Wednesday, October 22, 2014

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்.(திரு அண்ணா கண்ணன் அவர்களின் மதிப்புரை)


ஃபேஸ்புக்கில் என் நண்பர்கள் பட்டியலில் பத்மஜா நாராயணன் இருக்கிறார். அவ்வப்போது அதில் அவர் இடும் நிலைத்தகவல்களையும் படங்களையும் பார்ப்பதுண்டு. அவர் பெயரைக் கண்டதும் மேலும் பலரும் என் நினைவுக்கு வந்தனர். என் சித்தி மகளின் பெயர், பத்மஜா. என் மாமாவின் பெயர் நாராயணன். என் தாத்தாவின் பெயரும் அதுவே. பத்மஜா நாராயணன் என்ற பெயரைக் கண்டதும் இந்தப் பெயருக்கு உரியவர்கள் எல்லோரும் என் நினைவில் அசைந்தனர். என்னைப் போல் பலரும் இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியவர்களே. மனிதர்களின் இந்த இயல்பினை மிகச் சரியாகப் பத்மஜா ஒரு கவிதையில் பதிந்திருக்கிறார்.
யாராவது யாரையோ போல் தான்
இருந்துவிடுகிறார்கள்.
கண்ணோ, மூக்கோ, நடையோ
சாயலோ, பெயரோ, யாரையாவது ஒத்ததாக.
யாரிலோ யாரையோ காணும் மனம்
யாரைத் தேடுகிறது யாரிலோ?
யாராவது என்னிலும் யாரையோ
காணக்கூடும்..
யாருக்காவது யாரோவாக இருக்கும் சாத்தியம்
இருக்க வேண்டும்
என ஆசை கொண்டு யாரிலாவது
யாரையோ தேடுகிறேன்.
பத்மஜாவின் 'மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்' என்ற கவிதைத் தொகுப்பில் அகமும் புறமும் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிப் பிணைந்து, வலுவான கவிதைகளை நெய்திருக்கின்றன. வாழ்வின் பல்வேறு தரிசனங்களை இவரின் கவிதைகளில் காண முடிகிறது. ஏழாங்கல் ஆட்டத்தில் ஜெயந்திக்காவின் ஜிமிக்கி ஆடுகிறது.
மேலாக்கில்லாமல் வெளியே வந்த ராஜியைக் கண்ணாமூச்சி விளையாடுகையில் தனசேகர் பிடிக்க முயல்கிறான். ஸ்வப்னத்தின் கிதாரில் எத்தனை கம்பி என ஜூலி எண்ணிக்கொண்டிருக்கிறாள். பிண்டச் சோற்றைக் கொத்தும் காக்கையைப் பாட்டி வெறித்துப் பார்க்கிறாள். அது உறுதியான நிலையில், கல்யாணம் ஆகி வந்த பிறகு குளிச்சா இல்ல? என அடுத்த வீட்டு மாமி கேட்கிறார். மருத்துவமனை வராண்டாவில் வீழ்ந்து உருண்டு புரண்டு அழ வேண்டிய நேரத்தில் மதிய காட்சி சினிமாவுக்குப் போகிறார்கள். வால் வெட்டப்பட்ட குரங்கு ஒன்று, நாயைப் பெண்டாளத் தொடங்குகிறது...... இப்படியாக கவிதைகளுக்குள் இருந்து வெவ்வேறு கதைகளும் காட்சிகளும் அடுக்கடுக்காக எழுந்த வண்ணம் உள்ளன.
பத்மஜாவின் அக உலகம், மிகுந்த கூர்மையும் வீச்சும் பெற்றுள்ளன. கவிதைகளில் உலவும் அவனும் அவளும் தங்கள் காதலுடன் ஊடாடும் விதம், அலாதியானது. அவள், காகிதக் கப்பலில் முத்தங்களை நிரப்பி அனுப்புகிறாள். தன் நெருக்கத்துக்கு உரியவரின் பெயரைக் கடவுச் சொல்லாய் வைக்கிறாள். அவனோ, அவளின் கால் விரல்களை வருடி, உள்ளங்காலில் முத்தமிடுகிறான். அவள், ஒற்றை நட்சத்திரத்துடன் பேசிக்கொண்டிருக்கிறாள். அவனோ, இருளில் ஒளிரும் மூக்குத்தியைக் கழற்றி வைக்கச் சொல்கிறான். அவன் பழைய பனியனின் மணம், வேட்கையைக் கிளர்த்துகின்றது. ஓட்டைக் குழாயின் நீர்சொட்டும் ஒலியில் அவன் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, வான் பொய்க்காது காதலும் கூட என்கிறாள் அவள்.
நீ எனக்குத் தர நினைக்கும் சின்ன முத்தம்
ஒரு சிவப்பு அரளியாய் என் மீது வாசம் வீசட்டும் (நீயாகும் நான்)
தராமல் போன முத்தமொன்று
நம்மிடையே வளர்ந்துகொண்டே
போகிறது...
பேருரு எடுக்கும் அதனை
புன்னகையோடே வளர விடுகிறேன்.
வியாபித்து
என்னையது
கொல்லும் நாளுக்காக. (வளரும் முத்தம்)
காமத்தையும் மிக அழகாகக் கவிதைப்படுத்தியிருக்கும் பத்மஜாவின் திறம், பாராட்டுக்கு உரியது.
வாழ்வில் எத்தகு பெரும் துன்பங்கள் தோன்றினாலும் ஆங்காங்கே சின்னச் சின்ன இன்பங்களும் காத்திருக்கத் தான் செய்கின்றன. அவற்றை ரசிக்கவும் ஆனந்தமாய்ச் சிரிக்கவும் இலேசான ஒரு மனசு வேண்டும். பத்மஜாவிடம் அந்த மனசு, இருக்கிறது. அதனால் தான் இல்லாத ராட்டினத்தில் சுற்றும் ஒரு சிறுமியாய் அவரால் சுழல முடிகிறது.
வார்த்தைகளும் மவுனமும் மாறி மாறி விளையாடிக்கொண்டிருக்கின்றன, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாய். அந்த வார்த்தைகளுக்குள் நாம் புகுத்தும் உணர்வுகள், அதே அளவில் சென்று சேர்கின்றனவா என்றால் சந்தேகமே. சென்று சேராத உணர்வுகள், வழியில் எங்கோ வழி தவறி விழித்துக்கொண்டிருக்கக் கூடும். சென்று சேர்ந்த வார்த்தைகள் கூட, முழுமையான பொருளை ஏந்திச் சென்றனவா என்றால் அதுவும் உறுதியில்லை. சொல், பொருளையும் கூட அங்கங்கே இறக்கிவிட்டுவிடுகிறது. போகும் வழியிலேயே பொருளையும் உணர்வையும் கரைத்து ஒழுகவிட்ட சொல், வெறுமையாகப் பல நேரங்களில் சென்று சேர்ந்துவிடுகின்றது. ஆயினும் பலருக்கு அந்தச் சொல்தான் முக்கியமாய் இருக்கிறது. சொல்லுக்கு இருக்கும் முக்கியத்துவம் சில இடங்களில் மவுனத்துக்கு இருப்பதில்லை. மவுனத்துக்கு இருக்கும் முக்கியத்துவம் பல நேரங்களில் சொல்லுக்கு இருப்பதில்லை. இப்படியாக இந்த விளையாட்டு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
சொற்களைப் பின்தொடரும் விளையாட்டு, இறுதியில் மவுனத்தில் தான் முடிகிறது. இது, பத்மஜா நாராயணனுக்கு நன்கு தெரிந்திருக்கிறது.
உனக்கும் எனக்கும்
நடுவே அலைகின்றன
நமக்கான வார்த்தைகள் எனக் கவிதையைத் தொடங்கிய அவர்,
வார்த்தைகள் தேடிக்கொண்டே
கண்களால்
கதைக்கிறோம் நாம் என முடிக்கிறார். (வார்த்தை விளையாட்டு)
மவுனம் எப்படி இருக்கும்? அதற்கு யாரேனும் உருவம் கொடுத்திருக்கிறார்களா? பத்மஜா கொடுக்க முயன்றிருக்கிறார்.
ஒரு பஞ்சுப் பொதியின் மென்மைபோல்
நம்மிடையே ஆன மவுனம்
நம் கண்களிலிருந்து வார்த்தைகள் ஒரு
சிறகுப் பந்தைப் போல் மாறி மாறிப் பறக்கின்றன (எரியும் மௌனம்)
ஆலயத்தின் கருவறைக்குள் நுழைந்து, தெய்வத்துடன் ஐக்கியம் ஆகாமல், வாசலோடு நிற்பது போல், கவிதையின் உட்பொருளை உணராமல் வெறும் வார்த்தைகளுடன் நின்றுவிடுபவர்கள் பலர். அதை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
தன்னை வாசிக்கும் அவனை
உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது
அந்தக் கவிதை.
இருவரிகட்கிடை உறை
பொருளறியாதவன் வெறும்
வார்த்தைகளை மட்டும் வாசிக்கின்றான்.
பின் உரக்க சிலாகிக்கின்றான்.......
.......புரிதாததொன்றை புரிந்ததென
அவன் புன்னகைக்கையில்
உள்ளே அழுதுகொண்டிருக்கும்
அந்தக் கவிதை (யாருக்கும் புரியா கவிதை)
கவிதைக்குள் பயணிக்கத் தொடங்குவோம். அது, நம்மைக் கைப்பிடித்துக் கூட்டிச் செல்லாவிட்டாலும், தூரத்து ஒளிக்கீற்றாக வழிகாட்டும். மலைப்பாதையில் நடந்த வெளிச்சத்திலும் சுடர்மிகு ஒளிக்கீற்றுகள் மின்னுகின்றன. அவற்றைப் பின்தொடர்ந்தால் புதுப் பாதையில் நடக்கவும் வாய்ப்பு உண்டு.
(மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் - ஆசிரியர் :பத்மஜா நாராயணன். பக்கம் - 96. விலை - ரூ.70. வெளியீடு - டிஸ்கவரி புக் பேலஸ், எண் - 6, மகாவீர்
 காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே. நகர் மேற்கு, சென்னை - 600078)


 அண்ணாகண்ணன்
[யாஹூ தமிழ்ச செய்திப்பிரிவு ஆசிரியரும் அமுதசுரபி மாத இதழின் முன்னாள் ஆசிரியரும் வல்லமை மின்னிதழ் நிறுவன ஆசிரியருமான அண்ணாகண்ணனின் இரண்டு கவிதைகள் 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் மூலப் படைப்பான திருக்குறள் தவிர வேறு எந்த படைப்பும் இத்தனை மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் இல்லை . இருப்பின் வாசக அன்பர்கள் அறிவிக்கலாம். பிரசுரிக்கிறோம் .அமுதசுரபி இதழில் கவிதாயினிகள் குறித்து இவர் எழுதிய தொடர் சமகாலத தமிழ்ப் பெண் கவிஞர்களின் .முறையான அறிமுகமாக இருந்தது.  இணையவெளி இதழில் அவை மறு பிரசுரமாக இருக்கின்றன ]

No comments: