Saturday, February 9, 2019

கவிதை நூல் "பிணாவைக்"குறித்து திரு ஷைலபதி

 அகச்சித்திரங்களாக விரியும் பெண் மொழி – பத்மஜா நாராயணனின் ‘பிணா’ வை முன்வைத்து

பத்மஜாவின் கவிதைகளில் ஒலிக்கும் குரல் நமக்கு அந்நியமான பெண் குரல் இல்லை. அணுக்கமும் நெருக்கமுமான பெண் குரல். அன்னையாய், சகோதரியாய், மனைவியாய், தோழியாய், மகளாய் நம்மைச் சுற்றித் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் பெண் குரல். ஒருவகையில் பெண்ணும் ஆணும் நேசிக்கும் பெண்குரல். பெண்ணின் இத்தகைய குரலை வாழ்வில் கேட்கத் தவறியிருந்தால் அவற்றை நமக்காய் கவிதை செய்திருக்கிறார் 

வாழ்வின் தருணங்களில் இருந்து கவிதைகள் முளைவிடுகின்றன. கடக்கவியலாத ஒரு சிறுகணம், தவிக்கவிடும் அந்த ஒரு நொடி படைப்பாளனைக் காலத்தின் தீராத வெளியில் வீசியெறிந்து விடுகிறது. அதிலிருந்து சகஜமாய் மீண்டெழமுடியாமல் தான் அவன் வார்த்தைகளிடம் சரணடைகிறான். வாழ்வினை அதன் நிதர்சனத்தைக்கண்டு அதைச் சொற்களில் வழியச்செய்து அனுபவப்பகிர்வாக மாற்றுகிறது ஒருவகை என்றால் நேற்றும் இன்றும் நடந்தவற்றை, தொல்குடியின் ஒரு மூதாதையின் இடுக்கிய கண்களின் வழியாகவோ அல்லது மூச்சுவிடமுடிகிற அல்லது அசைவற்று வேடிக்கைபார்க்கிற, தொட்டால் மட்டுமே தெரிந்துகொள்கிற ஓர் பிரபஞ்ச உயிரியாகிக் கண்டு தெளிய முயன்று வார்த்தைகள் மெல்ல மெல்லக் கூடி ஓர் கயிற்றினைப் போல் திரட்டி அவனைக் காலத்தின் பெருவெளியில் இருந்து மிதந்துவந்து நிகழ்காலத்தில் வீழ்வது மறுவகை. அப்படி இருவகையாகவும் திரண்டிருக்கும் தொகுப்புதான் பத்மஜாவின் ‘பிணா’ 
ஒரு கவிதை நூலை வாசித்தல் என்பது கைவிடமுடியாத ஒரு அவஸ்தையாகவும் அதே வேளையில் இதுவரை பிரவேசித்தும் அறிந்தும் இராத ஒரு புது உலகைக் காணும் பேராவல் உணர்வாகவும் இருக்கக்கூடும். அப்படியான ஒரு அனுபவத்தைத் தான் பிணா கவிதைத் தொகுப்பு அளிக்கிறது. 72 பக்கங்களில் எண்ணி 41 கவிதைகள். இத்தனை சிறியதொரு தொகுப்பு வாசிப்பில் விரிக்கும் உலகம் மீப்பெரிது.

இந்தத் தொகுப்பின் கவிதை இருவிதமான குரல்களால் நிரம்பியுள்ளது. ஒன்று ஆதித்தாயின் நீட்சியாகத் தன்னை அடையாளம் காணும் ஓர் உலகப்பெண். மற்றொன்று மிகவும் எளிமையான ஆன்மாவாகத் தன் உறவுகளின் அன்பினால், காதலினால், துரோகத்தினால், பிரிவினால் வாடும் ஒரு பெண். முதலாமவள் கம்பீரமான ஓர் பிடியைப் போல உலா வருபவள் என்றாள் இரண்டாமவள் நடுங்கும் அல்லது அலைபாயும் விழிகளோடும் பதற்றத்தோடும் மேய்ச்சல் செய்பவள். இரண்டும் அதனதன் விதத்தில் அழகுதான் என்றபோதும் மானின் மருட்சி அனுபவங்கள் கொஞ்சம் கலக்கமூட்டுவதாகவே அமைகின்றன.

பத்மஜாவின் கவிதைகள் சின்னச் சின்ன காட்சிகளை ஓர் ஓவியம் போல உருவாக்கி அதன் வர்ணம் போன்ற வார்த்தைகளால் நிரம்பியவை. எதையும் அவர் காட்சிப்படுத்தவே முனைகிறார்.

 “என் நரம்புகளூடே
 ஒரு பறவை எப்படிப் பறந்து சென்றது?”

என்கிற வரிகள் தீட்டும் நவீன ஓவியத் தன்மை கவிதைப் பொருள் சார்ந்து உணர்தலைக் கடந்து காட்சிரூபமான ஓர் நிலையை வாசகனுக்குள் பதியவிடுகிறது. அதுதரும் கிளர்ச்சி ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை வாசகனுக்குச் சிருஷ்டிக்கப் போதுமானதாக இருக்கிறது. நவீனக் கவிதையின் தன்மையும் இது தான் என்று தோன்றுகிறது. இந்தத் தொகுப்பில் இத்தகைய வரிகள் அநேகம்.

இப்படியான எளியச் சிறு சிறு காட்சிகள் மாத்திரமல்ல, சங்கக் கவிதைகளைப் போன்ற வலிமையான காட்சிகளைக் கொண்ட கவிதைகளும் தொகுப்பில் உள்ளன. தொகுப்பின் ‘நீர்ப்பெண்’ கவிதை முன்னமே சொன்னதைப் போல தன்னை ஆதித் தாயின் நீட்சியாகக் காண்கிற ஓர் பெண்குரல். ஒரு பெரும் பாலை. பாலை என்பது தமிழ் நிலத்தில் தனித்த நிலப்பகுப்பு அன்று. குறிஞ்சியும் முல்லையும் கோடையில் திரிந்த நிலமே பாலை. அப்பாலை நிலத்தில் கடும் வறட்சி. நீரின் முகத்துவாரங்கள் எல்லாம் தூர்த்துப்போயின. புதிய ஊற்றுகளைக் கண்டடைய வேண்டியதிருக்கிறது. அவள் நீர்வளம் கண்டறியும் பெண். தாய்த் தலைமைச் சமூகத்தில் தாய் தானே எல்லாம். அவள் தன்னைக் கார்முகிலின் பெண் என்று சொல்லிக்கொள்கிறாள். துடி முழங்க மக்கள் பின் தொடர அவள் அப்பாலை நிலத்தைக் கடக்கிறாள். கவிதையின் களம் இதுதான்.

கட்டாந்தரையில் நீர்வளம் கண்டறியும் // கார்முகிலின் பெண் நான்.// துடி முழங்க பாலையைக் கடக்க// படையுடன் நடக்கிறேன் //மயிர்க்காலெல்லாம் பரபரவென // நீர்ப்பசை மணக்கும் மண்வாயிட்டு சுட்டுவேன்// நடுப்பலை கடங்கும் படை!//தரை நிழல் நீள தன் உடல் தரும்அடிமை மேல்// என் கை பற்றி? நடக்கிறான் அரசன்.//ஒட்டகத்திமில் பறித்து//       உணவுண்டு சாய்கிறார் மற்றோர்// பெற்ற குழந்தை பறிகொடுத்து // நீரற்ற வேளை தன் முலைப்பால்// உறியத் தரும் ஆதிப்பெண்குடி//இதன் நடுவே நெஞ்சீரங்காணாது// துவண்டுகிடக்கு? மென் மந்திரக்க்கோல்.//கட்டாந்தரையிலும்  நீர்வளம் காணும்//கார்முகிலின் பெண் நான் // அன்பீரங்காணாது // சோர்ந்துவெளுக்கும் கார்முகிலின் பெண்ணும் நான்!

பாலை நிலத்தைக் கடக்கையில் நீர் கிடைக்காமல் போகும் அபாயம் உண்டு. பிறந்த குழந்தையைப் பறிகொடுத்த பெண்ணை உடனழைத்துச்செல்வது வழக்கம். நீர் இன்றி வாடும் சமயத்தில் அவள் முலைப் பால் உண்டு உயிருய்யவேண்டிய கொடும் நிலை வரலாம். அத்தகு கொடிய பாலை நிலத்தின் காட்சியைக் இக்கவிதை விரிக்கிறது. உண்மையில் இக்கவிதை பேசுவது பாலை நிலத்துக் காட்சியைத் தானா? வாழ்வின் வெம்மையில் துவண்டுவிடாமல் அன்பின் ஈரத்தைக் காணப் போராடுகிற ஒரு பெண்ணின் குரல் அதனுள் ஒலிக்கிறது. தன்னை முற்றாகத் தன் தலைவனுக்குத் தந்து தன்னை அடிமையாக்கிக் கொண்டாவது வாழ்வில் அன்பின் ஈரத்தைக் காணவிளைகிற பெண் ஒருத்தி இக்கவிதையில் இருக்கிறாள். இது போலப் பல பல வாசிப்புகளுக்கு இடம் கொடுக்கும் கவிதை இது.

தன்னைப் பிரபஞ்சப் பெண்ணாக அடையாளம் காணுகிற கவிதைகளில் பத்மஜா சாதிக்கவிரும்புவது பெண்ணை முதன்மையைக் குரலாய்க் கோரும் புரட்சிக்குரலாய் அல்லாமல் சக பெண்ணுக்காய் இறங்குகிற அன்புசெய்கிற அவளை அணைத்துக்கொள்கிற அழைப்பாகவே தோன்றுகிறது. அது ஒரு மென்குரல். பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் இருந்து இனப்பெருக்கம் செய்வதன் மூலம் தன் உயிரைப் பணையம் வைக்கும் ஒரு பெண்ணினம் அதை இன்னும் பேரன்பின் கருணையோடு தொடர்கிறது. ஒரு மகவை ஈன்று பேருவகை எய்தும் அவள், மகப்பேரில் இறந்துபோன ஒருத்தியை நினைத்து பெருவலி கொள்கிறாள். மீண்டும் மீண்டும் தங்களுக்குத் தாங்களே நிகழ்த்திக்கொண்டு இப்பிரபஞ்சத்தைல் மானுடத்தை வாழவைக்கும் அவர்களின் சிறு விசும்பல் ‘புனரபி ஜனனம்’ கவிதை.

இத்தொகுப்பின் இரண்டாம் குரல் தனிமனுஷியாக உறவுகளோடு கூடியும் கழித்தும் வருந்தியும் அழுதும் வாடும் குரல். இக் கவிதைகளில் பால் சுட்டப்பட்டே எழுதப்பட்டிருந்த போதிலும் பால் பேதம் இல்லாமல் அது வாசகனால் உள்வாங்கப்படும் கட்டிபட்டுப்போன கறுத்த அனுபவங்களை அடையாளம் காணுதல். ‘அலறும் ஆம்புலன்ஸைப் பின் தொடர்தல்’, ‘துக்கம் புணர்தல்’ ‘முடிச்சு’, ‘இறந்தவனின் புகைப்படம்’ ஆகிய கவிதைகள் அப்படியானவை. வலியும், துக்கமும் பிறக்கும் கணங்கள், மனிதர்கள் பால் பேதம் உடைந்து மிக எளிய ஆன்மாக்களாக வாழும் அபூர்வ கணங்கள். அவற்றைக் காணும் யாரும் தமக்குள்ளாக உறைந்து போன அப்படியொரு தருணத்தை மீட்டெடுப்பதும் அக்கணத்தை ஒரு கணம் வாழ்ந்து கடப்பதும் இயல்பானவை. அப்படியான வாசகனின் ஆழ்மனத் தருணங்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் பெற்றன இக்கவிதைகள்.

இறுதி ஊர்வலங்களில் மலர்களை உதிர்த்துக்கொண்டு செல்கிறார்கள். எல்லோருக்கும் அது மலர்களாகத் தெரிகிறது. ஆனால் இறந்தவனோடு தொடர்புடையவர்களுக்கு அது இறந்தவனைப் பற்றிய தீராத நினைவுகள். அதை அந்த இறுதிப் பயணத்தில் உதிர்த்துத் தீர்க்க முயல்கிறார்கள் என்கிறார் பத்மஜா.

\\ இறுதி ஊர்வலத்தில்\\ எடுத்துச் செல்லப்படுபவனைப் பற்றிய\\ நினைவுகள் வழியெங்கும் மலர்களாய்\\ பிய்த்து எறியப்படுகின்றன\\ என்கிற வரிகள் புனரபி ஜனனம் கவிதை போல வாழ்வை வெறுமையில் இருந்து தொடங்குகிற மற்றொரு கவிதையின் வரிகள்.

இத்தொகுப்பில் மிக இன்றியமையாத கவிதைகளாக ‘ஒருவன்(ள்)’, ‘அம்மா’, ‘தேஜாவு (DEJA VU) ஆகிய கவிதைகளைச் சொல்லலாம்.

“என் க்ரோமோசோமின் நெளிவை\\ என் மீசையை அல்ல\\ என் பூ போட்ட சட்டையை வைத்தே\\ கண்டுகொள்கிறாய்\\

“வலி மரக்கவைக்கும்\\ ஊசியின் போதையிலும் \\ அப்பாவின் செருப்போசை\\ மட்டும் உனக்குத் தெரியும்\\

\\ நான் ஒரு நிறுத்தாத முணுமுணுப்பு\\ நான்  அணையாச் சாம்பல் \\ நான் ஒரு கண்ணீரின் போதை\\” ஆகிய வரிகள் வாழ்வின் மீதான புகார்கள் அற்ற அதே வேளை அதன் நிர்பந்தங்களை மெலிதான விமர்சனங்களோடு கடக்கும் கவிதைகளின் வரிகள்.

பத்மஜாவின் கவிதைகளில் ஒலிக்கும் குரல் நமக்கு அந்நியமான பெண் குரல் இல்லை. அணுக்கமும் நெருக்கமுமான பெண் குரல். அன்னையாய், சகோதரியாய், மனைவியாய், தோழியாய், மகளாய் நம்மைச் சுற்றித் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் பெண் குரல். ஒருவகையில் பெண்ணும் ஆணும் நேசிக்கும் பெண்குரல். பெண்ணின் இத்தகைய குரலை வாழ்வில் கேட்கத் தவறியிருந்தால் அவற்றை நமக்காய் கவிதை செய்திருக்கிறார் பத்மஜா. தொடர் இலக்கியச் செயல்பாட்டின் மூலம் தன் இடத்தைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆழப் பதித்திருக்கும் பத்மஜா நாராயணனின் படைப்புவரிசையில் ‘பிணா’ குறிப்பிடத்தக்க ஓர் படைப்பு. அண்மைக் காலங்களில் வெளியான பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளில் ‘பிணா’ மாறுபட்ட மொழியும் கவித்துவமும் கொண்ட முக்கியமான ஆக்கம் என்று சொல்லலாம். சிறப்பான தொகுப்பை வளங்கிய கவிஞருக்கும், நூலினைப் பதிப்பித்த விருட்சத்திற்கும் பாராட்டுகள்.

No comments: