Friday, November 16, 2012

வன்புணர்ந்த வீடுகள் வடிக்கும் கண்ணீர்



ஒரு வீடு யாரையும் எப்போதும்
வெறுப்பதே கிடையாது
அது எல்லா ரகசியங்களையும்
தன்னுளேயே பொதிந்து கொள்கிறது .

வாசற்படியில் கழற்றப் படும்
அப்பாவின் செருப்பு சுமக்கும்
கோபத்திற்கும் உற்சாகத்திற்கும்
மாறி மாறி அது தாங்குகல்லாகிறது

ஜன்னல் கம்பி தேய தேய
கனவு காணும் அக்காவின்
கன்னங்களின் பாதியை
அது ஏற்றுக் கொள்கிறது

கதவேறி காத தூரம் பறக்கும்
சின்னவனுடன்
யாருக்கும் தெரியாமல் அது
அந்தரங்க சிநேகம் கொள்கிறது

திண்ணை மூலையில்
அவ்வப்போது சாயும் பாட்டியின்
பெருமூச்சுகளின் எண்ணிக்கையை
அது மறப்பதேயில்லை.

மூக்குப் பொடியை
தேய்த்து தேய்த்து கருத்த மூலையில்
தாத்தனின் கண்ணீரையுமது
சுமந்து நிற்கிறது

சும்மாடு கழற்றி
நீர் அருந்தும் மோர்காரக் கிழவியின்
கணக்கனாய் கோடுகள் சுமந்து
அலுக்காமல் சிரிக்கிறது
 
பல பிறப்பு இறப்பின் ஆன்மாக்கள் 
பெருமூச்சுடன் உலவும் அதன் காமிரா அறை
எப்போதும் வெளிச்சம் கண்டதே இல்லை
இந்த அம்மாவைப் போலவே

படி தாண்டி உள்வரும்
அனைவரையும்
சேர்த்தணைக்கும் தாயாய்
அது அகண்டு புன்னகைக்கிறது .

காசுக்கு ஆசைப்பட்டு யாரோ ஒருவனுக்கு
விற்கப்பட்டு
வன்புணர்ச்சியாய்  அதன் கதவுகள்
உடைய நேரிடும் போது கூட
வீடு யாரையும் எப்போதும் வெறுப்பதே கிடையாது

ஆயினும் அழிந்த நம் ஆன்மாவை நினைத்து மட்டும்
காலம் கடந்த அதன் கண்களில்
வடிகின்றன  இருசொட்டுக் கண்ணீர் துளிகள்
கால வெள்ளமென .

10 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அப்பா ரொம்ப நாளாச்சுப்பா.. நீங்க கவிதை எழுதி!

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் சகோதரி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

அனைவருக்கும் அன்பு  said...

மனித மனங்களின் ஆழ்ந்த வெளிப்பாடை கதவு உருவகமாய்
கணக்க வைத்தது மனதை

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனதை கலங்கச்செய்யும் பதிவு.
பகிர்வுக்கு நன்றி.

அன்புடையீர்,

வணக்கம்.

நேற்று 17.03.2013 ஞாயிறு 'தினகரன்' செய்தித்தாளின் இணைப்பான 'வசந்தம்' இதழின் ஆறாம் பக்கத்தை பார்க்க நேர்ந்தது.

அதில் “இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்” என்ற தலைப்பில் தங்களின் வலைத்தளம் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்.

படித்ததும் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் அன்பான இனிய நல்வாழ்த்துகளும்.

அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in

அம்பாளடியாள் said...

வணக்கம் !
வலைச்சரத்தின் மூலமாக இன்று இந்த வீட்டிற்குள் என் முகவரியினையும் விட்டுச் செல்கின்றேன் தோழி .இனி
என்றும் இனிக்கும் கவிதைகளுடன் இணைந்திருப்போம்.சிறந்த கவிதை நெஞ்சைத் தொட்டதனால் தான் இணைப்புக் கொடுத்தேன் வாழ்த்துக்கள் மென் மேலும் உங்கள் ஆற்றல்
வளம் பெறட்டும் !....

பால கணேஷ் said...

கவிதை மனசைத் தொட்டது... வன்புணர்ந்த வீடுகள் என்று விற்கப்பட்ட வீடுகளைச் சொல்லும் உவமானம் அருமை!

கவியாழி said...

இன்றுதான் வலைச்சரத்தில் பார்த்தேன் .உங்களின் கவிதை அருமை அதைவிட வேதனையின் வலிகள் புரியும்படி செய்கிறது.அருமையான படைப்பு. வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் பத்மா - அருமையான சிந்தனை - வன்புணர்ச்சியாக கதவுகள் உடைக்கப்பட்டாலும் வீடு யாரையும் வெறுப்பதே கிடையாது. நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் பத்மா - 2012 நவம்பர் 16க்குப் பிறகு ஏன் எழுதுவதில்லை- தொடர்க எழுத்தினை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வலைசரம் பார்த்து வந்தேன்.வீடு பற்றிய கவிதை ஒரு உணர்வுக் குவியல். அருமை.