகள். நம் வாழ்க்கை கீழ்த்தரமில்லை. இல்லையா ஜிம்” என்று கேட்டபடி தன் கைகளால் அவன் முகத்தை தன்னுடன் இணைத்தாள்.

“நாம் மகிழ்ச்சியோடிருக்கிறோம் இல்லையா ஜிம்?”

“நிச்சயமாக” என்று களைப்புடன் கூறினான். கோபத்தை ஒத்தி வைத்துவிட்டு, “நாம் மகிழ்ச்சியாய்த்தான் உள்ளோம். நாளைக்கே இந்த வானொலியை சரி செய்யவோ அல்லது எடுத்துச் செல்லவோ கூறிவிடுகீறேன்” என்றான். அவள் முடியைக் கோதி, “பாவம் நீ” என்றான்.

“நீ என்னை விரும்புகிறாய்த் தானே!” என்று கேட்டாள் ஐரீன். நாம் பணத்தைப் பற்றி கவலைப் படுபவர்களாகவோ, நடிப்பவர்களாகவோ, நேர்மை அற்றவர்களாகவோ இல்லைதானே?” என்று கேட்டாள்.

“இல்லவே இல்லை” என்றான் ஜிம்.

மறுநாள் கடையிலிருந்து ஒருவன் வந்து வானொலியை சரிசெய்தான். அவன் சென்ற பிறகு மிகவும் கவனத்துடன் வானொலியை இயக்கினாள் ஐரீன். கலிபோர்னியவைன் விளம்பரம் ஒலித்தது. அதைத் தொடர்ந்து பீதோவனின்  நைன்த் சிம்பொனியும் ஒலித்தது. நாள் முழுவதும் அவள் வானொலியைக் கேட்டும்கூட, ஏதும் அசம்பாவிதமாக ஒலிபரப்பப்படவில்லை.

ஜிம் வீட்டில் நுழையும் போது ஸ்பானிஷ் இசை ஒலித்துக் கொண்டிருந்தது. “எல்லாம் சரியாய் இருக்கிறதா?” என்று கேட்டான். வழக்கத்தைவிட அவன் முகம் வெளுத்திருந்ததாய்த் தோன்றியது அவளுக்கு. சிறிது பானம் அருந்திவிட்டு “ஆன்வில் கேரஸில்” இரவு உணவு சாப்பிடச் சென்ரனர்.

“வானொலிக்கான தொகையை செலுத்திவிட்டென். 400 டாலர்கள். உனக்கு சந்தோஷம் கிடைக்குமென்று நம்புகிறேன்” என்றான் ஜிம்.

“நிச்சயமாக” என்றாள் ஐரீன்.

“400 டாலர் என் சக்திக்கு மீறிய தொகை. உன்னை சந்தோஷப்படுத்த ஏதாவது செய்யவேண்டும் என்பதே என் ஆசை. இந்த வருடம் செய்யக்கூடிய பெரிய செலவு இதுமட்டும்தான். உன் உடைகளுக்கான தொகையை நீ இன்னும் செலுத்தவில்லை போல?, அதன் பில்லை உன் மேசைமீது பார்த்தேன். செலுத்தியாயிற்று என்று ஏன் பொய் சொன்னாய்?” என்று கேட்டான்.

“நீ கவலைப்படுவாய் என்றுதான் கூறவில்லை. இந்த மாதம் செலுத்தி விடுகிறேன். போன மாதம் வீட்டில் விருந்து செலவல்லவா?”

“நான் கொடுக்கும் தொகையை கொஞ்சம் புத்திசாலித்தனமாக செலவு செய்யக் கற்றுக் கொள் ஐரீன். போன வருடம் போல் இந்த வருடம் பணவரவு இருக்காது. இன்று மிட்சேலிடம் மனம்விட்டு பேசினேன். யாரும் எதையும் வாங்குவதில்லை. எங்கள் நேரமெல்லாம் புதியதொன்றை பிரபலப்படுத்தும் முயற்சியில் கழிகிறது. அது எத்தனை சமயமெடுக்கும் என்று தெரியுமல்லவா? எனக்கும் வயதாகிறது. அடுத்த வருடம் முடி நரைக்கத் துவங்கிவிடும். இதுவரை நான் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. இனியும் நடக்குமா என்று தெரியாது” என்றான்.

“ம்” என்றாள் ஐரீன்.

“நாம் நம் செலவைக் கட்டுபடுத்தவேண்டும். நம் குழந்தைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பணத்தைப் பற்றிய கவலை எனக்கு நிறைய உள்ளது. வருங்காலம் தெளிவாகவே இல்லை. யாருக்குமேதான்! எனக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் காப்பீடு உள்ளது. ஆனால் அது எதுவரை வரும் என்று தெரியாது. உங்களுக்கு செளகரியமான வாழ்க்கை அமைத்துக் கொடுக்க நான் கடுமையாக உழைக்கிறேன். என் இளமையும், ஆற்றலும், உழைப்பும், மேலங்கிகளிலும், வானொலியிலும், விருந்துகளிலும் வீணாவதை நான் விரும்பவில்லை” என்று கசப்புடன் கூறினான்.

“ப்ளீஸ் அது அவர்களுக்குக் கேட்கப் போகிறது.”

“யாருக்கு? எம்மாவிற்குக் கேட்காது.”

“வானொலி!”

“ஐயோ! எனக்குத் தாங்காது. உன் ஊகங்கள் என்னைக் கடுப்பேத்துகின்றன! வானொலிக்கு இது கேட்காது. யாருக்கும் கேட்காது! சரி கேட்டாலும் என்ன? எனக்கு ஏதும் கவலையில்லை!”

ஐரீன் எழுந்து வெளியே சென்றாள். ஜிம் கதவருகே சென்று கத்தினான். “என்ன திடீரென்று தெய்வீகமாகி விட்டாய்? ஓரிரவில் ஒழுக்கமாகி விட்டாயா? உன் அம்மா உயில் எழுதும் முன்பே அவள் வைரங்களைத் திருடியவள்தானே நீ! உன் சகோதரிக்கு, அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில்கூட அவளுக்குரிய பணத்தை தராதவள் தானே நீ! உன் ஒழுக்கமும் தெய்வ பக்தியும் அன்று நீ கருவை கலைக்கச் சென்று போது எங்குப் போனது? நீ எவ்வளவு அமைதியாய் உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு ஒரு விடுமுறையைக் கழிப்பதுபோல் உன் குழந்தையைக் கொல்லச் சென்றாய்? உனக்கு மட்டும் அறிவிருந்தால்.....!

அந்த அருவருப்பான பெட்டியின் முன், அவமானத்துடனும் வருத்தத்துடனும் நின்று அதன் விசையை இயக்கினாள். அதிலிருந்து அவளை சமாதானப்படுத்தும் குரலோ அல்லது ஸ்வீனியின் தாதியின் குரல் கேட்காதா என்று எதிர்பார்த்தாள். கதவின் அருகிலிருந்து ஜிம் கத்திக் கொண்டிருந்தான்.  வானொலியில் இருந்து வந்த குரல் கனிவாகவும், இயந்திரத்தன்மையுடனும் இருந்தது.

“டோக்கியோவில் ரயில் தடம் புரண்டது. 29 நபர்கள் மரணமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பஃபல்லோ அருகிலுள்ள கண்ணிழந்த சிறார்களின் மருத்துவமனையில் பரவிய தீ, இன்று காலை கன்னியாஸ்திரிகளால் அணைக்கப்பட்டது. வானிலை – வெட்ப அளவு 47, ஈரப்பதம் 89”.

.

Wednesday, August 20, 2014

சின்ட்ரெல்லாக் கனவுகள்


ஒத்தைசெருப்பும்
பரங்கிப்பழமும்
மட்டுமல்ல
கந்தலாடை ஒதுக்கி
மனம் நோக்கும்
இளவரசனும்
உண்டு படக்கதையில்.
இருந்தும் ஏனோ
இன்னும் ஆயிரம் பேர்
கையில் பிய்ந்த செருப்பை
ஏந்திக்கொண்டு
கண்ணில்
சின்ட்ரெல்லாக் கனவுகளுடன்.
பாவம் அவர்கள்
அறிவதில்லை
தேவதைக் கதைகள்
தேவதைகளுக்கு மட்டுமே
என !

Wednesday, January 22, 2014

இரண்டு கவிதைகள்

சுள்ளி சுள்ளியாய்
சேர்ந்தமைந்த ஞாபகக்கூடு
புழங்கா வீட்டின் ஒட்டடை ஆடை
முத்தாய் மாற அரித்து வளரும் எண்ண உறுத்தல்
காலம் கெட்டித்த மரக்கல்
அரவத் தாத்தன் முழுங்கிய நாகமணி
அசையாதிருந்த யானை கர்ப்பம்
பறங்கியன் புதைத்து வைத்த திராட்சை ரசம்
பழுத்தது
பழுத்தது
சிதறியது
புரண்டது
காலம் தின்றது
காலத்தை தின்றது
நாகமணிக் கல்
ஆம்.


-------------------------------------------------------------------------------------------

 நீ எதுவேண்டுமானாலும் சொல்..
என்ன வேண்டுமானாலும் எழுது..
ஆனால் என்னைக் கண்டடைந்த
இக் கந்தர்வ குழலின் இசைக்கு
இறங்கி வரப் போவது யார்
என்ற என் கனவினை மட்டும்
கேலி செய்யாதே..
நான் அசரும் வேளையில்
ஒரு முறை அதை
வாசிக்க நீ முயல்வதும் எனக்குத் தெரியும்.
போகட்டும் போ
உன் அசல் முகம் எனக்குத் தெரியும்
என்ற கர்வத்தில் தான்
உன் அசட்டுத்தனங்களை எல்லாம்
புறம் தள்ளி போகிறேன்.
குழலிசைத்து எனையழைத்து
மேலும் அசடனாகாதே நீ!

Thursday, November 14, 2013

திரு ராஜசுந்தரராஜன் சார் அவர்களின் என் நூலைக் குறித்த மதிப்புரை. நன்றி சார்.

                                நாய்க்குடைகள் மலர்ந்த கொல்லை


கவிதை எழுதுகிறோம், வாசிக்கிறோம்; அதனால் என்ன பயன்? தொலைக்காட்சித் தொடர்களாற் பொழுது போக்குவதை ஒப்பிட, கவிதைப் பரிபாடிகளினால் வந்து கூடும் ஆக்கப்பேறு என்ன?

புரிதல், புரிந்துகொள்ளுதல்,
இந்த இரண்டு தண்டவாளங்களின்
நடுவே
நகர்கிறது நம் நட்பு...

என்கிறார், “புரிதல்” என்னும் கவிதையில் கவிஞர் பத்மா. முதற் சொல் ‘புரியத்தருதல்’ என்று வந்திருக்க வேண்டுமோ என மண்டையைக் குழப்பிக்கொண்டேன். ஆனால், “துல்லியம் நிறுத்து எழுதாக் காலையும் உள்ளுறை உணர்த்துவ கவிஞர் வாய்ச்சொல்” என்னும் தன்னறிவினால், ‘புரிதல்’ வேறு என்னென்ன பொருள் தரும் என்று, அகரமுதலியைக் கலந்தேன்: புரிதல் = முறுக்குதல், ஆக்குதல், பொருந்துதல், மேவி ஆராய்தல், மனம் விரும்புதல் என்றெல்லாம் புரியக் கிடந்தது. ‘ஆக்குதல்’ என்னும் பொருள் தேர்ந்து வாசித்துப் புரிந்துகொண்டேன். அதாவது, என் வாசிப்பில், ‘புரிதல்’ = செயல்பாடு என்றும், புரிந்துகொள்ளுதல் = உள்ளுறை அல்லது மனக்கிடை உணர்தல் என்றும் பொருள்பெற்றன. இங்கே, கவிதை புரிதலுக்கு (யாத்தலுக்கு) அப்பாற் பட்டதாகக் கவிதை வாசித்தல் (புரிந்துகொள்ளுதல்) கட்டுமானிக்கப் படுவதைக் கவனிக்க!

உலகமயமாக்கலினால் ஊதியம் இன்னின்ன என்று, வானொலித் தொகுப்பாளினி ஒரு பட்டியல் இட்டாள். மறுத்துப் பேசிய மறுமுனை ஒருவர், மட்டைப் பந்தாட்டத்து இந்திய உட்குழுக்கள் பன்னாட்டினராலும் இயன்றவை ஆயினும், தமிழ்நாட்டினராகிய நாம், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ வென்றாக வேண்டும் என்றே விரும்புகிறோம். இதே உணர்வுதான் தேசிய எல்லைகளாலும் நம்மைப் பீடிக்கிறது. பாதுகாப்புக்காகச் செலவுசெய்கிற பணத்தை ஆக்கப் பணிகளுக்குத் திருப்பினால், இவ்வளவு நலிவு நம்மிடையே இருக்க வாய்ப்பில்லை; ஆனால் அது ஒருபோதும் நடக்காது என்பதே நடைமுறை என்றார். அதாவது, ‘நாய் பூனை எலி கூடி அணி கோர்த்தாலும் ஓயாதே வரப்பு வாய்க்காற் சண்டை’ என்கிறார்.   

பிரிவினைப் பொருத்தின் பன்மைத் தன்மையாற் பாகம்பட்டதே சமுதாயம். பல இனக்குழுக்களின் பல சமய வழிபாடுகளின் கூட்டுக் கலவை அது. ஒரே இனக்குழுவின் ஒரே சமயத்தினரிடையே கூட வேறுவேறு கொள்கைகள் தறிகெடக் கூடும் - யானைக்கு நாமம் தெற்கா வடக்கா என்பது போல.

வேண்டாம் என அறிவு மாற்றி வைக்க,
வேண்டும் என இதயம் இரங்கி நிற்க,
ஆம் இல்லை என மனம் பிரித்துப் பேச,
தேடலின் விடையாய்
...
என் சிரிப்பின் விலையாய்
...
அருகிலேயே இருப்பினும்

நெடுந்தூரப் புள்ளியாய் நீ

இவை கவிஞரின் “புரிந்ததா?” என்னும் கவிதையின் வரிகள். தொலைக்காட்சித் தொடர்களிற் போல, ‘இன்னார் ஆளுக்கு இன்னாரோடு இது’ என்று முடிச்சுப் போட்டு அவிழ்ப்பது இல்லை கவிதை. இடைநிலை விண்ணக மயன்வினை அது. உவமித்தல் வழி, உள்ளதை உணர்த்துவது.

அறியக் கிட்டுகிற உலகம் கட்டுமானிக்கப் பட்ட ஒன்று என்று புத்த பெருமான் சொல்லிச் சென்றதின் பின்னும், ஆயிரக் கணக்கில் ஆண்டுகள் அலைவுண்டு, இன்றுதான் கண்டதே போலப் ‘பின்நவீனத்துவம்’ என்று பெயரிட்டுப் பேசுகிறோம். வேறுவேறு கடவுள்கள், வேதங்கள், சைத்தான்கள் உட்பட, இவ்வுலகம் கட்டுமானிக்கப் பட்டதாகவே வந்திருக்கிறது. கவிதையும் கூடக் கட்டுமானிக்கப் பட்ட ஒன்றே. கவிதை வாசிப்பும் அப்படியே. ஆனால் அதன் இலக்கு, எங்கெப்போதும், கட்டுக்குள் சிக்காதது.

சிறிது மூடியிருந்த
கதவின் இடையில்

தெரிந்த
உன் பாதங்களுக்கேற்ற
முகத்தை
நான் மனதில்
வரைந்து விட்டேன்
.
வரைந்த அது

சிதையப் போகிறது

தயவு செய்து

என் கண்படாமல் போ நீ!

‘அறிந்த உண்மை கட்டுமானிக்கப் பட்டது’ என்னும் கருத்தினை மறுத்து, 1) ‘அது செய்முறை ஆய்வு கொண்டு நிறுவப் பட்டது’ என்றும்; 2) ‘அது தொன்றுதொட்டு மரபுவழி வகுக்கப் பட்டது’ என்றும்; 3) ‘அது உள்ளுணர்வோடும் இயற்கையோடும் ஒருங்குபட்டது’ என்றும் கருத்து வேறுபடுவார் உளர்.

இவர்களில், அறிவியற்-படிவரைக் கொள்கையரும் சமய-மரபியற் கொள்கையரும் ‘பரிணாமம்’, ‘படைப்பு’ என்பதில் அல்லால் பாரியதாக மாறுபடுபவர் அல்லர். எனவே  இவர்களுக்கு உண்மை என்பது ‘ஆகி வந்தது’ அல்லது ‘ஆக்கித் தரப்பட்டது’ அவ்வளவே. உள்ளுணர்வு-இயற்கைக் கொள்கையர் தமக்கோ உண்மை என்பது பின்நவீனத்துவக் கூற்றொப்பவே கட்டுமானிக்கப் பட்டது, ஆனால் தொன்மைக்குள் வேர் மீள நீட்டி ஈரந் துழப்பது.

இருவரிகட்கிடை உறை 
பொருளறியாதவன் வெறும் 
வார்த்தைகளை மட்டுமே வாசிக்கிறான்.  (“யாருக்கும் புரியாக் கவிதை”)

கட்டுமானிக்கப் பட்டதே கவிதை என்றாலும், கட்டுமானிக்கப் படாததை இலக்கு எனத் தேர்வதால், மேலே சொன்ன கொள்கைகளில், உள்ளுணர்வு-இயற்கைக் கொள்கையொடு ஒருங்குபடுவதே கவிஞர்தம் இயல்பு. ஆனால் அம்மட்டோடு அமையாமல், அறிவியலோடும் மரபினோடும் கூடிப் ‘புரிதல்’ கொள்வதும் அவர்தம் பண்பாடு. ஆக, ‘படைக்கப் படா’ததை ‘பரிணமிக்கப் பெறா’ததை எய்தவே கவிதைள் எழுதுகிறோம்; வாசிக்கிறோம். தொலைக்காட்சித் தொடர் போலப் பொழுதுக்கொலை புரிவதற்காக அல்ல. (ஓ! இத்துணை செறிஇயைவுச் செயல்பாடா கவிதைத் தொழில்!!!)  

  •  

பத்மஜா என்கிற கவிஞர் பத்மாவை, பா.ராஜாராம் அவர்களின் புதல்வி, மகாவின் திருமண விழாவில் சிவகங்கை வந்திருக்கக் கண்டேன். “என் கவிதைகளை வாசித்து இருக்கிறீர்களா?” என என்னை வினவினார். “இல்லையேம்மா,” என்று உண்மையால் குறுகினேன். “அப்படிச் சிறப்பாக ஒன்றும் இருக்காது. நேரம் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்!” என்று அவரும் அவையடக்கம் காண்பித்தார்.

சென்னை திரும்பியதும் அவரது வலைத்தளத்தைத் திறந்து நான் வாசித்த முதற் கவிதை (உண்மையில் அது ஒரு பாட்டு), “கண்ணா!!". என் பதின்ம வயதுகளில் நானும் சந்தக் கவிதைகள் எழுதிக் கிழித்தவன் என்கிற வாசனை காரணமாகலாம், “கண்ணா!!” எனக்குப் பிடித்துப் போயிற்று. அதை அடுத்து நான் வாசித்தவை எல்லாம் காதற் கவிதைகள். நவீனத்துவக் காலகட்டத்தில் கவிதை எழுதிப் புத்தகம் போட்ட எங்களில் யாரும் அவ்வளவாகக் காதற் கவிதைகள் எழுதியதில்லை. அப்படியே எழுதியிருந்தாலும் அதற்குள் ஓர் இறுக்கம், வறட்சி காய்ப்புக்கண்டு வாசிப்பவரை உணக்கக் கூடும். அப்படி அல்லாமல் கவிஞர் பத்மாவின் காதற் கவிதைகள் புதுவனவாக, எளியனவாக, மூளையோடு அல்லாமல் உள்ளத்தோடு மொழிவனவாக இருந்தன.

இவ் வார்த்தை விளையாட்டில்
நாமறியாமல் ஈடுபட்டு

வார்த்தைகள் தேடிக்கொண்டே

கண்களால்
கதைக்கிறோம் நாம்      (“வார்த்தை விளையாட்டு”)

என்று கவிதையின் மிடையம் (மிடைதல் > முடைதல் = ஊடு பாவிக் கட்டுதல்) ஆகிய வார்த்தைகளின் வழியேதானே வார்த்தைகளைக் கழித்துக்கட்டக் கண்டேன். மட்டுமல்ல, இந்தக் கழித்தல் வினை, ஒப்பனை வார்த்தைகளால் கவிதைக்கு முகப்படாம் சார்த்துவாரோ என்று எனக்கிருந்த அச்சத்தையும் போக்கியது. ஆனால், வாசித்து மேற்செல்லுகையில்,

டெக்டொனிக் தகடாய்
தடுமாறும் மன அணுமயக்கம்
சிறு பொறி காட்டுத்தீ

ஸ்பரிச மின்னல்
காலம் அழிந்து
விண்வெளி அணுக

நிலம் நோக்கி

வியர்வைக் கடல்.   (“தீங்குளிர்”)

என்னும் ஒரு கவிதை கண்டு, உண்மையில், வெருண்டு போனேன். ஏனென்றால் இது நவீனத்துவ காலத்துப் படிம இறுகல். பின்நவீனத்துவ காலத்துக்குப் பிந்திய ஒரு பெண்பாற் கவிஞரிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இவரிடம் நான் எதிர்பார்த்தது என்னவென்றால் காமர்விதந்தோதல் (romanticism). ஆனால், நல்ல வேளை, இப்படி ஒன்றிரண்டு இறுகல்தான் இத் தொகுப்பில் உள்ளன.

கொன்ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
எம்இல் அயலது ஏழில் உம்பர்
மயில்அடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே (குறுந். 138) 

கொல்லன் அழிசி எழுதிய இக் கவிதையின் இலக்கு, தனிமை அல்லது தாபம் அல்லது வீழ்ச்சி அல்லது வேறு ஏதோ...

(‘நொச்சி’ என்பது, சூலுறுப்புக் கோளாறுகளை நீக்கவும் பால்வளம் பெருக்கவும் பயன்தரும் ஒரு மருத்துவத் தாவரம். இதனை உட்கொண்டால், பெண்ணுக்கு இச்சைத் தூண்டலும் ஆணுக்கு மட்டுப்படுத்தலும் விளைவு வரும். அதாவது முழுக்கமுழுக்கப் பெண்தன்மைப் பெற்றியுள்ள தாவரம் இது. ‘கொன்’ என்பதற்கு, வீண், பெரிய, கொலை என்றெல்லாம் பொருள். ‘துஞ்சு’ என்பதற்கு, மடிதல் என்றும் பொருள். ‘ஏழில்’ என்பதற்கு, நன்னனது மலை, ஏழு ஸ்வரம், ஏழிலைப் பாலை (பேய் குடியிருப்பதாக நம்பப்படும் மரம்) என்றெல்லாம் பொருள். ‘மயில்அடி’ - இதை உணர்த்தவே முப்பிரிவு-இலைக் கருநொச்சியைச் சொன்னார் ஆகலாம். மயிற் புணர்ச்சியோ அலட்டலும் கூச்சலும் நிறைந்தது. ‘ஊழ்த்தல்’ என்பதற்கு, முதிர்தல், பதனழிதல், உதிர்தல், சொரிதல் என்றெல்லாம் பொருள். ‘பாடு’ என்பதற்கு, உலகவொழுக்கம், ஓசை, முறிதல், வீழ்தல், துயில் என்று பொருள்.)

பூ உதிரும் சத்தம் ஒருத்திக்குக் கேட்கிறதா? அதுவும் எட்டுக் கட்டையில் (ஏழில் உம்பர்) உரத்துக் கேட்கிறதா? என்றால், அது எப்பேர்ப்பட்ட தனிமை! இப்படித்தான் பொருள் புரிந்து வந்திருக்கிறோம். தப்பில்லை. ஆனால், விரகம், விரக்தி, நாயகி-பாவம் என்றெல்லாம் விரிந்தாழும் இதன் பரிமாணங்கள்...!!!

இருக்கட்டும், அதனால் என்ன பயன்?

கொல்லன் அழிசி படைத்த அவளுக்கு நேராததா உனக்கு நேர்ந்துவிட்டது? பொத்து! ‘யாம் துஞ்சலமே’ என்பதற்கு, “இவ்வளவுக்குப் பிறகும் நான் மடியவில்லை பார்!” என்று நேர்முறைப் பொருள்கொண்டு வாழ்க்கையை நேரிடு!


சிலந்தியின் வலை பின்னும் ஓசையும்
மரண ஒலியாய்...                  (“பொழுதோட்டல்”)

அந்த ஓட்டைக் குழாயின் நீர்சொட்டும் ஒலியில்
நாள் தவறாது உனது பெயர்.
எப்படித் தூங்குவேன் நான்?         (“எப்படி இயலும்?”)

என்று அதே தனிமை, விரக்திக்கு ஒலியைப் பெரிதுகேட்டுத் தொல்லைப்படும் ஒருவராய்க் கவிஞர் பத்மாவும். இது ‘நகல்’ எடுத்தலா என்றால், அப்படி எல்லாம் இல்லை. அவரதும் இவரதும் முதல்/கருப் பொருட்கள் (settings) வேறு வேறு. பிறகும், “சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்/ சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்” என்று பாரதியும் சொல்லியிருக்கக் காண்கிறோம். {||சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்/ சொல்லிய வண்ணம் செயல்|| - (குறள் 664)}

If there were the sound of water only
Not the cicada
And dry grass singing
But sound of water over a rock
Where the hermit-thrush sings in the pine trees
Drip drop drip drop drop drop drop 
But there is no water                 (“The Wasteland”)
  
என்று இன்மையை ஒலிக்குறிப்புகளால் கட்டமைக்கிறார் டி. எஸ். எலியட்டும். இது நம் மரபு. அவ்வளவுதான்.

கொள்கை சார்ந்து எழுதுபவர்கள் கூட, கவிஞர்கள் ஆகிற போது பிரிவினைப் பொருத்துகளுக்கு மேலாகி, வாசிக்கிற நம்மையும் கட்டுமானத்துக்கு அப்பாற்பட்டதை உணர ஆற்றுகிறார்கள். பிளாட்டோ எழுதிய “தெவ்வழக்குகள்” (“Dialogues”) வாசிக்கையில், சாக்ரெட்டீஸால் வினவப்பட்டு எவராலும் வரைவிலக்கணம் காணமுடியாத உண்மைகள் பல உள்ளதை அறிந்திருப்பீர்கள். அவ் உண்மைகள் பால் ஆற்றுப்படுத்துவதே காலதேசமாகக் கவிஞர்தம் பணி. 

உன்னை முதல் முதலாய் பார்த்த போது
எச்சில் பறக்க விசிலடித்து

இல்லாத பேருந்தை ஓட்டிய சிறுவனின் பயணியாய்

சீட்டு வாங்கிக்கொண்டு இருந்தாய்;
இறங்குமிடம் வந்ததும்
அந்த ஓட்டுனர் மல்யுத்த வீரனாக,
அவனிடம் அடி வாங்கி தோற்றுபோய்
கைகால் வான் நோக்கி
விட்டுவிட கதறியபடி இருந்தாய்;
இந்த விளையாட்டுக்கெல்லாம் வராத
எனக்குமட்டும்
எப்படி ஒரு பரிசாய்
அந்தப் புன்னகையைத் தந்தாய்?
இப்போது நானும்

இல்லாத இராட்டினத்தில்..
சுற்றும் ஒரு சிறுமியாய்!        (“சிறுமியானேன்!”)


இதுதான் கவிஞர் பத்மா. அனுபவம்; காட்சி; காண்பவர் தம்மில் வரும் மாற்றம். அம் மாற்றமும் வெள்ளந்தியான ஒன்று. ‘பிரச்சனைகளை நேர்கொள்ளாமல் தப்பித்தலா இது?’ என்று அவரை நேரிட நேர்ந்த சில சந்தர்ப்பங்களை வைத்து யோசித்தேன். கண்டதோ, ஆனால்,  
அவளழுத அந்த 
மழை நின்ற மாலையில் தான்
கொல்லை முழுக்க 
நாய்க் குடைகள் 
மலர்ந்து நின்றன..
                                                              
அவளைப் போலவே!

-     ராஜசுந்தரராஜன்
சென்னை
ஏப்ரல், 2012