Tuesday, October 30, 2007

தடுமாற்றம்

சாம்பாரில் உப்பில்லை,
சாப்பாடது வேகவில்லை,
பழங்களோ குப்பையில்..
தோல் உண்ணும் தட்டில்.....
காபிப் பொடியாக
கொதிக்குது
மிளகுத்தூள்,ஃபில்டரில்....
செய்த அநியாயம்
போதுமென,ஓடிவிட்டேன்
சமையல் அறையிலிருந்து.....

உன்னை யார்
கால நேரம் பார்க்காமல்
'உன்னை மிகவும் பிடிக்குது'
என
காதோரம் சொல்லச்சொன்னது???

போடா!

இன்று கொஞ்சம்
அதட்டித்தான்
சொல்லிவிட்டேன்!!
வேலையின் இடையே..
கணிணித்திரையினூடே....
வாசிக்கும் வரிகளின் நடுவே..
இடையறாது........
தலையெடுத்துச் சீறும்
பாம்பென வரும்
உன் ஞாபக எண்ணங்களை
கொஞ்சம் அதட்டத்தான்
செய்தேன்.......
அதற்காக
வண்ண்ங்களிலும்,
வாசனைகளிலும்,
சிரிப்போசையிலும்,
பாடல் வரிகளிலும்
மண்வாசனையிலும்.......
வந்து..
பத்துத் தலை நாகமென
எனைச் சூழ்ந்து
பாடாய் படுத்தாதே......
போடா.......

ஏனடா?

வேலைக்காரியின் முனகல்,
ஆட்டோக்காரரின் அவசரம்,
காய்கறிக்காரரின் ஏமாற்று,
அலுவலகச் சிப்பந்திகளின் சோம்பல்,
அதிகாரிகளின் மேம்போக்கு,
வாடிக்கையாளர்களின் புகார்,
உடன் பிறந்தோரின் குறைகள்,
சில நண்பர்களின் கேலிகள்,
இவை அனைத்தையும்...
புன்னகையொடு தாங்கும்
எனக்கு...
உன் பரிவுக்குரலின்
சிறு மாற்றம் கூட
உயிரில் பூகம்பத்தை
உண்டாக்குதே
ஏனடா?

வரம்

வேறொன்றும் கேட்கவில்லை
உன்னிடம் நான்..

மணக்கும் மலர்கள்
வேண்டாம்,
மயக்கும் உடைகள்
வேண்டாம்,
இனிக்கும் இனிய
பயணங்கள் வேண்டாம்,
பொன்நகை வேண்டாம்.....
போகங்கள் வேண்டாம்.
இவை எதுவும் வேண்டாம்........

அலுவலகச் சிந்தனையின்றி
இடையறாத அழைப்பின்றி
மற்ற நண்பர்களின் நினைப்பின்றி
நாளையின் கவலையின்றி
எப்போதாவது ஒரு முறை...
இடையூறே இல்லாத
நமக்கே நமக்கான
சில மணித்துளிகள் மட்டும்

இது தவிர
வேறென்ன கேட்கப் போகிறேன்
உன்னிடம் நான்!!!

Sunday, October 14, 2007

கனா!

ஒவ்வொரு காலையும்
என் கனவினைக்
காயவைக்கிறேன்

கைக் கொள்ளாக் கனவுகள்
கட்டடங்காமல்
ஆட்டம் போடும்!

கனவுகள்
கனவாய் போகாமல்
நனவாய் மாற
நாளெல்லாம்
களைக்கிறேன்!

எனினும்
உறக்கத்திலும்
விழிப்பிலும்
கனவுகளின்
கொட்டம்!

கடை உறக்கம் வரை
கனவு
கனவாய்
இருப்பினும்
கடையோரப் புன்னகையுடன்
உறங்குவேன்....
வானம் வரை
உயரும்
கனவுடன்!!

Thursday, October 11, 2007

கண்ணா!!


கண்ணனைக் கருத்தில் கொண்டு
காண
காட்டாமணக்கில் கூட
மல்லிகை வாசம்!

கண்ணனைக் கனவில் கண்டு
பாட
கொல்லை புறம் கூட
கோகுல மாடம்!

கண்ணனை மனச்சிறையில்
பூட்ட
போகும் இடமெல்லாம்
புகழ் பொன்னாரம்!

கண்ணனே வாழ்வெனக்
கொள்ள
இருக்கும் காலமெலாம்
களிக்கும் மனம்!!

Tuesday, October 9, 2007

இனியது இனியது

ஒரு நாள்
விண்ணெல்லாம்
நட்சத்திரமான
பொழுது
விரல்நுனிபட
காத்திருந்ததும்........

வயிறு கீறி
வெளியெடுத்த
வலியொடு
பிஞ்சு ஸ்பரிசத்திற்கு
காத்திருந்ததும்.........

ஆண்டுகள்
பல பிரிந்து
பின் காணும்
கணத்திற்கு
காத்திருந்ததும்.........

இனிமை இனிமை
எனினும்
அதனினும்
இனிமை...

நீ... ஒருநிமிடம்
எனக் கூறி
தொலைபேசியில்
நிறுத்த
மனக் கண்ணில்
உனைக்
கண்டு கொண்டே
காத்திருக்கும்
அத் தருணம்........