Friday, May 31, 2013

கமலா தாஸின் " ஆடி"

31/05 கமலாதாஸின் நினைவு நாள்.

அவரின் கவிதை ஒன்றை மொழி மாற்றம் செய்துள்ளேன்.

                                     ஆடி

ஓர் ஆணை, உன்னை நேசிக்கசெய்வது
மிகவும் எளியதானதாய் இருக்கிறது,
அதற்கு
ஒரு பெண்ணாய் உன் தேவைகள் பற்றி
அவனிடம் நீ உண்மையாய் மட்டும் இருக்க வேண்டும்.
அவனுடன் கண்ணாடி முன்
வெற்றுடம்பில் நின்று பார்.
அதில் அவன் தன்னை பலவானாய் உணரட்டும்.
அதை அவன் நம்பட்டும்
அவனை விட நீ இளமையாகவும் மிருதுவாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறாய் என்று கூட.

அவனை நீ  வியக்கிறாய் என்று ஒத்துக்கொள்.
அவனுடைய கைகால்களின் நேர்த்தியையும்,
நீர்த்திவலைகளுக்குக் கீழ் சிவக்கும் கண்களையும்,
குளியறையின் ஊடே நடக்கும் அந்த வெட்க நடையையும்,
துண்டினைத் தளர்த்தி அவன் நீரினைக் கழிப்பதையும்  கூட.

இது போன்ற இனிமையான
அவனை உன்னுடயவன் மட்டுமாய்
ஆக்கக் கூடிய குறிப்புகள் அனைத்தையும் வியந்திரு.

அவனுக்குப் பரிசளி
உன்னைப் பெண்ணாய் ஆக்கும் அனைத்தையும் பரிசளி.
உன் நீண்ட கூந்தலின் மணத்தையும்
உன்னிரு மார்புகளுக்கிடை மலர் வேர்வையையும்,
உன் தூமையின் அதிர்வையும்,
உன் முடிவிலா பெண்மையின் பசியையும்.


ஓர் ஆணை  நேசிக்க வைப்பது சுலபம் தான்.
ஆனால் பின் அவனில்லாத வாழ்க்கையையும் நீ எதிர் கொள்ள நேரலாம் குறித்துக் கொள்.
நடை பிணமாய் வாழும்வாழ்க்கையில்
தேடலை கைவிட்ட கண்களுடன்
உன் பெயரைக் கூவி அழைத்த
அவனின் கடைசிக் குரலை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் காதுகளுடன்,
துலக்கிய பித்தளையாய்,அவன் தொடுதலில் மின்னி,
இன்று மங்கி, ஆதரவில்லாத உன்னுடலுடன்
நீ புதியவர்களை சந்திக்க நேரலாம்.
எனினும்
ஆண்களை நேசிக்க வைப்பது லகுவானது தான்.

                                                                      ******கமலாதாஸ்    

Wednesday, May 22, 2013

நன்றி நன்றி------- முதல் புத்தகம் ---முதல் விருது

கொஞ்சம் கிள்ளிக் கொள்ளுங்கள் என்று தான் ஆரம்பித்தார் அன்று தொலை பேசியவர் .
உங்கள் கவிதை புத்தகம் 'மலைப்பாதையில் நடந்த வெளிச்சத்திற்கு 'கவிதை உறவின் பரிசு கிடைத்துள்ளது என்றார்
நம்பத்தான் முடியவில்லை .
என் கவிதைகள் இலக்கியத் தரம் மிக்கதென்றோ இன்ன பிறவென்றோ கூற மாட்டேன் ஆனால் அதில் நிச்சயம் உண்மை உண்டு .அந்த உண்மைதான் இதை வாங்கித் தந்திருக்க வேண்டும்.

இருப்பினும் இந்த பரிசுக்கு நான் மட்டுமே உரியவள் அல்ல .

பின் வருபவர்கள் அனைவருக்கும் இது சமர்ப்பணம் .

முதலில் எழுதுங்கள் என்று ஆரம்பித்து வைத்த தினேஷ் என்ற சாம்ராஜ்ய பிரியன்;

அதை வாசித்து அதற்கு ஊக்கமளித்த சக வலைப்பூ நண்பர்கள்

அதை புத்தக வடிவமாக்க கருத்து கூறிய அமிர்தம் சூர்யா மற்றும் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள்

அதை வெளியிடத் துணிந்த டிஸ்கவரி பாலஸ் வேடியப்பன் அவர்கள்

அதற்குப் பெயர் சூட்டிய ராஜா சந்திர சேகர் அவர்கள்

அதை வாசித்து முன்னுரை எழுதித்தந்த ஆளுமைகள் கலாப்ரியா மற்றும் ராஜ சுந்தர்ராஜன் அவர்கள்

அதை வடிவமைத்து தந்த வெற்றி மற்றும் அவர் துணைவியார் அவர்கள்

தன் மகன் திருமணத்தில் அதை வெளியிட அரங்கம் அமைத்துத் தந்த திரு வெற்றிவேல் தம்பதியர்

காரைக்காலில் அதை அறிமுகப்படுத்திய இரா எட்வின் அவர்கள்

சென்னையில் அதை அறிமுகப்படுத்திய திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் திரு ஆத்மார்த்தி ,திரு சுந்தர்ஜி அவர்கள்

கோவையில் அதை கௌரவப்படுத்திய கோவை இலக்கிய சந்திப்பை சார்ந்த யாழி கிரிதரன் மற்றும் நண்பர்கள் .

சிவகாசியில் அதை மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்ற திருமதி.திலகபாமா அவர்கள்.

வெளிவந்த பிறகு அதற்கு மதிப்பீடு வழங்கிய ஆர் வி எஸ் தமிழரசி,தேனம்மை,கணேஷ் பாலா,கல்கி வார இதழ் ,அன்னா கண்ணன் மற்றும் ஹிந்து

இவர்கள் எல்லோருடன் பகிர்ந்து கொள்கிறேன் .

யாரையாவது விட்டிருந்தால் அது என் வயதினால் ஏற்படும் மறதியினால் அன்றி நன்றி மறந்ததால் அல்ல .

அவர்கள் என்னை நன்றாகத் திட்டலாம் 

 மீண்டும்  நன்றி நன்றி