Wednesday, January 18, 2012

திருத்தி எழுதப்படாத மரண சாசனம்


                             
    


ஆம்!
இவர்களுடைய மரண சாசனம்
ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது

ஒவ்வொருவருடைய
முதுகெலும்பும் பிரித்தெடுக்கப் பட்டு
எழுதுபவர்களின் ஆயுதமாய்
மாறிக்கொண்டிருக்கிறது .

இவர்கள் கண்களால்
பார்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது !

எண்ணங்களை உடைக்கும் வழியை
அவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் .
எண்ணுவதை இவர்கள் நிறுத்தி
யுகமான போதும் .

உயிர் விடும் சமயம்
ஒரு துளி நீர்
வாய்பட வேண்டி
இவர்கள்
சாசன திருத்த மனு செய்துள்ளனர் ;

ஒரு துளி, வெள்ளமாய் மாறும்
சாத்தியமிருப்பதில்
மாற்றத்தை அவர்கள் தாமதிக்கின்றனர் ..

ஆக
மரணம் அருகும் வரையிலாவது  ...

11 comments:

rajasundararajan said...

'இவர்கள்' உள்ள இடங்களில் 'அவர்கள்' ஏனும் 'அவர்கள்' உள்ள இடங்களில் 'இவர்கள்' இடப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது - இது தமிழில் எழுதப்பட்டு இருப்பதினால்.

அல்லது என் வாசிப்பு தவறானதோ?

ஹேமா said...

ஈழத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தேன் வரிகளை.மிகவலி !

க ரா said...

Good One.

Madumitha said...

நிறைய யோசிக்க வைத்தக் கவிதை.
ஆம்.
துளி வெள்ளமாய்ப் பெருகும்.

ரிஷபன் said...

எண்ணங்களை உடைக்கும் வழியை
அவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் .
எண்ணுவதை இவர்கள் நிறுத்தி
யுகமான போதும் .

முரண் சுவாரசியம்

rishvan said...

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

rajasundararajan said...

எப்படி வாசித்தாலும் அர்த்தமாகிறது. அரசியல் கவிதை இது என்பதும் புரிகிறது. எதிர்பார்க்காத தளங்களுக்குப் போய் மிரட்டுகிறீர்கள், சற்று விலகி இருக்க வேண்டுமோ நாங்கள்?

ஹ ர ணி said...

பத்மா இடைவெளிவிட்டு வந்தாலும் இக்கவிதை என்னை அசைத்துவிட்டது. உடனே மனக்கண்ணில் எனக்கு ஈழமும் அவர்களின் முந்தைய துன்பங்களின் வடிவங்கள் எல்லாம் மனக்கண்ணில் ரத்தம் சிந்த வைக்கின்றன. இப்போது அங்கு நிலை என்னவென்பது தெரியவில்லை.

இரண்டாவது வாழ்ந்து முடித்துவிட்ட வயதானவர்களின் கடைசிப்பாடாகவும் இக்கவிதையைப் பார்க்கிறேன்.

வாழ்கிற காலத்தில் வாழ்க்கை மறுதலிக்கப்பட்டவர்களின் பிரதிநிதித்துவமாகவும் உங்கள் கவிதைகளைப் பாரக்கிறேன்.

பொதுவாக ஒரு கவிதை பல பொருண்மைதளத்தில் யோசிக்க வைக்கும்போது அது மிக உயர்ந்த நிலைக்கு செல்கிறது. மனமார்ந்த பாராட்டுக்கள்.

Unknown said...

உயிர்வலி கொடுக்கும் கவிதை!!

பத்மா said...

இந்த கவிதையை வாசித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி .நிஜமாகவே மனது வேதனையோடு எழுதியது இது.
ராஜ சுந்தர்ராஜன் சார் சொல்வது போல இதில் அனைத்தும் பொருந்துகிறது சில சமயம் பெண்களும் கூட .

Ashok D said...

இத எதிர்பார்க்கல gud... :)