Tuesday, December 7, 2010

மாற்றம்


நல்ல யுகலிப்டஸ்,துளசி,விபூதி பச்சிலை சேர்ந்து நறுமணமாக எங்கும் பரவி இருந்தது மூச்சை இழுத்து உள்வாங்கிக்கொண்டே விரைவாக நடந்தாள் சௌமியா.
நிச்சயம் இந்த காற்றே எதோ மாற்றம் செய்யும் என எண்ணியது மனது .

பணக்கார  வர்க்க பெண்மணிகளுக்கான rejuvenation center அது .உடலையும் மனதையும் வளப்படுத்தி அனுப்பும் நிலையம் ...
சௌமியா அப்படியெல்லாம் பணத்தில் புரண்டவள் இல்லை .மாத கடைசியில் கடன் வாங்கி நாளை ஓட்டும் குடும்பம் தான் .ஆனால் அவளின்  அழகும் ,திறமையும் ,இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது .
"கனவு போல" என்று நினைத்துக் கொண்டாள் .
இப்போது கொதிக்கும் டீயின் மணம்....இந்த மணங்கள் தான்   எப்படி நினைவுகளை கிளரச் செய்கின்றன ??
ஸ்ரீதர் அவளை பெண் கேட்டு வந்த நாளில் இதே டீ மணம் தான் .அப்பா நம்பவே இல்லை .ஏன் இவளுக்கே இன்னும் புரிபடாமல் தான் இருக்கிறது !
படிப்பு படிப்பு என்ற கனவெல்லாம் எங்கோ போனது .
"நீ என்ன வேணும்னாலும் படிமா "என வாஞ்சையுடன் கூறும் மாமனார் ..
இங்கே அனுப்பி வைத்தது கூட அவர் தான்
S V ரங்கராவ் போல கனிவும் அன்பும்...நிஜம் என உறைக்கவே நாளாகும் ..

ஆனால் கனவெல்லாம் காணாமலே போய்விட்டது .இப்போது மனதெல்லாம் ஸ்ரீ மட்டுமே ...
எதற்கும் பணியாமல் முரண்டு பிடிக்கும் மனம் .....மனமா இல்லை உடல் !
"நீ மட்டும் வெளிநாடு செல்ல என்னை ஏன் மணமுடித்தாய் ? "ஆயிரம் முறையாக மனது  கேட்கும் கேள்வி

ஸ்ரீ ஸ்ரீ என்று உருகியது ..அவன் நினைவு வர பரபரக்கும் சிந்தனை!அதனால் வரும் மாற்றம் !
"ச்சே !எப்போதிலிருந்து நான் நானில்லாமல் போனேன் ?"
வெட்கமாய் தான் இருக்கிறது

quite natural ! என்றார் அன்று பேசிக்கொண்டிருந்த மருத்துவ பெண்மணி ..சிந்தனையை வேறேதாவற்றில் மாற்று !
ஹ்ம்ம் மாற்று மாற்று மாற்று !

இதையெல்லாம் உணர்ந்திருக்க கூடும் வீட்டில் பெரியவர்கள் .....மீண்டும் பாட்டு ஓவியம் ஏன் போக அதுவும் சரிப்படாமல் போனது.

இரவு 11 மணிக்கு வரும் அழைப்புக்கும்,காலை  4  மணிக்கு கணிணியில் காணும் உருவத்திற்கும் காத்து நடைமுறையே மாறி போனது.கணிணியே கணவன் என்று எண்ணுகிற வரை வந்தாயிற்று .
"இன்னும் ஆறே மாசம் டா ஓடி வந்திடுவேன் " என மூன்று ஆறு மாசங்கள் ஓடி போயாச்சு .
சென்ற ஒரு வாரமாய் ஒழுங்காய் பேசாததாலும்,கணிணி  இல்லாததாலும் ,அவள் இருந்த நிலைமை பார்த்து இங்கே வர ஏற்பாடு செய்திருக்கிறார்கள் .

"ஹ்ம்ம் நன்றாய் தான் இருக்கிறது ...ஸ்ரீயும் இங்கிருந்தால்?...."மனம் சிலந்தி வலை பின்னக் கூடாதென்று விரைந்து நடந்தாள் சௌமியா.

"ஹாய்  நான் தான் ரேணுகா !உங்க ரூம் மேட் " என்று கைகுலுக்கியவளை அதிசயத்துடன் பார்த்தாள் சௌமியா

நல்ல உயரம் ,மினுமினுக்கும் பழுப்பு நிறம் ,ஆளையடிக்கும் புன்சிரிப்புடன் ரேணுகா ..அப்பா! என்ன ஒரு ஆளுமை .

அவள் வருடா வருடம் வருவாளாம்  .அவள் வேலை பார்க்கும் கம்பனிலேயே
இதுபோல லீவ் கொடுத்து அனுப்புவார்களாம் .அவள் செய்யும் வேலை அப்படி !
இன்னும் திருமணமாகவில்லை.

"LOOKING!"என்று கண்ணடித்தாள் .

"இங்கு ரிசப்ஷனில் நீங்கள் தான் என் கூட தங்கியிருக்க போவதாக சொன்னார்கள்.வா சாப்பிட போகலாம் ..வா போன்னு கூப்பிடலாம் தானே ?"
என்றவளை பார்த்து தலையாட்டுவதை தவிர வேறதும் தோணவில்லை !

சௌமியா !ஏன் புடவையிலே இருக்கே !இங்கு பயிற்சி செய்ய பாண்ட் சுடிதான் சரி .okயா?
 "நாளைலேந்து"என புன்னகைத்தாள்,சௌமியா

'ஏய் சௌமி,அழகான புன்னகைப்பா"    என 
"அது சரி"  என நினைத்துக் கொண்டாள்  

ரேணுவிற்கு அங்கு பல தெரிந்த முகங்கள். எல்லார் அறிமுகமும் ,கலந்துரையாடலும் 
சிரிப்பும் ,பேச்சும் ,கல்லூரி நாட்களை நினைவூட்டி ,மனது சிறிது லேசானது போல ..

"தேங்க்ஸ் மாமா "என மனதில் சொல்லிகொண்டாள் .

இருவரும் ரூமிற்கு திரும்பும்  போது 9.30 ஆகிவிட்டது .குளிர்ந்த காற்றும் ,நட்சத்திர ஒளியும் ,ஒரு சொல்ல முடியாத அமைதியை மனதிற்கு தந்தது.

ஒளிந்திருந்த  எண்ணம் மீண்டும் வெளிப்பட்டு "ஸ்ரீ மட்டும் .......சூ...... சூ....... என அதை ஓட
விரட்டினாள்.

"நான் முதலில் ஒரு குளியலை போட்டு வந்து விடுகிறேன் "என ஓடிவிட்டாள் ரேணு .பழக்கமில்லாமல் கூடுதலாக நடந்து காலெல்லாம் ஒரே வலி .

திரும்ப வந்த ரேணு "ஓ கால் வலிக்குதா ?என சொல்ல சொல்ல கேளாமல் தைலம் தேய்த்து பாதங்களை பிடித்து விட்டாள்.

அந்த இதத்திலேயே தூங்கிப்போன சௌமியா ,திடீரென்று உடல் சிலிர்த்து விழித்த போது
'உனக்கு எத்தனை அழகான ,வெண்மையான இடை !"என
சௌமியாவின்  புடவை விலகி பளீரிட்ட  இடையை ரேணு வருடிக்கொண்டிருந்தாள்
அதை தடுக்கத்  தோன்றாமல் அப்படியே படுத்திருந்த அவளின் கண்ணின் ஓரம் மட்டும் இரண்டு நீர்த்துளிகள் ..

47 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மனோதத்வ ரீதியான கதை.

உங்களின் எல்லாப் படைப்புக்களிலும் அடிநாதமாக வெளித்தெரிவது புதிய பார்வையுடன் யாரும் சொல்லத் தயங்கும் கோணங்கள்தான்.

தைரியமான எழுத்துக்கு ஒரு சபாஷ் பத்மா.

Prabu M said...

யூக‌லிப்ட‌ஸ், விபூதி, துள‌சி வாச‌னையில் திளைத்து சௌமியா வாக்கிங் போய்க்கொண்டிருக்கும்போதே அவ‌ளின் எண்ண‌ ஓட்ட‌ங்க‌ள் அவ‌ளின் ம‌ன‌நிலையை மிக‌ அழ‌கான‌ சுருக்க‌மான‌ வாக்கிய‌ங்க‌ளில் அழுத்தமாகப் புரிய‌வைத்துவிட்டீர்க‌ள்...

//எதற்கும் பணியாமல் முரண்டு பிடிக்கும் மனம் .....மனமா இல்லை உடல் !//

இந்த‌ வாக்கிய‌ங்களுக்கு மேல் புதிதாக‌ப் புரிய‌ எதுவுமிருப்ப‌தாக‌த் தோன்ற‌வில்லை...
முத‌ல் ப‌குதி சொல்லிவிடாதது எதையும் இந்த ‌க்ளைமேக்ஸ் சொல்லிட வாய்ப்பில்லை...
எழுத்தின் அழ‌கிய‌லை ர‌சித்தேன்.... கதையின் உண‌ர்வுக‌ள் புரிந்த‌பின் நித‌ர்ச‌ன‌மான‌ பின்விளைவின் விப‌ரீத‌ம் அர‌ங்கேறும்போது அமைதியாக‌ப் ப‌டித்துவிட்டு ந‌க‌ர்ந்தேன்....

Chitra said...

இரண்டாம் பாதி, சரியாக புரியலைங்க. சாரி!

pichaikaaran said...

பவர்புல்.....

வெட்டிப்பேச்சு said...

//அதை தடுக்கத் தோன்றாமல் அப்படியே படுத்திருந்த அவளின் கண்ணின் ஓரம் மட்டும் இரண்டு நீர்த்துளிகள் .. //

நிர்ப்பந்தங்கள் வாழ்வைக் குலைத்து விடும் தருணங்கள்..

நாம் நிறைய மகிழ்வான சங்கதிகளை இழந்து கொண்டிருக்கிறோம்..

மனதைத் தொட்டது.

வாழ்த்துக்கள்..



அப்புறம்.. நீங்கள் எங்கிருந்து இத்துனை அருமையான ஓவியங்களை எடுக்கிறீர்கள்?

எல் கே said...

வேதனையை பிரதிபலிகிறது. கணவன் வெளிநாடு செல்ல, இங்கிருக்கும் மனைவிகள் நிலை இதுதான். நல்ல புனைவு பத்மா

'பரிவை' சே.குமார் said...

நல்ல கதை... ரொம்ப நல்லாயிருக்கு.

Ashok D said...

வாசனை
மனம்
உடல்
என்று உருண்டோடுகிறது பதிவு..

கன்னி முயற்சி
நன்று... :)

bogan said...

கடைசி வரில என்ன சொல்ல வரீங்க...அது ஒரு தவிர்க்க முடியாத ஒழுக்கவியல் வீழ்ச்சி என்று சொல்கிறீர்களா...

ரிஷபன் said...

கதை என்ன சொல்ல வருகிறது என்று யூகிக்க முற்படுவதை விட.. சொல்லிப் போன ‘கத்தி மேல் நடை’ அபாரம்.

வினோ said...

திணிக்கபடுவதை ஏற்கும் நிலை.. :(

vasu balaji said...

superb narration. razor edge balance. weldone

காமராஜ் said...

ஒரு கதை இப்படித்தான் இழுத்துமூடிக்கொண்டு இருக்கவேண்டும் என்கிற நேர்கோட்டிலே நாம் புழங்கிவிட்டோ ம்.
அப்படியில்லாமல் எதிர்த்திசையிலும் பயணப்படச்சொல்லவில்லை.ஆனால் பேசித்தீரவேண்டிய அநேக அஜெண்டாக்கள் பேசப்படாமலே பூசனம் பூத்துக்கிடக்கிறது.நான் ஆகச்சிறந்த மனிதாபிமானியாக,பதவிசானவனாக
இருக்க என்னென்ன முஸ்தீபுகள் செய்தாலும்,சானல் மாற்றும்போது வந்துபோகிற ஆங்கிலப்படும் உள்ளுக்குள் கிடக்கும் ஆமையை உசுப்பி விடுகிறது.வசீகரமான பெண் எதிர்த்திசையில் கடக்கும் போது கழுத்து காந்த விசைக்கு திருகுகிறது.இவற்றைப்பேச நல்ல மனசும் தோழர் சொன்னதுபோல கத்திமேல் நடக்கும் கவனமும் இருந்தால் நீங்கள் ஆகச்சிறந்த படைப்பை இது போலப் படைக்கலாம்.
கோவில் சிற்பங்களைப் பார்க்கும் தருணங்களை மீட்டெடுக்கலாம்.நல்லா இருக்கு பத்மா.வாழ்த்துக்கள்.

sakthi said...

யாரும் தொடத்தயங்கும் கரு கொண்ட கதை ....

அபாரம் தொடருங்கள்!!!!

Madumitha said...

காயம் படாமல் கத்தி மேல்
நடந்து விட்டீர்கள்.
தீபாமேத்தாவின் படம்
ஞாபகத்திற்கு வருகிறது.

மோகன்ஜி said...

ரொம்ப நுணுக்கமாய் எழுதியிருக்கிறீர்கள் பத்மா! வித்தியாசமான கோணத்தில் விறுவிறுப்பாய்... ரசித்தேன்.

R. Gopi said...

Very well done.

விஜய் said...

கதை செ(சொ)ல்லும் பாங்கு அருமை

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

சாந்தி மாரியப்பன் said...

கதை நல்லாருக்குப்பா.. வெல்டன் :-)

ஹேமா said...

சில இயலாமைகளின் வெளிப்பாடாய் கதை.நல்லாயிருக்கு பத்மா !

மணிஜி said...

பத்மாஆஆ..இன்னும் கொஞ்சம் ஃபைன் ட்யூன் பண்ணியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..தொடருங்கள்..வாழ்த்துக்கள்.

ஈஸ்வரி said...

ஃபைன் ட்யூன் என்று சொல்வதல்லாம் காதுல புகை....
சபாஷ் பத்மா.
I LOVE U.

Siva said...

The flow is really nice and lot many girls get married to people in abroad and lead the life as you had mentioned....tough for them.Good one.

கலகலப்ரியா said...

நல்லாருக்கு பத்மா...

||bogan said...

கடைசி வரில என்ன சொல்ல வரீங்க...அது ஒரு தவிர்க்க முடியாத ஒழுக்கவியல் வீழ்ச்சி என்று சொல்கிறீர்களா..||

போகன் நீங்க ஏன் இதக் கேக்கறீங்க..?!

vinthaimanithan said...

வாவ்! எக்ஸலண்ட்... சடசடவென்று ஓடி சட்டென்று ப்ரேக் அடித்துக் குலுங்கியதுபோல இருக்கிறது.

rajasundararajan said...

உடம்புக்கு முடியவில்லை. மிகவும் தளர்ந்திருக்கிறேன். உறக்கம் என்னை வீழ்த்துகிறது.

பா.ரா.வின் மகளது மணவிழா முடிந்து திரும்பிய அன்றே ‘காகித ஓடம்’ கவிதைகள் ஒன்றிரண்டை வாசித்தேன். அவற்றின் புதுமையும் பாய்ச்சலும் கண்டு, மொத்தக் கவிதைகளையும் படித்துவிட்டு எழுதுவோம் என்று கணக்கில் வைத்தேன். எனது ‘நாடோடித் தடம்’ திருத்தல் வேலை, நர்சிம் புத்தகத்துக்கு முன்னுரை என்று நாட்கள் ஓடிவிட்டன.

இன்று உடம்புக்கு முடியவில்லை. இருந்தாலும் உங்கள் ‘மாற்றம்’ குறித்து ஒன்றும் சொல்லாமல் உறங்கவும் முடியவில்லை.

வேதா யோ வீனாம் பதமந்தரிக்ஷேன பததாம் | வேத நாவ: ஸமுத்ரிய: || (ரிக் 1:1:25.7). இதில் ‘பறவைகளின் பாதை’ என்பது flight of desires. ‘நாவாய்களின் போக்கு’ என்பது destination of life. மனம் பறவைக்கும் உடல் நாவாய்க்கும்.

உரிமம் கொடுத்து பாய் விரித்த பிறகும் துறைமுகத்தில் நங்கூரம் என்றால், கப்பல் திருகிக்கொள்ளாமல் என்ன செய்யும்?

// நல்ல யுகலிப்டஸ், துளசி, விபூதி பச்சிலை சேர்ந்து நறுமணமாக எங்கும் பரவி இருந்தது.
இப்போது கொதிக்கும் டீயின் மணம்....இந்த மணங்கள் தான் எப்படி நினைவுகளை கிளரச் செய்கின்றன ??
ஸ்ரீதர் அவளை பெண் கேட்டு வந்த நாளில் இதே டீ மணம் தான்//

வாசனை! இதன் இரு பொருளிலும் இதை உணர்கிறேன். காட்சியைக் காட்டிலும் வாசனைக் கிளர்ச்சிக்கு ஆற்றல் மிகுதி என்றும்?

உருவம் உள்ளடக்கம் என்றொரு கலைக்கோட்பாடு உண்டல்லவா? அதுவும் விவாதிக்கப் படுவதாக வாசிக்கிறேன். இப்போதைக்கு என் உடல் சோர்வதால் அதைச்சார்ந்து உள்ளடக்கமும் சோரும் என்றஞ்சி, உங்கள் ‘மாற்றம்’ பாராட்டி அமைகிறேன். வாழ்க!

பத்மா said...

@சுந்தர்ஜி
மிகவும் தயங்கி பதிவிட்ட கதை .draft இல் 6
மாதங்கள் தூங்கியது .
உங்களின் முதல் உற்சாக பாராட்டு பலமூட்டுகிறது .

பத்மா said...

@பிரபு
படித்து விமர்சித்ததிற்கு நன்றி .
மகிழ்ச்சி

பத்மா said...

@சித்ரா
பரவாயில்லமா ,நன்றி

@பார்வையாளன்
தேங்க்ஸ்

@வெட்டிபேச்சு
நன்றி
படங்கள் எல்லாம் கூகுள் ஆண்டவர் உபயம் தான்

@L K
நன்றிங்க

பத்மா said...

@சே குமார்
நன்றி

@அஷோக் அண்ணன்
நன்றி

@போகன்
நா எதுவும் சொல்ல வரலீங்க

பத்மா said...

@ரிஷபன்
சிறுகதை மன்னராகிய உங்களின் பாராட்டுக்கு மிகவும் சந்தோசம் & நன்றி ரிஷபன் சார்

@வினோ
சரிதான் .நன்றி

@வானம்பாடிகள்
THANKS A LOT SIR

பத்மா said...

@KAMARAJ சார்
ரொம்ப நன்றி சார் .
I DONT KNOW IF I DESERVE THIS MUCH.

@SHAKTHI
நன்றிமா

@மதுமிதா
:)

சத்ரியன் said...

//"நீ மட்டும் வெளிநாடு செல்ல என்னை ஏன் மணமுடித்தாய் ? "ஆயிரம் முறையாக மனது கேட்கும் கேள்வி //

எதையோ உணர்த்துகிறது பத்மா. (புரியாமல் இல்லை. சூழ்நிலை அப்படி.)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Good one

க.பாலாசி said...

மேடம்.. அன்னைக்கே இந்த கதையை பிரிண்ட் எடுத்துகிட்டு போயிட்டேன். ரொம்ப நேர்த்தி.. ரத்தினச்சுருக்கம். சுருக்கத்துக்குள் புதைத்துவைத்த ஒரு மெல்லிய.......... எனக்கு சொல்லத்தெரியல.

(கொஞ்சம் பத்தி பிரிச்சு அலைன்மென்ட் சரியா பண்ணிவிடுங்க எப்போதுமே. தங்கச்சிலைமேல் கிடக்கும் கதம்ப மாலை போல் கவர்ச்சி கிடைக்கும்)

சிவகுமாரன் said...

அந்தக் கண்ணீர்த் துளிகள் களங்கமற்றவை

Ahamed irshad said...

Super Story..Well..

தமிழ்த்தோட்டம் said...

அருமை பாராட்டுக்கள்

R.Gopi said...

உங்களுக்கு இயல்பாகவே கதை சொல்லும் பாங்கு தெரிந்திருக்கிறது...

வாழ்த்துக்கள் பத்மா மேடம்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வித்யாசமான கோலத்தில் சிந்திக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்..

Thenammai Lakshmanan said...

கொஞ்ச நேரம் அடித்துப் போட்டது போல் ஆகிவிட்டது பத்மா..:((

uma said...

Mattram hummm!!!!!! oru marrupatta storya irruka very nice padmaja

அ.வெற்றிவேல் said...

யாரும் தொடத் தயங்கும் கதைக்கரு.. மிக அழகாக கையாண்டு இருக்கிறீர்கள்..இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் தமிழ்ச் சிறுகதையின் முக்கியமான சிறுகதையாகி இருக்கும். வாழ்த்துகள்

R. Gopi said...

இந்தக் கதை பற்றி வலைச்சரத்தில் இன்று குறிப்பிட்டுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_12.html

Asiya Omar said...

வித்தியாசமாக எழுதப்பட்ட கதை..கொஞ்சம் யோசிக்க வைத்தது..

வை.கோபாலகிருஷ்ணன் said...

வலைச்சரத்தில் இன்று ஜொலிக்கும் தங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். vgk

Dhanalakshmi said...

vazhthukkal..........

chandhan-lakshmi.blogspot.com