Wednesday, April 1, 2015

பதினெட்டு பெண்கள், ஆறு மாநிலங்கள், மூன்று நாட்கள், ஒரே மொழி! நன்றி அம்பை!



ஊர்மிளா  பவார் .... மராட்டிய மாநிலமே அறிந்த ஒரு பெயர் .அவரின் வாழ்க்கையை நாடகமாக மாநிலமெங்கும் நிகழ்த்துகிறார்கள்.அவருடனே அமர்ந்து அவர் வாழ்க்கையை மூன்று பெண்கள் அற்புதமாக நடிக்கக் கண்டு அவரை கட்டிப் பிடித்து கண்ணீர் மல்கியது  ஒரு கணம் .

 தனியே வெளியே செல்லத் தெரியாத நீ மும்பை மக்கள் கூட்டத்தில் டக் டக் என்று கம்பீரமாய்  பயமில்லாமல் நடந்து சென்றதைப்  பார்த்த போது மனதிலொரு நிம்மதி வந்து விட்டது என்று கணவர் நெகிழ்ந்த கணத்தைக் கூறிய துளசி வேணுகோபால்,அந்த தைரியத்தைத் தந்தது லக்ஷ்மி தான்  என்று  அம்பையை அணைத்துக் கொண்ட அந்த கணம் ...

இது போன்ற கணங்களால் நிரம்பி வழிந்தன மூன்று நாட்களும் .
எழுத்தாளர் அம்பை தலைமையில் இயங்கி வரும்  SPARROW என்ற அமைப்பின் 25 ஆவது  ஆண்டு நிறைவைக் கொண்டாட நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் 18 பெண்  படைப்பாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர் .சென்னையில் இருந்து தமயந்தி நிழலும் நானும் சென்றிருந்தோம்.

பல்வேறு மொழிகளைப் பேசினாலும் அனைவரையும் ஒன்றாய் இணைத்தது ஏதோவொரு பொது இழை .
மும்பையின் வெய்யிலில் மூன்று மணி நேரம் பயணப்பட்டு கர்ஜத் என்ற இடத்தை அடையும் முன் இத்தகைய உணர்வுகளின் குளத்தில் மூழ்கப் போகிறோம் என்று நினைக்கவே இல்லை. 

EXPERIENCE AND EXPRESSION  என்று தலைப்பிட்ட பெரிய பெரிய எங்களின் பெயர்களையும், புகைப்படங்களையும்  தங்கிய பேனர்களைக் கண்ட போது ஆரம்பமான உற்சாகம்..கடைசி நாள் இரவில் அனைவரும் சேர்ந்து தயக்கம் களைந்து ஆடும் வரை இருந்தது.

தன்னை எழுதுதலும் ..கதைகளை எழுதுதலும்  என்ற தலைப்பு கிளப்பி விட்ட,புதைத்து வைத்திருந்த எண்ணங்கள் தான் எத்தனை ? RETROSPECTION  AND INTROSPECTION நினைத்துக் கூட பார்க்கவியலாத தருணங்களை அனைவரையும் பகிர வைக்க ,பகிர்ந்தவரும் கேட்டவர்களும் எங்கோ இது நம் கதை தான் என்றுணர்ந்து ஸ்தம்பித்து அமர்ந்திருந்தனர்.உணர்வுகளால் அடைத்துக் கொண்ட தொண்டைக்கு 2 மணிக்கு ஒருமுறை எதோ உணவு வழங்கப்பட  ஒரு சுற்று பெருத்துத் தான்  போனோம்.

நான் லெஸ்பியன் என்று சிறிதும் தயக்கமின்றி புன்சிரிப்புடன் பேட்டி தரும் ஹிந்துஸ்தானி பாடகி சுமதியின் கதையும் ,அவரின், மனதை புரட்டிப் போட்ட குரலும்,80 வயதிலும் தன கணவன் மாண்டதை கர கர வென்று கண்ணீர் விட்டுக் கலங்கி அழுத கர்நாடகாவின் நாடக நடிகை மாலத்தம்மாவின் கதையையும் அம்பை ஆவணப் படுத்தி இருக்காவிட்டால் ,இவ்வுலகிற்கே தெரியாது.
COME GIRLS! LETS CELEBRATE OURSELVES என்ற அம்பையின் உற்சாக வார்த்தைகள் எதோ ஒரு கதவைத் திறந்து தான் விட்டிருக்கின்றன.

உலகில் பல மொழிகளில் மொழி பெயர்க்கபட்டு  நாடகமாக உலாவரும், சுதா அரோராவின், ஆண்  மட்டுமே பேசும் ஓரங்க நாடகத்தைப் பற்றியோ கன்னியாகுமரியைப் பற்றிய குஜராத்தி மொழி கவிதையைப் பற்றியோ,60 வயதில் எழுத வந்து மணிப்பூர் மொழியில் சந்திரமதியாக நடித்தும் காட்டிய யங்கொம்  இந்திரா பற்றியோ,எங்களுடனே சிரித்து பேசிக்கொண்டு இருந்துவிட்டு ,மேடை ஏறி, தலையில் முக்காட்டைப் போட்டுக்  கொண்டதும் தமாஷா நடிகையாய் உருமாறிய சுஷாமா  பற்றியும்,கூடவே இருந்தாலும்,படித்திருந்தாலும் ,சிறிதே அறிந்திருந்த தமயந்தி மற்றும் புதிய மாதவி இருவரும் குரல் கம்ம கூறியவைகளையும் ...அறிந்து கொண்டதை விட ..எழுதும் அனைவருக்கும் எப்படியாவது ஒரு சலனத்தை,வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை   உருவாக்க வேண்டும் என்ற  ஒரு முனைப்பு பொதுவாய் இருக்கிறது , என்ற உண்மை எங்களை ஒன்றாக்கியது.

எத்தனை பொதுவுடமைப் பேசினாலும் பெண்களின் எழுத்து எப்பொழுதும் ஆண் , பெண், இரு பாலராலும் எதோ ஒரு வகையில்  விமர்சனத்திற்கு உள்ளாகத்தான் வேண்டியுள்ளது.  இதை  எல்லாம் மீறி ஊர்மிளா வைப் போல் இருட்டில் எழுத வேண்டியதில்லை என்றாலும் ,எழுதி எழுதி நம்மை உணர்வோம், உணர்த்துவோம் என்று நினைக்க வைத்த மூன்று நாட்கள்  அவை.
இயந்திர கதியில் இருந்து மீண்டு ,நம்மை நாமே உணர்ந்து கொள்ள பல விதத்தில் ஏற்பாடுகளைச்  செய்த அம்பைக்கும் அவரின் SPARROW  வைச் சார்ந்த குழுவினர்க்கும் எப்படி நன்றி சொல்வது?
எழுத்தும் வாசிப்பும் இன்னும் உறமாக நம்மில் திகழவேண்டும் என்ற எண்ணம் மேலும் மேலும் வலுபெற்று,expressing the experiences என்ற கோட்பாட்டு  நம் எழுத்து யாவற்றிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று உறுதி கொள்வதைத் தவிர ?  
 

                                                          நன்றி  அம்பை
   

1 comment:

மோகன்ஜி said...

நலம்தானே... சுவாரஸ்யமா தொகுத்திருக்கீங்க பத்மா