Tuesday, March 17, 2020

சகா 13

என் நினைவு வரும்போதெல்லாம்
கடல் மேல் கல்லெறியாதே
அலைகள் காதல் இசைக்கின்றன!

என்னைப் போல்
வானோக்கி கண்ணீர் வீசு
நட்சத்திரங்களாகட்டுமவை.

பின் இரவில்
ஒலியிலாது சத்தமிடு
நாமறிந்த science
கொண்டு சேர்க்கும் அதை
திரைப்படம் போல்
என்றெள்ளாதே
என் இறுதி மூச்சில்
என் இருகைகள் பற்றிச் சொல்
என் கண் முத்து.

வா!
கடை நாட்களிலாவது
பொய் தள்ளிச்
சாவோம்.

சகா 12

கொன்றும் தின்றும் விடுகிறது
ஒரே ஒரு வார்த்தை.
இந்த நாளை ஆக்கியதும்
இவ்விரவை நீட்டிப்பதும்
ஒரே வார்த்தை.
கொலை செய்யும் கருவியை எய்து
பின் கண்மூடி விட்டால்
,நானென்ன செய்ய?
வேறெங்கு போக?.
மாயாது மாய்ந்து
அச் சொல்
தின்ன விழைகிறேன்.
அச்சம் நீக்கடா நீக்கு.

சகா 11


அந்தஒற்றைக்
காகக் கரைதலின்
ஊடே உன்
காதலை உணர்த்தியிருக்க
வேண்டாம்
பிச்சிப்பூ மலரும்
அந்நான்கு மணி
வெயிலில்
ஆண்டாளாய் ஆனேன்
என்பதை அந்தத் தோளமர்ந்த
காகம் தவிர யாரறியக் கூடும்?
இனி
குயில் பாடும் நேரம் கேட்டு
காதல் பேசு
கிளிக்கெல்லாம் ஆசையில்லை
எனக்கு.

சகா 10


மழைக்குளிரில்
நடுங்கிய படி
அமர்த்தலாய் நோக்கும்
அக்காகத்தை இப்பொழுது நடந்து
கடக்க வேண்டும்.
மூன்று மணி வெயிலில்
என் வயிறதிர குரல் எழுப்பும்
அதன் அலகுகளோ
ஒட்டி மூடிகொண்டிருக்கின்றன.
இது போன்ற வேளைகளில்
மழைகூட வெறுக்கப்படுமொன்றாய் மாறிவிடுகிறது.
ஏனெனில்
ஒரு துளி பட்டுச்சிலிர்த்துக்
ஒலிக்கும் அக்காகக்குரல்
அச்சசல்
உன் உச்சக்கூவலைப்போலவே
கேட்கிறது
சொல்!எதாவது சொல்.
ஆனால் அது நீதான் என்று மட்டும்
கூறிவிடாதே!

சகா 9


பட்டாம்பூச்சிகள் சதா அலையும்
வனமொன்றை கண்டிருக்கிறாயா?
அவை நம் மனம்
அவை நம்மாசை
அவை நம் பதற்றம்
அவை நம் வயிறேரத் துடிக்கும் பரவசம்
சகா
அவ்வனத்தில் நிற்கிறோம் காண்.
வா
அவை மின்மினிப் பூச்சிகளாகுமுன்
நம் மடி ஏந்திக் கொள்வோம்
ஒரு முறையேனும் வாழட்டுமவை.

சகா 8


உன் இருண்ட நாட்களின்
தனிமைப் பாதையை
ஒளியேற்ற
ஒரு வார்த்தையை அனுப்பி வைக்கிறேன்
உன் இமைகளில் அதைப்
பற்றிக்கொண்டிரு.
என்னிருள் அகற்றும்
சாதனமும் அதுவே.
ஆம்!
இப்படித்தான்
வார்த்தை ஒளியால்
தனிமையகற்ற
கற்க வேண்டும்.
நானற்ற நீயும்
நீயற்ற நானும்.!

சகா 7


நிலா உடனோடி வரும்
ராஜா இசையை
உண்டு திளைக்கும்
பயணக் கனாவொன்று கண்டேன்.
அவ்வப்போது சிலிர்த்தது
மனதுடலும்.
என் கைத்துளாவலில்
சிக்காமல் போகும் உன் கை காணாது
பதறி எழுகிறேன் நான்
பின்னும் துளாவும் கைகளுக்கு
சிக்கியதா இல்லையா உன் கை
என்பது தெரியாமலே போகட்டும்
அதுவும் ஒரு கனாவென.

சகா 6


வயதாகிவிடும் என்றதுன் அச்சம்
வீணாகிப் போனதால்
ஊசித் தழும்புகள் நிறை
வயிறு தடவாது
போனதுன்கை
வயசி நரை கண்டு நிற்க
உன்னைச் சேரா வயோதிகம்
என் மேல் மட்டும் குவிகிறது.
திரை படர் கண்
நீரற்று காய்கிறது
கிறுக்கி கிறுக்கி கிறுக்கியாகும்
இவளை நோக்கி
உன் பற்களைக் காட்டாதே
நாளையும் வரும் காண்
இப்புலம்பல்
சேர்த்து வை உன் புன்சிரியை
கடனாகக் கூட
வேண்டலாமதை.

ஆம்

சிறுமீனுள்
புகுந்த
திமிங்கலமென
சிறு கவிதைகள்
பெரும் பொருள்
தந்து விடுகின்றன
சில சமயங்களில்.

---------------------------

இம் மனிதத் தோலுக்குள்
பாதி போரும்
பாதி அமைதியுமாய்
சபிக்கப்(வாழ்த்தப்) பட்டிருக்கிறேன்

அம்மை



சிறிது கன்னம் பருத்து
தன் அம்மை போல் தோற்றமிடும்
பெரியபாளையத்தவளையும்
வெக்காளித் தாயையும்
பூஜையறையில் மாட்டிவைத்து
மா...மா....வென்று
கொஞ்சுகிறாள்,கோபப்படுகிறாள் அவள்.
காலைகண் விழித்து உடன் காண
வாகாய் மாட்டிய
அம்மாவின் புகைப்படத்திலிருந்து
புன்சிரியுடன் கீழே விழுகிறது
மாலையிலிருந்து ஒரு மல்லிகைப்பூ.

பனிக்குல்லா



மென் பனி விழும் மாலையில்
குப்பை வண்டியை
தள்ளிக்கொண்டு வருகிறாள்
பிரசவ விடுப்பு முடிந்து அவள்
அருகிலேயே மூன்று மாத சிசுவை
ஏந்தியபடி அவள் கணவன்.
இனிப்பக வாசலின் குப்பையை
வாரும் அவள்
அபூர்வமாய் எறியப்பட்ட
நெகிழிப்பை ஒன்றை
ஆவலுடன் தேர்ந்தெடுத்து
சிசுவின் தலைக்கு
குல்லாவாக்குகிறாள்
உறக்கத்தில் சிரிக்கிறது மதலை
தாளாது துளிர்க்கிறது
கண்ணில் நீர்.

சகா 5

சகா
------------
பிரதிமை எனத் தெரிய ஒரு நொடி தான்
கூறிவிடத் தான் ஒரு சகாப்தம்.
அந் நொடி பற்றி
உயிர்த்தீ ஊழித்தீ வெம்புகிறது
கடந்து வந்த பாலங்களை
எரித்து விட்டோம்
முன் நோக்கவும் முடியாமல்
பின் செல்ல வழியில்லாமல்
இருக்கும் இருப்பை
வாழ்க்கை என்று கூறும்
உலகத்திற்கு
ஓரு smiley ஐ
அனுப்புவதைத் தவிர
வேறொன்றும் தெரியவில்லை
என் பிம்பமே சொல்
நீ என்னக் கூறப்போகிறாய்
நம்மை மறந்த வாழ்க்கையிடம்?
அதற்கு பதில் கூற
உன்னிடமும் கைவசம்
Smiley இருக்கும் தானே?

சகா 3

சகா
====
உனக்குத் தெரியும் தானே
ஜீவனற்றவை
உயிரோட்டத்தில் கலந்து விட்டால்
அஜீவன் ஜீவனடையுமென
சென்றும். உள்ள ஓரு கால வெள்ளம் தான்
உதிர்ந்த இம்மனச்சிறகை
படபடக்கச் செய்கிறது
பார்! காணும் அனைவரும்
சிறகணைக்க பறக்கின்றனர்.
கைகிட்டும் போதல்லவா தெரியும்
அது சவச்சிறகென.
உனக்கென்ன?
எப்பொழுதுமே
VOYEUR தானே நீ
சிறிது நேரம்
அப்புன்னகையை மறைத்துக் கொள்ளேன்
கொஞ்சம்

சகா 2

சகா
====
கூறினால் நிந்தனை
கேலி முகச்சுழிப்பு வரத்தான் போகிறது.
ஓரு இருபது ஆண்டுகள்
மனதை பின்செலுத்தி
பட்டாம் பூச்சி பறக்க வைக்கும்
வித்தை உன் இரு வார்த்தைகளில்
இருப்பதறிவாயா?
வயசியாய் என்று தான் உணர்வது?
இனி மறந்தும் கூட உச்சரித்து விடாதே
பார்ப்போம் என்று.
இயலாதவைகள் இயலாதவைகளாகவே
மரித்து விடட்டும் இச் ஜென்மத்தில்.
நம்பிக்கையை மட்டும் உயிர்பித்து விடாதே!

சகா 1

சகா
தார்க் கருமை கீறி
தூரத்து சிவப்பொன்றை
தொடர்கிறது என் பயணம்.
இசை தேவன் நரம்புகளில்
ஒரு புள்ளைஉலவச் செய்கிறான்
ஆயிரம் நட்ச்த்திரங்களை
மழையென அனுப்பி
ஆசிர்வதிக்கிறது வான்.
இதை மட்டும் நான் கேட்கவா?
உன் உள்ளங்கைக் கதகதப்பை
கொஞ்சம் எனக்குக் கடத்திவிடேன்
உயிர் அதில் சாய்த்து
சிறிது உறங்கிக் கொள்கிறேன்