ஐயா! அம்மா !
எதுவாய் இக்கணம் உணர்கிறீர்களோ
அதுவாய் ஏற்றுக்கொள்ளுங்கள் .
உங்கள் ஆன்மாவில்
இரு உடைகளைத் தந்து
இயற்கை உங்களை
ஆணும் பெண்ணுமாய்
நெய்திருக்கிறது .
கால்சராரையும் உள்பாவடையையும்
நேசிக்கும் உள்ளம்
உங்களுக்கு வாய்த்திருக்கிறது..
முதுகெலும்பை தொலைத்த ஆதாமை
பெண்மையான வைனினால்
குளிர்வித்த நேரம்
கோபம் தணிந்த
மதுக்கடவுள் மலர்வித்த உடலிது .
எலும்பு பிரித்து,பிரிந்த ஏவாளும் .
அதனையிழந்து தவிக்கும் ஆதாமும்,
மணமுடிச்சில் தான் ஒருடலாகின்றனர்.
தொலைத்த பெண்மையை ஆணும்
விழையும் ஆண்மையை பெண்ணும்
அடைந்து ஆண் பெண்ணாய் மாறவே திருமணம்..
ஆக
அர்த்தநாரமே உன்னதம் .
உங்கள் அங்கங்கள் ஒவ்வொன்றிலும்
இருபால் சுமக்கும்
அதிசயம் நீங்கள் .
மென்மையும் வன்மையுமாய்
அடங்கியும் அடங்காததுமாய்
பட்டு போன்ற முடிகளிடை
மன்மத வில்லின் நாணிற்கு
கடி முடி வளர்க்கும்
அற்புதம் நீங்கள் .
காதலாய் ஒரு கையும்
கடப்பாரையாய் மறு கையும்
வளர்ந்த
பேருண்மை நீங்கள் .
உங்களின் விழிமணிகள்
ஒன்று வீனஸாகவும்
மற்றொன்று அடோனிஸாகவும்
அன்றோ அசைகிறது!
உச்சி வெயிலாய் சுடும்
உங்களழகுப் பாதையில்
நிலவும் பகலும் கலக்கிறது
நீங்கள் உங்களுதடுகளை
சேர்த்து வைத்துக் கொள்ளும் போதெல்லாம்
அவை ஆணும் பெண்ணுமாய்
வளராத குறுந்தாடிக்கும்
சிறிதே முளைத்த மீசைக்கும் நடுவில்
முத்தமிட்டுக் கொள்கின்றன !
உங்கள் வாயுதிர்க்கும்
வார்த்தைகள் எல்லாம்
இருவரிடை நிகழ்
உரையாடலாய் இருக்கின்றன .
உங்கள் ஒரு புற மார்பு
தமக்கையாகவும்
மறுபுறம்
தமயனாகவும்
தன்னை உணர்ந்து கொள்கின்றது
உங்களின் கைகள்
ஒன்றையொன்று பற்றும் வேளை
என் காதில் திருமண மந்திரங்கள் ஒலிக்கின்றன
ஓருடலின் மெலிந்த ஒரு கரம் பற்றும்
மற்றோர் முரட்டுக் கை
இது சக்தி
அது சிவம்
உங்கள் இடது கால்
வலதோடு சேர்ந்தாடுகையில்
அது ஒருவரல்ல
இருவராடும் திருநடனமாய் மாறுகிறது .
விட்டுத் தள்ளுங்கள் ...
தங்களை ஆண்மையற்றவர்/பெண்மையற்றவர்
என மறைக்கும் பலர்
என்றாவது ஓர் நாள்
TOM ஆகவோ TIB ஆகவோ
ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்
ஆயின்
இருபால் உறுப்புகளால் ஆன நீங்கள்
அதனால் மட்டுமே வேறாகவும்
உள்ளத்தால் ஒன்றாகவும் வாழ்கின்றீர் ..
அந்தப் பாழும் இயற்கை
உங்களை
PHILIP உம்,MARY யுமாய்
ஒரு சேர அச்சடிச்ச போதும் !
(மொழி பெயர்ப்புக் கவிதை ..மூலம் ஜான் கிளீவ்லேன்ட்)
(வலசை காலாண்டிதழில் வெளியானது .ஓவியம் என்னுடையது :))