கோமணத்த விட கொஞ்சம் பெருசா
சாணகலம் நஞ்சை இருக்கு !
நிலத்தை நம்பி பெருசு ரெண்டு ,
கனவு காணற பொண்ணு ஒண்ணு ...
படிச்சு ஒசர போறோமுன்னு
வீரம் பேசுற கன்னும் உண்டு ...
கட்டி வந்த நாளிலேந்து
தட்டி பேசா அப்பாவி ஒண்ணு ...
கிடைக்கு அனுபிச்ச ஆடு ரெண்டு
சீம்பால் தரும் செவலை ஒண்ணு ....
இம்புட்டு பேருக்கும் வயிற ரொப்ப
கடமை இருக்கும் காளை நானு........
அக்கம் பக்கம் இளிச்சு திரிஞ்சி
இருந்த தாலியும் அடகு வச்சு
மழையிலும் வெயிலும் மனசு அடிக்க
வெதச்சு, காய்ச்ச வெள்ளாமை எல்லாம்
பத்து மைலு காலு வலிக்க
சைக்கிள் மிதிச்சு டவுனுக்கு வந்து ...
வெறும் நாலு... பத்து ருவாயின்னு
தங்க சோளகதிர வித்தா ......
ஆறு கேட்டு பேரம் பேசி...
வாங்காம போய் வயித்திலடிக்கும்....
'கப்பு' முப்பதுனாலும் சரி
சொன்ன விலைய சிரிச்சு கொடுத்து
"அமெரிக்க சுவீட்கார்ன்"வாங்கி தின்னும்
சொரண கெட்ட நம்ம சனம் .
***உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது***