Friday, May 31, 2013

கமலா தாஸின் " ஆடி"

31/05 கமலாதாஸின் நினைவு நாள்.

அவரின் கவிதை ஒன்றை மொழி மாற்றம் செய்துள்ளேன்.

                                     ஆடி

ஓர் ஆணை, உன்னை நேசிக்கசெய்வது
மிகவும் எளியதானதாய் இருக்கிறது,
அதற்கு
ஒரு பெண்ணாய் உன் தேவைகள் பற்றி
அவனிடம் நீ உண்மையாய் மட்டும் இருக்க வேண்டும்.
அவனுடன் கண்ணாடி முன்
வெற்றுடம்பில் நின்று பார்.
அதில் அவன் தன்னை பலவானாய் உணரட்டும்.
அதை அவன் நம்பட்டும்
அவனை விட நீ இளமையாகவும் மிருதுவாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறாய் என்று கூட.

அவனை நீ  வியக்கிறாய் என்று ஒத்துக்கொள்.
அவனுடைய கைகால்களின் நேர்த்தியையும்,
நீர்த்திவலைகளுக்குக் கீழ் சிவக்கும் கண்களையும்,
குளியறையின் ஊடே நடக்கும் அந்த வெட்க நடையையும்,
துண்டினைத் தளர்த்தி அவன் நீரினைக் கழிப்பதையும்  கூட.

இது போன்ற இனிமையான
அவனை உன்னுடயவன் மட்டுமாய்
ஆக்கக் கூடிய குறிப்புகள் அனைத்தையும் வியந்திரு.

அவனுக்குப் பரிசளி
உன்னைப் பெண்ணாய் ஆக்கும் அனைத்தையும் பரிசளி.
உன் நீண்ட கூந்தலின் மணத்தையும்
உன்னிரு மார்புகளுக்கிடை மலர் வேர்வையையும்,
உன் தூமையின் அதிர்வையும்,
உன் முடிவிலா பெண்மையின் பசியையும்.


ஓர் ஆணை  நேசிக்க வைப்பது சுலபம் தான்.
ஆனால் பின் அவனில்லாத வாழ்க்கையையும் நீ எதிர் கொள்ள நேரலாம் குறித்துக் கொள்.
நடை பிணமாய் வாழும்வாழ்க்கையில்
தேடலை கைவிட்ட கண்களுடன்
உன் பெயரைக் கூவி அழைத்த
அவனின் கடைசிக் குரலை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் காதுகளுடன்,
துலக்கிய பித்தளையாய்,அவன் தொடுதலில் மின்னி,
இன்று மங்கி, ஆதரவில்லாத உன்னுடலுடன்
நீ புதியவர்களை சந்திக்க நேரலாம்.
எனினும்
ஆண்களை நேசிக்க வைப்பது லகுவானது தான்.

                                                                      ******கமலாதாஸ்    

No comments: