Tuesday, January 24, 2012

ஆண் பெண்ணாய் விளங்கும் அர்த்தநாரிகளுக்கு


ஐயா!  அம்மா !
எதுவாய் இக்கணம் உணர்கிறீர்களோ
அதுவாய் ஏற்றுக்கொள்ளுங்கள் .
உங்கள் ஆன்மாவில்
இரு உடைகளைத் தந்து
இயற்கை உங்களை 
ஆணும் பெண்ணுமாய்
நெய்திருக்கிறது .

கால்சராரையும்  உள்பாவடையையும்
நேசிக்கும் உள்ளம்
உங்களுக்கு வாய்த்திருக்கிறது..

முதுகெலும்பை தொலைத்த ஆதாமை
பெண்மையான வைனினால்
குளிர்வித்த நேரம்
கோபம் தணிந்த
மதுக்கடவுள் மலர்வித்த உடலிது .

எலும்பு பிரித்து,பிரிந்த ஏவாளும் .
அதனையிழந்து தவிக்கும் ஆதாமும்,
மணமுடிச்சில் தான்  ஒருடலாகின்றனர்.

தொலைத்த பெண்மையை ஆணும்
விழையும் ஆண்மையை பெண்ணும்
அடைந்து ஆண் பெண்ணாய் மாறவே திருமணம்..
ஆக
அர்த்தநாரமே உன்னதம் .

உங்கள் அங்கங்கள் ஒவ்வொன்றிலும்
இருபால் சுமக்கும்
அதிசயம் நீங்கள் .

மென்மையும் வன்மையுமாய்
அடங்கியும் அடங்காததுமாய்
பட்டு போன்ற முடிகளிடை
மன்மத வில்லின் நாணிற்கு
கடி முடி வளர்க்கும்
அற்புதம் நீங்கள் .
காதலாய் ஒரு கையும்
கடப்பாரையாய்  மறு கையும்
வளர்ந்த
பேருண்மை நீங்கள் .

உங்களின் விழிமணிகள்
ஒன்று வீனஸாகவும்
மற்றொன்று அடோனிஸாகவும்
அன்றோ அசைகிறது!

உச்சி வெயிலாய் சுடும்
உங்களழகுப்  பாதையில்
நிலவும் பகலும் கலக்கிறது

நீங்கள் உங்களுதடுகளை
சேர்த்து வைத்துக் கொள்ளும் போதெல்லாம்
அவை ஆணும் பெண்ணுமாய்
வளராத குறுந்தாடிக்கும்
சிறிதே முளைத்த மீசைக்கும் நடுவில்
முத்தமிட்டுக் கொள்கின்றன !

உங்கள் வாயுதிர்க்கும்
வார்த்தைகள் எல்லாம்
இருவரிடை நிகழ்
உரையாடலாய் இருக்கின்றன .

உங்கள் ஒரு புற மார்பு
தமக்கையாகவும்
மறுபுறம்
தமயனாகவும்
தன்னை உணர்ந்து கொள்கின்றது

உங்களின் கைகள்
ஒன்றையொன்று பற்றும் வேளை
என் காதில் திருமண மந்திரங்கள் ஒலிக்கின்றன
ஓருடலின்  மெலிந்த ஒரு கரம் பற்றும்
மற்றோர் முரட்டுக் கை
இது சக்தி
அது சிவம்

உங்கள் இடது கால்
வலதோடு  சேர்ந்தாடுகையில்
அது ஒருவரல்ல
இருவராடும் திருநடனமாய் மாறுகிறது .

விட்டுத் தள்ளுங்கள் ...
தங்களை ஆண்மையற்றவர்/பெண்மையற்றவர் 
என மறைக்கும்  பலர் 
என்றாவது ஓர் நாள்
TOM  ஆகவோ TIB  ஆகவோ
ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்

ஆயின்
இருபால் உறுப்புகளால் ஆன நீங்கள்
அதனால் மட்டுமே வேறாகவும்
உள்ளத்தால் ஒன்றாகவும் வாழ்கின்றீர் ..
அந்தப்  பாழும் இயற்கை
உங்களை
PHILIP உம்,MARY யுமாய்
ஒரு சேர அச்சடிச்ச போதும் ! 


 (மொழி பெயர்ப்புக் கவிதை ..மூலம் ஜான் கிளீவ்லேன்ட்)

(வலசை காலாண்டிதழில் வெளியானது  .ஓவியம் என்னுடையது :))

16 comments:

ரிஷபன் said...
This comment has been removed by a blog administrator.
ரிஷபன் said...

முழுக் கவிதையும் மூலத்தின் சுயம் ஏந்தி நிற்கின்றது என்றே உணர முடிகிறது..
ஆக்ரோஷமாய் வரிகள்..

ரிஷபன் said...

முழுக் கவிதையும் மூலத்தின் சுயம் ஏந்தி நிற்கின்றது என்றே உணர முடிகிறது..
ஆக்ரோஷமாய் வரிகள்..

rajasundararajan said...

பத்மாவின் மொழி, காலத்துக்கு ஏற்ற எளிமையோடு இருக்கிறது என்பதே எனது கருத்தும்.

(அத்துணை ஈடெளிமையாக இல்லை என்று 'வலசை' காலாண்டிதழால் புறக்கணிக்கப்பட்ட எனது மொழியாக்கம் தாழே):


பாலிலி சார்பால்
-------------------------

ஐயா, அல்லது அம்மா, எதைக் கொள்வது!
இயற்கை உம் இருவரையும் ஒருவராய்த் திரிக்கிறது;
உன் ஆன்மாவை, உடுக்கை இரண்டின் ஒட்டு என்றாக்கி,
பாவாடை கால்ச்சராயை இணைக்கிறது.

அப்படி, பெண் இயல்பினதாம்
நீரினால் மது-தேவனை மட்டுறுத்திட நாம்,
அத் தண்-அணங்கு அவனது காட்டம் தணித்து
ஓருடல் ஆகளவும் கலவிப்பிக்கிறோம்.1

ஆதம் தன் விலா எலும்பை இழப்பது வரை
இருந்தானே அது, இரு பாலும் ஒருமித்த நிலை.

மேலும், உலகின் காரணவர் நம் இறை
ஆதனில் அவ்வையைச் செதுக்கியதை
ஒரு குறை என மனிதன் கண்டு, முழுமைக்கு மீள,
வகுத்தான் மணவினை என ஒரு புணர்வினை.

அப்படி, உன்னையேதான் உள்ளபடி
உறுத்தாகச் சாற்றுகிறது திருமணவிதி,
ஏனெனில் கணவன் மனைவி ஒட்டுதலில்
உருவாவதோ ஓர் ஒத்திசைவின் பாலிலி.

கட்டுடைத்துக் காண்கிறேன் உன் உடம்பினை,
அதன் ஓரோர் உறுப்பிலும் ஓர் இரட்டை வகையினை.

இரட்டையின் தலைமை மயிர்இழையிற் கூட்டும்
பிளவுகளை எண்ணாமல் யார் இருக்கக் கூடும்?

ஒரு பாதி, கரடுமுரடு தொடுவதற்கும்
அது அம்மட்டையும் பொறுப்பதினும்
என் நுண்மென் உறுப்புகளை ரெகுலஸில்
பொதிகுவேன் - அவனது ஆணிப் பீப்பாயில்.2

ஆனால் மறு பாதி, மிகச் சின்னதாய்
யாவரொடும் மிக வாஞ்சையாய்
ஓரொரு முடியும் ஒரு நாணாய் வளர்ந்து தேறும் தன்
தென்படாத வில்லுக்கு என எண்ணுகிறான் மன்மதன்.

நான் குழந்தைகளை உன் கண்களில்,
இதோ வீனஸ் அதோ அதோனிஸ் என, காண்கையில்
உச்சைப் பொழுதுநிலை உன் அழகு;
உன் கோளம் கொண்டிருப்பது கதிர், நிலவு.

பிறகும், எத்தனை தப்பியிருக்கும் முத்த இளகல்
உன் ஆடூஉ மகடூஉ உதடுகட்கு இடையில்?
உன் முகவாய் மேல்வரைத் தூரிகை, இன்னும்
கீழ்வரைத் தாடித் தளர்வுக்கு நடுவில்?

நீ பேசுகையில் அதன் இனிமையை என்
இரட்டை நாக்கால் பிழைகூற மாட்டேன்

ஆனால் ஒரொரு தனித்தனி ஒலியிலும்
ஓர் உரையாடற் செம்மை இருகுரற் பதம்படும்;
வேறுபடத் தோன்றும் உன் மார்த்தடம்
உடன்பிறந்த இது அள் இது அன் எனும்.

நீ கைப்பூட்டுகையில், என் செவி மணமந்திரத்தை
கற்பிக்கிறது, நான் ஜான் வரிக்கிறேன் பிரான்சிஸை;
உணர்கிறேன் அந்த முரடு மென்மை வேறுபாட்டை
இது ஒரு கடகம்3 அது ஒரு கையுறை.

தந்திரன் யுலிசிஸ் கொணர்ந்தான் உனக்கு - ட்ராய்
நகர் தகர்க்க - தன் பண்ட வணிகப் பையை.
மன்னன் லைக்கமிடீஸ் ஃபிலிஸின் இடத்தில்
அக்கீலஸை அறிவதற்கு ஆயுதங்களும் அதில்.
அவன் திட்டம் வீழ்ந்தது; இக் கை நீட்டி
உணரும் ஊசி அது போர்ப்படை ஈட்டி.4

இசை தன் தாள கதியை உயர்த்துகையில்,
வலதுகால் இடதினை நடனத்துக்கு எடுக்கையில்,
இணைசேர் நடனம் ஆடப்பட்டது ஓராளால் அன்று;
ஓராளால் ஆயினும் ஒரு கலவை நடனம் அது.

அப்படி, பால் மாறுகிறது ஒழுங்கின்மை ஓரொன்றும்,
ஆனால் மாறுவதில்லை உன் இதயம் மட்டும்.

ஞே அடக்கமுடைமை, எவற்றை உரக்க முடியாமல்
உணர்த்துகிறதோ அவைதாம் பாலிலிகள்.

ஏசும் ஜேக்கும் ஒருமிக்கத் துருப்புச் சீட்டாடும்
சூதாடியின் தேவையோ தீர்க்கப்பட வேண்டும்

அப்படி, இயற்கையின் சுரங்கக்கூலி ஏறியிறங்கியது
உன்னை ஒரு பிலிப்பும் மேரியுமாய் நாணயம் செய்து.5

rajasundararajan said...

1 ஹெர்மவ்ப்ரோடிட்டஸ் ஆணாகத்தான் பிறந்தான். நீரணங்கு (water nymph) சல்மாசிஸ் அவனை ஆசைப்பட்டாள். அவன் மறுத்தான். ஆடை களைந்து நீருக்குள் இறங்கிய அவனை அவள் தழுவி, அக்கணமே, ‘தானும் அவனும் ஓருடல் ஆகவேண்டும்’ என்று தெய்வங்களை வேண்டினாள். அப்படியே அருளப்பட்டது. அவன் பாலிலி ஆனான்.

2 ரெகுலஸ் (கி.மு.249) ஒரு ரோமானிய நாட்டுப் பற்றாளன்; படைத் தலைவன். போர்க்கைதியாகச் சிறைப் பிடிக்கப்பட்ட அவனை ரோமாபுரியோடு சமரசம் பேச அனுப்புகிறார்கள் பகை நாட்டவர். ஆனால், ‘அப்படியெல்லாம் சமாதானமாகப் போய்விடவேண்டாம்’ என்று சொல்லிவிட்டுத் திரும்புகிறான் ரெகுலஸ். அவனுடைய இமைகள் நறுக்கப்பட்டு வெய்யிலில் கிடத்தப் படுகிறான். ஈட்டிகள் செருகப்பட்ட பீப்பாயில் போட்டு உருட்டிவிடப்படுகிறான்.

3 This is a gauntlet, that a muff. இரண்டுமே கையுறைதாம். ஆனால் gauntlet போருக்கு அணியப் படுகிற ஒன்று. வாள்வெட்டு மணிக்கட்டில் விழாமற் தடுப்பதற்காக அணியப் படுவதால், வினைப்பயன் கருதி, ‘கடகம்’ என்று மொழி பெயர்த்தேன்.

4 அக்கீலஸ் போருக்குப் போகக் கூடாது என்று பெண்வேசத்தில் மன்னன் லைக்கமிடீஸ் அரண்மனையில் ஒளிக்கப்பட்டு இருந்தான். யுலிசிஸ் ஒரு நாடோடி வணிகன் போல வேசமிட்டு அங்கே வந்தான். அரண்மனைப் பெண்கள் எல்லாரும் நகைநட்டுகளை எடுத்துப் பார்க்க, பெண்வேச அக்கீலஸ் ஆனால் பண்டப் பையிலிருந்த ஒரு வெண்கல ஈட்டியை எடுத்துப் பார்த்தான். அப்படி அவனது தலைமறைவுத் திட்டம் தோற்றுப் போனது.

5 அந்தக் காலத்து இங்கிலாந்தின் நாணயங்கள். இரு நாணயங்களையும் அருகருகே வைத்தால், பிலிப்பும் மேரியும் முகம்-எதிர்-முகம் பார்ப்பதுபோல் தோன்றும்.

rajasundararajan said...

UPON AN HERMAPHRODITE-

Sir, or Madame, choose you whether!
Nature twists you both together
And makes thy soul two garbs confess,
Both petticoat and breeches dress.
Thus we chastise the God of Wine
With water that is feminine,
Until the cooler nymph abate
His wrath, and so concorporate.
Adam, till his rib was lost,
Had both sexes thus engrossed.
When Providence our Sire did cleave
And out of Adam carved Eve,
Then did man 'bout wedlock treat,
o make his body up complete.
Thus matrimony speaks but thee
In a grave solemnity.
For man and wife make but one right
Canonical hermaphrodite.
Ravel thy body, and I find
In every limb a double kind.
Who would not think that head a pair
That breeds such faction in the hair.'*
One half so churlish to the touch
That, rather than endure so much
I would my tender limbs apparel
In Regulus his nailed barrel:
But the other half so small
And so amorous withall
That Cupid thinks each hair doth grow
A string for his invisible bow.
When I look babies in thine eyes
Here Venus, there Adonis, hes.
And though thy beauty be high noon
Thy orb contains both sun and moon.
How many melting kisses skip
'Twixt thy male and female lip, —
'Twixt thy upper brush of hair
And thy nether beard's despair?
When thou speak'st (I would not wrong
Thy sweetness with a double tongue,)
But in every single sound
A perfect dialogue is found.
Thy breasts distinguish one another,
This the sister, that the brother.
When thou join'st hands m}^ ear still fancies
The nuptial sound, I, John, take Frances.
Feel but the difference soft and rough;
This is a gauntlet, that a muff.
Had sly Ulysses, at the sack
Of Troy, brought thee his pedlar's pack
And weapons too, to know Achilles
From King Lycomedes' Phillis,
His plot had failed ; this hand would feel
The needle, that the warlike steel.
When music doth thy pace advance,
Thy right leg takes the left to dance.
Nor is 't a galliard danced by one
But a mixed dance, though alone.
Thus every heteroclitic part
Changes gender but thy heart.
Nay those, which modesty can mean
But dare not speak, are epicene.
That gamester needs must overcome
That can play both Tib and Tom.
Thus did Nature's mintage vary,
Coining thee a Phillip and Mary.

பத்மா said...

raja sundar raajan sir ...vanakkam ....

rajasundararajan said...

You are really great. என் மொழிபெயர்ப்பை நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டியதில்லை. உங்கள் e-mail id தெரியாததால் இதுவழி அனுப்பினேன். விடியட்டும் தொலை விளிக்கலாம் என்றிருந்தேன்.

இதில் அக்கறையுள்ளவர்கள் ஒப்பிட்டுத் தேறலாம். வம்பர்கள் உப்புச்சப்புப் பேசலாம்.

பிறகும் ஒரு கவிஞருக்கு இந்தத் துணிச்சல் வேண்டும்தான். வாழ்க!

D.R.Ashok said...

//தொலைத்த பெண்மையை ஆணும்
விழையும் ஆண்மையை பெண்ணும்
அடைந்து ஆண் பெண்ணாய் மாறவே திருமணம்..
ஆக
அர்த்தநாரமே உன்னதம்//

யாரோ: கை விளையாடுது வார்த்தையில

பத்மா: எத்தனை பொஸ்தகம் படிச்சுயிருப்போம்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஐயோ பாவம்.. நினைத்தாலே நடுங்க வைக்குக் கவிதை இது!
படம் கவிதைக்கு ஈடு கொடுக்கும் படி..

Madumitha said...

மூலத்திற்கு நியாயம்
செய்யும் மொழிபெயர்ப்பு.
மிக நன்று.
படம் அற்புதம்.

சுந்தர்ஜி said...

வேல்கண்ணன் ரெண்டு நாட்களுக்கு முன் ரொம்பவும் சிலாகித்துக்கொண்டார். படித்த பின் அவரின் சிலாகிப்பு நியாயமென்று தெரிந்தது பத்மா.

தவிர நீங்கள் ஒரு அபாரமான வாசிப்பனுபவம் கொண்டவரும் கூட என்பதால் மொழிபெயர்ப்புக்கு ரெட்டிப்பு சபாஷ்.

ச.கி. சொன்னது போல மூலத்துக்கு நியாயம் செய்த மொ.பெ.

Vediappan Discovery Book Palace said...

கவிதை மிகவும் செரிவாக இருக்கும் என்றே நினைக்கிறேன். இந்த பாழும் என் அறிவுக்குதான் அதை நுட்பமாக உள்வாங்கி புறிந்துகொள்ள முடிய வில்லை, ஓவொயம் அருமை!

ஹ ர ணி said...

பத்மா...

கவிதை படிக்கப் படிக்க உலக உணர்வுநிலைகளை அதிரவைக்கும் கவிதையாக இருக்கிறதே.. பத்மா இனி கவிதைகள் எழுதவேண்டாம். இது ஒன்றே போதும் காலத்திற்கு என்று பிரமித்துக் கடைசியில் உங்களின் மொழிபெயர்ப்பு என்றதும் சற்று தொய்வானது என்றாலும் உங்களின் ஜீவனான மொழிபெயர்ப்பிற்குத் தலை வணங்குகிறேன்.

உங்கள் ஒரு புற மார்பு
தமக்கையாகவும்
மறுபுறம்
தமயனாகவும்
தன்னை உணர்ந்து கொள்கின்றது

இவ்வரிகளில் கவிதை தன்னுடைய உயிரைத் துடிக்க வைக்கிறது.

அருமை பத்மா. நல்ல மொழிபெயர்ப்பாளராக உங்களைப் பார்க்கிறேன். தொடர்ந்து செய்யுங்கள். மொழிபெயர்ப்பாளர்கள் இந்தியப் புலத்தில் மிகமிகத் தேவையாக இருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

மேடம் ரா.சு. சாரோட மொழிபெயர்ப்போட இதை ஒப்பிட்டு படிக்க தோன்றிது.. நோ கருத்து.. :)))

படமும், எளிமையான மொழியும் உங்கள் கைவந்திருக்கிறது... என்னுடைய வாழ்த்துகளும்..

Sugumar Je said...

மிக மிக அற்புதமான கவிதை... ஆழ்ந்த மொழிபெயர்ப்பு...