Wednesday, January 22, 2014

இரண்டு கவிதைகள்

சுள்ளி சுள்ளியாய்
சேர்ந்தமைந்த ஞாபகக்கூடு
புழங்கா வீட்டின் ஒட்டடை ஆடை
முத்தாய் மாற அரித்து வளரும் எண்ண உறுத்தல்
காலம் கெட்டித்த மரக்கல்
அரவத் தாத்தன் முழுங்கிய நாகமணி
அசையாதிருந்த யானை கர்ப்பம்
பறங்கியன் புதைத்து வைத்த திராட்சை ரசம்
பழுத்தது
பழுத்தது
சிதறியது
புரண்டது
காலம் தின்றது
காலத்தை தின்றது
நாகமணிக் கல்
ஆம்.


-------------------------------------------------------------------------------------------

 நீ எதுவேண்டுமானாலும் சொல்..
என்ன வேண்டுமானாலும் எழுது..
ஆனால் என்னைக் கண்டடைந்த
இக் கந்தர்வ குழலின் இசைக்கு
இறங்கி வரப் போவது யார்
என்ற என் கனவினை மட்டும்
கேலி செய்யாதே..
நான் அசரும் வேளையில்
ஒரு முறை அதை
வாசிக்க நீ முயல்வதும் எனக்குத் தெரியும்.
போகட்டும் போ
உன் அசல் முகம் எனக்குத் தெரியும்
என்ற கர்வத்தில் தான்
உன் அசட்டுத்தனங்களை எல்லாம்
புறம் தள்ளி போகிறேன்.
குழலிசைத்து எனையழைத்து
மேலும் அசடனாகாதே நீ!

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டு கவிதைகளும் அருமை...

/// குழலிசைத்து எனையழைத்து /// ரசித்தேன்...

தொடர வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

கவிதை இரண்டும் அருமை...
வாழ்த்துக்கள்.

வெட்டிப்பேச்சு said...

'சுள்ளி சுள்ளியாய்
சேர்ந்தமைந்த ஞாபகக்கூடு
முத்தாய் மாற அரித்து வளரும் எண்ண உறுத்தல்'

'காலம் தின்றது
காலத்தை தின்றது'

splendid.
Really you have a style and words with power to express.

God bless you.