Friday, November 16, 2012

வன்புணர்ந்த வீடுகள் வடிக்கும் கண்ணீர்



ஒரு வீடு யாரையும் எப்போதும்
வெறுப்பதே கிடையாது
அது எல்லா ரகசியங்களையும்
தன்னுளேயே பொதிந்து கொள்கிறது .

வாசற்படியில் கழற்றப் படும்
அப்பாவின் செருப்பு சுமக்கும்
கோபத்திற்கும் உற்சாகத்திற்கும்
மாறி மாறி அது தாங்குகல்லாகிறது

ஜன்னல் கம்பி தேய தேய
கனவு காணும் அக்காவின்
கன்னங்களின் பாதியை
அது ஏற்றுக் கொள்கிறது

கதவேறி காத தூரம் பறக்கும்
சின்னவனுடன்
யாருக்கும் தெரியாமல் அது
அந்தரங்க சிநேகம் கொள்கிறது

திண்ணை மூலையில்
அவ்வப்போது சாயும் பாட்டியின்
பெருமூச்சுகளின் எண்ணிக்கையை
அது மறப்பதேயில்லை.

மூக்குப் பொடியை
தேய்த்து தேய்த்து கருத்த மூலையில்
தாத்தனின் கண்ணீரையுமது
சுமந்து நிற்கிறது

சும்மாடு கழற்றி
நீர் அருந்தும் மோர்காரக் கிழவியின்
கணக்கனாய் கோடுகள் சுமந்து
அலுக்காமல் சிரிக்கிறது
 
பல பிறப்பு இறப்பின் ஆன்மாக்கள் 
பெருமூச்சுடன் உலவும் அதன் காமிரா அறை
எப்போதும் வெளிச்சம் கண்டதே இல்லை
இந்த அம்மாவைப் போலவே

படி தாண்டி உள்வரும்
அனைவரையும்
சேர்த்தணைக்கும் தாயாய்
அது அகண்டு புன்னகைக்கிறது .

காசுக்கு ஆசைப்பட்டு யாரோ ஒருவனுக்கு
விற்கப்பட்டு
வன்புணர்ச்சியாய்  அதன் கதவுகள்
உடைய நேரிடும் போது கூட
வீடு யாரையும் எப்போதும் வெறுப்பதே கிடையாது

ஆயினும் அழிந்த நம் ஆன்மாவை நினைத்து மட்டும்
காலம் கடந்த அதன் கண்களில்
வடிகின்றன  இருசொட்டுக் கண்ணீர் துளிகள்
கால வெள்ளமென .