Tuesday, June 11, 2013

மரங்கீழ் மிழற்றல்



உதிர் மலர் மிதிக்க
அஞ்சு மனம்
காமத்தீயில் காற்றென ஆடும்

எரி தழலென தகிக்கும்
ஆடை கிழித்து
பெருமழை சேற்றில் வீழும் .

அடி மரம் கொய்யும்
பேர் மூச்சு
அடங்காதலை  பாய்ந்து கொல்லும்.

சீறி எழும் உள்மூச்சு
ஓர்  உன்மத்த
நிலை நோக்கித் தள்ளும்.

இலை  அடர்ந்த மரங்கீழ்
ஓருரு  மட்டும்
அவ்வப்போது  மிழற்றி மாயும்

புத்தம் சரணம் கச்சாமி !

Monday, June 10, 2013

புத்தனாதல்


நண்ப!
கையில் ஒரு கோப்பையை
திணித்து விட்டு
புத்தனாகு  என்றபடி
மாயமாகிப் போனாய் நீ ,
கோப்பை ததும்பி
மது சிதற
பரவுமிடமெல்லாம்
புத்தன் சிரிக்கத் துவங்கினான்
அப்போது அவனைக் கொல்வது
அத்துணை இலகுவாய் இல்லை
புத்தனைக் கொல்லுதல்
அல்லது கோப்பையை
இடம் மாற்றுதல்
எது ஒன்றை செய்தால்
புத்தனாவேன்
என்றோசித்தபடி
சுட்டு விரல் மதுவை
சுவைக்கத் துவங்கினேன்
உடைந்தது கோப்பை !