Sunday, September 8, 2013

இன்றென் கருவறை ஒரு முறை புரண்டது



சொல்
தசை மீது போர்த்தப்பட்ட திமிர் கொண்ட தோல்
காற்றின் வாடைக்கெல்லாம் வயப்பட்டு
காலனாய்
மேல் கர்ச்சிக்கிறதே!

மருந்தொன்று கொண்டு வா
இல்லை ஒரு திராவகம்!
பொசுங்கட்டும்
என் தூக்கம் கலைக்கும் துரோகி.

உடன் அவ்வையாய் மாறும்
உபாயம் அறியப் படாததால்
குஷ்டக் கிருமிகள்
என் மீது புகுந்து
விரல் தின்று விகசிக்கட்டும்.

போ இனி அவ்வாறு பார்க்காதே

தோலைக் கிழிக்கும்
வழியறியா பிச்சிக்கு
மனமொளிக்கத் தெரிவதில்லை.

கருப்பை சுழன்று
அவள் மூளை அடைந்ததை
எந்தச் சபையில்
கூறுவாளவள்?

விலகு!ஐயோ!அணை!
இல்லை !
இவள் பெண்மையைக் கொல்!

அல்லது மற்றொரு முறை
அந்தக் கண்களைக் கொஞ்சம்
மூடிக் கொள் .

இவளைக் கொல்வது
இலகுவாய் போகும்.

2 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//விலகு!ஐயோ!அணை!
இல்லை !
இவள் பெண்மையைக் கொல்!

ஆனால் மற்றொரு முறை
அந்தக் கண்களைக் கொஞ்சம்
மூடிக் கொள் .

இவளைக் கொல்வது
இலகுவாய் போகும்.//

’ஆனால்’ ஐ எடுத்துவிட்டு ‘அல்லது’ பொருத்துங்கள்.

ஓர் கத்தியின் கூர் இன்னும் தீட்டப்பட்டதாய் இருக்கும்.

உணர்வின் பரிதவிப்பு வார்த்தைகளில் குரூரமாய் அமிலம் போல இறங்கியிருக்கிறது.

இதை எழுதி முடித்தபின் என்னவாய் இருந்திருக்கும் மனதென உணர்கையில், ஒரு துளிக் கண்ணீரைத் தவிர்க்க முடியவில்லை.

ரிஷபன் said...

ரொம்ப நாளாச்சு.. இன்றென் கவிதை அறை ஒரு முறை சிலிர்த்தது.. வாசித்து.