அவள்
சட்டென தோன்றும் கவர்ச்சியை விட மெல்ல ஊர்ந்து படரும் ப்ரியம் ஆபத்தானது அறிவாயா நீ ?பின் ஏன் அறிந்தும் அறியாதது போலொரு தோற்றம்?
உன் கடிதங்களை வாசிப்பதைவிட நீ என் பெயர் எழுதிய உறையை வருடுதல் எத்தனை கிறக்கம் என்றறிவாயா நீ? பிச்சி தான் நான்!நீ பேசிய வார்த்தைகளை கணக்கெடுத்து மனதில் ஓட்டி அதனுள்ளே அர்த்தம் கண்டுபிடிக்கும் பிச்சிதான் நான் !
உனக்கென்ன எதோ பேசி உன் வழி போகிறாய் ..அவ்வார்த்தைகள் என்னுள் நுழைகையில் சுக்கு நூறாய் சிதறி அணுவெங்கும் இம்சிப்பதை அறிவாயா நீ?
என் உறங்கா இரவுகளில் உன் நினைவன்றி ஏதும் புகாமல் ஒரு firewall உருவாகுவதை எங்கணம் தடுக்கப் போகிறாய் ?அதனை உடைத்தா இல்லை வலுப்படுத்தியா?
உன்னைக்காணாத ஒரு நாள் உன் அலுவலகத்தை 50 முறை கூப்பிட்டு கேட்டதை என்னிடமே "யாரோ" என வியந்த படி சொன்னாயே !அது நானாக இருக்ககூடும் என கிஞ்சித்தும் நினைக்காத கல்நெஞ்சுக்காரனடா நீ !
உன் பிறந்த நாளில் உனக்கு பிடித்த வண்ணத்தில் அணிந்து வந்த போது ஒரு சொல் கூட கூறாமல் கடந்து விட்டாயே அது ஏன்?
இத்தனை கல்லுளி மங்கனாய் இருந்தும் என்னைக்கண்டதும் உன் கண்ணில் ஒரு ஒளி மின்னுதே அது மட்டும் என்னவென்று சொல்லிவிடு!அதை தெரிந்து கொள்ளாதவரை நான் இன்னும் பிச்சியாவேன் !
உனக்கு தெரியாமல் நான் எழுதும் வலைப்பூவை ஒருநாள் கண்டுபிடித்து விடை கொடுப்பாய் என்று நம்பும்
உன் ப்ரிய பிச்சி .
===================================================================
===================================================================
===================================================================
===================================================================
அவன்
என் ப்ரிய முட்டாள் பிச்சி
நான் எதையடி அறியவில்லை ?உன் பிரியத்தையா ? அது தான் உன் கண்வழி பாம்பாய் நகர்ந்து என் கழுத்து நெரித்து இம்சாவஸ்த்தை
தருகிறதே! அதிலிருந்து தப்பிக்க விரும்பாமல் சரணாகதியை அடைந்தது தெரியாதா பெண்ணே ?
உன் பெயரை நான் எழுதியதை வருடுதல் கிறக்கம் என்கிறாயே ,அதை என் உயிர்த்துடிப்பு கொண்டு எழுதியதை அறிவாயா நீ?உன்னை அடையும் முன் அது பெற்ற முத்தங்கள் எத்தனை என அதனிடமே கேள் ..இனி உன் முத்தங்கள் மூலம் .
நான் பேசிய வார்த்தைகள் உன்னை அடைந்து ,உன்னுள் கலந்து விட்டதடி,ஆனால் அவற்றை பறி கொடுத்த நான் இங்கு பித்தனென அலைவதை இன்று வரை உன்னிடம் சொன்னதில்லை
உறங்கா இரவுகள் உனக்கு மட்டுமா சொந்தம்?
அந்த firewall ஐ அப்படியே வைத்திரு .நாமிருவரும் அதில் புகுந்து வேறெவரும் அதில் வராதபடி செய்வோம் .
அடி பைத்தியக்காரி நீ தான் அலுவலகத்தை அழைத்தது எனக்கு தெரியாதா? உன் வாயிலிருந்து வருமென காத்து ஏமாந்தது தான்
மிச்சம் .நான் கல்நெஞ்சுக்காரனா? இல்லை நீயா ?
இத்தனை பிரியத்தை ஏனடி மறைக்கிறாய் ?
லூசுப்பெண்ணே !என் பிறந்த நாளுக்கு உன் சகோதரி மூலம் அந்த உடையை வாங்கி தந்தவனே நான் தான்! .அதை நீ அணிந்திருந்தது என்னையே அணிந்தது போலிருந்ததால் அருகில் வர விபரீதம் என் நான் விலகிப்போனேன் .
எல்லாம் மறைத்த நான் என் கண் பொங்கும் ஒளியை மட்டும் மறைக்க இயலவில்லையே! கள்ளி அதை வைத்து என்னை மடக்கி விட்டாய் ? அது கண்ணின் ஒளிமட்டுமல்ல ,உன்கண் பெருகும் காதலின் ஒளி .
போதுமா என் பதில்?
பி.கு. எனக்கு தெரியாமல் இருக்கும் வலைப்பூ என்ற நினைப்பெல்லாம் வேண்டாம் .இங்கு பல பெயர்களில் வந்து பின்னூட்டம் இடுவதெல்லாம் யாரென நினைக்கிறாய்? உன் புலம்பல்களை என்னை தவிர யாரடி வாசிக்க முடியும் என் ப்ரிய பிச்சி?:) .....நீ நிஜமாகவே பிச்சிதானடி ....
81 comments:
நல்லாயிருந்துங்க... நீங்க பெண்ணின் அகத்தினை அழகாய் சொல்லுகிறீர்கள் எப்போதும்... நல்லா வந்திருக்கு...
ஆனா.. அவனின் மொழியில் தான் அவனில்லை... அதாவது கொஞ்சம் பெண்மை எட்டி பார்த்தது... அதாவது பத்மா வந்துவிட்டார்.
மத்தபடி அழகு :)
சூப்பர் பத்மா... இது நான் எதிர்பார்க்காதது....
நன்றி அசோக் அண்ணே .
நீங்க சொல்ற point valid .
ஆணாக யோசிக்க கத்துக்கொள்ளத் தான் வேணும்
நன்றி இர்ஷாத் .
நீங்கள் தானே நிறைய எதிர்பார்க்கிறோம் என்று கூறினீர்கள் போன பதிவில்
இப்படி இரு விதமாய் யோசித்து.. ஒரு சிறுகதையே வந்துவிட்டது.. சபாஷ்.. உணர்வுகளை விவரித்த விதம் வெகு அருமை..
நன்றி ரிஷபன்
:D
”ஊர்ந்து படரும் பிரியம்” இது நிறைய படிமங்களை என்னுள் நிறைக்கிறது. காரணமில்லாமல் உதாரணத்திற்கு “ஸ்கெட்ச் பென்சில் திடீர்னு தீர்ர சமயத்தில், அப்போதைக்கு அதை பயன்படுத்த-றதுக்காக மேல்மூடியைக் கழுட்டி அதனுள் இருக்கும் அந்த ஸ்பான்ஞை தண்ணீரில் நனைக்கிறப்போ அந்த தண்ணீர் அதில் கருப்பு நிறமாக படரும் காட்சியை நினைவூட்டுகிறது.
நல்லாருக்கு பத்மா.
அசோக் கமென்ட், அப்புறம் உங்கள் பதில் கூட. :-)
பாரா சார் வாங்க
மிக்க நன்றி .
நான் சொன்னது சரி தானே
காதல்ல வர்ர ஈகோத்தனத்துக்கும், மறை(த்)ந்திருக்கும் ஊடலுக்கும் எவ்வளவு அழகு பாத்தீங்களா!!! படிச்சாலும் சரி..அனுபவித்தாலும் சரி அதன் இனிமை என்றும் சுகமே...
ரசித்துப்படித்தேன்...
ரசித்து படித்ததிற்கு நன்றியும் மகிழ்ச்சியும் பாலாசி
good move. intresting to read.
நன்று பத்மா படித்தேன் ரசித்தேன்
thanks vjr
நன்றி சரவணன் :)
வாங்க சாத்தூர் மக்கான் .நன்றி
சிவா நன்றி. நீங்க எந்த சிவா?
பிச்சி உதறிட்டீங்க...
தமிழ்மணத்துல இனைக்கலியாங்க.
பிச்சியின் காதல் மணம் கமகமக்கிறது....
பெண்மனம் ஆண்களுக்கு காலம்காலமாக சுவாரஸ்யமான ஃபேண்டஸி... இங்கு வார்த்தைகளில் உயிரோட்டம் ததும்புகிறது.... ஆனால் காதலனின் மனதைப் பதிந்திருப்பவர் பெண்தான் என்று சத்தியம் பண்ணி சாட்சியம் சொல்கின்றன "அவனின்" வார்த்தைகள்.... :)
Firewall concept பிடிச்சிருந்துச்சு :)
நல்லா இருக்கு பத்மா. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி காமராஜ் சார்
ஹ்ம்ம் இதற்கு நான் என்ன செய்ய இயலும் பிரபு? இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யலாம் .நிஜமாகவே தெரியவில்லை .
மணத்தை நுகர்ந்ததிற்கும் ,concept இல் திளைத்ததிர்க்கும் நன்றி
ஸ்ரீ ராம் நன்றி :))
இது வித்யாசமான காதல்:)
ராமசாமி கண்ணன் ,தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன். வாக்கு பட்டை வேலை செய்யவில்லை .என்ன செய்வதென்று தெரியவில்லை .அவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியாயிற்று.
நன்றி வானம்பாடிகள்
ஒரு மூணு வருசத்துக்கு முன்னாடி இப்படி எழுதி பார்த்துருக்கேன் சகோ நானும் ஆனா அது அந்த அளவுக்கு நல்லா வரலை
. அருமைக்கா . பின் குறிப்பு தான்க்கா பைனல் டச்
இது நல்லா இருக்கே! பாராட்டுக்கள்!
நன்றாக உள்ளது :)
கவிதையும் கதையுமாய் பெண்ணாகிப் பின் ஆணாகி அசத்திட்டீங்க பத்மா.இப்படியும் எழுதலாம் என்பதுபோல ஒரு பதிவு.
பாத்தீங்களா பாலா நீங்க எவ்ளோ முன்னாடி இருக்கீங்கன்னு ,நிறைய எழுதுங்க பாலா .waiting for ur writings . ரொம்ப நன்றி உங்க கருத்துக்கு
நன்றி சித்ரா ..வலைச்சரத்துல கலக்கறீங்க போங்க
மிக்க நன்றி ஹேமா
மகிழ்ச்சியும் கூட
நன்றி பிரசன்னா
'firewall' is brand new padimam. athusari padma.. intha pathuvukku 'nakaisuvai' label koduthathuthaan ungal punaivin uchcham!
nalla flow.
thanks.
நல்லாயிருக்குங்க...
:)
oh thanks aadhiran .
en antha pin kurippu nagaichuvaiyaai illaya ? :))
oru safe guard than hehehe
any ways thanks
thanks vasanth
enjoyed reading it. good romantic stuff!
பேனா மினுக்கல்
- பிச்சி -
ரொம்ப நல்ல புனைவுங்க..
ரொம்ப நல்லா வந்திருக்கு...
படிக்கும்போதே வைரமுத்துவின் கவிதை ஒன்றும் சேர்ந்தே ஞாபகம் வந்தது..
==================================
பூக்களும் காயம் செய்யும்
==================================
போடி போடி கல்நெஞ்சி!
மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு
ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!
காதல் தானடி
என்மீதுனக்கு?
பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?
தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?
நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?
இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்
இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -
என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -
வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -
சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்
வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -
நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.
சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?
நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்
உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்
இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி
உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்
காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது
காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்
இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?
என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே
உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?
இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?
என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ
உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது
நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது
பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்
இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்
என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி
நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்
நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்
ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்
உணர்ச்சி பழையது
உற்றது புதியது
இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை
தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை
என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்
உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்
தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்
புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்
நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது
உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது
இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்
சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.
- வைரமுத்து -
thanks zeno
அதில் எதாவது உள்குத்து உண்டா மணிஜி?
கமலேஷ் இங்கு நான் எழுதியதை விட நீங்கள் எனக்கு அறியக்கொடுத்தது எத்தனை அழகு.
வைரமுத்துவின் தளிர் தமிழில் மயங்கி நிற்கின்றேன் ,பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா !உங்கள் கருத்துக்கும் தான்
பிச்சிக்கும் பித்தனுக்கும் இடையே நுழைய இடமில்லாமல் நெருக்கமான பித்துப் பிடித்த நெசவு பெரும் போதை.தாமதித்துவிட்டேனே என்றிருந்தது.அற்புதம் பத்மா.
மிகவும் நன்றி சுந்தர்ஜி ..சந்தோஷமாய் இருக்கிறது
உணர்வுகளை மிகவும் அழகாக எழுத்துகளில் கசியவிட்டு இருக்கிறீர்கள் மிகவும் அருமை பகிர்வுக்கு நன்றி .
மிக அற்புதம் பத்மா.
இதுக்காகவே ஒரு பூந்தோட்டத்தை
உங்கள் பெயருக்கு எழுதி வைக்கணூம்.
நல்லாருக்கு க்கா.. கதையும்., பின்குறிப்பும்., கமாண்டுகளும்..!! :)
நல்லாருக்கு பத்மா.
வித்யாசமாய் இருந்தது,பத்மா..பாராட்டுக்கள்! அது சரி..அது என்ன வார்த்தை ப்ரயோகம்?
இம்சாவஸ்த்தை ....ம்ம்.. நன்றாக இருந்தது,பத்மா.
Hey that was nice to read a nice romatic war i could feel it from this kavidhi
ரசிக்கவும், சிரிக்கவும் வைத்தது பத்மா.
அவளும்... அவனும் தெளிவாத்தான் இருக்கின்றார்கள்.... நம்மைத்தான் குழப்புகிறார்கள்.
படைப்பு... மிக அருமை!
வித்யாசமாய் இருக்கிறது,பத்மா
காதல் இம்சாவஸ்த்தை தான்
ரொம்ப பிடித்தது
வாழ்த்துக்கள்
விஜய்
நன்றாகவே இருக்கிறது, பத்மா !
பிச்சிக்கு பின்னூட்டமிடுவதாக நினைத்துக் கொள்கிறேன்.
ஈச்சி எலுமிச்சி.. ஏட்டி கருவாச்சி... என்பதின் சந்தங்களோடு இணைகிறவளாகிறாள் பிச்சி.
உன்மத்தம் ஒரு செருக்காக அடையாளப்படுத்தப்பட்டு மிகுந்து நேசிக்கப்படுகிற ஒருநிலை காதல்.
காதலில் இழிவு, தோல்வி, விரக்தி எல்லாமே காதலைவிட நிரம்ப நேசிக்கப்படுகின்றன்; அல்லவா?
இருபால் குறிப்புகளோடு நிரவிய வரிகளில் புதுமழை தொடுக்கும் மண்வாசமாக கைக்கிளை நுகர்கிறேன்.
இதன் புதுமாதிரியான வடிவத்திற்கு பாராட்டுகள்!
சொல்லாமலே சொல்லும் வாக்கியங்கள் , இருவரின் காதலை ரொம்பவும் மென்மையாக எடுத்துரைக்கிறது . அருமை பத்மா
ரெம்ப அழகா இருக்கு பத்மா... ஒரு வாரமா படிக்காம மிஸ் பண்ணிட்டனேன்னு இருக்கு... கேள்வி அழகு பதில் அதை விட அழகு... இந்த பதில் உங்களுக்கு மட்டும் அல்ல................. என்பது நிஜம்.... நேசத்தையும் காதலையும் இதை விட அழகாய் நான் படித்ததில்லை பத்மா, அதுவும் எளிமையான வரிகளில்... நாலு முறை வாசித்து விட்டேன் இது வரை...(பத்து நிமிடத்தில்....)
தங்களுக்கு நான் அன்பின் வடிவாக விருது ஒன்றினை கொடுத்திருக்கிறேன்... நீங்கள் விருதினை பெற்றுக்கொண்டால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2010/06/blog-post.html
நான் ரொம்ப லேட்டா வந்திருக்கேன் போலிருக்கே....
இனிமேலாவது டயத்துக்கு வந்து நிப்போம்
பனித்துளி சங்கர் நன்றி பல
மதுமிதா ஹைய்யா பூந்தோட்டமா ? எங்கே தஞ்சை பக்கம் கிடைக்குமா? நன்றி நன்றி
நன்றி சிவாஜி சங்கர் ..பின்னூட்டங்கள் என்னையும் பரவசப்படுத்தியது
தங்கமணி உங்கள் அன்பிற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை .
ரொம்ப சந்தோஷமா இருக்குமா
நன்றி அருணா
ராமமூர்த்தி சார் உங்கள் அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி .so glad
thanks uma
thanks geetha
மிக்க நன்றி கருணாகரசு சார்
ரொம்ப நன்றி விஜய்
ஜகன் கருத்துக்கு மிக்க நன்றி. இதில் கைக்கிளை வரவில்லை என்று கருதுகிறேன். ஒருவித கண்ணாமூச்சி காதல் எனக் கொள்ளலாமா?
தேங்க்ஸ் ரவின் .கருத்துக்கும் வருகைக்கும்
goma வாங்க வாங்க .நீங்க எப்போவேணாலும் வந்து படிக்கலாம் .
ஒரு தேர்ந்த காதல் கவிதை,கதையாகி இருக்கிறது.உங்கள் காகித ஓடத்தை நித்தம் காண வருபவன் தான்.
நண்பர் ஜெகனை வழிமொழிதல் தான் சிறப்பான பாரட்டாக இருக்கமுடியும்.
மிகவும் ஆழமாக இருக்கிறது கடிதம். உணர்வுகளை வடித்திருக்கும் மொழி கவர்கிறது!
நல்ல டெக்னிக் மேடம் , நல்லாருக்கு , அந்த பி.கு ல எதுவும் உள்குத்து இல்லையே ?
பத்மா...
வெகு இயல்பான நடை. பிடித்திருந்தது. தயங்கவைக்காத இயல்பு நடை. வாழ்த்துக்கள். அன்புடன் உறரணி.
வாங்க பரிசல் காரன் சார் .வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
nejamana oru pennin feel ah yum aanin feel ah yum super ah sonneenga!!
Post a Comment