Tuesday, September 10, 2013

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் புத்தகத்திற்கு திரு கலாப்ரியா எழுதிய முன்னுரை (நன்றி சார்)

செண்பகப்பூவின் மணமும் சில கவிதைகளும்.....

Intimacy, as I am using it, is sharing my reality with you.
Keith Miller

         பத்மாவின் கவிதைகளை நான் கிட்டத்தட்ட இரண்டு மூன்று ஆண்டுகளாக அவரது காகித ஓடம் வலைமனையில் படித்திருக்கிறேன். எப்பொழுதுமே ஒற்றைக் கவிதையாக அல்லது சில கவிதைகளாகப் படிக்கும் போது ஏற்படும் அனுபவத்தை விட ஒரு தொகுப்பாக, குறைந்தது ஐம்பது அறுபது கவிதைகளாகப் படிக்கையில் அது தரும் அனுபவம் வித்தியாசமானது என்ற என் ‘விருப்பக் கருத்தைஇந்தத் தொகுப்பு உறுதிப் படுத்துகிறது.இன்னொன்று குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சுவது என்பதும் ‘வெப்காமிரா வழியாகக் கொஞ்சுவதும் வேறு வேறு தானே.புத்தகமாகப் படிக்கையில் அதைக் குறித்து விரிவான அபிப்ராயம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
     பத்மாவின் கவிதைகள் ஒருவகையான அந்நியோன்யஉலகு சார்ந்தவையாய் உள்ளன. அல்லது மன நெருக்கடிகளிலிருந்து உலகாயுதம் நோக்கி விரிபவையாக இருக்கும். உலகம் என்கிற போதும் அது அவரைச் சுற்றியுள்ள அவரது உலகமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கும்.ஆனால் அது பலருக்கும் அனுபவமான உலகம்.எனவே அவரது மொழிதல்கள், நம் அனுபவங்களைக் கிளர்த்தி கவிதைக்குள் நம்மை நடத்திச் செல்வதை உணர முடியும்.ஒரு கவிதை,

பாடகன்
மாபெரும் திரையடைத்து
புரியாத மொழியில்
ஏதோ பாடிக் கொண்டிருந்தாய்
காமிரா உன் கண்ணை உதட்டை
மீசையை
மிக அருகில் தொலை பரப்பிக் கொண்டிருந்தது
இசை புக மறுத்து
உன் கழுத்து மருவை
நாவால் வருடி
யாராவது முத்தமிட்டு இருப்பார்களா?
என்ற கேள்வியே
மேலோங்கி நின்றது..
அதனை இடக்கையால் ஒதுக்கி
ஒலி உட் புக விட்டபோது
நீ கூறிக் கொண்டிருந்தாய்
இதுவரை நீ பாடியது
தாபத்தையாம்.

     தாபத்தின் போது ஏதாவது தழும்பை வருடுவது (மருவை முத்தமிடுவது) பற்றி நான் ஒரு கதைக்கட்டுரை எழுதியிருக்கிறேன். பத்மாவின் துணிச்சலான் முயற்சி இது. கடைசி இரண்டு வரிகள் இதை கவிதையாக்கி விடுகிறது.

ஒவ்வொரு விதையிலும்/ ஒளிந்திருக்கிறது/ பிறப்பிற்கானதோர் இசை/மழையின் தாலாட்டில் கண்ணுறங்கும் அது/ஒரு இடியோசையில்/வெடித்து பொழியத் துவங்குகிறது/பின் பிரபஞ்சத்தின் பாடலாய்/ வின்[R1]  மண் வியாபிக்கிறது/வியாபிக்கின்ற ஒவ்வொரு விதையிலும்/ ஒளிந்திருக்கிறது/இறப்பிற்கான/ ஓர் இசையும் கூட

இந்தக்கவிதையிலும் சில க்ளிஷேயான பிரயோகங்கள் இருந்தாலும் கடைசி மூன்று வரிகளில் கவிதையாகி விடுகிறது.
     இன்று நாளை நேற்றாகும் என்று ஒரு கவிதை.   TODAY IS THE TOMORROW YOU HAVE WORRIED YESTER DAY” போன்ற வாழ்த்து அட்டை/ போஸ்ட்டர்கள் போல ஒலித்தாலும் ஒருவகை அக உளைச்சலைச் சொல்லும்போது அதற்கு சற்றே ஒரு கனம் கிடைத்து விடுகிறது.
             .ஜிங்கிள் ஆல் த வே என்ற ஒரு கவிதையில் ஸ்லெட்ஜின் அச்சாணி என்று வருகிறது. அதற்கு அச்சாணி உண்டா.?
     காகிதக்கப்பல் செய்து தண்ணீரில் விட்டு விளையாடாமல் யாரின் பால்யமும் கழிந்திருக்காது. குறைந்த பட்சம் ஒரு கப்பலாவாது செய்து பார்த்திருப்போம். பத்மாவுக்கு காகிதக்கபல்[R2]  மீதும் கப்பல் மீதும் தீராத ஒரு ஆசை., ஒரு வகை அப்ஸெஷன் போல. முத்தக்கப்பல் (மிக நல்ல கவிதைகளில் ஒன்று), காகிதக்கப்பல், காகிதக் கப்பலாய் மாறிய நான், என்று நிறைய எழுதியிருக்கிறார்.ஒரு கவிதையில் காகிதக்கப்பலாகவே மாறி விடுகிறார்.
      இளம் கவிஞர்களின் பல நல்ல கவிதைகளில் நான் விரும்பிப் படிப்பவற்றில் றியாஸ் குரானாவின் கவிதைகளை[R3]  மிகவும் விரும்புகிறேன். அவற்றில் ஒன்றை பத்மா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.மிக நல்ல கவிதை அது. அவரின் பாதிப்பா அல்லது அப்படியொரு கவிதையாக்கம் குறித்த சிந்தனைகள் பத்மாவுக்குள்ளும் தோன்றியதா, தெரியவில்ல.வார்த்தை விளையாட்டுஎன்ற கவிதை ‘சுத்தமாக(with perfection)வந்துள்ளது. இதிலும் முத்தாய்ப்பான கடைசி வரி கவிதைக்கு நல்ல வலுச் சேர்க்கிறது.
     தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதையாக- அப்படியெல்லாம் ஒரு படைப்பாளி யோசிக்க முடியுமா, அல்லது எழுதிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் இப்படி ஒரு ‘ஆகச் சிறந்த கவிதை எழுது என்று சொல்ல முடியுமா தெரியவில்லை.-இருளின் நிறம் கவிதையைச் சொல்லலாம்.
     கன்ஃபர்ம்ட்- என்றொரு கவிதை. கருவுற்ற நிறைகுட மகிழ்ச்சியில், அடுத்த வீட்டில் விளக்கெரிவதைப்பிடிக்காத, மாமிகள் (மாமாக்களும்தான்) சந்தேகக் கேள்வியென்னும் விஷம் துப்பிக் கெடுப்பது பற்றிய கவிதை. எளிமையான வரிகளுடன் நகர்ந்து ஒரு குட்டி சுத்தியலடியோடு முடிகிறது.அவரது வங்கி வேலைகளின் தொடர்ச்சியாக எழுதப் பட்டதோ என்னவோ.. ‘பாலன்ஸ் ஷீட், ட்ரையல் பாலன்ஸ் எல்லாம் வருகிற ஒரு ‘ச்சும்மாஎழுதுகிற ஒரு கவிதையும் இருக்கிறது தொகுப்பில்.
 அம்மாகவிதையில், வாதைப்படும் அம்மாவைப் போட்டு விட்டு,சிறு குற்றச் சமாதானத்தோடு, மாட்னி ஷோ போகிற நடுத்தரவர்க்க மனோபாவத்தை மறைக்காமல் மறுக்காமல் சொல்லுகிறார். யதார்த்தமும் சோகமுமான நல்ல கவிதை.
     “ செண்பகப் பூவின் மணத்தை நுகரும் போது ஒரு சோக பாவம் மனதில் அப்பிக்கொள்ளும் என்று ரசிகமணி டி.கே.சி சொல்வது போல, பத்மாவின் கவியுலகில் உலவுகிற போது செண்பகப் பூவின் மணமும் ஏதோ ஒரு சோகமும் நாசி நெருடுவதைக் கூறாமல் தீராது.அதையெல்லாம் மீறி அவரின் அகண்ட வாசிப்புக்கும் ரசனை விசாலத்திற்கும் சாட்சியம் சொல்லுகிற பல நல்ல கவிதைகளை உள்ளடக்கிய பாரிய தொகுப்புத்தான் இது.

வாழ்த்துக்கள் பத்மா.

அன்புடன்
கலாப்ரியா

Sunday, September 8, 2013

இன்றென் கருவறை ஒரு முறை புரண்டது



சொல்
தசை மீது போர்த்தப்பட்ட திமிர் கொண்ட தோல்
காற்றின் வாடைக்கெல்லாம் வயப்பட்டு
காலனாய்
மேல் கர்ச்சிக்கிறதே!

மருந்தொன்று கொண்டு வா
இல்லை ஒரு திராவகம்!
பொசுங்கட்டும்
என் தூக்கம் கலைக்கும் துரோகி.

உடன் அவ்வையாய் மாறும்
உபாயம் அறியப் படாததால்
குஷ்டக் கிருமிகள்
என் மீது புகுந்து
விரல் தின்று விகசிக்கட்டும்.

போ இனி அவ்வாறு பார்க்காதே

தோலைக் கிழிக்கும்
வழியறியா பிச்சிக்கு
மனமொளிக்கத் தெரிவதில்லை.

கருப்பை சுழன்று
அவள் மூளை அடைந்ததை
எந்தச் சபையில்
கூறுவாளவள்?

விலகு!ஐயோ!அணை!
இல்லை !
இவள் பெண்மையைக் கொல்!

அல்லது மற்றொரு முறை
அந்தக் கண்களைக் கொஞ்சம்
மூடிக் கொள் .

இவளைக் கொல்வது
இலகுவாய் போகும்.

Wednesday, September 4, 2013

இரண்டு சீனக் கவிதைகள்



இன்றைய சீனக் கவிதைகளுக்கு ஒரு திறவுகோல் என அறியப்படுபவர் ஹுயு ஷீ (HU SHI ) 1891-1962.


கனவும் கவிதையும்


சாதாரண அனுபவங்கள் தாம் அனைத்தும்
பிம்பங்கள் கூடசாதாரணவை தாம்
மிகவும் எதேச்சையாய் அவை கனவுகளில் மலர்கின்றன
பின் ஒரு புதுவுரு அடைகின்றன
சாதாரண உணர்வுகள் தாம் அனைத்தும்
வார்த்தைகள் கூட சாதாரணவை தாம்
எதேச்சையாய் அவை கவிஞனை அடைந்து
முடிவுறா புதுக் கவிதையாய் மலர்கின்றன.
மதுவின் வீரியம் அது தரும் போதையில்
காதலின் பலம் அதன் தோல்வியில்
என் கவிதையை நீ எழுத முடியாதது போல
உன் கனவை நான் காண இயலாது .
--------------------------------------------------------------------------------------------------------------------------------



பழைய கனவு


பச்சை இலைகளுக்கூடே
ஒரு பறக்கும் கூரை வெளிப்படுகிறது
ஒரு பழைய கனவை அது எழுப்பி
என்னுள் கண்ணீரை துளிரச் செய்கிறது .
ஏனெனில் நான் பாடுவது
யாருமே அறியா இசையில்
பழைய பாடல்களைத்தான்
ஓ !நான் உண்மையில் பாடுவதெல்லாம் இல்லை
ஒரு பழைய கனவில் தான்
வசித்துக் கொண்டிருக்கிறேன் .....