Wednesday, August 21, 2013

வரிகளிடை மறைகவி

அவன் அனுப்பிய 
வரிகளை படிக்கத் தொடங்கினேன் 
எதாலோ ஏதோவோர் 
உயிரைத் துரத்த 
ஆயத்தம் கொண்டிருந்த 
வரிகள் 
அவ்வுயிரை அவை தொடும் நேரம் 
ஒரு நல்ல கவிதையாக 
மாறக்கூடிய சாத்தியங்கள் இருந்தது
அதுவரை அக்கவியின் 
பச்சை நிழல் 
அவ்வரிகளின் மேல் 
படிந்து மினுங்கியது.
பச்சை தந்த மயக்கத்தில் 
நல்ல கவிதையென 
செய்தி அனுப்பி விட்டு 
அமர்ந்த பின் தான் புலப்பட்டது
எல்லா வரிகளினூடே 
அமர்ந்திருந்த 
கவியின் உரு
அப்போது நிழல் கருப்பாய் மாறுவதை 
தடுக்க முடியாமல் 
திகைத்து நோக்குகையில் 
கவியின் நிறம் உண்மையில்  
சிவப்பாய் இருந்தது .

Sunday, August 18, 2013

இந்த மரத்தில் மட்டுமே கிளிகள் குடியேறுகின்றன

அதுவாகத்தான் அமைகிறது
அசைந்தழைப்பதில்லை எப்போதும்
இலைகள் கூட அங்கங்குதான்
பெரிதாக சுகந்தம் கூட பரவுவதில்லை
எப்போதோ பூக்கும் பூக்கள்
எப்போதாவது தான் காயாகி
விலகாமல் காற்றிலசைகின்றன
வெட்டப் பட்ட கிளைகள் மட்டும்
எப்படியோ உடன் வளர்ந்து விடுகின்றன
ஊழிக் காற்று  எத்துணை அசைத்தும்
சிறு சலனம் கூட காண்பதில்லை வேர்கள்
பூவும் மணமும் புகழும் சுற்றுதலும் இல்லாதிருப்பினும்
விதி கூட இதனை விலக்கி வைத்திருப்பினும்
இந்த மரத்தில் மட்டுமே கிளிகள் குடியேறுகின்றன
கூடிக் கூவிக் களிக்கின்றன .
என்ன !
உயரப் பறக்கும் பருந்திற்கு மட்டும்
இதனகம் கண்ணில் படுவதில்லை .

Tuesday, August 6, 2013

முத்த மலை

காற்றில் பறந்து வந்து
ஒரு முத்தம் என் கன்னத்தில்
அமர்ந்து விட்டதே!
ப்ரம்மஹத்தி பீடித்த
சிவன் போல்
அதை சுமந்து அலைகிறேன்
தோஷ நிவாரணம்
உன்னிடம் உள்ளதாமே
மற்றொன்று தொற்றுமுன்
வரம் தர வந்துவிடு
எனில்
முத்த மலையை
முதல் முறையாய் சந்தித்து விடுவாய்
சொல்லிவிட்டேன் ஆமாம்!

பேராசைதான்





ஒரு குழந்தையின் முதலடி
கவனம் போலோ
மழைக்காலத்தின் முதற்துளியின்
தண்மை போலோ
மொட்டவிழும் மலரின்
முதல் மணம் போலோ
கடல் காணும் ஒரு யானைக் குட்டியின்
ஆச்சரியத்தோடோ
தன் சிசு முதல் கையேந்தும்
தகப்பன் போலோ

நூல் கண்டு பிரித்தாடும் பூனையின்
உற்சாகத்தோடோ
முதல் மதுவருந்தும் ஒருவனின்
தயக்கத்தோடோ
சுழித்தோடும் ஆற்றிலிறங்கும்
படபடப்போடோ
முதல் நீச்சல் கற்றுணர்ந்த
சிறுவைப் போலோ
உண்டு மகிழ்ந்து கண்ணயறும்
த்ருப்தியோடோ
என்னைக் கொண்டாடு
என்றெல்லாம்
நான் கேட்கவில்லை!

என்னை நானாகப் பாரேன்
ஒரு முறை

அதற்காக
பேராசைக்காரி என்று மட்டும்
என்னைக் கூறிவிடாதே!