ஒவ்வொரு புடவையும்
நெய்யப்படும் போதே
தான் யாருக்கென
தீர்மானித்துக் கொள்கிறது
உரியவளின் கை
தன்னை தொடும் வரை
அது தன் அழகை
வெளிக்காட்டிக் கொள்வதே இல்லை
ஆயினும் சிலசமயம்
அது ஆள் மாறி சேர்ந்து விடவும் கூடும்
ஒரு சிலைக்கு
உடுத்தப்படுவோம் என்றாசை பட்ட ஒன்று
எங்கோ பிரிக்காமல்
உறங்கியே கிடப்பதுண்டு.
ஆசீர்வதிக்கப் பட்ட சேலைகள் தான்
திருமணத்திலும்
வளைகாப்பிலும்
மிளிர்கின்றன
எனினும்
ஒரு சிறுமி தன் தாய்க்கு
பரிசளிக்கும் சேலை
எல்லாவற்றிலும் உன்னதமகின்றது .
நெய்யும் போதே
வ்ரக்தி அடையும் புடவைகள்
எப்படியோ இறுதி ஊர்வலத்தில்
பங்காகின்றன
பல சேலைகளின் அழகு
அதை பிரித்து அணியும் போது தான் வெளிப்படுகிறது
ஆயின்
சில சேலைகள்
கலை(ளை)யும் போதே
மிக அழகாய் தெரிகின்றன .