Monday, June 11, 2012

கருப் பொருள்


இப்போதெல்லாம்
மிக எளிதாய்  வந்தமர்கிறது
கவிதையின் கருப்பொருள்.
ஒரு கட்டடத் தொழிலாளி
வாங்கிச் செல்லும்
ஒரு சொம்பில் நிறைந்திருக்கும்
தேநீர் கூட
கவிதையுள்  வர எத்தனிக்கிறது .
கொஞ்சம் சூடு குறையட்டும்
எனக் காத்திருப்பில் அதை வைத்திருக்கிறேன் .
பூனை, நாய், எலி, யானை,
இவையெல்லாம் ஏற்கனவே
பல கவிதைகளில் வந்துவிட்டாலும்
எப்போது வேண்டுமானாலும்
உள்நுழைய ஆயத்தமாகவே
இருக்கின்றன .
இரவும், பகலும், நிலவும், காற்றும் ,
பாடப்பட்டதில் சலித்து சலசலக்கின்றன   
கால் தட்டிய கல்லும்
தினம் எடை பார்க்கும் எந்திரமும்
கழற்றி போட்ட ரவிக்கையும்
மடிக்காத போர்வையும் கூட  
எப்போதாவது
ஒரு வரிக்குள் நுழைய மாட்டோமா
என்று எதிர்பார்க்கின்றன
இத்தனை பாடுபொருள்கள் 
குவிந்து கிடைக்கையிலும்
என்று தான்
தான் எழுதப் படுவோமோ
என்ற கேள்வியோடு
காத்திருக்கிறது
ஒரு நல்ல கவிதை

  (நன்றி கல்கி )   

5 comments:

சிவகுமாரன் said...

ஆகா.
எல்லாவற்றிலும் இருக்கின்றன கவிதைகள்.
கருங்கல்லில் ஒளிந்திருக்கும் சிற்பங்களைப் போல்.

அருமையான கவிதை.

காமராஜ் said...

இல்லை,காத்திருக்கவில்லை.கல்கியிலும்,காகித ஓடத்திலும் ஏறிப்பயணித்துக்கொண்டிருக்கிறது.

கண்ணம்மா said...

ஹ்ம்ம் எழுத கரு கொண்டு தன்னை எழுத காத்திருக்கும் கவிதை..

// ஒரு கட்டடத் தொழிலாளி
வாங்கிச் செல்லும்
ஒரு சொம்பில் நிறைந்திருக்கும்
தேநீர் கூட
கவிதையுள் வர எத்தனிக்கிறது .// இந்த காட்சியை அழகுபடுத்தி இருக்கு கவிதை..இப்படியெல்லாமா யோசிப்பீங்க.. நைஸ் ஒன் பத்மா..தமிழரசி.

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing

கீதமஞ்சரி said...

பாடுபொருள் பற்றிய சிந்தனையில் ஊறிய கவிதை பிரமாதம் பத்மா. ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுகிறது கருப்பொருள் பாடும் கவிதைமொழி.