Wednesday, June 20, 2012

திரு .வேங்கடசுப்ரமணியன் ராமமூர்த்தி எழுதிய என் முதல் புத்தக மதிப்பீடு


பத்மஜா நாராயணன் அவர்களின் ”மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்” கண்ணில் பளபளக்கப் படித்தேன். கல்கி, குங்குமம், இவள் புதியவள், இணையம்(அதீதம், உயிரோசை) என்று பரவலாக எழுதிய கவிதைகளைத் திரட்டி கவிப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். எல்லாக் கவிதைகளின் க்ளைமாக்ஸிலும் தலைப்பிற்கான திரியைக் கொளுத்துகிறார். ஒரு பானைக் கவிதைகளுக்கு ஒன்றிரண்டு பதமாக இங்கே.

”பாழாய்ப்போன மனசு” படித்தவுடன் மனசோடு ஒட்டிக்கொள்கிறது. பழைய திண்ணை இடிக்கப்படாமல் இருப்பதற்கும், மல்லிப்பூ விற்கும் சிறுமி தலையில் கிள்ளுப் பூவிற்கும், இறுதி ஊர்வலம் வயதானவருக்கே என்று தெரிந்த பின்னர் தான் ஆசுவாசப்படுகிறது மனசு என்று சொல்வது ’பச்’சென்று பாழ் மனசோடு படிகிறது.

“கல்லாட்டம்” ஆடிய ஜெயந்தியக்கா பதினாறாவது வரியில் அண்ணியான கவிதை.

“கன்ஃப்ர்ம்ட்” கவிதை கர்ப்பம் கன்ஃப்ரம்டு என்ற சந்தோஷம் ஒரே கேள்வியில் துக்கமானதைச் சொல்கிறது.

Discovery Book Palace கட்டுக்கோப்பாக பதிப்பித்த கவிதைத் தொகுப்பு. திறம்பட வடிவமைத்து இலக்கியத்தரமான பதிப்புரை எழுதிய வேடியப்பனுக்கு ஒரு சபாஷ்.

Tuesday, June 19, 2012

"மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் '' புத்தக வெளியீடு

 கனவு போல் இருக்கிறது.

இங்கு நான் கவிதை எழுதத்தொடங்கியதும் அதற்கு நீங்கள் அனைவரும் பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்தியதும்.

எதோ ஒரு பேராசையில் அதை தொகுத்து வெளியிட்டும் விட்டேன். நியாயமாக அந்த அறிவிப்பை இங்கு தான் முதலில் வெளியிட்டிருக்க வேண்டும்.பணிச்சுமையினால் பகிர முடியாமல் போய்  விட்டது.

காகிதஓடத்தில் வந்த கவிதைகளைத் தொகுத்து
"மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் ''
 என்று தலைப்பிட்டு டிஸ்கவரி புக் பாலஸின் முதல் வெளியீடாக வந்துள்ளது. இதை சாத்தியப் படுத்திய உங்கள் அனைவருக்கும் நன்றி .


நிச்சயம் நான் எதோ நற்செயல் புரிந்திருக்க வேண்டும்.அதனால்தான்  நான் பெரிதும் மதிக்கும் திரு.கலாப்ரியா அவர்களும் திரு.ராஜ சுந்தரராஜன் அவர்களும் எனக்கு முன்னுரை எழுதித் தந்துள்ளனர்.

அவர்கள் எழுதிய முன்னுரையை  அவர்களின் அனுமதியோடு முடிந்தால் பதிவேற்றம் செய்கிறேன் .

நூல் http://discoverybookpalace.com/ என்ற முகவரியில் கிடைக்கும்.

நூல் மே முப்பதன்று மதுரையில் திரு கலாப்ரியா அவர்களால் திரு.வெற்றிவேல் அவர்களின் மகனின் திருமண விழாவில்  வெளியிடப்பட்டது.
மதுரை நண்பர்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சென்னையில் டிஸ்கவரி புக் பாலஸில் ஒரு அறிமுகக் கூட்டம் நடத்தலாம் என்று நினைத்திருக்கிறேன்.நண்பர்கள் கலந்து கொண்டு உற்சாகப்படுத்த வேண்டும் .

இது சாத்தியப்பட்டதில் வாசிக்கும்,வாசித்த உங்கள் அனைவருக்கும் பங்கு உண்டு.அதற்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள் பல.  

Monday, June 11, 2012

கருப் பொருள்


இப்போதெல்லாம்
மிக எளிதாய்  வந்தமர்கிறது
கவிதையின் கருப்பொருள்.
ஒரு கட்டடத் தொழிலாளி
வாங்கிச் செல்லும்
ஒரு சொம்பில் நிறைந்திருக்கும்
தேநீர் கூட
கவிதையுள்  வர எத்தனிக்கிறது .
கொஞ்சம் சூடு குறையட்டும்
எனக் காத்திருப்பில் அதை வைத்திருக்கிறேன் .
பூனை, நாய், எலி, யானை,
இவையெல்லாம் ஏற்கனவே
பல கவிதைகளில் வந்துவிட்டாலும்
எப்போது வேண்டுமானாலும்
உள்நுழைய ஆயத்தமாகவே
இருக்கின்றன .
இரவும், பகலும், நிலவும், காற்றும் ,
பாடப்பட்டதில் சலித்து சலசலக்கின்றன   
கால் தட்டிய கல்லும்
தினம் எடை பார்க்கும் எந்திரமும்
கழற்றி போட்ட ரவிக்கையும்
மடிக்காத போர்வையும் கூட  
எப்போதாவது
ஒரு வரிக்குள் நுழைய மாட்டோமா
என்று எதிர்பார்க்கின்றன
இத்தனை பாடுபொருள்கள் 
குவிந்து கிடைக்கையிலும்
என்று தான்
தான் எழுதப் படுவோமோ
என்ற கேள்வியோடு
காத்திருக்கிறது
ஒரு நல்ல கவிதை

  (நன்றி கல்கி )   

Wednesday, June 6, 2012

அசையுமாசை

ஜன்னல் வெளி  
தென்னங்கீற்றின்
அசைவொத்தாடுகிறது
ஒரு பெண்டுலம்
கருப்புநிறச் சேலையின் முந்தாணி
அறை மூலையில்  
கிழிந்தவொரு சிலந்திவலை
பாதி படித்து மூடிவைத்த பக்கங்கள்
இருக்கையின் மேல் போர்த்திய
சல்லாத் துணி
அசைப்பதறியாக் காற்றில்
உன்முன்னுச்சி முடி
என்னாசை போலவே