சாய்த்து காலி செய்யப்படும்
அத்தனை குப்பைத் தொட்டிகளிலும்
நிறைந்து கிடக்கிறன
குருதி படிந்த பஞ்சுப் பொதிகள்.
விலக்கான பெண்களை
நாய்கள் துரத்துமென்றும்
பறவைகளின் நிழல்
தீட்டுத்துணியில் பட்டால்
பட்சி தோஷமென்றும்
அம்மா கூறுவாள்.
உடுத்த மாற்று இல்லா
சாலையோர தோழிகளின்,
பலமுறை உபயோகித்து,
சாக்காய் விடைத்து
தொடையெல்லாம் ரணமாக்கி
நடை மாற்றும்
அச்சுருணையில்
எந்த தோஷம் ஏறக்கூடும்?
பெண்ணாய் பிறக்க நேர்ந்ததோர்
பாவத்தைத் தவிர?