Thursday, February 25, 2010

பொழுதோட்டல்

மற்றொரு பொழுது,
வேண்டியும் வேண்டாமலும் ...
துளாவும் மனம்  வானம் வரை போய்                                      
ஒட்டடை நினைவுகளை மட்டும் கண்டு  பின்                                   
நிறுத்தா கேள்விகளுக்கு தரும் பதிலுக்கு, பதில் ...
மீண்டும் ஒரு புதிய கேள்வி 
 விடையில்லா  உலகில் 
சிலந்தியின் வலை பின்னும் ஓசையும் 
மரண ஒலியாய்...

Sunday, February 21, 2010

பிரியா விடை


வண்ண ஆடை போத்திய
மலர்க்கூட்டம் நடுவே
முற்றிய மரமாய்
மலர்களின் பிரியாவிடையை
உள்வாங்கி சலசலக்கிறேன் .
அம்மலர்களிடமிருந்து பிரிந்த வெகுளித்தனம்
தன்னால் ஏற்பட்ட வெற்றிடத்தை
வெறித்து நோக்கி
வெளியேற இயலாது தவித்தது
சட்டென்று தெரிந்த கண்ணாடியை
ஆசையுடன் உற்று நோக்கினேன் ...
கொஞ்சம் என்முகத்திலும் ஒட்டிக்கொண்டதோ என்று..

(மகளின் பள்ளி பிரிவுபசார கூட்டத்தில் , சேலை கட்டிய சிறுமிகளை பார்த்த போது தோன்றியது .)

Thursday, February 18, 2010

சிறுமியானேன் !


உன்னை முதல் முதலாய் பார்த்த போது
எச்சில் பறக்க விசிலடித்து
இல்லாத பேருந்தை ஓட்டிய சிறுவனின் பயணியாய்
சீட்டு வாங்கிக்கொண்டு இருந்தாய்
இறங்குமிடம் வந்ததும்
அந்த ஓட்டுனர் மல்யுத்த வீரனாக
அவனிடம் அடி வாங்கி தோற்றுபோய்
கைகால் வான் நோக்கி
விட்டுவிட கதறியபடி இருந்தாய்
இந்த விளையாட்டுக்கெல்லாம் வராத
எனக்குமட்டும்
எப்படி ஒரு பரிசாய் அந்த புன்னகையைத் தந்தாய்?
இப்போது நானும்
இல்லாத இராட்டினத்தில்..
சுற்றும் ஒரு சிறுமியாய் !

Monday, February 8, 2010

கடைசி முத்தம்


உன் கபாலத்தில் வெடித்து சிதறிய
தீயின் நாக்கு
தேடி அலைந்து
மூலையில் ஒளிந்து இருந்த
என் உயிர் நெருப்பை அணைக்க முயன்று
தோற்று நீராய் மாறிவிட்டது .
அதில் என் காமத்தீ அணைந்ததால்
வந்த சாம்பல்
என் கண்ணீரோடு வினைபுரிந்து
திரும்ப தீயாய் கொழுந்து விட்டு
அகம் புறம் எரிக்கிறது
ஆனால் அது இறுதி வரை
நான் தந்த கடைசி முத்தத்தை மட்டும்
திருப்பித் தரவே இல்லை.