எல்லா அடகுக் கடையுள்ளும்
எப்போதும் ஒரு பெண்
எதையாவது அடகு வைக்க
காத்திருக்கிறாள்.
அது அவள்
புன்னகையாக நிச்சயம் இருக்காது
விற்று விட்ட ஒன்றை
அவள் எப்படி திருப்பி வைக்க இயலும்?
சிலநேரம்
அதிகாலையில் அடகுக்கடைக்குச்
செல்பவள்
எதோ ஒன்றை திருப்பத்தான்
சென்றிருப்பாள்
அப்போது அவள் தொலைத்த புன்னகையை
அக் கடைக்காரன்
கொசுறாக அவளிடம் கொடுத்து விடுகிறான்.
மற்றோர் இரவு
மீண்டும் அங்கு வரும் வரையில்
அவள் அதை சுமந்து கொண்டு
அலைகிறாள்
எது எப்படியிருந்தும்
இரவு நேரங்களில்
அடகுக் கடை ஏகும்
பெண்களின் எண்ணிக்கை
குறையவே போவதில்லை
அவர்களின்
துயரைப் போலவே !
(நன்றி வெயில் நதி ..இலக்கியச் சிற்றிதழ் )
3 comments:
இந்தக் கவிதையிடம் அடகு வைத்தேன் என் மனதை.
கொஞ்சம் நிதானமாகவே மீட்டுக்கொள்கிறேன் இன்னொரு கவிதை எழுதப்படும் வரைக்கும்.
அன்பின் பத்மா - நல சிந்தனை - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Nice reading!
Post a Comment